ம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

அன்புள்ள ஜெ,

அருண்மொழிநங்கை அவர்களின் உரையை பார்த்தேன். முதல் உரை என்றே சொல்லமுடியாது. எந்தக்குறிப்பும் கையில் இல்லாமல் நாவலின் எல்லா கதாபாத்திரங்களையும் நினைவுகூர்ந்து பேசினார். முன்னர் வாசித்த நாவல்களின் கதாபாத்திரங்களைக்கூட நினைவுகூர்ந்து ஒப்பிட்டுப் பேசினார். இலக்கியச் சூழலுக்கு இத்தகைய உரைகளே தேவையாகின்றன. இத்தகைய உரைகளில்தான் நம்பகத்தன்மை இருக்கிறது. சொல்பவர் தன் உள்ளத்திலிருந்து சொல்கிறார் என்பது தெரிகிறது. அதில் செயற்கையான பாவனைகள் ஏதுமில்லை.

 அருண்மொழி அவர்கள் நவீனின் நாவலில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவருடைய சிரிப்பு, திடீரென அவருக்கு தோன்றும் இணைப்புக்கள் எல்லாம் காட்டுகின்றன. முக்கியமான உரை. தடையே இல்லாமல் ஒழுகிச்செல்லும் பேச்சு. நவீனின் நாவலை வாசிக்க ஆர்வம் கொண்டேன்

 எம்.பாஸ்கர்

 ***

அன்புள்ள ஜெ

அருண்மொழி நங்கை உரை சிறப்பு. இங்கே படைப்புக்களைப் பற்றி பெண்கள் பேசுவது மிகவும் குறைவு. சமீபகாலமாக பெண்கள் பேசுவதற்கு விஷ்ணுபுரம் மேடையும் பிற மேடைகளும் அமைந்திருப்பது மிக முக்கியமானது. ஏனென்றால் பெண்களின் பார்வை வேறு. அது பெண்ணியப்பார்வையாக இருக்கவேண்டியதில்லை. அவர்கள் எதை முக்கியமாக நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது

உதாரணமாக அருண்மொழி நங்கை புதிய நிலத்தில் பெண்கள் எப்படி வேரூன்றினார்கள் என்பதைத்தான் கூர்ந்து கவனிக்கிறார். நாம் பார்ப்பதிலிருந்து அது வேறுபட்டது. சிறுவர்கள் ,விலங்குகள் ,செடிகள் என்றே அவருடைய பார்வை குவிகிறது. இது ஓர் ஆண்வாசிப்பில் நிகழாமல் போகக்கூடும். பெண்களின் வாசிப்பில் ஓலம்மா பெறும் இடம் ஒருவேளை ஆண்களின் வாசிப்பில் பெறாமல் போகக்கூடும்

மிகவும் லயித்து, தானே சிரித்துக்கொண்டு பேசும் உரை நேரில் ஒருவர் பேசுவதுபோலவே இருந்தது. வரும்காலங்களில் இதுபோல நல்ல உரைகள் பல பெண்களிடமிருந்து வரவேண்டும்

ராஜசேகர்

அருண்மொழியின் உரை

***

முந்தைய கட்டுரைஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு