புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை
அன்புள்ள ஜெமோ,
புத்தகக் கண்காட்சி, கருத்துரிமை பற்றிய கட்டுரை கூர்மையானது, நேரடியானது. இப்படி நேரடி யதார்த்தத்தைக் கூட எவராவது புட்டுப்புட்டு வைக்காமல் முடியாது என்ற நிலையே இன்றுள்ளது. புத்தகக் கண்காட்சியில் மு.க வந்தபோது பழ.கருப்பையா எழுதிய விமர்சனநூலை எல்லாம் பொறுக்கி எடுத்து கண்மறைவாக வைத்ததெல்லாம் நல்ல நினைவில் இருக்கிறது.
புத்தகக் கண்காட்சி தானாக உருவான ஒரு நிகழ்வு. எந்த அரசு ஆதரவும் இல்லை. இணையம் வந்ததும் தினமணிபோன்ற நாளிதழ்கள் நிறைய ஆதரவு அளித்ததும்தான் அது வளர்ந்ததற்குக் காரணம். நடுவே சிலபேர் அதைக்கொண்டு தனிப்பட்ட லாபம் ஈட்ட நினைத்தார்கள். கருணாநிதி அள்ளிக்கொடுப்பார் என நினைத்தார்கள். ஆகவேதான் கருணாநிதியின் காலடியில் கொண்டு புத்தகக் கண்காட்சியை வைத்தார்கள். புத்தகக் கண்காட்சியே கருணாநிதி -இடதுசாரிகளுக்குரியது என்ற சித்திரம் உருவாகியது.
ஆகவேதான் ஜெயலலிதா அதை கண்டுகொள்ளவே இல்லை. அந்தம்மாவை சந்திக்க தலையால் தண்ணீர் குடித்தார்கள். நடக்கவில்லை. ஆனால் அந்தம்மா புத்தகம் படிக்கும் பழக்கம் கொஞ்சம் இருந்தவர்கள். ஆகவே எதிர்ப்பாக ஒன்றும் செய்யவில்லை. அந்தம்மா இதை நிறுத்தவேண்டும் என நினைத்திருந்தால் ஒரு சொல்லே போதுமாக இருந்திருக்கும்.
இன்றைக்கு இப்போதுள்ள அரசாங்கத்தின் காலடியில் விழவேண்டியிருக்கிறது. ஒரு சின்ன அரசாணைபோதும் மொத்த புத்தகக் கண்காட்சியும் நின்றுவிடும். நின்றால் நிற்கட்டுமே என்றுதான் திமுகக்காரர்கள் இடதுசாரிகள் சொல்வார்கள். அவர்களால் இன்னொன்றை உருவாக்க முடியாது. இன்றைக்கு பபாசியின் மேடையில் ஏறிநின்று அரசை வசைபாடுகிறார்கள். புத்தகக் கண்காட்சி வளாகத்தை அரசியல்களமாக ஆக்குகிறார்கள். அரசின் பகை வந்தால் புத்தகக் கண்காட்சி அழியும். இவர்கள் வேறுவேலைபார்க்கச் சென்றுவிடுவார்கள்.
இந்த புத்தகக் கண்காட்சியில் அரசை ஆதரிக்கும் நூல்கள் மட்டுமா உள்ளன? இருக்கும் நூல்களில் பாதிப்பங்குக்கு மேல் எதிர்ப்பு நூல்கள்தான். ஆனால் அவை நூல்களாக இருக்கவேண்டும். அரசியல் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்றெல்லாம் சென்றால் அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். எந்த அரசும் அதைத்தான் செய்யும். இதைச்சொன்னால் இந்த அரசியல்போராட்டக்காரர்களுக்கு புரிவதில்லை. உங்கள் எதிர்ப்பை அரசிடம் காட்டுங்கள் புத்தகக் கண்காட்சியை அழிக்க வேண்டாம் என்றுதான் மன்றாடிக் கேட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது
அரசியல்சார்பு கொண்டவர்கள் பலர் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நாடே எரிகிறது புத்தகவாசிப்பு ஒரு கேடா என்கிறார்கள். போராடாமல் புத்தகம் விற்பவர்கள் துரோகிகள் என்கிறார்கள். புத்தகம் வாங்க வருபவர்கள் துரோகிகள், சூடுசொரணை அற்றவர்கள் என்கிறார்கள். இவர்களெல்லாம் ஏதோ போராட்டப்புரட்சி மட்டும் செய்துகொண்டிருப்பதுபோல கூச்சலிடுகிறார்கள். மொத்தமாக இவர்களின் நோக்கமே புத்தகக் கண்காட்சியை அழிப்பதுதானா என்று தோன்றுகிறது.
எம்
வணக்கம் ஜெ,
இவ்வளவு பெரிய அளவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நிச்சயமாக மிகப் பயனுள்ளதும், ஒரு பெரிய அடையாளமும்தான். இன்றய அரசியல் சூழலில் ஆட்சியாளர்களுக்கு இணங்கிப் போவது எல்லா இடங்களிலும் நடப்பதே. நீங்கள் சொன்ன தி.மு.க. காலத்து அடாவடிகளோடு ஒப்பிடும்போது இன்று எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
மேலும் நீங்கள் குறிப்பிட்ட முக்கியமான விஷயம், கண்காட்சியில் மதநிறுவனங்கள், மடங்கள், அரசியல் பிரச்சார கடைகள் போன்றவை கணிசமான அளவுக்கு இருக்கின்றன. இவைகள் போதாதென்று புத்தகங்களை வாங்கி விற்கும் நிறுவனங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் போன்றவைகளும் இடத்தை அடைக்கின்றன. இதுபோன்றவர்களை கணக்கிட்டால் ஒரு பெரிய லிஸ்டே வரும்போல.
Dial For Books, Marinabooks, Panuval Store போன்றவைகள் பதிப்பகங்கள் அல்ல. வாங்கி விற்கும் நிறுவனங்கள். இவர்கள் இங்கே வந்து கடை போடுவது அர்த்தமற்றது. இவர்கள் நகருக்குள் கடை வைத்திருக்கிறார்கள், ஆண்டுமுழுவதும் இணையதளத்தில் புத்தகங்கள் விற்கிறார்கள். அவை போதாதா ? Dial For Books பெரும்பாலும் கிழக்கு பதிப்பகத்தின் நூல்களையே விற்கிறார்கள். அதான் கிழக்கு பதிப்பகம் தனியாக கடை போட்டிருக்கிறார்களே, பின்பு அதே நூல்களை வேறு இடத்தில் வைத்து விற்கவும் வேண்டுமா ? பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக கேட்பவர்களுக்கெல்லாம் அனுமதி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் போல.
Sura College of Competition என்பது போட்டித் தேர்வுகளுக்கான தகவல் களஞ்சியங்களை விற்பவர்கள். இவர்கள் தான் தமிழ்நாடு முழுக்க விரவிக்கிடக்கிறார்களே ! சென்னை அண்ணா நகர் முழுக்க ‘ஐஏஎஸ் நகர்’ என்று சொல்லுமளவிற்கு வளச்சுக் கட்டியிருக்கிறார்கள். பின்பு இங்கு வந்து கடை போட்டு என்ன செய்யப்போகிறார்கள் ?
வர்த்தமானன் பதிப்பகம் பல தமிழ் நூல்களை சொந்தமாக வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான நூலகளும் வெளியிடுகின்றனர். ஆனால் இந்நூல்கள் வெறும் ‘தகவல் குப்பை’களல்ல. அவை வாசிக்கும் நோக்கில் ஆக்கப்பட்டவை. சென்ற ஆண்டும் இவ்வாண்டும் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது கடை போடவில்லை என்றார்கள். அவர்களாகப் போடவில்லையா அல்லது தன்னறத்துக்கு வந்த சிக்கல் போன்று ஏதேனும் உள்ளதா எனது தெரியவில்லை. தன்னறத்துக்கு இடமளிக்காதது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்று பல விமர்சனங்கள் இருந்தாலும், யாரு என்ன கடை போட்டா நமக்கென்ன, நமக்கு தேவையானது கிடைச்சா போதும் என்ற நிலையில் ஒரு கொண்டாட்ட மனநிலை வந்துவிடுகிறது. நாளை சென்னை செல்கிறேன். மூன்று நாள் ப்ளான்.
விவேக்