ஊறுகாய்

ஜெ,

 

பப்பாஸி சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊறுகாய் ஸ்டால் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தன்னறம் போன்ற பதிப்பகங்களுக்கு பதிலாக அளிக்கப்பட்ட இடம் அது

 

எம்.சரவணக்குமார்

அன்புள்ள சரவணக்குமார்,

 

நான் கவனித்தது வேறு சில. அந்தக்காலத்தில் ஒரு வாரிசு நடிகர் கதைநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார் [கிசுகிசு]. அவருக்கு சினிமாவுக்கான கதைகேட்பது என்பது பொழுதுபோக்கு.குறிப்பாக சாப்பிடும்போது. ஒரு நாற்காலி டெஸ்க் செய்து வைத்திருந்தார்.U வடிவில். அதில் பத்துபதினெட்டு கிண்ணங்களில் பலவிதமான பருப்புகள், கொட்டைகள் இருக்கும். ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டபடி கதை கேட்பார். சப் சப் என ஒலி எழ நடுவே கதை சொல்லவேண்டும். அவர் தலைநிமிர்ந்தே பார்க்கமாட்டார். எதிர்கால இயக்குநர் வாயில் ஜொள்ளு ஊறி கதை நின்றுவிட்டால் தலைதூக்கி “கதை சொல்லுங்க பாஸ்” என்பார். கதை கேட்டு கேட்டுச் சாப்பிட்டு பழக்கம் அவருக்கு. எந்தக் கதையும் அவருக்கு ஒலி மட்டும்தான்.

 

ஒர் இளம்இயக்குநர், பின்னாளில் நல்ல நகைச்சுவைப் படங்களை எடுத்தவர், கதை சொல்லப்போனார். ஏற்கனவே நாலைந்து கதைசொல்லி கடுப்பானவர். கதை சொல்லலானார். “வெள்ளிக்கிழமை சாயங்காலம் சுமார் ஏழு மணிக்கு கமலா குளித்துவிட்டு வாசல்படியில் நின்று தலைமயிரை உலர்த்திக்கொண்டிருக்கிறாள்”. இடைவெளி. நடிகர் தலைதூக்கி “கதை நாட்டு நல்லாருக்கு பாஸு. மேலே சொல்லுங்க” என்றார். “இது கதையோட தலைப்புதான் சார். கதை இனிமேல்தான் சொல்லணும்” என்றார் வருங்கால இயக்குநர். நடிகருக்கு கொஞ்சநேரம் குழப்பம். “சரி, நல்ல தலைப்பு. மேலே சொல்லுங்க” என்றார்.

 

பெருந்தேவியின் நூல்தலைப்பை [இறந்தவனின் நிழலுடன் தட்டாமாலை சுற்றும்போது தலைசுற்றினால் ஊறுகாய் தேவைப்படும்.]படித்தபோது சும்மா ஞாபகம் வந்தது. மற்றபடி ஊறுகாய் வியாபாரம் இடமறிந்து செய்யப்படுவது. அடுத்த முறை டாஸ்மாக் கிளையையே ஆரம்பித்துவிடலாம்

 

ஜெ

முந்தைய கட்டுரைபத்துநூல் வெளியீடு உரைகள்.
அடுத்த கட்டுரைபத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை