யானைடாக்டர் கடிதங்கள்

ஜெ எம் அவர்களுக்கு

தங்களின் மத்துறு தயிர் சிறுகதையினை படித்த உடனேயே கடிதம் எழுத நினைத்தேன். மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த்தால் அப்பொழுது முடியவில்லை. நான் ஒரு ஆசிரியன் என்பதால் அக்கதை என்னை கவர்ந்தது என்பதைவிட அக்கதையில் வரும் ஒரு வாக்கியம் (பேராசிரியரை பார்க்க முடியாமல் அண்ணாச்சி தாள முடிய துயருடன் ஒளிந்துகொண்டிருப்பதை பார்க்கும் கதைசொல்லி அவரின் கண்களை இவ்வாறு வர்ணிப்பார் ”கண்கள் மினுமினுவென்றிருந்தன. தாளமுடியாதபடி வலிக்கும்போது மிருகங்களின் கண்கள் அப்படி இருக்கும்.”) இவ்வாக்கியம் ஒரு தீப்புண்னைப்போல் என்னை உறுத்துவதாலேயே கவர்ந்தது. பின்னால் வெளிவந்த யானை டாக்டர் கதைக்கும் அவ்வாக்கியத்திற்குமான தொடர்பினால் இக்கடிதத்தினை எழுதுகிறேன்.

விளையாட்டும் துடுக்குத்தனமும் நிறைந்த என் இளம் பருவத்தில் எட்டாம் வகுப்பு டியூசனை முடித்துக் கொண்டு நண்பர்களுடன் சாலை வழியாக வரும் பொழுது அந்த பன்றிக் குடும்பத்தினை காண்கிறேன். ஒரு பெரிய தாய் பன்றி, மற்றும் அதன் அரை டஜன் குட்டிகளோடு சாலையில் ஒரு ஓரமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை போடுவதற்காக குவிக்கப்பட்டிருந்த பெரிய அளவு ஜல்லி கல் (ஒன்றரை ஜல்லி என்பார்கள்) ஒன்றை எடுத்து என் வீரத்தை நிரூபிப்பதற்காக அந்த பன்றி மேல் விட்டேறிந்தேன். அது சரியாக அதன் வயிற்றில் தாக்கியது. பன்றி நிலைகுலைந்து தீனமான ஒரு குரலை எழுப்பி ஒரு பார்வை பார்த்தது. நீங்கள் குறிப்பிடும் அதே பார்வை….. பிறகு எதுவும் நடக்காது போல் தன் வழியில் சென்றுவிட்டது. அந்த காட்சி இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை. ஏனோ அதற்குப் பிறகு நீண்ட வருடமாக மாமிசம் சாப்பிடவில்லை. குற்ற உணர்ச்சியாக இருக்குமோ என்னவோ. ஆனால் அது நான் எவ்வளவு கீழ்தரமானவன் என்பதை அந்த சிறு வயதிலேயே உணர்தியது.

ஒரு வருடத்திற்கு முன்னால் சாலையை கடக்க முற்படும் போது வண்டியில் அடிபட்டு ஒரு குட்டி நாய் சதைகூழமாய் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அதை விட கொடுமை அந்த நாயின் தாய் தந்தை போல் இரு நாய்கள் ரோட்டின் ஒரத்தில் நின்று தவிப்புடன் நெருங்க முயற்சிக்கின்றது. ஆனால் விரைந்து செல்லும் வாகனங்களை தாண்டி அதனால் செல்ல முடியவில்லை.அந்த நாயின் கண்களை கவனித்தேன் – எனக்கு வார்த்தைகள் மூலம் விவரிக்கத்தெரியவில்லை – நீங்கள் குறிப்பிட்ட அந்த வாக்கியம் தான் மிகச் சரியான விவரிப்பு. நாய்தானே அதற்கு என்ன பாச உணர்ச்சி இருக்கும் என கேவலமாக நினைப்பது எவ்வளவு பேதமை. கண்ணீருடன் வீட்டுக்கு விரைந்து வாஷ்பேசினில் முகம் கழுவிக்கொண்டே இருந்தேன். வெட்டுக்காயத்தினை தண்ணீரில் கழுவ கழுவ ரத்தம் கசிவது போல கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. துண்டில் முகம் புதைத்து துடைக்கிறேன் அழுகை பீரிட்டு வருகிறது. தேம்பலுடன் முகம் துடைத்து கண்ணாடியினை யதேச்சையாக பார்த்தேன். வேறு யாரோ போல் அது காட்டியது. நிச்சயமாக அது நான் அல்ல என உணர்ந்து கொண்டேன். எதற்கு அப்படி அழுதேன் என அப்போது தெரியவில்லை. தங்களின் ”கண்ணீரும் கதைகளும்” என்ற தலைப்பில் திரு ஆசைத்தம்பி அவர்களுக்கு தாங்கள் எழுதிய விரிவான பதிலை விட வேறு எது இதை விளக்க முடியும்.

யானை டாக்டரும் , பீர் பாட்டிலை உடைப்பவனும் எப்போதும் சேர்ந்தேதான் நம்முள் இருக்கிறார்கள். ஆனால் இரண்டாமவனின் ஆதிக்கம்தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது. இதை வெகு சிறப்பாக தாங்கள் வெளியிட்ட பைரணின் கவிதை சுட்டுகிறது.

மனிதனின் தன்மை இத்தகையதுதானா?

இது மனித குலத்தின் சாபமா?

மாட்ரிக்ஸில் சுமித் மார்பியஸை பார்த்து கூறுவான் “……….மனித குலம் உண்மையில் பாலூட்டி இனத்தினை சார்ந்த்து அல்ல. ஏனென்றால் பாலூட்டிகள் தங்கள் சுற்றுச் சூழலோடு ஒத்திசைந்த்து வாழும் உயிரினம். யாருக்கும் கெடுதல் நினைக்காது. ஆனால் மனிதன் ஓரிட்த்தில் வாழும் போது அங்கிருக்கும் அனைத்து வளங்களையும் சுரண்டுகிறான். வளங்களெல்லாம் வற்றிய பிறகு இன்னொரு வளமான இடத்தை தேர்ந்த்தெடுத்து அங்கிருக்கும் வளத்தையும் அழிக்கிறான். இதே போல் நடந்து கொள்ளும் இன்னொரு உயிரும் உள்ளது அது வைரஸ்………”. என்பான். ஆம் உண்மையில் மனிதனை விட கீழான பிறவி இல்லை.

என் கடிதத்தின் இறுதிப் பகுதிக்கு வருகிறேன். யானை டாக்டர் தங்கள் சிறுகதையின் உச்சமாக கருதுகிறேன். தன்னலமற்ற மனிதர்களை கதைகளில்கூட பார்ப்பது அரிதாகி வருகிறது. அதிலும் ஒரு பாவமும் அறியாத விலங்குகளுக்கு தன் முழு வாழ்வையே அர்பணித்த டாக்டர் கே –போன்றவர்களை அறியாமல் இருப்பது சற்று வெட்கமாக உள்ளது.

யானை டாக்டர் போன்ற கதைகள் நாம் எவ்வளவு இழிவான நிலையில் உள்ளோம் என்பதை காட்டி, அதனால் குற்ற உணர்ச்சி அடைந்தாலும் , நாம் நம்மை திருத்தவோ அல்லது திருந்தவோ இயலா கையாலாகாத நிலையில்தானே உள்ளோம். ஏன் இப்படி? இதெல்லாம் வெறுமனே படித்து கண்கலங்குவதற்கு மட்டும்தானா? (ஒருவேளை நான் மட்டும்தான் இப்படியோ?)

மாட்ரிக்ஸில் மார்பியஸ் குறிப்பிடுவது போல ”…there’s a difference between knowing the path and walking the path….” என்று என் நிலைக்கு நான் சப்பைக் கட்டு கட்டுவதா அல்லது ”I can only show you the door. You’re the one that has to walk through it.” என நீங்கள் கூறுவதாக நான் எடுத்துக் கொள்ளலாமா?

தங்களின் கருத்தினை அறிய ஆவலாக உள்ளேன்

மிக்க அன்புடன்

மகேஷ்குமார்

பொய்யேரிகரை

நாமக்கல்

அன்புள்ள மகேஷ்குமார்

நன்றி

மனிதன் விசித்திரமான மிருகம். இந்த பூமியின் உயிர்களில் அவனுக்குத்தான் மன உச்சங்கள் உள்ளன. கவிதை உள்ளது. கலைகள் உள்ளன. அவன் தான் அதிகார வெறியும் பேராசையும் கொண்டு அழிவுத்தாண்டவமும் ஆடுகிறான்

இந்த இரண்டில் எந்த ஒன்றிலும் மனிதனை பிணைக்கமுடியாது. அவன் இரண்டின் சமநிலையால் இயக்கபப்டுபவன்

உண்மையில் நீங்கள் கேட்ட இவ்வினாக்களால் நான் இயக்கப்படுகிறேன். நடுவயதில் இவை அளிக்கும் சஞ்சலமும் கேள்விகளுமே என்னை இக்கதைகளை நோக்கி கொண்டு வந்தன

கதைகளில் வருவதே என் பதில்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம்
மாணிக்கம் மந்த்ராசலம் செஞ்சேரிமலை ,யானை டாக்டர் பற்றி ,காட்டைப்பற்றி தங்கள்
பயணங்களை படித்ததன் மூலம் ஒரு கனவு உண்டு .ஆனால் அங்கு வாழும் புல்பூண்டு முதல் புழு பூச்சி ,யானைவரை அனைத்திலும் ஒரு
உயிரோட்டமான ஆன்மாவை டாக்டர் கே மூலம் கண்டேன் . ஒரு சிறுகதை வாயிலாகவே புதிய உலகத்திற்கு அழைத்து செல்வதில்
தாங்கள் வெற்றிகண்டுள்ளீர்கள். விரிவாக கடிதம் எழுதும் அளவுக்கு எனக்கு பயிற்சி எல்லை .மன்னிக்கவும் ,நன்றி

சி.மாணிக்கம் மந்த்ராசலம்,

அன்புள்ள மாணிக்கம்

ஆம், டாக்டரை இயக்குவது அதுவே. புல்பூண்டுமுதல் யானைவரை நிறைந்துள்ள ஒன்றைக் கண்டு கொண்ட நிலை

ஜெ

கதைகள்

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைகோட்டி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓலைச்சிலுவை-கடிதங்கள்