”என்னலே அது?” என்றபடி ஜான்சன் ஓடி அருகே வந்தான்.
லாசர் அதை உடனே மண்ணை அள்ளிப்போட்டு மூடிவிட்டான்.
“ஏலே என்னலே அது? ஏலே சொல்லுலே” என்றான் ஜான்சன்.
லாஸர் அதை அவனிடமிருந்து எப்படி மறைப்பது என்று தெரியாமல் “ஒண்ணுமில்லே” என்றான். அவன் முகமும் உடலும் எல்லாவற்றையும் காட்டின. அவன் பதறிப்போயிருந்தான்.
“என்னவாக்கும்?” என்றபடி ஜான்சன் அருகே அமர்ந்தான்.
“பைசாவா? பைசாவாலே?” அவன் குரல் தழைந்தது. “பைசான்னா ஆருகிட்டையும் சொல்லாண்டாம். நாம ரெண்டுபேரும் எடுத்துக்கிடுவோம்… திருச்செந்தூருக்கு போவோம்…அங்க கடல் உண்டு கேட்டியா?”
லாஸர் மேலும் திகைப்புடன் பார்த்தான். திருச்செந்தூர் திருச்செந்தூர் என்று அவன் உள்ளே சொல் தத்தளித்தது.
“இல்லேண்ணா தூத்துக்குடி… அங்க பெரிய கடல் உண்டு… அதுக்குமேலே கப்பல் உண்டுலே. பெரிய கப்பல்… இந்தா இந்த வீட்ட காட்டிலும் பெரிசாட்டிருக்கும். அதிலே ஏறினா பெனாங்கு கொளும்பு போவலாம் தெரியுமா?”
லாஸர் பெருமூச்சுவிட்டான். ஜான்சனுக்குத் தெரியாத செய்திகளே உலகில் இல்லை. அவன் அழத்தொடங்கினான். ஏன் அழுகிறான் என்றே அவனுக்குத்தெரியவில்லை. ஆனால் என்ன அழகான பெயர்கள். திருச்செந்தூர், தூத்துக்குடி. கடல் உள்ள ஊர்களே அழகான பெயர்கள் கொண்டவை. அவன் தலைகுனிந்து அமர்ந்து விம்மினான்.
“ஏலே, ஏம்பிலே? சொல்லு. என்னவாக்கும்?”
லாஸர் ‘அது பைசா இல்லை” என்றான்.
‘பின்ன?” என்றான் ஜான்சன்.
“அது வேற ஒண்ணு…”
ஜான்சன் மண்ணைப்போட்டு அவன் மூடிய குழியை நோக்கியபின் “பவுனா?” என்றான்.
இல்லை என லாசர் தலையாட்டினான்.
“பின்ன என்னலே?”. என ஜான்சன் எரிச்சலடைந்தான்.
லாசர் அழுகையை நிறுத்தினான். ஆர்வமெழுந்தபோது மனதில் துயர் இல்லாமலாகியது. “அது ஒரு காரியமாக்கும்… இந்தா காட்டுதேன்” அவன் மிகமிக மெல்ல ஒரு இலையால் மணலை விலக்கினான். ஜான்சன் ஆவர்த்துடன் எட்டிப்பார்த்தான்.
உள்ளே இருந்த பொருள் வட்டமாக இருந்தது. அப்பச்சியின் சுண்ணாம்புச் செப்பு போல. அதற்கு நீளமான வால் இருந்தது. வாலைச் சுருட்டி அருகே வைத்திருந்தது. ஈரமண்ணில் நத்தை ஊர்ந்து உருவாகும் ஒளிக்கோடு போன்ற வால்.
“வாலிருக்கு” என்றான் ஜான்சன். “ஏலே அதுக்கு சீவனிருக்கு, பாரு”
அது டிக்டிக்டிக்டிக் என ஓசையிட்டுக்கொண்டிருந்தது.
“ஆமெலே. சீவன் இருக்கு” லாசர் அதை தொடப்போனான்.
‘தொடாதே” என்று ஜான்சன் சொன்னான். “அது விசவண்டாக்கும்… பாருலே அதுக்க கண்ணை…கொடுக்கு சுத்துது பாரு”
அதற்கு புள்ளிப்புள்ளியாக கண்கள் இருந்தன. அவை இளநீல நிறத்தில் மின்னிக்கொண்டிருக்க கொடுக்கு ஓவ்வொரு கண்ணையாக தொட்டு தொட்டு துடித்து ஓடிக்கொண்டிருந்தது.
அவர்கள் இருவரும் அதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர்.ஜான்சன் நீண்ட பெருமூச்சுவிட்டு ‘விச வண்டாக்கும்” என்றான்.
லாசரும் “விச வண்டாக்கும்” என்று சொல்லிக்கொண்டான்.
“என்னலே செய்யுதது?” என்று ஜான்சன் கேட்டான்.
“மண்ணைப்போட்டு மூடிப்போட்டுட்டு ஓடீருவோம்லே” என்றான் லாசர்.
“மண்ணுண்ணு மாதிரி பேசப்பிடாது. ஏலே, இது விச வண்டுண்ணா நம்ம தங்கச்சிக்குட்டிகளை கடிச்சுப்போடும்லா?”
லாசர் “ஆமா” என்றான்.
அவன் தங்கை ஏசுவடியாள் மிகச்சிறியவள். நாய்க்குட்டிபோன்ற அசைவுகளுடன் தவழ்ந்து அலைபவள். பேச்சு இன்னும் வரவில்லை. எல்லாரையுமே ன்னா ன்னா என்று அழைக்கிறாள். பசித்தால் அப்படியே அமர்ந்து ன்ன்ன்னா என்று வீரிட்டு அலறத் தொடங்கிவிடுவாள்.
அவன் அவளை குட்டி என்றுதான் அழைப்பான். அவன் எங்கே சென்றாலும் அவளும் மூன்றுகாலில் கிளம்பிவிடுவாள். அவன் விலகி ஓடினால் கைநீட்டி “ன்னா ன்னா” என்று கதறுவாள். அவள் குரல் செவிகளை துளைப்பது. அதிலிருந்து தப்ப அவன் மேலும் விரைந்து ஓடவேண்டும்.
லாசர் பயத்துடன் “இத என்ன செய்யுதது?” என்றான். அதை அந்த வண்டு கேட்டுவிடக்கூடாது என்பதுபோல குரலைத் தாழ்த்தியிருந்தான்.
ஜான்சன் தலையைச் சரித்து யோசித்தான். அவனுக்குத்தெரியாதவை என ஏதுமில்லை. ஆனால் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.
“இது விசவண்டு இல்லேன்னு தோணுது” என்று அவன் சொன்னான்.
“ஏன்?” என்று லாசர் கேட்டான்.
“விச வண்டுன்னாக்க இப்பம் நம்மள கடிக்க வரும்லா?” என்றான் ஜான்சன்.
“ஆமா, கடிக்க வரும்லா?” என்றான் லாசர்.
ஜான்சன் மேலும் யோசித்தபின் “விசமிருந்தா இப்டி பேசாம இருக்காது…” என்றான். மேலும் அதை கூர்ந்து நோக்கி “அளகாட்டு இருக்கு….” என்றான்.
“அளகாட்டு இருக்கு” என்று லாசர் சொன்னான்.
“இத நாம வளப்போம்லே” என்றான் ஜான்சன். “அய்யோ” என்றபடி ஜான்சன் எழுந்துவிட்டான். “ஏலே, சிலசமயம் இது குட்டிபோட்டிரும் பாத்துக்க…குட்டிபோட்டா நமக்கு லாபம்தானே?”
லாசருக்கு என்ன லாபம் என்று புரியவில்லை. “லாபம்”என்று மட்டும் சொன்னான்.
ஜான்சன் “நாம இத விக்கலாம்” என்று சொன்னன். சொன்னதுமே அவனுக்கு உற்சாகம் மிகுந்தது. “அளகாட்டு இருக்குல்லா? நாம வித்தா பைசா குடுப்பானுக. பத்துபைசாக்கு ஒண்ணு…”
லாசர் குழப்பமாக “பத்து பைசாவுக்கு ஒண்ணு” என்றான்.
“நெறைய குட்டிபோடும்…நாம தினம் ஒண்ணுண்ணு விக்கலாம்… டீக்கனாருக்க மவன் சிலுவைக்கு மட்டும் குடுக்கப்பிடாது” என்றான் ஜான்சன்.
லாசர் “பாவம்”என்றான்.
“அவன் கெட்டவன்லே…அவன் போட்டிருக்குத சட்டைய பாத்தியா? சில்காக்கும். கப்பல்துணி….அந்த கப்பல்துணியை போட்டிருக்கப்பாட்ட எல்லாரும் கெட்டவனுக” என்றான் ஜான்சன்.
லாசர் “ஆனா பெரிய சாமியாரு கப்பல்துணில்லா போட்டிருக்காரு?” என்றான்.
“ஆருலே இவன்? ஏலே அவரு சாமியாருல்லா? அவருக்க கண்ண பாத்தியா? கனகாம்பரம் மாதிரில்லா இருக்கு? சக்கரக்கெளங்கு மாதிரி இருக்குதாரு” லாசர் அவருடைய கண்களை நினைவுகூர்ந்தான். அவனுக்கு அவை வெண்ணிறக் கூழாங்கற்கள் போலிருப்பதாகத் தோன்றியது.
அவன் உடனே திரும்பி அந்த வண்டைப் பார்த்தான். “லேய், இந்த வண்டு சாமியாருக்க கண்ணுமாதிரியாக்கும்” என்றான்.
ஜான்சன் அந்த வண்டைப் பார்த்துவிட்டு ‘ஆமா, அவருக்க கண்ணுமாதிரியாக்கும்..” என்றான்.சிலகணங்கள் பார்த்துவிட்டு “இத நாம அம்பது பைசாவுக்கு விக்கலாம்லே…குட்டி போட்டாக்கா நிறைய அம்பது பைசா கிட்டும்” என்றான்.
லாசர் “குட்டிபோடுமா?” என்றான்.
“பாப்பம், நீ அதை எடு” என்று ஜான்சன் சொன்னான்.
லாசர் பாய்ந்து பின்னகர்ந்து “நானா?” என்றான்.
‘கம்பு வச்சு எடுலே…மோணையன் மாதிரி பயப்படுதான்” என்றான் ஜான்சன்.
லாசர் அருகே கிடந்த இரு குச்சிகளால் அந்த வண்டை மெல்ல தூக்கி எடுத்தான். அது டிக்டிக்டிக் என்றது. அதன் கொடுக்கு துடித்தது. கண்கள் உறுத்து பார்த்தன. வால் தொங்கி ஆடியது.
“வளைஞ்ச வாலாக்கும்”என்றான் ஜான்சன்.
“இதை என்னலே செய்யுதது?” என்றான் லாசர்.
“இருலே, நான் ஒரு சட்டி கொண்டாறேன். நீ அதில இத வச்சு உனக்க வீட்டுக்கு கொண்டுபோ…அங்க வச்சு நல்லா தீனிகுடு… இது வளந்து குட்டிபோடுதான்னு பாப்பம்” என்றான் ஜான்சன்.
“எனக்க வீட்டிலே அப்பன் அடிப்பாவ” என்று லாசர் சொன்னான்.
“நீ எதுக்கு அப்பனிட்ட சொல்லுதே? ஆருகிட்டையும் சொல்லாதே…சொன்னா அம்புடுதான்” என்றான் ஜான்சன்.
லாசர் “சொல்லமாட்டேன்” என்றான். பிறகு “ஏலே பயமாட்டு இருக்குலே…நீ உனக்க வீட்டிலே கொண்டுட்டுப்போயி வையி” என்றான்.
ஜான்சன் சீறிவிட்டான். “ஆருலே இவன்? ஏலே எனக்க வீட்டிலே எப்டி வைக்கமுடியும்? என்ன சொல்லுதே?”.
லாசர் “ஆமா, வைக்க முடியாது” என்றான்.
“எனக்க வீட்டுக்கு கொண்டுபோறதா? கிறுக்கு மாதிரில்லா பேசுதே” என்றான் ஜான்சன்
ஜான்சன் சென்று ஒரு சிறு உடைந்த கலத்தை எடுத்துவந்தான். அதற்குள் மணலை அள்ளிப்போட்டு உள்ளே அந்த வண்டை போட்டான். “மண்ணபோட்டு மூடப்பிடாது. சிலப்பம் அதுக்கு மூச்சுமுட்டும்…நல்ல பச்சை இலைய போடுவோம்” என்றான். அதன்மேல் இலையும் சருகும் போட்டு மூடினான்.
“ஏலே இது இலைய சாப்பிடுமா?” என்று லாசர் கேட்டான்.
ஜான்சன் சிந்தனையில் ஆழ்ந்தபின் “எறும்பையும் தின்னும்” என்றான். அருகிலிருந்த மாமரத்திலிருந்து இலையுடன் சிவப்பெறும்பு கூடு ஒன்றை எடுத்துவந்து கசக்கி உள்ளே போட்டான். “கொண்டு போயி உனக்க வீட்டுலே அக்கானிப்புரையிலே வையி… சத்தம் காட்டாம செய்யணும் கேட்டியா?”
லாசருக்கு நெஞ்சு படபடத்தது. அந்த கலத்தை கையில் எடுத்துக்கொண்டபோது உடல் தளர்ந்தது.
“தைரியமாட்டு போலே…” என்றான் ஜான்சன். “நான் பிறவு வாறேன் என்ன?”
லாசர் பீதியுடன் ‘ஏலே ஒண்ணும் செய்யாதுல்ல?” என்றான்.
“என்ன செய்யும்? ஆருல இவன்? அறிவில்லா மோணையனா இருக்கானே?” என்றான் ஜான்சன்.
லாசர் கலத்துடன் தயங்கித் தயங்கி தன் வீட்டுக்குச் சென்றான். அங்கே முற்றத்தில் அவனுடைய அப்பா நின்றிருந்தார். பக்கத்துவீட்டு அந்தோணிப் பாட்டாவும் எசிலிக்கிழவியும் அமர்ந்திருந்தார்கள். வீட்டுக்குள் அம்மாவின் அழுகை கேட்டது.
அவன் மெல்ல பனைவிடலிகளின் மறைவு வழியாகச் சென்று அக்கானிப்புரைக்குப் பின்பக்கம் பழைய அடுப்புக்குள் கலத்தை ஒளித்துவைத்தான். அதன்மேல் நாலைந்து பனையோலைகளை போட்டு மறைத்தான். கைகளை நன்றாக துடைத்துக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான்
அவனிடம் அக்கானி கொண்டுபோகச் சொல்லியிருந்தாள் அம்மா. அவன் விளையாடப் போய்விட்டான். அம்மா வெளியேவந்து பனைமட்டையால் அடிப்பாள் என நினைத்தான். ஆனால் உள்ளே ஏதேதோ ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன.
வைத்தியர் ஞானப்பிரகாசம் வெளியே வந்தார். உள்ளே அம்மா உரக்க அலறி அழுதாள்.
“நல்லதாக்கும் கடிச்சிருக்கு… நீலம் கேறிப்போச்சு” என்றார் வைத்தியர் ஞானப்பிரகாசம்.
அப்பா கைகளைக் கட்டி தலைகுனிந்து நின்றார்.
கிழவி அவனிடம் “எங்கலே போனே?” என்றாள். அவன் ஒன்றும் சொல்லாமல் ஒட்டுத்திண்ணையில் ஏறி சுவர் சாய்ந்து நின்றான்
உள்ளே இருந்து அம்மா வெறிகொண்டவள் போல ஓடிவந்து அதே விசையில் நெஞ்சறைய விழுந்து நிலத்தில் இரு கைகளாலும் ஓங்கி ஓங்கி அறைந்தபடி “எனக்க மோளே! எனக்க செல்லமே! எனக்க முத்தே!” என்று அலறி அழுதாள்.
அவளுக்கு பின்னால் வந்த பரிசுத்தம் மாமி “போச்சு” என்றாள்.
அப்பா சற்று நிலைதடுமாறினார். பாட்டா அவரை பிடித்துக்கொண்டார். அப்பா அப்படியே மண்ணில் கால்களை பரப்பி அமர்ந்துகொண்டார்.
கிழவி “ஏசுவுக்க சித்தம்… நாம என்ன செய்யுகது? குட்டி பாவக்கறையில்லாம பரலோகம் போறா” என்றாள்.
வீட்டுக்குள் இருந்து வந்த நேசம் அத்தை லாசரின் கையைப் பிடித்து கூட்டிச்சென்று அவள் மகள் மேரியக்காவிடம் கொடுத்து “கொண்டுட்டுப்போய் நம்ம வீட்டிலே வச்சுக்க குட்டி…வல்லதும் திங்கக்குடு”என்றாள்
செல்லும்போது லாசர் “குட்டிக்கு என்ன தீனம்?” என்றான்.
“ஒண்ணுமில்லை , பிறவு சொல்லுதேன்” என்றாள் மேரியக்கா.
“குட்டி கர்த்தர்கிட்ட போச்சுதா?” என்று அவன் கேட்டான்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“குட்டிய இனி பாக்கணுமானா நாமளும் கர்த்தர்கிட்ட போகணுமா?” என்று அவன் கேட்டான்.
“சும்மா இருலே” என்றாள் மேரியக்கா
மேரியக்கா அவனுக்கு சுட்ட பனம்பழமும் கருப்பட்டியும் தந்தாள். அவன் பனைநாரை சப்பியபடி அவர்கள் வீட்டு திண்ணையில் நின்றுகொண்டு தன் வீட்டில் ஊரிலுள்ளவர்கள் அனைவரும் கூடியிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். திருக்கோயிலில் இருந்து ஞானம் உபதேசியார் நீண்ட அங்கியுடன் வந்தார். அவருக்கு அமர்வதற்காக ஜார்ஜ் வாத்தியார் வீட்டிலிருந்து நாற்காலி கொண்டுவந்து போட்டார்கள்.
வீட்டுக்குள் இருந்து அழுகையோசை கேட்டுக்கொண்டே இருந்தது. அம்மாவின் அழுகை மட்டுமல்ல. நிறைய பெண்களின் அழுகை. “நான் வீட்டுக்குப் போறேன்” என்று லாசர் சொன்னான். அங்கே அத்தனை பரபரப்பாக இருக்கும்போது அப்படி விலகி நிற்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
”சின்னப்பிள்ளைக அங்க போகப்பிடாது”என்றாள் மேரியக்கா.
“ஏன்?” என்று அவன் கேட்டான்.
“கர்த்தருக்கு பிடிக்காது” என்றாள்.
“ஆமா, கர்த்தருக்குப் பிடிக்காது” என்று அவன் சொன்னான். கர்த்தருக்குப் பிடிக்காதவற்றை அவன் செய்வதில்லை.
அவள் “கருப்பட்டி வேணுமா?” என்றாள்.
அவனுக்கு அப்படி நிறைய கருப்பட்டி கிடைப்பதில்லை. சாதாரண நாட்களில் மேரியக்கா கருப்பட்டி கேட்டாலே அடிக்க வருவாள். அவள் அப்போது அழகாக தெரிந்தாள். அவளுடைய பற்கள் வெண்மையானவை, ஈறுகள் செங்கல்நிறத்தில் இருந்தன. அவளுடைய கழுத்தும் தோளும் கருமையாக பளபளப்பாக இருந்தன.
“அக்கா நீ பளபளப்பா இருக்கே” என்று அவன் சொன்னான்.
அவள் புன்னகைத்தாள். அவள் கண்கள் எருமைகளின் கண்கள் போல விரிந்து நீர் மின்னின. அவளுடைய கூந்தல் நீளமாக பளபளப்பாக இருந்தது. அவன் அம்மாவின் கூந்தல் நார்போலிருக்கும். உச்சியில் சும்மாடு வைக்கும் இடம் முடியில்லாமல் காய்ந்த புல் போலிருக்கும்
அவன் மேரியக்கா கொடுத்த கருப்பட்டியுடன் வந்து மீண்டும் திண்ணையில் நின்றான். ஜான்சன் அவனை நோக்கி வந்தான். அவன் வந்த நடையிலேயே ரகசியம் இருந்தது. அவனிடம் சொல்ல தனக்கு மேலுமொரு செய்தி இருப்பது லாசருக்கு பரபரப்பை அளித்தது. “ஏலே எனக்க குட்டி செத்துப்போச்சு” என்றான்.
“ஆமா, பாம்பு கடிச்சுப்போட்டுன்னு அம்மா சொன்னாவ” என்றான் ஜான்சன். “நான்கூட நமக்க விச வண்டுதான் கடிச்சுப்போட்டோன்னு நினைச்சேன்”
லாசர் . ‘நான் அதை கொண்ட்டுப்போயி வைக்குறப்பவே குட்டிய பாம்பு கடிச்சுப்போட்டுது” என்றான் லாசர்.
“நல்ல குட்டி. வளந்த பிறவு அவளை நான் கெட்டணும்னு நினைச்சேன்” என்று ஜான்சன் சொன்னான்.
லாசரின் கையிலிருந்த கருப்பட்டியை இயல்பாக வாங்கி தன் வாய்க்குள் போட்டுக்கொண்டு ஜான்சன் “நீ விச வண்டை பாத்தியா? அது இலை திங்குதா?” என்றான்.
“இல்லை, என்னைய இங்க கூட்டிட்டு வந்திட்டாவ” என்றான் லாசர்.
“ஆமா, சாவுஜெபத்தை பிள்ளைக கேக்கப்பிடாது” என்று ஜான்சன் சொன்னான். “அடக்கம் சாயங்காலம் உண்டுண்ணாக்கும் சொன்னாவ”
லாசர் ரகசியமாக “அடக்கம்ணாக்க?”என்றான்.
“மண்ணிலே புதைச்சு வைக்கிறது” என்றான் ஜான்சன். அவனும் ரகசியமாகத்தான் சொன்னான்.
“குருசிக் கிளவிய புதைச்சது மாதிரியா?” என்றான் லாசர்.
“ஆமா” என்று ஜான்சன் சொன்னான். “பெட்டியிலே வைச்சு புதைப்பாவ”
லாசர் சற்றுநேரம் யோசித்துவிட்டு “அப்டியாக்கும் கர்த்தர்கிட்ட போறது இல்லியா?” என்றான்.
“ஆமா” என்று ஜான்சன் சொன்னான்.
“கிளவி அங்க இப்பம் இருபபா.. இவள கண்டதும் வா பிள்ளேண்ணு விளிப்பா. கிளவி அருமையானவளாக்கும்”
லாசர் மேலும் குரல்தாழ்த்தி “இனி நான் குட்டிய பாக்கணுமானா கர்த்தர்கிட்ட போகணுமா?” என்றான்.
“நாம கொறே பிந்தி போவலாம்லே” என்றான் ஜான்சன். “நாம பள்ளிக்கொடத்திலே படிக்கணும்லா?”
லாசரின் வீட்டுக்கு சவப்பெட்டி சென்றது. மரியான் அண்ணா அதை தூக்கிச் சென்றார். சிறிய பெட்டி. குட்டி சிறிய உடல் கொண்டவள். அவளை அவன் தவளை என்றுதான் அழைப்பான். அவளுக்கு மேல்வாயில் ஒரே பல்தான். தவழ்ந்து தவழ்ந்து அவள் தொடைகளெல்லாம் கருமையாக இருக்கும். “ன்னா ன்னா” என்று அவளே நெஞ்சில் எச்சில் ஒழுக சொல்லிக் கொண்டிருப்பாள். கழுத்தில் தொங்கிய சிலுவைக்கயிற்றை பிடித்து தூக்கி சிலுவையை வாயில் வைத்து கடிப்பாள். அவனைக் கண்டதும் கண்களில் சிர்ப்புடன் “ன்னா ன்னா ன்னா” என்பாள்.
லாசருக்கு அழுகை வந்தது.
“ஏம்லே?” என்று ஜான்சன் கேட்டான்.
“குட்டி நல்லவளாக்கும்லே… அருமையாட்டு என்னைய அண்ணாண்ணு விளிப்பா” அவன் தேம்பி அழத்தொடங்கினான்.
ஜான்சன் “அவளை ஜீவிக்கவைக்கணுமானா பெரிய சாமியாரு நினைக்கணும்” என்றான்.
லாசர் நிமிர்ந்து பார்த்தான்.
“ஏசு சாமி மூணாம்நாள் வந்தாருல்லா?” என்றான் ஜான்சன்.
லாசர் ‘குட்டீ எனக்க குட்டீ!” என்று கதறி அழத்தொடங்கினான்.
ஜான்சன் பயந்துவிட்டான். “ஏல ஏல” என அவனை உசுப்பினான். மேரியக்கா ஓடிவந்தாள்.
அவன் அப்படியே படுத்துவிட்டான். மேரியக்கா அவனருகே அமர்ந்திருந்தாள். அவன் கொஞ்சம் தூங்கியிருப்பான். அவனை யாரோ தூக்கிக் கொண்டுசென்றார்கள். “நில்லுலே….ஏலே நில்லுலே” அவன் நிற்கமுடியாமல் குழைந்தான். “மண்ணைப்போடு… மண்ணைப்போடு” குழிக்குள் ஒரு சிறிய பெட்டி. அவன் கையைக்கொண்டு எவரோ மண்ணை அள்ளிப்போட்டார்கள். அவன் விசும்பிக்கொண்டே இருந்தான்
அவனுக்கு அன்றே காய்ச்சல் கண்டது. அவன் பாயில் புரண்டபடி “குட்டி குட்டி” என்று புலம்பிக்கொண்டிருந்தான். “குட்டி வண்டாக்கும்… எனக்க குட்டி வண்டாக்கும்” என்றான்.
அவனுக்கு வாயில் கசப்பான மருந்தை ஊற்றி குடிக்க வைத்தார்கள். மேரியக்கா அவனை எழுப்பி அமரச்செய்து சூடான கஞ்சியை அவனுக்கு கொடுத்தாள். அவன் கண்ணீருடன் “குட்டி, எனக்க குட்டி… அவளுக்கு பல்லு இருக்கு” என்று சொன்னான்
திருக்கோயிலில் ஜெபம் நடந்தபோது மேரியக்கா அவனை துணியால் மூடி கூட்டிக்கொண்டு சென்றாள். அவனுக்கு காக்கிச் சட்டையும் காக்கி கால்சட்டையும் அவள்தான் அணிவித்தாள். “உனக்க குட்டிக்க ஜெபமாக்கும். ஒரு வார்த்தையானாலும் நீ கேக்கணும்லே” என்றாள்
அவனால் பெஞ்சில் அமர முடியவில்லை. அம்மாவை எசிலி கிழவியும் அத்தையும் இருபக்கமும் நின்று தூக்குவதுபோலகொண்டுவந்தார்கள். அம்மா முக்காட்டால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அப்பா ஆண்கள் பகுதியில் இறுக்கமாக கைகளை நெஞ்சோடு கட்டியபடி அமர்ந்திருந்தார்
அவன் பெரிய சாமியாரின் ஜெபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான். பெரிய சாமியார் லண்டனில் இருந்து வந்தவர். அவர் பஞ்சுபோல வெண்மையான தாடியும் முடியும் வைத்திருந்தார். பூனைக்கண்கள். அவர் மெட்ராசிலிருந்து நடந்தே இடையான்குடிக்கு வந்ததாக வேதக்கண் வாத்தியார் சொன்னார்.
“ஏலே நடந்துலே… அங்கேருந்து இங்க வரை நடந்து வந்திருக்காரு… எதுக்கு? ஏலே இந்த தேரிக்காட்டிலே இந்த இடையான்குடியிலே நம்மையெல்லாம் ரெட்சிக்கதுக்கு…. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”
அவன் அவரை தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அவர் கையில் நீண்ட பிரம்புடன் பூட்ஸ் அணிந்துகொண்டு நடை செல்வார். அப்போது எவரிடமும் பேசமாட்டார். இரவில் கையில் நீண்ட மூங்கிலும் மறுகையில் அரிக்கேன் விளக்குமாக இடையான்குடியைச் சுற்றிவருவார். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா!” என்று கூவிக்கொண்டே செல்வார். “பீடைகளும் பேய்களும் ஓடிப்போகும்லா? அருளுள்ள மனுசனாக்குமே” என்று எசிலி கிழவி சொல்வாள்.
அவன் அவர் பெயரை பலமுறை சொல்லிப் பார்த்ததுண்டு. அவன் நாவில் அவர் பெயர் வருவதில்லை. சாமுவேல் மாதிரி. வறுவேல் மாதிரி ஒரு விசித்திரமான பெயர். ஆனால் ஜான்சன் தெளிவாகவே சொல்லிவிடுவான். ராபர்ட் கால்டுவெல். அவனால் சொல்லமுடியாத ஒன்றும் இல்லை. ஜான்சன் எல்லாவற்றையும் எப்படியோ அறிந்திருந்தான்.
பெரிய சாமியார் கைகாட்ட மரியான் எழுந்து பைபிளை வாசித்தார். அவன் குரல் உரக்க ஒலித்தது. திருக்கோயிலில் பைபிள் வாசிக்கும்போது அது அங்கிருக்கும் எவரிடமும் உரையாடுவதுபோல் இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் எவரோ ஒருவரிடம் தனியாகப் பேசுவதுபோல ஒலிக்கிறது.
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றாள். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.
மார்த்தா அவரிடம் , “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார். இயேசு அவளிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றாள்.
அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “லாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார்.
இறந்தவனாகிய லாசர் உயிரோடு வெளியே வந்தான். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
அவன் வாசித்து நிறுத்தியதும் பெரிய சாமியார் கைகூப்பி “பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே” என்றார். சபை ரீங்காரமிட்டது.
“நம்புங்கள், இறந்து மீண்டும் உயிர்த்தெழாமல் எவரும் தேவனை அடைவதில்லை. இறப்பு என்பது ஒரு குளியல். இறப்பு என்பது ஒரு வாசல். இறப்பினூடாகவே நாம் மெய்யான தேவனை அடைகிறோம். அவருடைய ஆணையாலே நாம் உயிர்த்தெழுவோம்” என்றார்.
லாசருக்கு கடுமையாக குளிர்ந்தது. அவன் முனகியபடி எழமுயன்று சுருண்டு விழுந்தான். அவன் உடலில் இருந்து சூடாக சிறுநீர் சென்றுகொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். “குட்டி குட்டி” என்று அவன் கூவினான். “குட்டி இங்க நிக்கா… எனக்க குட்டி இங்க நிக்கா!”
சபை கலைந்தபோது வேதம் வாத்தியார் “அமைதி அமைதி” என்றார். “ஏட்டி அந்தபிள்ளைய வெளியே கொண்டுபோ” என்று ஆணையிட்டார்.
மறுநாளே லாசர் குணமாகிவிட்டான். அவன் வாய் மட்டும் கசந்தது.கைகால்களில் கடுமையான ஓய்ச்சல் இருந்தது. அது இனிமையாகவும் தோன்றியது. கண்களை திறந்தபோது ஒளி கூசி கண்ணீர் வழிந்தது. அவன் சுருண்டு பாயில் படுத்துக்கொண்டான். காதில் தொலைவிலுள்ள ஓசைகள் கூட கேட்டுக்கொண்டிருந்தன
வீட்டில் சமையல்வேலை அனைத்தையும் எசிலிக்கிழவிதான் செய்தாள். அம்மா எதையுமே செய்யாமல் பின்திண்ணையிலேயே அமர்ந்திருந்தாள். அப்பா பனையேறப் போகவில்லை. பத்துநாள் அவர் பனையேற வேண்டியதில்லை என்றும். அவருடைய கூறு பனைகளை மற்றவர்கள் பங்கிட்டு ஏறிக்கொள்வது என்றும் முடிவுசெய்திருந்தார்கள்.
எசிலி கிழவி ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள். “படுத்தா எந்திரிக்கோம். செத்தா உயிர்த்தெழுதோம்… நினைச்சு நினைச்சு அளுதா ஆச்சா? நான் சொல்லுத ஆரு கேக்கா? போடீ கிளவீங்குதாக” ஆனால் அவளுடைய குரல்தான் அந்த வீட்டை உயிருடன் வைத்திருந்தது.
லாசர் சிறுநீர் கழிக்க எழுந்தான். கால்கள் தடுமாறின. சுவரைப் பிடித்தபடி நடந்து வெளியே சென்றான். அவனை கண்டதும் விடலிப்பனைக்கு அப்பாலிருந்து ஜான்சன் சீழ்க்கை அடித்தான். அவன் திரும்பிப் பார்த்தான்.
அவனருகே வந்த ஜான்சன் “ஏல, அந்த வண்டு என்னாச்சுலே? குட்டி போட்டுதா? பாத்தியா?” என்றான்.
லாசர் அதை மறந்தே போயிருந்தான்.
“இல்லே, பாக்கல்லே” என்றான். “எங்க வச்சே?” என்றான் ஜான்சன்.
“அந்த வண்டு ஆருக்கதுன்னு நான் கண்டுபிடிச்சாச்சு. அது பெரிய சாமியாரு வளக்குத வண்டாக்கும்”
“அவரு வளக்குததா? ஆரு சொன்னா?” என்று லாசர் கேட்டான்.
“அவரு சட்டையிலே இருக்குத பையிலே வச்சிருக்கப்பட்ட வண்டாக்கும் இது. அடிக்கடி அருமையாட்டு எடுத்து பார்த்துக்கிடுவாரு. யோசேப்பு அண்ணன் சொன்னாரு” ஜான்சன் சொன்னான்
“நீ அவருகிட்ட சொன்னியா?” என்று லாசர் பீதியுடன் கேட்டான்.
“இல்லே…அவராக்கும் எனக்க கிட்ட கேட்டது. இந்தமாதிரி இருக்கும்லே, நீ கண்டியான்னு கேட்டாரு. அப்பமே நான் கண்டுபிடிச்சுப்போட்டேன்… அது காணாமப்போச்சுன்னு பெரியசாமியாரு தேடிட்டிருக்காரு. அண்ணனுக்க கிட்ட தேடிப்பாக்க சொல்லியிருக்காரு” என்றான் ஜான்சன்.
லாசர் “விலையுள்ள வண்டாக்கும்லே” என்றான்.
ஜான்சன் “ஆமா, லண்டன் வண்டுல்லா?” என்றான்.
ஜான்சன் “எங்கலே வச்சே?” என்றான்.
“திருப்பி குடுத்திருவோம்லே…அவரு ஏசு சாமிக்க சாமியாராக்கும்” என்றான் லாசர்
“பத்து பைசாவுக்கு விக்கலாமே”என்றான் ஜான்சன்
அவன் ஜான்சனை அக்கானிப்புரைக்கு பின்னால் கூட்டிச்சென்றான். பனையோலையை அகற்றி கலத்தை வெளியே எடுத்தான். குச்சியால் சருகுகளை விலக்கி பார்த்தான். வண்டு இருந்தது. இலைகள் வாடியிருந்தன
“ஏம்லே சத்தமே கேக்கல்ல?” என்றான் ஜான்சன்
“ஆமா, சத்தமே கேக்கல்ல” என்று லாசர் சொன்னான்.
ஜான்சன் “செத்துப்போச்சுலே” என்றான் ஜான்சன்.
“செத்துப்போச்சா?” என்று லாசர் கேட்டான்.
“பாருலே, அதுக்க கொடுக்கு செத்திருக்கு”
லாசர் கூர்ந்து பார்த்தான். மெய்யாகவே அது செத்துவிட்டிருந்தது. அவன் நெஞ்சு படபடத்தது.
ஜான்சன் சட்டியிலே எடுத்திருக்கப்பிடாதுலே” என்றான்.
“சட்டியிலே எடுத்தோம்ல, அதனாலேதான் செத்துப்போச்சு”.என்றான் லாசர்.
ஜான்சன் “நான் எடுக்கல்லே” என்று ஜான்சன் சொன்னான். லாசரை நோக்க்கி கைசுட்டி “’நீதான் எடுத்தே” என்றன்.
லாசர் ‘ஆமா, நாந்தான் எடுத்தேன்” என்றான்.
“நான் வேண்டாம்னாக்கும் சொன்னேன்” என்றான் ஜான்சன்.
லாசர் “ஆமா” என்றான். பிறகு “என்னலே செய்ய?” என்றான்.
“கொண்டுபோயி யோசேப்பு அண்ணன் கிட்டக் குடுப்பம்” என்றான் ஜான்சன்.
“அவரு என்னைய அடிப்பாரு” என்று லாசர் சொன்னான்.
“ஆமா அடிப்பாரு. நீதானே எடுத்து வச்சே? உனக்க வீட்டிலேதானே இருந்தது? செத்துப்போச்சுல்லா?”
லாசர் அதை மீண்டும் பார்த்தான். அவனுக்கு இரக்கம்தான் வந்தது. நல்ல வண்டு. அதன் நீலக்கண்களில் ஒளி இருந்தது. “நாம இதை பெரியசாமியாரு கிட்ட குடுப்பம்… அவரு அடிக்க மாட்டாரு” என்றான் லாசர்.
“பெரியசாமியாரு கிட்டயா? அய்யோ….நீ போ. நான் வரமாட்டேன்” என்றான் ஜான்சன்.
லாசர் “நான் போறேன்” என்றபடி கலத்துடன் நடந்தான்.
“அய்யோ லே. அவரு அடிப்பாருலே… பிரம்பு வச்சிருக்காருலே” என்றான் ஜான்சன்.
“அடிச்சா சாவுதேன்… நான் எடுத்து வச்சுத்தானே வண்டு செத்துப்போச்சு?” என்றான் லாசர்.
“நீ போ…நான் வரமாட்டேன்” என்றான் ஜான்சன்.
“நான் போறேன்” என்று லாசர் சொன்னான்.
“நீ என் பேரச் சொன்னா நான் உன்னை கல்லால அடிப்பேன்” என்றான் ஜான்சன். “சொல்லமாட்டேன்” என்று லாசர் சொன்னான்
அவன் பெரியசாமியாரின் வீட்டை அடைந்தான். பெரியசாமியாரின் மனைவி வெளியே போர்வைகளை காயப்போட்டுக்கொண்டிருந்தாள். வேலைக்காரப்பெண் உதவி செய்தாள். அவளிடம் சென்று பெரிய சாமியாரைச் சந்திக்கவேண்டும் என்று கேட்கலாமா? வேண்டாம். நேராக அவரிடமே சென்றுவிடலாம்
அவன் வீட்டைச் சுற்றிக்கொண்டு சென்றான். அவர்களின் கூரைவீடுகளை விட பலமடங்கு உயரமான வீடு. பெரிய வெள்ளைச் சுவர்கள். அவர்களின் வீடும் திருக்கோயில் போலவே இருந்தது. அவன் பெரிய சாமியாரின் அறையை கண்டான். அவர் ஒரு மேஜைமுன் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.
அவன் வாசலில் மறைந்து நின்றான். அவர் இறகுப்பேனாவால் நத்தைவடிவப் புட்டிக்குள் இருந்து நீலநிற மையை தொட்டுத் தொட்டு எழுதினார். நீலநிற கட்டெறும்பு போன்ற எழுத்துக்கள். அந்த தாள் கமுகுப்பாளை போலிருந்தது. எழுதப்பட்ட தாளை அருகே ஒரு கொக்கியில் காயப்போட்டிருந்தார்
அவன் ;”சாமி” என்றான்.
அவர் அவனை திரும்பிப் பார்த்தார். பூனைக்கண்களுடன் அவருடைய பார்வை முறைப்பதுபோலிருந்தது. அவனுக்குச் சிறுநீர் வந்தது. அவன் தப்பி ஓடிவிட நினைத்து கட்டுப்படுத்திக்கொண்டான்
“சாமி உங்களுக்க வண்டு எனக்கு கிட்டிச்சு. அதை நான் இந்த சட்டியிலே வைச்சதினாலே செத்துப்போச்சு” என்று லாசர் சொன்னான். அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. “எனக்க குட்டி செத்தது மாதிரி செத்துப்போச்சு”
“இங்க வா” என்று அவர் அழைத்தார். அவன் அருகே சென்றதும் அவனை அருகே அழைத்து கைகளால் தோளை வளைத்தார். அவன் தலைமேல் கைவைத்து நன்மைஜெபம் செய்தார்.
அவன் அழுதபடி “செத்துப்போச்சு சாமி…நான் ஒண்ணுமே செய்யல்ல. செத்துப்போச்சு சாமி” என்றான்
அவர் பானைக்குள் இருந்து அந்த வண்டை வெளியே எடுத்தார். அவருடைய விரல்களுக்கு நடுவே அதன் வால் தொங்கியது. அவர் அதை குலுக்கிப் பார்த்தார்.
“நான் பானையிலே வச்சேன்…பானையிலே செத்துப்போச்சு சாமி” என்றான் லாசர்.
பழுப்புநிற பற்கள் தெரிய “எனக்க மக்கா, செத்ததெல்லாம் என் தேவன் கைபட்டால் எழும்பாதோ?” என்றார் பெரிய சாமியார். “பாரு… இதையும் தேவன் எழுப்புவார்”
அவர் அதை கையில் வைத்து விரல்களால் வருடினார். அவர் ஜெபம் சொல்கிறார் என லாசர் நினைத்தான். அவர் அதைக் கொண்டுசென்று மேஜைமேலிருந்த சிலுவைப்பாடுச் சிலையின் கீழே வைத்தார். மரத்தில் செதுக்கப்பட்ட சிலை. ஏசுவானவர் முள்முடிசூடி கைவிரித்து வானை நோக்கிக்கொண்டு தொங்கினார்.
லாசர் திரும்பி நோக்கியபோது வாசலில் ஜான்சன் நிற்பதைக் கண்டான். அவன் பாதியுடல் மறைந்து நின்றிருந்தான்.
பெரியசாமியார் திரும்பியபோது லாசர் கைகூப்பினான்.
அவர் அவனை நோக்கி புன்னகைத்து “பாரு, உயிர்த்தெழுதல் நடந்தாச்சு” என்றார்
லாசர் போவதற்குள் ஜான்சன் முன்னால் சென்று அந்த வண்டைப் பார்த்தான். அது மீண்டும் டிக்டிக்டிக்டிக் என ஓசையிட்டது. அதன் உணர்கொம்பு அசைந்துகொண்டிருந்தது
“சீவன் வந்தாச்சு” என்று ஜான்சன் சொன்னான். “நானாக்கும் இவன்கிட்ட சொன்னது, கொண்டுபோயி பெரிய சாமிகிட்ட குடுலே, அவரு சீவன் குடுப்பாருண்ணு”
லாசர் “ஆமா, இவனாக்கும் சொன்னது” என்றான்
“ஜெபம் செய்வோம்” என்றார் பெரிய சாமியார்.
லாசர் மண்டியிட்டான். ஜான்சன் அவனருகே மண்டியிட்டு அமர்ந்துகொண்டு சுற்றும் பார்த்தான். லாசரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
பெரியசாமியாரும் மண்டியிட்டார். “பரமண்டலங்களை ஆளும் என் பிதாவே, அருமைக்குமாரனே, ஆவியானவரே, மானுடரின் பாடுகளை தேவனே நீர் அறிவீர். எல்லா கண்ணீருடனும் உன் கைகளும் உடனிருக்கிறதல்லவா என் ஆண்டவனே! எல்லா இல்லங்களிலும் உன் காவல் அமைகிறதல்லவா என் மீட்பனே! எங்கள் ஆத்மாக்களை தொட்டு உயிர்த்தெழவைக்கும் தூயநீர் அல்லவா உன் சொல்!”
***