மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்

 

நான்குநாள் வீட்டில் இருந்தேன், தன்னந்தனியாக. ஆறாம் தேதி வீட்டுக்கு வந்ததுமே கதவை வெளியே பூட்டி பூட்டு தொங்கவிட்டு உள்ளே ஒளிந்துகொண்டேன். எழுத்து. மாடிக்கும் கீழுமாக ஏறி இறங்கி நடைப்பயிற்சி. முதல் நாள் மூன்றுவேளையும் தோசை. அடுத்த வேளைக்கு சோறு சமைத்துக் கொண்டேன். எழுத்து மட்டுமே. கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் பேசிப்பேசி வாய் உலர்ந்தமைக்கு மாற்றாக பேசாமலேயே நான்குநாள். கிளம்பும் அன்றுதான் லக்ஷ்மி மணிவண்ணனும் ஷாகுல் ஹமீதும் வந்தார்கள். கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். ஓரிரு சொற்கள்.

ஒன்பதாம் தேதி மாலை ரயிலில் சென்னை. ரயில்நிலையத்தில் ஈழப்படைப்பாளி ஷர்மிளா சையித் அவர்களைப் பார்த்தேன். அவராகவே என்னை அடையாளம் கண்டுகொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த புலம்பெயர் இலக்கியக் கருத்தரங்குக்காக வந்தவர் அன்றுகாலைதான் நாகர்கோயில் வந்து சுசீந்திரத்தில் இருக்கும் அவருடைய தோழியும் கவிஞர் மண்குதிரையின் மனைவியுமாகிய ஷாலினியைப் பார்த்துவிட்டு சென்னைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அவர் நாகர்கோயில் வந்ததை தெரிவித்திருக்கலாம் என்று சொன்னேன். என்னதான் இருந்தாலும் நாகர்கோயில் இலக்கிய நகரம். இங்கே ஓர் எழுத்தாளர், அதிலும் ஈழத்தவர் வந்துவிட்டு ஓசையில்லாமல் மீள்வது முறையல்ல என்று சொன்னேன். ஷர்மிளா சையத் இலங்கையில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் பரபரப்பாகப் பேசப்படுபவர்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நண்பர் ,எழுத்தாளர் ஜே.ஆர்வி.எட்வர்ட் வந்தார். ஷர்மிளா சையத்தை அறிமுகம் செய்தேன். கிட்டத்தட்ட பதற்றமாகிவிட்டார். ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே என்றார். அவர் நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி முதல்வர். அனக்கம் என்னும் இலக்கிய அமைப்பை நடத்தி வருபவர். அதில் ஏற்கனவே அவர்கள் ஷர்மிளா சையத் நாவல் பற்றி ஒர் அரங்கை நடத்தியிருக்கிறார்கள். ஷர்மிளாவிடம் எண் வாங்கிக்கொண்டார்.

சென்னையை புலர்காலையில் சென்றடைந்தேன். கே.பி.வினோத் ரயில்நிலையம் வந்திருந்தார். வளசரவாக்கத்தில் ஏழு அறைகள் ஒரு கூடம் கொண்ட ஒரு அபார்ட்மெண்டின் இரண்டு அடுக்குகளையும் வாடகைக்கு அமர்த்தியிருந்தோம். நான் நேராக அங்கேதான் சென்றேன். இலக்கியக்கூடுகை காலையிலேயே தொடங்கிவிடுமென ஏற்கனவே அறிவித்திருந்தோம்நண்பர் சுற்றுக்குள்.

ஏற்கனவே ஈரோடு கும்பல் கிருஷ்ணன் தலைமையில் பாரி, மணவாளம் ஈஸ்வரமூர்த்தி என திரண்டு அங்கே வந்திருந்தது. சிலநாட்களுக்கு முன்பு, ஒன்றாம் தேதி இரவுதான் சந்தித்திருந்தோம். இருந்தாலும் நெடுநாள் பிரிந்த கூச்சலுடன் சிரிப்புடன் தழுவிக்கொண்டோம். உடனே இலக்கியம், இசை என பேச்சு ஆரம்பித்தது.

நண்பர்கள் வரத்தொடங்கினர். சு.வேணுகோபால் சிறப்பு விருந்திரனாகையால் மேலே அறை. காலையில் எச்.எஸ்.சிவப்பிரகாஷ் மனைவியுடன் விமானத்தில் வந்திறங்கி அவருக்கு அவரே அமர்த்திக்கொண்ட நட்சத்திரவிடுதிக்குச் சென்றார். பேச்சு தொடங்கியது. எங்கள் பேச்சுக்கள் எப்போதுமே சிரிப்புக்கொண்டாட்டங்கள்- கூடவே இலக்கியம். இலக்கியப்பேச்சு முறுகி முறுகி ஓர் எல்லையை அடைந்தால் மீண்டும் சிரிப்பு.

சாப்பாடு அங்கேயே வரவழைத்தோம். முப்பது காலையுணவு, நாற்பது மதிய உணவு. அதுவே ஒரு கருத்தரங்கு. வெளியிடப்போகும் தொகுதிகளின் படைப்புக்கள் பற்றி, நாவல்களின் கட்டமைப்பு பற்றி. இலக்கியத்தில் உணர்வுகள், மெல்லுணர்வுகள், மிகையுணர்வுகள் பயின்றுவருவதைப் பற்றி

குவிஸ் செந்தில் கோவையில் இருந்து வந்திருந்தார். எங்கள் விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகளில் அவர் அமைப்பாளர். பிற நிகழ்ச்சிகளில் அவரே வகுப்பு குவிஸ் எதையாவது நடத்துபவர். சும்மா வந்து அமர்ந்து அவர் கவனிக்கும் விழாவாக இது இருக்கும் என தோன்றியது

மாலையாகியபோது பேசிப்பேசி தொண்டை அடைத்துக்கொண்டது. கே.ஸி.நாராயணன் சென்னைப் பல்கலையில் ஒரு விழாவுக்காக வந்திருந்தார். அவரை அங்கிருந்து அழைத்துவந்தோம். நாங்கள் ஏழு வண்டிகளில் கிளம்பி தியாகராஜர் அரங்குக்குச் சென்றோம்.

சௌந்தர்

விழாவை சௌந்தர் ஒருங்கிணைத்தார். இவ்விழாவே சௌந்தர், ராஜகோபாலன், சண்முகம், ராகவ், காளி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடந்தது. சௌந்தர் சண்முகம் இருவரும் மிகக்கடுமையான உழைப்பைச் செய்யவேண்டியிருந்தது. இதை வெளியே இருந்து புரிந்துகொள்ள முடியாது. பதினான்கு எழுத்தாளர்கள், பத்து பேச்சாளர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து தங்கி பேசி திரும்ப ஏற்பாடு செய்வதென்பது சென்னையில் சாதாரண விஷயம் அல்ல

விழாவில் ஆசிரியர் பத்துபேரின் சுவரொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆசிரியர் முகங்கள் பெரிதாக, உள்ளே அவர்களின் நூல்கள் என நான் சொல்லியிருந்தேன். அவர்களுக்கே கொஞ்சம் கூச்சமாக இருந்திருக்கலாம். புத்தகங்கள் பெரிதாகவும் ஆசிரியர் முகங்கள் சிறிதாகவும் அமைந்திருந்தன

ராஜகோபாலன்
காளிப்பிரசாத்
நரேந்திரன்
அருண்மொழியுடன் நூலாசிரியர் பாலாவின் மனைவி விஜி

ஆனால் இதில் கூச்சம் கொள்ள ஏதுமில்லை. ஆசிரியன் முன்வைப்பது தன்னையே. அவன் நூல் அவனுடைய ஒரு பகுதிதான். அத்துடன் ஆசிரியனின் முகம் வாசகனுக்கு முக்கியமானது. நூலை வாசிக்கையில் அவன் அந்த முகத்துடன் மட்டுமே உரையாட முடியும். அந்த முகத்தைக்கொண்டே அவன் ஓர் ஆசிரியனை தொகுத்துக்கொள்கிறான். ஆசிரியனின் கருத்தியல், ஆளுமை எல்லாமே அவ்வாறுதான் திரள்கின்றன

 

ஆகவேதான் என் தளத்தில் எப்போதும் ஆசிரியர்களின் முகங்களை மீளமீள பதிவுசெய்கிறேன். இளம் ஆசிரியர்கள் என்றால் வெவ்வேறு புகைப்படங்களைப் பதிவுசெய்வதில்லை. ஒரே முகத்தையே திரும்பத்திரும்ப பதிவுசெய்து வாசகர்களின் உள்ளத்தில் திகழச்செய்கிறேன் அவனுடன் ஓர் உரையாடலை தொடங்குங்கள் என்ற அறிவிப்புதான் அது.

 

எச் எஸ் சிவப்பிரகாஷ்

கே சி நாராயணன்

 

su venugopal speech at vishnupuram 10 years 10 authors

வழக்கமாக எங்கள் அரங்குகளுக்கு முந்நூறுபேர் வருவதுண்டு. அன்று 180 பேர்தான். புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்தது ஒரு காரணம். அந்த ஒரேநாளில் ஆறு இடங்களில் இலக்கிய நூல்வெளியீடுகள் நடந்துகொண்டிருந்தன. ஆகவே கூட்டம் சிதறிப்போய்விட்டது. ஆனால் சமீபகால நூல்வெளியீட்டு விழாக்களுடன் ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை பெரிய கருத்தரங்கு போல என்றார் அகரமுதல்வன்.

பொதுவாக டிசம்பரில் சென்னையில் நூல்விழாக்கள் அனைத்துக்குமே கூட்டம் மிகக்குறைவு. காரணம் இந்தச் சிதறல்தான். இம்முறை வெளியீட்டுவிழாக்கள் மூன்றுமடங்கு. எங்கே எந்த விழா என்பதே நினைவில் நிற்காதபடி எல்லா அரங்குகளிலும் கூட்டங்கள்.  இதுதவிர புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே நூல்வெளியீடுகள். நூல்வெளியீடு ஏதோ ஒருவகையில் தேவையாகிறது. ஓர் ஆண்டில் கவனிக்கப்படும் நூல்களில் வெளியீட்டுவிழா கொண்டாடப்பட்டவையே மிகுதி.

முன்பு இசைவிழாக்கால சபாநிகழ்ச்சிகளுக்கு இச்சிக்கல் இருந்தது. ஒரேநாளில் பலநிகழ்ச்சிகள், ஆகவே கூட்டம் சிதறிப்போகும். சில மேதைகள் பாடும்போது பத்துபேர் அமர்ந்திருப்பார்கள்.  இன்று இலக்கியத்திற்கும் இவ்வண்ணம் ஆகியிருக்கிறது. ஆனால் இதை எதிர்மறையாக சொல்லமாட்டேன். இது ஒரு திருவிழா மனநிலை, இந்த மனநிலை இலக்கியத்திற்கு நல்லதுதான்.

ஒரே மாதத்தில் இத்தனை நூல்கள் வெளிவரலாமா என்றும் கேட்கலாம். ஆனால் அதுவும்கூட ஒரு நல்ல உளநிலையையே உருவாக்குகிறது. ஒரு மாதம் முழுக்க எப்படியோ நூல்கள் மேல் கவனம் நிலைகொள்கிறது. இலக்கியம்பற்றிய பேச்சு நிகழ்கிறது. பல புதியவர்கள் அதன்மூலமே உள்ளே வருகிறார்கள். அது உலகம் முழுக்க உள்ள வழக்கம்தான். வங்கத்தில் துர்க்காபூஜையை ஒட்டியே இலக்கியச் செயல்பாடுகள் அனைத்தும் குவிகின்றன.

suneel krishnan
suneel krishnan
suresh pradeep on ra giridharan's short story collection
சுரேஷ் பிரதீப்

முதலில் மூன்று உரைகள். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கன்னட இலக்கியம் இன்று என்னும் தலைப்பில் இருபது நிமிட உரையாற்றினார். முதலில் இலக்கியத்தின் சமகாலம் [contemporary]  வாழும்காலம் [present]  என்னும் பிரிவினையை நிகழ்த்தினார். இன்று எழுதுபவர்கள் எல்லாரும் இன்று திகழ்பவர்கள் அல்ல. இன்று திகழ்பவர்களில் பலர் நேற்றே உலகுநீத்தவர்கள். கன்னட இலக்கியத்தில் இன்று திகழ்பவர்கள் எவர், என்னென்ன நூல்கள், ஏன் என கூறினார்.

மலையாள விமர்சகர் கே.ஸி.நாராயணனின் உரையும் சுருக்கமானது, அதை நான் மொழியாக்கம் செய்தேன். மலையாளத்தில் இன்று முதுவர், குறும்பர் போன்ற பழங்குடியினர் தங்கள் தனிமொழியில் கவிதை எழுதத் தொடங்கி அது ஓர் அலையென எழுந்திருப்பதைப்பற்றிச் சொன்னார். அவர்களின் மொழி ஓர் அன்னியமொழி அளவுக்கே மலையாளத்தில் இருந்து வேறுபட்டது. ஆசாரநம்பிக்கைகளும் முற்றிலும் வேறானவை. அவர்கள் நம்மால் அறியப்படாத , நம் கண்ணுக்குப் படாத நம் சமூகத்து உறுப்பினர்கள்

அந்த  ‘மொழிக்குள்மொழி’ என்பது தமிழ்,மலையாளம், கன்னடம் என நம் மொழிப் பண்பாடுகள் அனைத்துக்குள்ளும் உறையும் துணைப்பண்பாடு. அத்தகைய துணைப்பண்பாடுகள் நம் மொழிகளுக்குள் ஏராளமாக உள்ளன. அவற்றை நாம் அறிவதேயில்லை. அவை நம்முடைய கல்விமுறையால் ஒடுக்கப்படும் துணைப்பண்பாடுகள். நம்முடைய பொது இலக்கியம் என்னும் அமைப்பால் ஒடுக்கப்படுபவையும்கூட.

அவற்றை மேலெழுந்துவரச்செய்ய மலையாளக் கவிஞர் பி.ராமன் மேற்கொண்ட முயற்சியைச் சொல்லி அத்தகைய முயற்சிகள் இந்தியாவின் ஒவ்வொரு மொழிச்சூழலிலும் நடக்கவேண்டும் என  கே.ஸி.நாராயணன் சொன்னார். அது ஒரு புதிய திறப்புதான். தமிழில் நரிக்குறவர்களோ இருளர்களோ தோடர்களோ அவர்களின் மொழியில் எழுதிய நூல்கள் வெளிவந்துள்ளனவா? வர வாய்ப்பிருக்கிறதா?

priyamvadha on suchitra's short stories
ப்ரியம்வதா

சு.வேணுகோபால் தமிழின் இன்றைய சூழலைப் பற்றி பேசினார். ஆனால் இருபதுநிமிட உரை என்பதை அவர் திட்டமிட்டுக்கொள்ளவில்லை. பொதுவாக உரையின் நேரத்துக்கு ஏற்ப உரையின் அமைப்பு வகைப்படுத்தப்படவேண்டும். ஒரு மணிநேரம், அல்லது மேலும் நீளும் உரையே பேருரை. அது ஓர் ஒட்டுமொத்தச் சூழலை, ஒட்டுமொத்த பார்வையை முன்வைக்க உகந்தது. அத்தகைய உரையில் முன்னுரை நான்கில் ஒருபங்கு இருக்கலாம். அது பல கிளைகளாக விரியலாம், இறுதியில் தொகுத்துச் சொல்லப்படவேண்டும்.

நாற்பது நிமிட உரை நடுத்தரமானது. அதில் முன்னுரை, பீடிகை இருக்கக்கூடாது. அது ஒரு மையக்கருத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைச் சொல்லலாம். அல்லது இரண்டு அல்லது மூன்று கருத்துக்கள் ஒன்றிலிருந்து ஒன்றென கிளைப்பதைச் சொல்லலாம். அது தொகுத்துரைக்கப்படவேண்டியதில்லை. ஆனால் அலைபாய, கிளைவிரிய அதற்குள் இடமில்லை

muthu
muthu

இருபதுநிமிட உரை, அல்லது அதற்கும் குறைவான உரை என்பது சிற்றுரை. சிற்றுரைகள் ஒன்றைமட்டுமே சொல்வன. மையத்தை விட்டு விலக வாய்ப்பே இல்லாதவை.  அவற்றின் ‘take home’ என்ன என்பது அதை நிகழ்த்துபவரால் முடிவுசெய்யப்படவேண்டும். அதை மட்டுமே அவர் சொல்லவேண்டும். அதிலிருந்து விலகி அவர் எவ்வளவு சுவாரசியமான விஷயத்தைச் சொன்னாலும் அது அந்த மையத்தை சிதறடித்து நேரவிரயம் செய்வதே.

சு.வேணுகோபால் வழக்கமான உரையாக தமிழ் நவீன இலக்கியத்தில் என்னென்ன இலக்கிய அலைகள் நிகழ்ந்துள்ளன என சொல்ல தொடங்கினார். அவர் சொல்லவந்த மையக்கருத்தை சொல்வதற்குள் நேரம் கடந்து மிக நீண்டுவிட்டது. ஆகவே அதை ஓரிரு சொற்களுக்குள் முடிக்கவேண்டியிருந்தது. அவர் கட்டற்று பேசுபவர், அவருடைய ஆளுமையே ஒருவகை கொப்பளிப்பு கொண்டது. ஆகவே இதை தவிர்க்கமுடியாது. ஆனால் அவர் இதைக் கவனிக்கலாம்

prabhu mayiladuthurai
prabhu mayiladuthurai
naveen on nagaprakash's short stories
நவீன்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ், கே.ஸி.நாராயணன் உரை இரண்டுமே வாசகர்கள். நம் பேச்சாளர்கள் கவனிக்கவேண்டியவை. இருபது நிமிடம் என நாங்கள் கொடுத்த பொழுதுக்குள் ஒன்றை மட்டும் ஆழமாகச் சொல்லிவிட்டுச் சென்றனர். சிற்றுரையின் இலக்கணமே அதுதான். அரங்கிலிருந்த வாசகர்கள் அதைப்பற்றி மேலும் சிந்திக்கமுடியும். இக்கட்டுரையிலேயே ஓரிரு வரிகளில் அவர்கள் சொன்னதென்ன என்று சொல்லமுடிகிறது.

இந்த விழா வெறும் நூல்வெளியீடாக அமைந்துவிடக்கூடாது என நினைத்தோம். எங்கள்பொருட்டு வந்து அமரும்படி வாசகனிடம் கோரமுடியாது. எங்கள் நூல்களை அறிமுகம்செய்வது எங்கள் தேவை. வாசகன் பெறுவதென்ன? ஆகவே மூன்று உரைகள். ஒருமணிநேரத்தில் மூன்று உரைகள் என்பது அடர்த்தியாக, சுருக்கமாக ஒர் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிப்பது.

பத்து நூலாசிரியர்களில் வெளிநாட்டிலிருக்கும் பாலசுப்ரமணியம் முத்துசாமி, கிரிதரன் ராஜகோபாலன் இருவரும் வரவில்லை. நாகப்பிரகாஷ் கேரளத்திலிருந்து  பணிச்சுமையால் வரமுடியவில்லை. சுசித்ரா, ராம்குமார், விஜடராகவன், ஸ்ரீனிவாசன், காளிப்பிரசாத், ராஜகோபாலன், நரேந்திரன் என ஏழு ஆசிரியர்களும் வந்து மேடையில் அமர்ந்திருக்க பத்து பேச்சாளர்கள் அவர்களைப்பற்றிப் பேசினர். ஒவ்வொருவரும் பத்து நிமிடங்களுக்குள் பேச்சை முடித்தனர். கச்சிதமான கூரிய உரைகள்.

பத்து உரைகளில் ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு பாணி. பிரியம்வதா, வெண்பா கீதாயன் ஆகியோரின் பேச்சு ஒருவகையான வாசக அணுகுமுறைகொண்டது. சுனீல் கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், கடலூர் சீனு மூவருமே நிலைபெற்றுவிட்ட இலக்கியவாதிகளுக்குரிய நிதானமும் தன்னம்பிக்கையும் கொண்ட விமர்சனக் குரல்கள்.

இலக்கியமேடையில் முதல்முறையாகப் பேசும் மயிலாடுதுறை பிரபு தொடர்ச்சியான பயணங்கள், கூட்டங்கள் என இன்று பரபரப்பாக இருக்கிறார். விழாவிலிருந்து நேராக குஜராத் பட்டத்திருவிழாவுக்குச் செல்வதாக இருக்கிறார். ஆண்டுமுழுக்க திருவிழாக்கள் என்பது அவருடைய திட்டம். அவர் குரல் சற்றே தணிந்ததாகவும், சொற்றொடர்கள் எழுத்துமொழிக்குரியவையாகவும் இருந்தன.

தீம்புனல் விழா தொகுப்பாளர்

எஸ்.எஸ்.வி.நவீன், சுரேஷ்பாபு, முத்துக்குமார் ஆகிய மூவரும் சற்று தயக்கமான குரலில் பேசினாலும் தெளிவாக தங்கள் மதிப்பீட்டை முன்வைத்தனர். விஜயகிருஷ்ணன் பிற மேடைகளில் தொடர்ந்து பேசுபவர் என்பதனால் தன்னம்பிக்கையுடன் ராஜகோபாலனின் நூல் பற்றிப் பேசினார்.

இறுதியாக நான் தொகுத்து ஒரு சிற்றுரையாற்றி முடித்தேன். இப்பத்து படைப்பாளிகள் பற்றிய என் மதிப்பீடுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை முன்வைத்தேன். ஒவ்வொருவரின் இடம், குறைபாடு,செல்லவேண்டிய தொலைவு குறித்து

மீண்டும் விடுதிக்கு வந்தோம். மறுநாள் கார்ல் மார்க்ஸ் கணபதியின் தீம்புனல் வெளியீட்டுவிழா. அதற்கு மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்கானம் வந்திருந்தார். நண்பர் ஷாஜியும் உடன் வந்தார். அவர்களுக்கும் அதே விடுதியின் மேலே அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நண்பர்கள் கூட்டமாக ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தோம். மீண்டுமொரு இலக்கிய அரட்டை. நிகழ்வு பற்றிய விமர்சனங்கள். அன்று தூங்க இரவு ஒன்றரை ஆகியது.

மறுநாள் ஐந்தரைக்கே கிருஷ்ணன் எழுந்து வெண்முரசு படித்துக்கொண்டிருந்தார். வெளிச்சம் பட்டு நான் விழித்துக்கொண்டேன். கிளம்பி ஒரு காலைநடை. கூட்டமாக காலைநடை சென்றாலே ஊர் மிரண்டுவிடுகிறது. பலர் திகைப்புடன் பார்த்தனர். இருபத்தாறு டீ என்றால் டீக்கடைக்காரர் வியர்த்துவிடுகிறார்.

அன்று பகல்முழுக்க இலக்கியப்பேச்சுதான். நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். என் நண்பர் சங்கர் சென்னையில் ஒர் அசைவ உணவகம் நடத்துகிறார். கோவை அலங்கார். இருபதாண்டுகளாக என் நண்பர். செய்வன திருந்தச்செய்யும் நிர்வாகி. ஆகவே அது ரேட்டிங்குகளில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் உணவகம். அவர் எங்களுக்கு உணவு அனுப்பியிருந்தார். சிறந்த அசைவ உணவு. [ கோவை அலங்கார் விலாஸ்]

சந்தோஷ் எச்சிக்கானம்

நான் அவர் உணவு அனுப்பியிருப்பதை அறியவில்லை. எவரோ என் நண்பர் என்றுதான் சௌந்தர் சொன்னார். கோலா, மட்டன் என்று சாப்பிடும்போது நான் நினைவுகூர்ந்து என் நண்பர் சங்கரின் ஓட்டலின் அதே சுவை என்றேன். அப்போதும் அது சங்கரின் ஓட்டலில் இருந்தே வந்திருக்கிறது என சௌந்தரும் சொல்லவில்லை- அவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. மறுநாள் காலை சங்கர் என்னை நேரில்பார்க்க வந்தபோதுதான் அது அவருடைய ஓட்டலின் உணவேதான் என்று தெரிந்தது. நாக்கு நினைவு வைத்திருக்கிறது.

நண்பர்களின் ஒரு குழு புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது. இன்னொரு திரள் எங்கள் அறைக்கு தேடிவந்தது. தொடர் உரையாடல். புத்தகக் கண்காட்சிக்குச் சென்றவர்கள் திரும்பிவந்ததும்  தீம்புனல் வெளியீட்டுவிழாவுக்குக் கிளம்பினோம்.

விழா காஸ்மாபாலிடன் விடுதி அரங்கில். பழைமையான பிரம்மாண்டமான விடுதி. அதன் அறை பழைமையின் கம்பீரத்துடன் இருந்தது. கார்ல் மார்க்ஸ் ஒருலட்சம் ரூபாயாவது செலவு செய்திருப்பார் என நினைக்கிறேன். சிறந்த விருந்து, மது எல்லாமே ஏற்பாடாகியிருந்தன.

மனுஷ்யபுத்திரன்

நாங்கள் விடுதியிலிருந்து நாலைந்து கார்களிலாக இருபத்திமூன்றுபேர் கிளம்பிச் சென்றோம். [நான் சென்ற யோகேஸ்வரனின் பெரிய காரை வேன் என்றும் சொல்லலாம்]. என் நண்பர்கள் வாசகர்கள் மேலும் பதினைந்துபேர் நேரடியாக அங்கே வந்திருந்தனர்.  விழா சிறிய அறையில், அறுபது இருக்கைகள்.

அப்படி என்றால் கார்ல் மார்க்ஸின் அழைப்புக்காக வந்தவர்கள் இருபது பேர் வரைக்கும்தான். அவர்களிலும் கார்ல் மார்க்ஸின் குடும்பத்தினர் பலர். அவர் தன் முகநூலில் பல்லாயிரம் நண்பர்கள் கொண்டவர் என்றார்கள். திமுக ஆதரவாளர் என்பதனால் அந்தத் தரப்பினருமே நிறையபேர் உண்டு. சென்னையிலேயே பலநூறு நண்பர்கள் அவருக்கு இருக்கலாம். அவர்கள் ஏன் இந்த விழாவுக்கு வரவில்லை?

பல்வேறு காரணங்களுக்காக சிலர் வராமலிருக்கலாம். ஆனால் அவருடைய அணுக்கமான நண்பர்கள் தவிர பிறர் வரவே இல்லை. ஒரு வம்பு என்றால் வந்து ‘லைக்’ போடுபவர்கள், ஹாஹா போடுபவர்கள், சண்டைகளை உற்சாகப்படுத்தி தூண்டிவிடுபவர்கள், நக்கலும் கிண்டலும் செய்பவர்கள், அரசியல்சார்ந்து ஆதரவளிப்பவர்கள் ஏன் இத்தகைய விழாக்களுக்கு வருவதில்லை? இதேநிலைதான் மனுஷ்யபுத்திரனுக்கும் தமிழச்சிக்கும் என்றனர்.

இலக்கியவிழா, அல்லது நூல் வெளியீட்டுவிழா என்பது ஒரு வெறும் விழா அல்ல, சம்பிரதாயம் அல்ல. அது ஒருவருக்கு மிக அந்தரங்கமானது. தன் குழந்தைக்குப் பெயரிடுவதைப்போல, மகள் திருமணம் போல. அவர் தன் நூலை, தன்னை சமூகத்தின் முன் வைக்கும் நிகழ்ச்சி.தன் நண்பர்களிடமிருந்து ஓர் அணுக்கத்தை, கைகுலுக்கலை எதிர்பார்க்கும் தருணம் அது.

நூல்வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஒரு நெகிழ்ந்த நிலையில் இருப்பார். இருபதாண்டுகளுக்கு முன் என் நூல்களின் வெளியீட்டுவிழாக்களை தமிழினி ஏற்பாடு செய்தபோது வந்த ஒவ்வொரு முகத்தையும் இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். இன்று சொல்வதற்கென்ன, சில்லறை காரணங்களைச் சொல்லி அன்று வராமலிருந்த பெரும்பாலானவர்களிடம் மெல்லமெல்ல இயல்பான ஒரு விலக்கம் உருவாகியது. தவிர்க்க முயன்றும் முடியவில்லை. அவர்கள் என் வாழ்விலிருந்தே அகன்றும் சென்றுவிட்டார்கள். இன்றுதான் பலரை நினைவுகூர்ந்தேன்.

சென்ற தலைமுறையில் நெல்லை, நாகர்கோயில் போன்ற ஊர்களில் நூல்வெளியீட்டு விழாக்களுக்கு நண்பர்கள் குடும்பத்துடன் திரண்டு வருவார்கள். நூல்களை பத்து இருபது மடங்கு விலைகொடுத்து வாங்கிக்கொள்ளும் சடங்கும் உண்டு. நூல் வெளியிட்ட செலவு முழுக்க அந்த ஒரேநாளில் வசூலாகிவிடும். வெளியீட்டுவிழாவுக்கு பின் ஆசிரியரை தனிப்பட்டமுறையில்சென்று பார்த்து ஓரிரு சொற்கள் பேசுவதும் ஒரு வழக்கமாகவே இருந்தது.

ஸ்ரீனிவாசன்நடராஜன்

இலங்கையில் இன்றும் இவ்வழக்கம் ஓரளவு உண்டு. பெரும்பாலான ஆரம்பகால சைவநூல்கள், தமிழாராய்ச்சிநூல்கள், திராவிட இயக்கநூல்கள் இவ்வாறுதான் வெளிவந்திருக்கின்றன. உண்மையில் இந்த சமூக ஆதரவு இல்லாமல் அவ்வாசிரியர்கள் நூல்களை வெளியிட்டிருக்கவே முடியாது. அந்த ஆதரவு என்பது ஒருவரின் அறிவியக்கச் செயல்பாட்டை மதிக்கிறோம்,உடனிருக்கிறோம் என்பதற்கான அறிவிப்பு. அவர்களும் அறிவியக்கத்தில் பங்கெடுக்கும் முறை.

அந்த அளவுக்கு தேவையில்லை என்றாலும் வந்து அமர்ந்து வாழ்த்திச் செல்வது என்பது ஒரு மரியாதை. அதையெல்லாம் செய்யமுடியாத அளவுக்கு தமிழகத்தில் எவரும் கணமே காசாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. எவரும் கொள்கைப்போர்களிலும் இல்லை. என் விழாக்களுக்கு ஊரில் இருந்தபோதெல்லாம் சாதாரணமாக மணிரத்னம் வந்து கலந்துகொண்டிருக்கிறார். சென்னையின் உயரதிகாரிகள், பெருவணிகர்கள் வருகிறார்கள். வெட்டிச்சாக்கு சொல்பவர்கள் பெரும்பாலும் சொல்லும்படி எதுவுமே செய்யாதவர்கள்.

ஒரு குடிநிகழ்வு என்றால் ஓடிவந்து கூடிக்கொள்பவர்கள், இலக்கிய நிகழ்ச்சிகளில் சாக்கு சொல்வது என்பதை வருத்தத்துடன் மட்டுமே காணவேண்டியிருக்கிறது. அவர்களின் மெய்யான அக்கறை இலக்கியமோ, அறிவுச்செயல்பாடோ , கட்சிச்சார்போ கூட அல்ல. அது வெறும் முகநூல் அரட்டை, வம்புக்கான ஈடுபாடு மட்டுமே.

விழாவில் ஸ்ரீனிவாசன் நடராஜன் சிறப்பாகப் பேசினார். நூலின் விரிவான அரசியல் சமூகவியல் பின்புலத்தை விரிவாகச் சொன்னார். நாவலை மேலதிகமாகப் புரிந்துகொள்ள அது உதவியானது. நாவலை ஏந்தியிருக்கும் பீடம் அது. நான் அதற்குமேல் அமைந்துள்ள நாவலையே பேசினேன். அவர் பேசியதனால் அந்த தளத்தை பேசாமல் மேலே சென்றேன்.

கார்ல் மார்க்ஸ்

சந்தோஷ் எச்சிக்கானம் இன்று கேரளத்தில் படிப்படியாக உருவாகிவரும் எழுத்துக்கு எதிரான கெடுபிடி நிலையை, அடக்குமுறையைப் பற்றிச் சொன்னார். அவருடைய கதைகள் அனைத்துக்கும் எதிராக சாதி, மதக்குழுக்கள் அழுத்தம் அளித்திருக்கின்றன என்றார். இந்த நிலை இந்தியா முழுக்க இன்று உள்ளது. நான் சந்தோஷின் பேச்சை மொழியாக்கம் செய்தேன்.

தமிழச்சி தங்கபாண்டியனின் விழாவிலிருந்து மனுஷ்யபுத்திரன் வந்தார். அவர் தீம்புனல் நாவலின் முன்னுரையையும் எழுதியவர். தமிழகத்தில் இவ்வாறு எழுத்தின்மீதான அழுத்தம் உருவாகும்போது அதை எழுத்தின் ஒரு தரப்புக்கு எதிரான அழுத்தமாக அல்லாமல் எழுத்துச்செயல்பாட்டுக்கு எதிரான அழுத்தமாகவே கருதவேண்டும் என்றார்.

நான் கார்ல்மார்க்ஸின் தீம்புனல் நாவலைப்பற்றிப் பேசினேன். எந்தெந்த கூறுகளால் அது கலையம்சம் கொண்ட நாவலாகிறது என்றும், அதன் சிறு கலைப்பிசிறுகளை களையவேண்டியதைப்பற்றியும் சொன்னேன். கலை என்பது இன்னொரு மானுட உள்ளத்துடன் தொடர்பு  கொள்வதற்கான தணியாத விழைவு, அதை ஒரு தவமென்றே இறுதிவரை செய்யவேண்டும் என்றேன்.

விழாவில் நான் வலுவாகச் சொல்ல எண்ணியது, முழுக்கச் சொல்லாமல் ஒழிந்தது பொய்யான மிகையான பாராட்டுக்களைப் பற்றி. அப்பாராட்டுக்களை அவற்றை பெறுபவர் மட்டுமே நம்புகிறார். பிற எவருமே அதை பொருட்டெனக் கருதுவதில்லை. அந்தவகையான சொற்கள் நம்மை நாமே கேலிப்பொருளாக்கிக் கொள்ளச் செய்பவை.

மேலும் இத்தகைய பாராட்டுக்களை பேதமே இல்லாமல் அள்ளிவீசுவதென்பதை ஒருவகை வன்முறை என்றே கருதுகிறேன். நான் கார்ல் மார்க்ஸின் இந்நாவல் ஒர் இலக்கியப்படைப்பு, இவ்வாண்டில் வந்த நல்ல நாவல்களில் ஒன்று என நினைக்கிறேன். ஏன் என்பதையே அவ்வுரையில் சொன்னேன். அவர் மேலும் செல்லவேண்டிய பாதையைச் சுட்டினேன். இதை எல்லா படைப்புகளைப்பற்றியும் இதே அளவுகோலுடன் சொல்வேன். என்னை மறுக்க வாசகனுக்கு இடமிருக்கிறது. இந்த விவாதமே அந்நூலை வாசகனை நோக்கிக் கொண்டுசெல்வது.

இந்த அளவுகோல்தான் இன்று தேவையானது. இது உடனடியாக முகநூல் வம்பாக மாறி சம்பந்தமற்றவர்கள், அந்த வெளியீட்டுவிழாவுக்கு வந்து பத்துநிமிடம் அமர மனமில்லாதவர்கள், கையிலெடுத்து சுழற்றும் நிலை உருவாகும் என அறிவேன். ஆனாலும் இதையெல்லாம் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது

கார்ல் மார்க்ஸ் நன்றி சொன்னார். அற்புதமான உணவு என்று நண்பர்கள் புளகாங்கிதப்பட்டனர். விழாவுக்குப்பின் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அறைக்கு திரும்பினேன். நல்ல களைப்பு. பாதிப்பேர் போய்விட்டிருந்தனர். இருந்தாலும் பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம்.

நண்பர்கள் ஆளுக்கொரு பொன்னாடையை போர்த்திக்கொண்டு தவில்கள் போல தூங்கிக்கொண்டிருப்பதைக் காண வேடிக்கையாக இருந்தது. இந்தப் போதை, இந்த வெறி, இந்த கூடுகைகள் நெடுங்காலம் இனிய நினைவுகளாக நீடிக்கும் என நினைத்துக்கொண்டேன்

மறுநாள் காலை ஒரு சுற்று நடை. திரும்பி அறைக்கு வந்தால் புதிய நண்பர்கள் வந்துவிட்டிருந்தார்கள். மீண்டும் பேச ஆரம்பித்தோம். காவியம் என்னும் அமைப்பின் உருவாக்கம், அதன் வகைமைகள், நவீன இலக்கியத்தில் அதன் இடம் பற்றியெல்லாம் பேச்சு சென்றது.

நான் மாலை புத்தகக் கண்காட்சியில் ஜெயகாந்தனைப்பற்றிப் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததை முந்தைய நாள்தான் எவரோ காட்டினார்கள். எனக்கு நினைவே இல்லை. எப்போதோ எவரோ கேட்டிருந்தனர். பின்னர் நினைவூட்டவில்லை. பயணம், தங்குமிடம் பற்றியெல்லாம் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. பேச வா என்றால் பாய்ந்து வந்து பேசுபவர்களை மட்டுமே கண்டிருப்பார்கள் போல.

நான் திரும்பிச்செல்வதற்காக ரயிலில் பிரிமியம் தத்கால் முன்பதிவு செய்திருந்தேன். தங்கியிருந்த விடுதியையும் மதியப் பொழுதுடன் காலி செய்யவேண்டும். புதிய ரயில் பதிவுசெய்து, சொந்தச்செலவில் அறை பதிவுசெய்து பேசுமளவுக்கு எனக்கு அரங்கப்பற்றாக்குறை இல்லை.மேலும் பேசிப்பேசி நெஞ்சடைத்துவிட்டிருந்தது. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று அங்கும் பேசினால் நாக்கு உள்ளே இறங்கி இரைப்பைக்குள் சுருண்டுவிடும் என்று தோன்றியது.ஆகவே புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிக்கு வரப்போவதில்லை என தெரிவித்துவிட்டுக் கிளம்பினேன்.

கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் ஏறி அமர்ந்தால் நல்ல தூக்கக் கலக்கம். அதில் ஒரு பிரமை, இதேபோல பலமுறை திரும்பிச் சென்றுகொண்டே இருக்கிறேனா என்ன?

==========================================================================================

தீம்புனல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் ஆம்ரே கார்த்திக்

==========================================================================================

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ் எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன் கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன் இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார் அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்  தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

முந்தைய கட்டுரைசீரியல் கில்லர்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைமீண்டெழ உதவுங்கள் – தன்னறம்