காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை

அன்புள்ள ஜெ

இன்று தற்செயலாக உங்களுடைய நீரும்நெருப்பும் என்ற கதையை வாசித்தேன். வெண்கடல் வரும்போதே அந்தக் கதையை வாசித்திருந்தேன். அது அறம் தொகுப்புக்குப் பின்னால் வந்தது. ஆகவே அறம்போலவே அது இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆகவே அதைப்பற்றிய ஓர் ஏமாற்றம் இருந்தது. அதோடு அன்று இணையத்தில் எழுதும் ஒரு சிலர் எதிர்மறையாக எழுதியிருந்தனர். அந்த எண்ணமும் எனக்குள் ஊடுருவியிருக்கலாம். அவர்களெல்லாம் சும்மா வெற்றுவேட்டுக்கள் என்று தெரிய எனக்கு மேலும் சில ஆண்டுகள் ஆகியது

இப்போதுதான் வெண்கடலை வாசித்தேன். அதில் பிழை மிகமுக்கியமான கதை. இன்றைக்கு வரை என் வாழ்க்கையில் அவ்வப்போது வந்து முட்டிக்கொண்டே இருக்கும் கதை. எல்லா அறிதல்களும் ஒரு பிழை வழியாகவே நிகழ்கின்றன என்று நான் அடிக்கடி என் ஜூனியர்களுக்குச் சொல்வதுண்டு. மனிதன் ஞானம் அடைவதே கூட ஒரு பிழை வழியாகவே நடக்கும் என்று ஒருமுறை தோன்றியது

அப்போதுகூட நான் நீரும் நெருப்பும் கதையை கவனித்தது இல்லை. அது காந்தியின் வாழ்க்கையில் ஒரு நாள் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. இன்று தற்செயலாக வாசிக்கும்போதுதான் ஒரு திடுக்கிடலுடன் புரிந்துகொண்டேன். அது இன்றைய அரசியலைப் பற்றிய கதை.

இன்றைய அரசியலின் இரு துருவங்கள் காந்தியும் இந்துத்துவமும்தான். மெதுவாக அந்த முரண்பாடு தெளிவாகி வந்துவிட்டது. இன்று குடியிரிமைப் போராட்டத்தில் இடதுசாரிகள், சிறுபான்மையினர், ஜனநாயகவாதிகள் எல்லாரும் காந்தி என்ற பதாகைக்குக் கீழேதான் ஒன்று திரள்கிறார்கள். எதிரில் இருப்பது இந்துத்துவம்

இந்தக் கதையில் நீர் காந்தி. நெருப்பு இந்துத்துவம். காந்தி நெருப்பின் பாதையை நிராகரிக்கிறார். தன்னுடையது நீரின் பாதை என்கிறார். நெருப்பு ஆக்கலாம், அதைவிட அழிக்கவும் கூடும். அது கட்டற்றது. நீரே அன்னைபோல அரவணைப்பது. உயிர்களை உருவாக்குவது.

எத்தனை ஆழமான கதை. தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த அரசியல் கதைகளில் ஒன்று. இதற்கு இணையான நுட்பமான குறியீட்டுத் தன்மையும் கவித்துவமும் விஷனும் கொண்ட கதைகள் மிகமிகச் சொற்பம்தான்.

ஆனால் இங்கே அரசியல் கதை என்றால் நேரடியாக நக்கலோ நையாண்டியோ செய்யவேண்டும். அல்லது கைமுறுக்கி கோஷம் போடவேண்டும் என நினைக்கிறார்கள். இந்தக் கதை வெளிவந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இக்கதையைப் பற்றி எவராவது இவ்வாறு பேசியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். எவருக்குமே தோன்றவில்லை.

இங்கே விமர்சகர்கள் என்பவர்கள் கூட பொத்தாம் பொதுவான கருத்துக்களைச் சொல்பவர்கள், எதையும் புதிதாக தாங்களே கண்டுபிடித்துச் சொல்பவர்கள் அல்ல என்று தெரிந்தது. எளிமையான அரசியல், இலக்கியக் கொள்கைகள் மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். தேர்ந்த வாசகர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பார்வையை மட்டுமே முன்வைப்பவர்கள். இலக்கிய அரசியலில் ஊறி அதைக்கொண்டே வாசிப்பை நடத்துபவர்கள்.

ஆகவேதான் இங்கே ஒரு பொதுவான வாசகன் வாசிப்பில் கிடைக்காத ஒரு பார்வையை இலக்கிய விமர்சகனிடமிருந்து பெறமுடியவில்லை. கூடவே நமக்கே இப்போதுதானே தெரிகிறது என்றும் தோன்றியது. ஆனால் பிந்தியாவது வாசித்துவிட்டேன். ஏனென்றால் நான் முடிவுகளுடன் இல்லை. தேடிக்கொண்டே இருக்கிறேன்.

இத்தனைக்கும் மிக வெளிப்படையான கதை. 2013ல் இந்துத்துவ அரசியல் அதிகாரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் காலகட்டத்தில், அதாவது தீ எரியத்தொடங்கும்போது, எழுதப்பட்ட கதை. நரேந்திரமோடி அதிகாரம் நோக்கிச் சென்று கொண்டே இருக்கும்போது எழுதப்பட்டது என்பது இந்தக்கதையை முக்கியமாக்குகிறது. அன்று நீங்கள் இந்துத்துவ அரசியலை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் நரேந்திர மோடி பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இந்தக்கதை உங்கள் அரசியலை ஆழமாகப் பேசுகிறது.

வேதங்களில் இருந்து எழுந்த நெருப்புடன்தான் அந்த பைராகி வருகிறார். நெருப்பைப் பற்றிய அவருடைய வரி வேதப்பாடலாக ஒலிக்கிறது.

உன்னை அழிக்க நினைப்பவற்றை
உண்டுதான் நீ மதம் கொண்டு கூத்தாடுகிறாய்

அதை செவி கொடுத்து கேட்கும் காந்தி அந்த நெருப்பின் தொன்மையை உணர்ந்து கொள்கிறார். ஆனால் மென்மையாக நிராகரிக்கிறார். “இந்த தேசம் நெருப்புக்குண்டமாக ஆகவேண்டாம். இது ஒரு குளிர்ந்த தடாகமாக ஆனால் போதும்” என்கிறார். நீருக்குள்ளும் நெருப்புதான் இருக்கிறது என்று எங்கேயாவது வேதமே சொல்லியிருக்கும் என்கிறார். பைராகி ஆம் என்கிறார். அந்த நெருப்பு இந்த தேசத்திற்குப் போதும்” என்று காந்தி சொல்கிறார். மென்மையாக ஆனால் மாறாத உறுதியுடன்.

இந்தக் கதையின் சிறப்பு என்பது இந்துத்துவத்தை வில்லனாக்கவில்லை என்பது. அதன் உச்சியில் இருப்பவரைத்தான் அதன் பிரதிநிதியாக கொண்டு வைக்கிறீர்கள். அதன் உயர்ந்த தரிசனத்தைத்தான் காந்தி முன் பைராகி சொல்கிறார். ஆனால் அது இன்று தேவையில்லை, அது அழிவுசக்தி, அது பழங்காலத்தையது மட்டுமே என்று காந்தி நிராகரிக்கிறார்.

வரிவரியாக நான் வாசித்த கதை. எத்தனை நுட்பமான உட்குறிப்புகள். எத்தனை பெரிய கவிதை. இப்படி ஒரு அற்புதமான அரசியல்கதை, இன்றைய அரசியலின் துருவங்களைப் பற்றிய ஆற்றல் மிக்க உருவகம் வேறெந்த மொழியிலாவது எழுதப்பட்டிருக்குமா? இந்தக் கதையில் வரும் அழகான தரிசனம் இப்படி வெளிப்பட்டிருக்குமா? வாய்ப்பே இல்லை.

ஆனால் இந்தக்கதைக்கு இங்கே உண்மையான வாசகர் ஒருவர் கூட ஏழாண்டுகளில் அமையவில்லை. வெறும் அரசியல் கூச்சல்கள், வெற்று அரட்டைகள். அதுதான் சோர்வூட்டுகிறது ஜெ. எவருக்காக எழுதுகிறேன் என்று நீங்கள் எண்ணிக் கொண்டதே இல்லையா?

எம்.பாஸ்கர்

***

நீரும் நெருப்பும் – சிறுகதை

அன்புள்ள பாஸ்கர்,

என் கதைகளை நானே கண்டு கொள்வதற்காகவே எழுதுகிறேன். 2013ல் நான் நம்பிக்கையிழப்பில் நம்பிக்கையில் அலைமோதிக் கொண்டிருந்தேன். ஊழல்கள் வெடித்து தேசத்தை நிலைகுலைய வைத்த காலம். ஒரு மாற்றாக இந்துத்துவ அரசியல் எழுந்து வந்தது. காந்தியர்களிலேயே சிலருக்கு இந்துத்துவ அரசியல் நேர்மையானதாக, ஊழலற்றதாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் இருந்தது. எனக்கும்கூட ஊழலுக்கு எதிரானவர்களாக அவர்கள் செயல்படக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளூர சற்றே இருந்தது.

அப்போது நான் காந்தியிடம் கேட்ட வினா அது, அதற்கு காந்தி சொன்ன பதில் அக்கதை. இந்துத்துவம் என்று சொல்லமாட்டேன், பழைமை என்று சொல்வேன். அதன் மகத்தான முகமே கதையில் வருகிறது. தொன்மையானது. ஆனால் அதுவே கூட இந்தத் தேசத்திற்கு இன்று உகந்தது அல்ல என்கிறார் காந்தி. நீரின் பாதை என்று சொல்கிறார்

அக்கதையை எழுதியதுமே என் வரையில் நான் தெளிவடைந்துவிட்டேன். அதற்கு முன்பிருந்த எந்தக் குழப்பமும் அதற்குப் பின் இல்லை. அதன்பின் அன்று சூழ இருந்த இந்துத்துவ நண்பர்கள் பலர் விலகிச் சென்றனர். இந்துத்துவ அரசு எனக்கு அளிக்கவிருந்த உயரிய பட்டங்கள் உட்பட எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுக்க இக்கதையின் இறுதியில் திரண்டு வந்த தரிசனமே காரணம். எனக்கு எந்த ஐயமும் இல்லை

ஆகவே எனக்காக எழுதிய கதை, நான் பெற்ற பதில். மெய், ஒரு வாசகர்கூட ஏழாண்டுகளில் அங்கே வந்து சேரவில்லை. ஒருவர்கூட அதைப்பற்றி பேசியதில்லை. நானும் பேசியதில்லை. பேசவேண்டியதில்லை. கதை அங்கே கிடக்கட்டும். தன் வாசகனை கண்டடையட்டும் என நினைத்தேன். ஏழாண்டுகள் ஆகியிருக்கிறது, நல்லது. எழுபதாண்டுகள் ஆகியிருந்தாலும் ஒன்றுமில்லை

நன்றி

ஜெ

***

முந்தைய கட்டுரைஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52