ஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா

சுசித்ரா

ஒளி தொகுப்பு படித்த பிறகு முதலில் நினைவுக்கு எழுந்தது ஒரு ஜெம்ஸ் பேக்கட். பல வண்ணங்களும் பல சுவைகளும் கொண்ட ஜெம்ஸ் பேக்கட் பள்ளிக்கூட சிறுமியாக இருந்த பொழுது என்னை எப்பொழுதும் குதூகலத்தில் ஆழ்த்தும். அதே போன்ற ஒரு அனுபவத்தை ஒளி சிறுகதை தொகுப்பை வாசிக்கையில் அடைந்தேன். பல வண்ணங்கள் ஒரு ஜெம்ஸ் பேக்கட்டுக்குள் புதைந்திருப்பது போல, பல இலக்கிய வகைமைகள் அடங்கியுள்ள தொகுப்பு. மிகை புனைவு (தேள், நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன), அறிவியல் புனை கதைகள் (சிறகதிர்வு, யாமத்தும் யாமே உளேன்), தத்துவக் கதைகள் (லீலாவதியின் தத்துவங்கள், அலாதசாந்தி), தொன்மத்திலிருந்து எழும் யதார்த்தக் கதைகள் (ஒளி, ஒரு மழைநாள்) என்று பல இலக்கிய வகைமைகளை முதல் தொகுப்பிலேயே அளித்திருப்பது ஒரு அரிய முயற்சி.

பொதுவாக சிறுவர்களுக்கு ஜெம்ஸ் பேகட்டை கொடுக்கையில் நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். உள்ளே இருப்பதெல்லாமே சாக்லேட் தான். ஆனால் அதில் அவர்களுக்கு பிடித்த ஒரே ஒரு நிறத்தை மட்டும் தேடித் தேடி உண்பார்கள். அது போல நான் ரசித்து மீள் வாசிப்பு செய்த கதைகள் இத்தொகுப்பில் உள்ள அதிபுனைவுகள். அலாதியான கற்பனை வீச்சு, வலுவான கேள்விகள், அக உணர்ச்சிகளை நுண்மையாக சித்தரிக்கும் கலை இக்கதைகளில் கைகூடி இருக்கின்றன.

தத்துவக் கதைகள் அறிவுப்பூர்வமாக ஈர்த்தாலும் உணர்வுப்பூர்வமாக மனதில் நிகழவில்லை, எனினும் சொல்லாடலைத் தாண்டி அர்த்தங்களை துழாவும் வகையில் கவனிக்கத்தக்க முயற்சிகள்.

ஒளி தொகுப்பின் சிறப்பம்சம் – ”கதை சொல்லல்” தன்மை

இவ்வாறு பலதரப்பட்ட கதைகளை கோர்த்து, நூல் இழையென ஓடுவது இத்தொகுப்பில் தென்படும் கதைசொல்லல் தன்மை. இத்தொகுப்பில் என்னை முதன்மையாக வசீகரித்ததும் அதுதான். யாமத்தும் யாமே உளேன் கதையில் “கதைசொல்லி” என்ற குரல் நேரடியாக இடம்பெறுகிறது. ஒளி என்ற கதை வழக்கமான third person narrative-இல் சென்றுகொண்டிருக்கும். சட்டென நடுவில் இந்த வரிகள் “இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஃபிலோமினா தேவதாஸ் அழகியல்ல. நான் சொல்லவில்லை. இது அவளைச்சார்ந்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்ட உண்மையாக இருந்தது”. எங்கிருந்தோ ’நான்’ என்ற அநாமதேய கதைசொல்லி நுழைந்துவிடுகிறான்(ள்).

இதுபோன்ற ஒரு குரல் நேரடியாக எழாத மற்ற கதைகளிலும் கூட, கதை சொல்லலில் திளைக்கும் மனம் ஒன்று வலுவாகவே காணக் கிடைக்கிறது (உ.நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன, அலாதசாந்தி).

கதைசொல்லல் தன்மை ஏன் முக்கியமானது, அது எழுத்துக்கு என்ன அளிக்கிறது என்றால் முதலில் சலிப்பூட்டாத வாசிப்பனுபவம் என்பேன்.

ஆனால் அதற்கும் மேலாக அந்த அம்சம் எழுத்துக்கு, குறிப்பாக கதை கூறுகளில் பன்முகத்தன்மையை சூட்டுகிறது. அதாவது, ஒரு கதை சொல்லி என்பவளின் பார்வை வாழ்க்கையின் பலதரப்பட்ட அனுபவங்களை – நல்லதோ கெட்டதோ, ஏற்றமோ இறக்கமோ ஒரு விலக்கம் கலந்த எடையின்மையுடன் அணுகக்கூடியது. எல்லா நிறங்களும் குணங்களும் குடி கொண்டிருக்கும் களமாக, தீர்ப்புகளற்ற வாழ்க்கை பார்வையை கொண்டது.

யாமத்தும் யாமே உளேன் என்ற கதையில், கதைசொல்லியை பற்றிய கீழ்வரும் பத்தி, இதையே கவித்துவமாக கூறுகின்றது.

”அவள் ஒவ்வொரு நாளும் தன்னை அணிசெய்து மகிழ்வித்துச் சிரிக்க வைக்கும் ஆடைகளுக்காகக் காத்திருப்பவள். எல்லா ஆடைகளையும் சமமெனப் பாவித்து எதையும் நீக்காமல் விலக்காமல் தன்மேல் உடுத்திக்கொள்பவள். ஒரு துளி ஒளியையும் வீணென்றாக்காமல் பருகுபவள்”.

ஒளி, சிறகதிர்வு, போன்ற எழுச்சியின் தருணங்களை பேசும் கதைகள் உள்ள அதே வரிசையில், ஒரு மழை நாள், ஹைட்ரா, மற்றும் தேள் போன்ற கதைகளில், மானுடனின் இருண்ட குணங்களின் துளிகள் தெளித்திருக்கின்றன. ஆனால் இந்த கதை சொல்லித் தன்மை, அவற்றை நாம் மனச்சோர்வடையாமல், சலிப்படையாமல் உள்வாங்கச்செய்கிறது. மொழி, நடை, முன்வைக்கும் கேள்விகளில், சுசித்ரா ஜெயமோகனின் நீட்சியாகத் தெரிந்தாலும், இந்த கதை சொல்லல் தன்மையில் கி ரா, மற்றும் ஐசாக் டினேசனை அவர் எழுத்து நினைவூட்டியது.

ப்ரியம்வதா

ஒளி தொகுப்பின் முக்கியத்துவம் – கதைகள் எழுப்பும் கேள்விகள்

கதை சொல்லல் தன்மை கூடியிருக்கும் அதே சமயம், விளையாட்டாக நின்றுவிடாமல் இக்கதைகள் வலுவான கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்துக்கு – கலை மற்றும் அறிவியலிடையே உள்ள முரண்பாடு, அது விளைவிக்கும் மோதல், கலை மானுடனுக்கு அளிப்பதென்ன, பயம் என்ற உணர்வை சமூகமும் அரசும் தனிமனிதனுக்கு எப்படி புகட்டி ஆள்கிறது என்ற தத்துவார்த்த கேள்விகளை முன்வைக்கின்றது இந்த தொகுப்பு. எனவே அன்றாட வாழ்க்கையிலிருந்து பிறந்த எழுத்துக்கள் பொதுவாகப் பேசும் பாலியல் சார்ந்த, காமம் சார்ந்த, தனி மனித சிக்கல் சார்ந்த கதைகளிலிருந்து தனித்து நிற்கிறது. ஆனால் இங்கு எழுத்தாளர் சுசித்ரா ஒரு ஆய்வாளர் என்று கூறியாக வேண்டும். அதனால் கலையா அறிவியலா என்ற கேள்வி அவருடைய அன்றாடமாக இருக்கலாம்!

வடிவம் சார்ந்த சில அவதானிப்புகள்

பெரும்பாலும் உரையாடலற்ற கதைசொல்லலையே ஆசிரியர் கையாண்டுள்ளார். உரையாடல்கள் வரும் இடங்கள் இன்னும் இயற்கையாக அமைந்திருக்கலாம் என்றும் தோன்றியது (குறிப்பாக ஹைட்ரா கதையைச் சொல்லலாம்)

சிறுகதை வடிவத்துக்கு நல்ல தொடக்கம் முக்கியமானது. ஒளி தொகுப்பில் உள்ள கதைகள் (சிலவற்றை தவிர) காத்திரமான தொடக்கம் கொண்டவை. ஆரம்பமே நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. உதாரணமாக

”அழகுக்கடைக்கு முன்னால் ஒரு ஆண்பிள்ளை இவ்வளவு நேரமா நிற்பது?”

”ஒரு ஊரில் வாழும் அனைவரும், அவரவர்களின் அறைகளில் வீடுகளில் அலுவலகங்களில், ஒரு நாள், எங்குப் பார்த்தாலும் தேள்களாக இருப்பதைக் காணத்தொடங்குகிறார்கள் என்றால், என்ன நினைப்பீர்கள்?”

”மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை.”

சில இடங்களில் இந்த தொகுப்பு என்னுடைய தங்கையை நினைவூட்டியது. சிறு வயதில் அவள் யோசிக்கும் வேகம் எப்பொழுதும் பேசக்குடிய வேகத்துக்கு இரு மடங்கு அதிகமாக இருக்கும். வார்த்தைகள் விரைந்து வர, அவள் நா அதற்கு போதாத கருவியாகத் தோன்றும். அதுபோல, சில கதைகள் சிறுகதை என்ற வடிவத்துக்குள் அடங்காமல், வெளிவரத்துடிப்பது போல அமைந்துள்ளன. அதையே நாவல் எழுதக்கூடிய எழுத்தாளரின் அறிகுறியாகவும் காண்கிறேன்.

”பொற்றாமரை பெருத்த ரசனைக்காரி. நிறைய எதிர்பார்ப்பவள். வாழ்நாளில் அவள் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு கதையாவது நிகழ்த்திவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கியிருக்கிறேன்” என்று நூல் முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார்.

அப்பெருங்கனவை ”ஒளி” தொகுப்பின் கதைகளிலும், அவை செல்ல நினைக்கும் தூரத்திலும் வெளிப்படுத்தியுள்ள எழுத்தாளர் சுசித்ராவுக்கு வாழ்த்துக்கள்.

[10-1-2020 சென்னை விஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழாவில் பேசப்பட்டது]

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ்

எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார்

அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா

ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

 

=========================================================================================================

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்க

 

முந்தைய கட்டுரைபத்து உரைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை