பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 1
அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு உள்ளே பெருமுற்றத்தின் விளிம்பென அமைந்திருந்த நூற்றெட்டு அன்னையர் ஆலயங்களில் முதலாவதாக ஓரத்தில் இருந்த புலரியன்னையின் ஆலயத்தின் முகப்பில் எழுபத்திரண்டு சூதர்கள் பன்னிரு குழுக்களாக தங்கள் இசைக்கலங்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த யாழையும் முழவையும் கிணையையும் சல்லரியையும் மெல்லிய பதற்றத்துடன் உடலோடு அணைத்திருந்தனர். அந்நிகழ்ச்சிக்கு அவர்கள் புதியவர்கள் என விழிகளும் அடக்கப்பட்ட மூச்சுகளும் காட்டின.
அன்னையர் ஆலயங்கள் அனைத்தும் வாயில் திறந்து அகல்சுடர் ஒளியில் தெய்வத்திருவுருக்கள் அலைகொண்டமைய விழிதொடும் தொலைவுவரை வளைந்து தெரிந்தன. அவற்றின் சிறு குவைமாடத்தின் உச்சியில் அவ்வன்னையரின் அடையாளங்கள் கொண்ட கொடிகள் காற்றில் துடிதுடித்தன. பீதர்நாட்டு நெய்விளக்குகள் அமைந்த கல்தூண்கள் ஒற்றை மலர்சூடிய மரங்கள் என நிரைவகுத்திருந்தன. அப்பால் கிழக்குக் காவல்மாடத்தின் முரசுக்கொட்டில் வானில் மிதந்ததுபோல் செவ்வொளியுடன் தெரிந்தது.
சூதர்களில் மூத்தவரான போத்யர் கூன்விழுந்த உடலை நிமிர்த்து இடையில் கைவைத்து நின்று கிழக்குச் சரிவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். வானில் விண்மீன்கள் செறிந்திருந்தன. அவற்றின் அதிர்வு சொல் சொல் என உதிர்ந்துகொண்டிருந்தது. அப்பால் மேற்குக்கோட்டையை ஒட்டி அமைந்த ஏரியின் மேலிருந்து பாசிமணம் கொண்ட காற்று வீசியது. அது கோட்டைச்சுவரின் வளைவில் முட்டி அகன்று மீண்டும் சுழன்று வந்தபோது புராணகங்கையின் சதுப்புக்காட்டிலிருந்து பச்சிலைவாடை வந்தது. நரிகளின் ஊளை மிகமிக அப்பால் எழுந்தமைந்தது.
முற்காலையின் இருளில் கோட்டையின் வெண்பரப்பு பட்டுத் திரைச்சீலையென மெல்ல நெளிவதாக விழிமயக்கு அளித்தது. கோட்டைக்குமேல் காவல்மாடங்களில் இளஞ்சிவப்பு வட்டங்களென முரசுத்தோலின் பரப்புகள் தெரிந்தன. அங்கிருந்த காவலர்களின் இரும்புக் குறடோசையும், அவர்களின் ஆழ்ந்தகுரல் பேச்சொலியும் எழுந்தன. கவசங்களின் நீர்ப்பளபளப்பும் படைக்கலக்கூர்களின் விழிமின்களும் தெரிந்தமைந்தன. கோட்டை ஒரு கணத்திற்கு முன்னர்தான் ஒரு சொல்லில் இருந்து எழுந்து விரிந்து விரிந்து தன்னை அங்கு நிறுவிக்கொண்டதுபோல் தோன்றியது. எல்லா நோக்குகளும் அதில் சென்று முட்டி மீண்டன. எல்லா எண்ணங்களும் அதைத் தொட்டு வளைந்தன. அதை சேர்க்காமல் அங்கிருக்கும் எவரும் சித்தம் கொள்ளமுடியவில்லை.
கோட்டைக்கு உள்ளிருந்து அஸ்தினபுரியின் அணிப்படை ஓசையில்லாத நீர்ப்பெருக்கென கவசங்கள் அலைகொண்டு பளபளக்க வழிந்து சென்று வெளிமுற்றத்தில் தேங்கி அணிகளாகப் பிரிந்து உறைந்து அமைந்துகொண்டிருந்தது. புரவிகள் அவ்விருளில் நீந்துவனபோல் கால்களை துழாவியபடி ஒழுகின. மையப்பெருஞ்சாலையில் வந்த படையின் இறுதிப் பகுதி வளைந்து கோட்டைக்கு வெளியே சென்று மறைந்தது. முற்றத்தின் செம்மண் பரப்பில் பாதச்சுவடுகள்மேல் பந்தங்களின் செவ்வொளி பரவிக்கிடந்தது. ஒளிகொண்ட கொடிகள் துடித்தன. அத்தனை ஒலிகளையும் மூடியபடி அங்கு ஓர் ஒலியின்மை நிறைந்திருந்தது. எவ்வொலி எழுந்தாலும் அதை தன்னுள் இழுத்துக்கொள்ளும் அழுத்தம் கொண்டிருந்தது அது.
கவசம் அணிந்த பெரிய புரவியில் வந்து இறங்கிய சுதமை கைகளை நீட்டி முற்றத்தையும் கோட்டைச் சுவர்களையும் சுட்டி ஆணைகளை இட்டாள். அவள் சொற்களும் அப்பால் எழுந்த நூற்றுவர்தலைவனின் ஆணைக்குரலும் அந்த அமைதிக்குள் நிகழ்ந்தன. புரவியொன்று கனைத்தது. சகடங்கள் ஒலிக்க கடந்து சென்ற வண்டியொன்றின் ஓசை. கீழே விழுந்த கேடயம் ஒன்றின் உலோகக் கூரொலியும் அந்த அமைதியின்மைக்குள் விழுந்து அதன் அடியில் மறைந்தது. போத்யர் கிழக்குச் சரிவை விழிகளால் துழாவிக்கொண்டிருந்தார். “இன்றென்னவோ விண் முழுக்க மீன்கள்!” என்று அமர்ந்திருந்த தென்னிலத்துச் சூதன் சொன்னான். போத்யர் அவனைத்திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் கீழ்ச்சரிவை நோக்கிக்கொண்டிருந்தார்.
ஆனால் தென்னகத்துச் சூதன் பேச விழைந்தான். “விடிவெள்ளி என்பது கதிரவனின் ஒரு துளி. ஓர் ஒற்றன்” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்தவன் முனகிக்கொண்டான். போத்யர் மீண்டும் திரும்பி உறுத்து நோக்கி “பேசவேண்டாம்” என முகம் காட்டினார். அவர்கள் அனைவருமே பொறுமையிழந்திருந்தார்கள். தங்கள் முழவுகளையும் யாழ்களையும் தேவையின்றி தொட்டு முறுக்கினார்கள். ஆணிகளை திருகியும் தோல்பரப்பையும் நரம்பு அடுக்கையும் விரல்களால் வருடியும் அந்த கணங்களை ஒவ்வொன்றாகக் கடந்தனர். சிலர் தேவையில்லாமல் இருமிக்கொண்டனர்.
தென்னகச் சூதன் திரும்பி மகாமரியாதம் பந்த ஒளியில் ஆங்காங்கே சிவந்து இருப்பதை நோக்கி “சில தருணங்களில் பந்த ஒளியில் இது காட்டெரி எழுந்துவிட்டதோ என்ற விழிமயக்கை ஏற்படுத்துகிறது” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்தவன் மட்டுமே அதை தெளிவுறக் கேட்டான். பிறர் அதை மெல்லிய முணுமுணுப்பென உணர்ந்தனர். முரசுத்தோல்பரப்பில் காற்று படும்போது வரும் ஒலிபோல எழுந்த அவ்வோசை போத்யர் காதில் விழுந்தது. “ம்” என்று அவர் உறுமினார். அவர்கள் சலிப்புடன் அசைந்தார்கள்.
போத்யர் அவர்கள் ஒவ்வொருவரையும் மாறி மாறி பார்த்தார். அவர்கள் வெவ்வேறு நிலங்களையும் குலங்களையும் சார்ந்தவர்கள். வெண்ணிறம் கொண்ட வடமேற்கு நிலத்தவர், பீதர்களைப்போன்ற காமரூபத்தினர், கன்னங்கரிய தென்னிலத்தவர், கூரிய முகமும் செம்மண் நிறமும் கொண்ட வேசர நாட்டவர். கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அவர்கள் அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டைவாயிலருகே அமைந்த சூதர் தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட பெரிய இசை மண்டபத்தில் அமர்ந்து அந்நாளுக்கான புகழ்ப்பாடலை ஒத்திகை பார்த்திருந்தனர். இரவும் பகலுமென அந்த ஒத்திகை நிகழ்ந்தது.
“பிறழும் ஒரு மாத்திரைகூட தவறு என்றே கருதப்படும். பிழையுள்ள பாடல் மங்கலத்தை அழிக்கும். இசையென்பது இசைமை என்று உணர்க!” என்று அவர் மீள மீள கூறியிருந்தார். அவர்கள் விழிகளால் ஏற்றுக்கொண்டனர். ஆனால் முதல் நாளில் அவர்களிடமிருந்த பணிவு மூன்றாம் நாள் இருக்கவில்லை. முதல் நாள் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகவே உறுதியுடன் அதை ஏற்றனர். மூன்றாம் நாள் அந்த ஒத்திகைகள் வழியாகவே அவர்கள் நம்பிக்கை இழந்தனர். ஆகவே அதை இளிவரலாக ஆக்கிக்கொண்டனர்.
போத்யர் பெருமூச்சுவிட்டு ஐயத்துடனும் நம்பிக்கையின்மையுடனும் சூதர்களை மீண்டும் பார்த்தார். கோட்டைக்கு மேல் பந்தங்கள் ஒன்றிலிருந்து ஒன்றென தங்களை தொடுத்துக்கொண்டு செந்நிறச் சரடென்றாகி, ஒழுக்கென நீண்டு விரியத்தொடங்கின. அனல்முடி சூடிய கோட்டைக்கு மேலிருந்து ஒரு கொம்பொலி அறைகூவ கோட்டையின் நான்கு நுழைவாயில் முகடுகளில் இருந்தும் மூன்று எதிரொலிகள் அதற்கு மறுமொழியளித்தன. “கோட்டை ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்று ஒரு சூதன் சொன்னான். போத்யர் “பேசவேண்டியதில்லை” என்றார். “சரி, பேசவில்லை” என்றான் அவன். அனைவரும் மெல்ல சிரித்தனர்.
போத்யர் அவர்களில் இளையவனாகிய சூதனை நோக்கி சற்று கவலையுடன் “உன் முழவை இன்னும் இறுக்குக!” என்றார். அவன் அதை தொட்டு நோக்கி “பதமாகவே உள்ளது, ஆசிரியரே” என்றான். விரல்களால் சுண்டி அதன் ஓசையைக் காட்டி “போதுமல்லவா?” என்றான். பற்களைக் கடித்து ”ஆம்” என்று உரைத்த போத்யர் விழிதிருப்பிக்கொண்டார். அவ்விளையோன் கரிய முகமும், பெரிய பற்களும், சிப்பி போன்ற வெண்பரப்பு கொண்ட கண்களும் கொண்டிருந்தான். தென்னிலத்தவன். அவனிடம் ஓர் அடங்காமை இருந்தது. ஆனால் அவனால்தான் எளிதில் கற்றுக்கொள்ள முடிந்தது.
அவனை அந்தச் சூதர் குழுவுக்குள் சேர்ப்பதற்கு முதலிலேயே அவருக்கு தயக்கமிருந்தது. ஏற்கெனவே அவன் பல அவைகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தான். ஆனால் சுரேசர் அவன் அந்தக் குழுவில் இருக்கட்டும் என முடிவுசெய்திருந்தார். அவர் அவனை வெறுப்புடன் பார்த்தார். அவனுடைய குரல் இளமையின் விசையும் தாளமும் கொண்டிருந்தது. அவர் “ஓலமிடுவதற்கு இங்கே கொம்புகள் உள்ளன” என்று முணுமுணுத்தார். சுரேசர் நகைத்து “நீங்கள் இளமையில் இதே குரல் கொண்டிருந்தீர், சூதரே” என்றார். திடுக்கிட்டு இளையோனை நோக்கியபின் போத்யர் “ஆம்” என முனகிக்கொண்டார்.
அஸ்தினபுரியின் அரண்மனையில் இருந்து துச்சளையின் அழைப்பு அவருக்கு வந்தபோது அவர் தன் இல்லத்திலிருந்து கிளம்புவதற்கே இயலா நிலையில் இருந்தார். அவருடைய மைந்தரும் குடிகளும் அவரை விட்டு சென்றுவிட்டிருந்தனர். அவருடைய குடிவழி இளையோன் அருகே குடியிருந்தமையால் மட்டும்தான் அஸ்தினபுரிக்குள் அவரால் உயிர்வாழ முடிந்தது. போர் முடிந்த செய்தி வந்ததுமே அவருடைய மைந்தன் “இனி இந்நகர் சொல் திகழும் தகுதி கொண்டதல்ல. நம் முன்னோர் வாழ்த்திய அனைத்தும் இங்கிருந்து மறைந்துவிட்டன” என்றான். அவர் நகரிலிருந்து மக்கள் ஒழிந்து செல்வதை பல நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய குடியினரிலேயே பெரும்பாலானவர்கள் சென்றுவிட்டிருந்தனர்.
“இனி இங்கு ஒருபோதும் நெய்மணக்கும் ஊன்சோறு பெருகப்போவதில்லை. கருவூலப்பொன் பெருகப்போவதுமில்லை. அத்தனை பேரும் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கிளம்புகிறேன்” என்றான் மைந்தன். அப்போது அவர் தன் இல்லத்திண்ணையில் இளவெயிலை உடலில் ஏற்று அமர்ந்திருந்தார். நெடுநாட்கள் அங்கு திகழ்ந்த உணவின்மையால் அவர் உடல் மெலிந்து, எலும்புகளின் மேல் தோல் படிந்து, அதன் மேல் பூசணம் எழுந்து ஈரமண்ணில் மட்கிக்கிடக்கும் பழைய மரம் போலிருந்தார். அவர் பற்கள் உதிர்ந்துவிட்டிருந்தன. தலை நடுங்கிக்கொண்டிருந்தது. குளிரிலென துள்ளி அதிர்ந்துகொண்டிருந்த கைகளை இரு தொடைகளுக்கும் அடியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார். இரு முழங்கைகளும் நடுங்கின.
மைந்தன் “இந்நிலையில் தாங்கள் எங்களுடன் நெடுந்தொலைவு வருவது கடினம். ஆயினும் தாங்கள் வருவதே நல்லது. எவ்வகையிலேனும் தங்களை இங்கிருந்து கொண்டு செல்கிறேன். ஒரு சிறு சகடம் ஒன்றை ஒருக்கியிருக்கிறேன். சற்றே பொறுத்துக்கொண்டீர்கள் என்றால் போதும்” என்றான். “அறுநீர் பறவையென எழுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்று அவர் சொன்னார். “சூதர்களுக்கு நிலமில்லை, நீருமில்லை. வானமே நம்முடையது. நாம் நிறைகதிர் கண்ட இடங்களில் சென்று இறங்குவோம், வானுக்கே மீள்வோம்” என்று மைந்தன் சொன்னான். “இச்சொற்களை சொல்ல வேண்டியவர்கள் உழவர்கள், ஆயர்கள். வணிகர்களும் சூதர்களும் அல்ல.”
“நீ எனக்கு நூல் கற்பிக்க வேண்டியதில்லை” என்று அவர் சலிப்புடன் கூறினார். அவன் சீற்றத்துடன் அவர் முன்னால் வந்து நின்று “அதை விடுங்கள். நான் நேரடியாகவே சொல்கிறேன், நாம் பேசும் மொழியையும் நாம் சொல்லும் கதையையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புகிறார்கள். பெருவணிகர்கள், ஆயர்குடிகள், வேளாண்குடிகள். எஞ்சுவது யார்? களத்தில் மாண்ட மறவர்களின் ஆவிகள். இந்நகரை கைப்பற்றவிருக்கும் இழிசினர். இருளுலக தெய்வங்கள். இவர்களிடம் சொல்பெருக்கி உயிர்வளர்க்கலாகும் என்று எண்ணுகிறீர்களா?” என்றான்.
அவர் அவனுடைய சீற்றத்தை நோக்கிக்கொண்டிருந்தார். “சேர்த்துவைக்கும் கலை நாமறியாதது. இங்கே நாம் கைவிடப்பட்டோம். உணவில்லாது துயருற்றோம். இங்கிருந்தோர் வீசிய சிற்றுணவால் உயிர்பேணிக்கொண்டோம். இதோ அவர்கள் அனைவரும் கிளம்பிச் செல்கிறார்கள். அவர்களே நம்மை புரந்தவர்கள். அவர்களுடன் செல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றான். “ஊன் பொதியைத் தொடரும் காகங்கள்போல, அல்லவா?” என்று அவர் கேட்டார். அவன் பற்களைக் கடித்து கைகளை இறுக்கி சீற்றத்தை அடக்கி “நான் தங்களை எவ்வகையிலும் அறிவுறுத்தவில்லை. நான் கிளம்புவதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் வரவில்லை என்றால் இதுவரை இங்கே எவ்வண்ணம் இருந்தீர்களோ அதை இழக்கப்போகிறீர்கள். இரவலனாக தெருவில் அமர்ந்து பிடி உணவு பெற்று வாழப்போகிறீர்கள். வேண்டாம், அப்பழியை என்மேல் சுமத்தாதீர்கள். கிளம்புக!” என்றான்.
“இந்நகர் விட்டு எங்கும் நான் செல்வதாக இல்லை. எனது பொழுது ஓடிவிட்டது. என் உடலில் ஒவ்வொரு நாளும் குளிர் மிகுந்து வருகிறது. எலும்புகள் ஆற்றடிக் கற்கள் என விறைத்திருக்கின்றன. இனி நெடுநாள் இங்கு வாழப்போவதில்லை. இங்கிருந்து கிளம்பி புது நிலங்களைக் கண்டு வாழும் ஆற்றல் இவ்வுடலில் இனி இல்லை” என்றார் போத்யர். மைந்தன் குரல் தணிந்தான். “நான் என்ன செய்வது? என் மைந்தருடன் நான் என்ன செய்து வாழ்வது?” என்று மீண்டும் கேட்டான். “கிளம்பிச்செல்க, புது நிலம் நாடுக! இங்கே உன்னைப் புரந்த குடிகள் உன்னையும் உன் குடியையும் இன்னமும் வாழச்செய்க! எனக்கு இச்சிறு இல்லம் போதும். இங்கு இயன்றவரை உணவு எஞ்சவிட்டுச் செல்க! நன்று நிகழும்” என்றார் போத்யர்.
அவன் சினம் ஏற அவரை கூர்ந்து நோக்கிவிட்டு இன்னொரு எண்ணம் எழ உடல் தளர்ந்து, குரல் உடைய, விழிகள் நனைய “தங்கள் சொற்களை என்னால் உளம்கொள்ள இயலவில்லை, தந்தையே. நான் இருமுனையில் இருக்கிறேன்” என்றான். “சென்று முல்கலனிடம் கூறுக! அவன் என்னை புரப்பான். கைப்பிடி உணவு ஒருநாளுக்கு, அது போதும் எனக்கு” என்றார் போத்யர். மைந்தன் விழிகளில் எழுந்த திகைப்பைக் கண்டு புன்னகைத்து “என்றேனும் இந்நகர் மீளுமென்றால் நீ திரும்பி வருக! அன்று நானோ என் சொல்லோ உன்னைக் காத்திருப்போம்” என்று மென்மையாக சொன்னார்.
திரும்பி வருதல் எனும் சொல் அவனை மீட்டது. அவன் விழிகள் தெளிந்தன. “ஆம், இப்புலம்பெயர்தல் எப்போதைக்குமென அல்ல. இம்மக்கள் அஸ்தினபுரிக்கு மீண்டு வருவார்கள். இங்கு அறம் நிலைகொள்ளும் கோல் எழுமெனில், மூதாதையர் சொல் திகழுமெனில் அவர்கள் இங்கு தங்கள் தொல்வாழ்வை மீண்டும் தொடங்குவார்கள். அவர்களுடன் நானும் வருவேன். யார் அறிவார், மிகச் சில நாட்களுக்கே நீளும் ஒரு செலவாக இருக்கலாம் இது” என்றான். “ஆம், மிகச் சில நாட்கள்தான்” என்று அவர் சொன்னார். புன்னகைத்து “செல்க, உளம்செழித்த வாழ்த்துகள் என்னிடம் இருந்து உனக்கும் உன் மைந்தருக்கும் வந்தமைக! நீ செல்லும் இடமெல்லாம் என் பெயரும் என் குடிப்பெயரும் உனக்கு துணையும் கோலும் ஆகுக!” என்று வாழ்த்தினார்.
அவர் மைந்தன் முல்கலரிடம் சென்று தந்தையை அவரிடம் ஒப்படைப்பதாகச் சொன்னபோது அவர் நகைத்து “அவ்வண்ணம் அவர் கூறினாரா?” என்றார். “ஆம்” என்று அவன் கூறினான். “அவரே தன் வாயால் அதை உரைத்தாரா?” என்று முல்கலர் மீண்டும் கேட்டார். “மெய்யாகவே அவரே உரைத்ததுதான் இது” என்று அவன் சொன்னான். அவர் உரக்க நகைத்து “நன்று, இவ்வண்ணம் ஒரு காலம் அமைந்தது. இதை நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் இவ்வண்ணமே இது நிகழ்ந்தாகவேண்டும் என இப்போது உணர்கிறேன்” என்றார்.
மைந்தன் தலைகுனிந்தான். ஊசல்பீடத்தில் மெல்ல காலால் உந்தி அதை ஆட்டியபடி அமர்ந்திருந்த முல்கலர் தளிர்வெற்றிலை எடுத்து நீறு தேய்த்து சுருட்டியபடி அவனை சிரிக்கும் விழிகளால் நோக்கி “நீ அறிவாய், நான் களிச்சூதன். சூதுக்களங்களில் என் சொல்லை வைத்து ஆடுபவன். சூதர்கள் இழிந்து சென்றடையும் அடித்தட்டில் அமைந்திருப்பவன். ஆகவே உன் தந்தை முதல்கொண்ட ஏழு பெருங்குலங்களால் கீழ்மகன் என்றே எண்ணப்பட்டவன்” என்றார். அவர் உரக்க நகைத்து “இந்த நாற்பதாண்டுகளில் ஒருமுறைகூட நான் சூதர்மன்றுகளில் அமரச்செய்யப்பட்டதில்லை. ஒருமுறைகூட குடித்தெய்வ ஆலயங்களில் பூசனைசெய்ய எனக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில்லை. சாவு, பிறப்பு, மணம் என எதற்கும் எனக்கு அழைப்பில்லை. என் கைதொட்ட அன்னமும் நீரும் சூதர்களுக்கு விலக்கு என ஆணையிட்டவர் உன் தந்தை” என்றார்.
மைந்தன் தலையசைத்தான். “நன்று, இவ்வண்ணமும் அமைந்தது” என்றார் முல்கலர். “உன் தந்தையும் நானும் இரு எல்லைகள். என் தந்தையின் மூத்தவரின் மைந்தர் அவர். நாங்கள் இருவரும் ஒரு குருதியின் இரு தரப்புகள்” என்றார். அவர் மிகுதியாகப் பேசுபவர் அல்ல என்று மைந்தன் அறிந்திருந்தான். அன்று அவரிடம் பேச்சு ஊறி ஊறி பெருகியது. “உன் தந்தை என்னிடம் சொன்னவை நினைவிலெழுகின்றன. முல்கலா, சூதர்களின் நெறி ஒன்றுண்டு. சொல் என்பது நிலைபேறு கொண்டிருக்கவேண்டும். அதன் பொருள் மட்டுமே பெருக வெண்டும். நிலைபெறாத சொல் பொருளை இருட்தெய்வங்களின் ஆடலுக்கு அளிக்கிறது. நீ சூதுக்களத்தில் வைத்து ஆடும் சொல் உன் மூதாதையரின் குருதி என்று உணர்க என்றார். அவருடைய விழிகளை நான் நேர்நோக்கவில்லை அன்று. ஆகவே சொல்லிலேயே அவருடைய நோக்கு படிந்திருக்கிறது.”
“தன் சொல்லுக்கு அடிமையாகியிருக்கும் சூதன் தெய்வங்களுக்குரியவன். தன் சொல்லை அவைநிறுத்தி வாழ்பவன் மூதாதையரால் வாழ்த்தப்பட்டவன். சொல்லை முச்சந்திகளில் ஒலிக்கவிடுபவன் தன் மைந்தரால் வணங்கப்படுவான். சொல்லை வைத்து களமாடும் சூதன் ஏழு பிறவியிலும் இகழப்படுவான். இதுவும் உன் தந்தை சொன்னது” என்றார் முல்கலர். மைந்தன் “ஆம்” என்று தலையசைத்தான். “நாற்பதாண்டுகள் இரு எதிரெதிர் இல்லங்களில் வாழ்கிறோம். ஒருமுறையேனும் உன் தந்தை எனக்கு வாழ்த்துரைத்ததில்லை. என் விழி நோக்கி புன்னகைத்ததில்லை. உன் இல்லத்தில் நிகழும் நன்று தீதுகள் எதிலும் கலந்துகொள்ள நான் அழைக்கப்பட்டதில்லை” என்றபோது அவர் முகம் இறுகியது. விழிகள் வஞ்சம்கொண்டன.
“என் குருதியினர் அவர் என்று எங்கள் முகங்களே காட்டுவதனால் இந்நகரில் ஒவ்வொருமுறை அவரை காணுகையிலும் ஒவ்வொருவரும் என்னை நினைவுகூர்கிறார்கள்.” அவர் வஞ்சத்துடன் புன்னகைத்தார். “ஆனால் அது மட்டுமல்ல. பெரிதென்றும் மெய்யென்றும் மானுடர் உணரும் ஒவ்வொன்றுடனும் ஒரு கீழ்மையையும் பொய்மையையும் இணைத்துக்கொள்ள அவர்களின் ஆழத்திலிருந்து ஒரு தெய்வம் ஆணையிடுகிறது. உயர்ந்தவை வீழுமென்றும் நன்றென்பவை அனைத்தும் மறுபக்கம் கொண்டவை என்றும் அவர்களுக்கு அது உரைக்கின்றது. மானுடர் ஆடும் முடிவிலாக் களங்கள் அமையும் நெறி இது.”
“உன் தந்தையைப் பார்க்கும் ஒவ்வொரு வணிகனும் என்னை நினைவுகூர்வதுண்டு. என்னைப்பற்றி ஒரு சொல்லும் கூறாமல் இருக்கமாட்டான். ஒவ்வொரு நாளும் அவர் என்னை எண்ணி வெதும்பியபடியேதான் இல்லம் மீண்டிருக்கிறார். இந்நகரில் பழுதுறாச் சொல் கொண்டவர் என்று புகழ்பெற்ற பெருஞ்சூதர் அவர். இவ்வரண்மனையின் தொல்கதைகள் அனைத்தையும் முற்றறிந்தவர். ஆகவே அரசர்களும் எழுந்து நின்று வரவேற்கும் தகைமை கொண்டவர். அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரர் பிறந்த நாளில் அங்கு அரண்மனை அவையில் அமர்ந்து அவர் பிறப்பை பாடியவர்களில் ஒருவர். நன்று, இத்தருணம் இவ்வண்ணம் வாய்க்கும் என்று தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன போலும்” என்றார்.
“தந்தையே, தாங்கள் அவரை பார்த்துக்கொள்ள முடியாதா?” என்று மைந்தன் கேட்டான். அவர் வெடிப்புறச் சிரித்து “நான் ஒழியும் தருணமா இது? இதுகாறும் நான் வாழ்ந்த வாழ்க்கை இங்கல்லவா நிறைவடைகிறது? இனி இங்கு உன் தந்தை நான் அளிக்கும் சிற்றுணவில் வாழப்போகிறார். அறத்தை மறம் அன்னம் ஊட்டவிருக்கிறது. சூதுக்களத்தில் எஞ்சிய சோற்றில் இறுதி நாட்களைக் கழிக்கவேண்டும் என்பது அவரது ஊழெனில் அதை நிறைவேற்றுவதல்லவா என் பொறுப்பு?” என்றார்.
அவன் சீற்றத்துடன் “அதில் மகிழ்கிறீர்களா?” என்றான். “ஆம், மகிழ்கிறேன். அது என் வெற்றி என்று ஒருபுறம் உளம் தருக்குகிறது. அது என் ஈடேற்றம் என்று மறுபுறம் உளம் அமைகிறது” என்றார். அவன் பற்களைக் கடித்து “எனில் வருக! வந்து என் தந்தையிடம் கூறுக, தாங்கள் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக! அவரது இறுதிநாள் வரை சிற்றுணவை அளிப்பதாக எனில் மட்டுமே நான் இங்கிருந்து கிளம்ப இயலும்” என்றான். அவன் குரல் உடைந்தது. “தந்தையே, என் குழந்தைகளும் பசியில் மெலிந்து உயிர் துறந்துகொண்டிருக்கின்றன. இங்கிருந்து கிளம்புவதைக் குறித்து நான் எண்ணவே இல்லை. என் இளைய குழந்தை பூழி மண் அள்ளித்தின்பதை இன்று நான் கண்டேன். இனி இங்கு இருக்கலாகாதென்று உறுதி கொண்டேன். என்னை வாழ்த்துக!”
அவர் புன்னகைத்து அவன் தோளில் கைவைத்து சொன்னார் “நன்று, நானே வந்து உன் தந்தையிடம் கூறுகிறேன். இத்தருணமும் ஊழால் முன்பே வடிக்கப்பட்டதென்றும் அதை மீள நடிப்பதொன்றே நான் இயற்றுவதென்றும் இப்போது உணர்கிறேன்.” அவன் கண்ணீருடன் தலைவணங்கினான். அவர் மேலாடையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் மனைவி வந்து அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு “வேண்டியதில்லை. எண்ணிச் செய்யவேண்டும். அவர் வரவழைத்து தீச்சொல்லிடக்கூடும்” என்றாள். “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் என்ன நிகழ்கிறதென்று அறியவேண்டாமா? இப்புதிருடன் என்னால் வாழமுடியுமா என்ன?” என நடந்தார்.
முல்கலர் தன் முன் வந்து நின்று வணங்கியபோது போத்யர் வெறுமனே விழி தூக்கி நரைத்த விழிகளால் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். “மூத்தவரே, தங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார் தங்கள் மைந்தர். இதுகாறும் இங்கு நாமிருவரும் ஒன்றின் இரு பக்கங்களென இருந்தோம் என்றும் ஒருவரை ஒருவர் புரந்துகொண்டிருந்தோம் என்றும் இப்போது உணர்கிறேன். அதை மீண்டும் நிகழ்த்தவே இங்கு ஊழ் அமைந்துள்ளது. இதனூடாக நான் நிரப்பும் மறுபுறம் உள்ளதுபோல் உங்கள் வாழ்வால் நீங்கள் நிரப்பும் பக்கமும் ஒன்று உள்ளது என்றும் தோன்றுகிறது. என்னை வாழ்த்துக!” என்றார் முல்கலர்.
“ஆம், இதில் எனக்கு நிறைவே” என்று அவர் கைதூக்கி அவர் தலையில் வைத்து “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். தன் மைந்தனை நோக்கி திரும்பி “நன்று மைந்தா, இனி நீ கிளம்பலாம்” என்றார். அத்தருணம் அத்தனை எளிதாக முறுக்கவிழ்ந்து நிகழ்ந்து முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் உடல் தளர்ந்து உள்ளம் நிலை கொண்டபோதுகூட எதையோ இழந்த சலிப்பை அடைந்தான். அதை தன் மீதான சினமாக மாற்றிக்கொண்டான். கையறு நிலையில் அது கண்ணீராக மாறியது. “நான் பெரும்பிழை எதையோ ஆற்றுகிறேன் என்று உணர்கிறேன், தந்தையே. ஆனால் மைந்தர் பொருட்டு எதையும் செய்ய தந்தையருக்கு உரிமையுண்டு என்று கற்றறிந்திருக்கிறேன். என் மூதாதையர் என்மேல் கனிவு கொள்க! இது பிழையெனில் இதற்கான தண்டம் முற்றிலும் எனக்கென அமைக! எந்தை சொல் அனல் ஆகுமெனில் அது என்னை மட்டும் எரிக்கட்டும். என் மைந்தர் அன்னம் கொண்டு வாழட்டும். சொல் பெருகி வளரட்டும். குலம் நிலைகொள்ள அவர்கள் மண்ணில் திகழட்டும்” என்றான்.
அவன் குனிந்து தந்தையின் கால்களை தொட்டபோது அவர் அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினார். அவன் விழிநீரை துடைத்தபடி மைந்தருடனும் மனையாட்டியுடனும் இல்லம் ஒழிந்து கிளம்பிச் சென்றான். திரும்பித் திரும்பி நோக்கியும் அவ்வப்போது நின்று விழிநீர் துடைத்தும் அவன் செல்வதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.