நாகப்பிரகாஷின் கதைகள் – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை.பெரிய இடி மழைக்காக மனிதர்கள் ஓடி ஒதுங்குவதைக் கண்டு ஒரு கட்டெறும்பு, எதற்குக் காரணம் இல்லாமல் ஓடுகிறீர்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கும். மழை நன்றாக ஓய்ந்த பின்னர் மனிதர்கள் சகஜமான நிலைக்குத் திரும்பியிருப்பர். அப்போது அந்த எறும்பு நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு மேலே உள்ள ஒரு பழுத்த இலையும், அதில் தேங்கி இருந்த நீரும் அந்த எறும்பின் மேல் விழுந்த போது பிரளயம் எனப் பதறிக் கொண்டு ஓடும்.

 

நாகபிரகாஷின் கதை உலகமும் கிட்டத்தட்ட இந்த கட்டெறும்பின் உலகம் போல் தான் அதில் உருவாகும் பிரளயத்திற்கும் முதிர்ந்த மனிதர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. அங்கே ஒரு சிறுவனின் உலகமும் அவனைச் சுற்றிய பிரச்சனைகளுமே சுட்டப்படும். இந்த கட்டெறும்பிற்கும், மனிதர்களுக்குமான வேறுபாட்டை நினைவில் கொண்டே நாகபிரகாஷின் சிறுகதைகளை அணுக முடியும்.

 

நாகபிரகாஷின் எரி சிறுகதைத் தொகுப்பை இரு கூறுகள் மூலம் அணுகலாம்.

 

ஒன்று, அவர் ஆதர்சமாய்க் கொண்ட அவரின் முன்னோடிகளிடமிருந்து பெறப்பட்டது. அவர்கள் வழி நின்று அவர்களின் தொடர்ச்சியாகக் கதைகளைப் புனைய முயல்வது. அந்த வகையில் நாகபிரகாஷ் காட்டும் குழந்தைகளின் உலகத்தைக் கொண்டு அவர் ஆதர்சமாக கு.அழகிரிசாமியைக் குறிப்பிடலாம் நடையில் அசோகமித்திரனையும். கு.அழகிரிசாமி காட்டும் குழந்தைகள் உலகம் குழந்தைத் தனமானவை அதனாலே தமிழின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக ராஜா வந்திருக்கிறார், இரு கண்ட ஒரே கனவு போன்ற கதைகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

 

பத்து வயது பாலகன் ஒருவனுக்கு இறப்பு என்பது எப்படியும் புரிய வைக்க முடியாது. ஆனால் அந்த குழந்தைகள் காணும் கனவின் மூலமே அவர்கள் தன் தாயின் பிரிவை உணர்கின்றனர். அது ஓர் குழந்தை அப்பிரிவினை உணர்ந்த தருணம். ராஜா வந்திருக்கிறாரில் வரும் மங்கம்மாள் சொல்லும், “அதனால் என்ன எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறார்” என்ற வரிகள் ஒரு குழந்தையின் வாயிலிருந்து மட்டுமே பெற முடியும் குழந்தைத்தனமான வரிகள். ஆனால் நாகபிரகாஷ் காட்டும் குழந்தைகளின் உலகம் இதற்கு நேர் எதிரானவை குழந்தையின் பிடியில் சிக்கிய இளமையின் வறுமையையும், ஏமாற்றத்தையும் சித்தரிப்பவை.

அதற்கு காரணமாக இரண்டாவது கூற்றை முன் வைக்கலாம். அதாவது அவர்தன் சொந்த வாழ்விலிருந்து பெறும் அனுபவங்கள். அவர் இளமைக்காலத்து அனுபவங்கள் அதில் ஏற்பட்ட கசப்புகள் ஏமாற்றங்கள். அவை புனைவாகும் தருணம். சொல்லப் போனால் இந்த பண்பே நாகபிரகாஷின் தனித்துவத்தைக் காட்டுவதாக இத்தொகுப்பில் அமைந்துள்ளது. இந்த அம்சம் கொண்டு எழுதப்பட்ட கதைகளாகிய என் வீடு, சுவருக்கு அப்பால், சகடம் போன்ற கதைகளே இத்தொகுப்பின் குறிப்பிடத்தக்கக் கதைகளாக உள்ளன.

 

எந்த காலத்திலும் சிறுகதை ஒரு உச்சத்தை நோக்கிச் செல்வது அதுவும் அதனுள் ஒரே ஒரு உச்சம் (Elevation) மட்டுமே சாத்தியம் என்பதால் அது இறுதியில் மட்டுமே அமைய முடியும். அங்கிருந்தே கதை வாசகனிடம் வேறொரு தளத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது. மொத்த இமயமலைத் தொடரையும் கடந்து செல்வது தான் நாவல் என்றால் இங்கே பொதிகை மலை உச்சியை அடைவதே சிறுகதை அதன் உச்சத்தில் நாம் காணும் தரிசனமே சிறுகதையின் இறுதி அங்கிருந்து கீழிறங்குவது எல்லாம் வாசகன் சிறுகதையிலிருந்து தான் பெற்றதைக் கடத்திச் செல்லும் நிலை.

 

அந்த வகையில் இந்த தொகுப்பில் எரி, கோதைமங்கலம் போன்ற தட்டையான கதைகளும் அதாவது எந்தவித மேலும் கீழும் இல்லாமல் வெறும் வர்ணனைகள் மட்டுமே அடங்கியதாகக் கதையைச் சொல்லிச் செல்வதான கதைகள் முயற்சி என்ற அளவில் மட்டுமே பேசக் கூடியவை. ஆனால் உச்சம் அல்லது ஒரு elevation கொண்ட கதைகள் இந்த தொகுப்பில் இல்லாவிட்டாலும் அதற்கான வாய்ப்பு கொண்டவைகளாக மீண்டும் மேலே சொன்ன என் வீடு, சுவருக்கு அப்பால், சகடம் கதைகளையே சொல்லலாம். இந்த கதைகளிலிருந்த அவர் மேல் எழுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.

 

மேலும் ஆண் பெண் உறவுகள் அதிலுள்ள சிக்கல்களை எழுதும் அளவிற்கு நாகபிரகாஷ் இன்னும் பெரியவனாகி விடவில்லை என கோதைமங்கலம், நோக்கு, பவித்ரா போன்ற கதைகள் காட்டுகின்றன அதனால் அவர் இத்தகைய கதைகளைச் சற்று வளர்ந்த பின்னர் எழுதிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

 

சு.வேணுகோபால் அவரது உரையில் குறிப்பிட்டது போல் இந்த பேஸ்புக் யுகத்தில் வரும் கதைகள் அந்த தளத்திலேயே நின்று வெறும் நிகழ்வுகளாகக் கடந்து செல்கின்றன. அதனைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க முயற்சித்தால் மட்டுமே சிறுகதை வடிவத்தை நம்மால் அடைய முடியும். இதனை நாகபிரகாஷ் ஒரு எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 

கயிற்றை கட்டி கிணற்றில் நீச்சல் பயின்ற பின்னர் தான், கம்மா, ஆறுகளில் நீச்சல் அடிக்க முடியும். தற்போது ஆற்றில் நீச்சலடிக்கப் போகும் நாகபிரஷிற்கு எனது வாழ்த்துகள்.

 

 

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

 

முந்தைய கட்டுரைவேறுவழிப் பயணம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமீண்டு நிலைத்தவை