புத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது

அன்புள்ள ஜெ

சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது என் வழக்கம். நான் அதிகமாக நூல்களை வாங்குவதில்லை. என் பணச்சிக்கல் அப்படி. ஆனால் ஆண்டுதோறும் சிறிதாக நூல்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். பெரும்பாலும் நூலகங்களை நம்பியே நூல்களை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கேள்வி என்னவென்றால் நூல்களை வாங்குவதற்காகத்தான் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவேண்டுமா?

என்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதற்காக பலர் கேலியும் கிண்டலும் செய்வதுண்டு. இவர்களில் பலர் கதை கவிதைகள் எழுதுபவர்கள். என்னைப்போன்றவர்கள் செல்வதனால்தான் அங்கே நெரிசல் என்று சொல்வார்கள்.  “புக்கை எல்லாம் முறைச்சுப் பாத்துட்டு வந்திட்டியா?”என்று கேலிசெய்வார்கள். ‘அறிஞர்’ என்று சொல்லி சிரிப்பார்கள். இவர்களில் பலர் புத்தகக் கண்காட்சிக்கு அரட்டை அடிக்கவே வருகிறார்கள். ஒரு ஸ்டாலில் அமர்ந்திருப்பார்கள். அப்படியே கிளம்பிவிடுவார்கள். புத்தகக் கண்காட்சியையே கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருப்பார்கள்.

புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களை கேலி செய்யும் இந்த வழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி கேலி செய்பவர்கள் தங்களை புத்தகங்களை எல்லாம் கடந்த அறிவாளிகள் என்றும் காட்டிக்கொள்கிறார்கள். வருத்தமாக உள்ளது

ஆர்.செந்தில்நாதன்

அன்புள்ள செந்தில்,

ஓர் ஆண்டு முழுக்க இணையவெளியில் வெளியாகும் எழுத்துக்களைப் பாருங்கள் மூன்று விஷயங்கள் கண்ணில்படும்

அ. பல்லாயிரம் வலைப்பதிவுகள்  மற்றும் முகநூல் பதிவுகளில் ஏதேனும் புத்தகம் பற்றி எழுதப்படுவது ஆயிரத்தில் ஒன்றுகூட இருக்காது. மிகமிகமிக அரிதாகவே எவரேனும் ஒரு நூலை வாசித்ததாகச்  சொல்வார்கள்.

ஆ. பெரும்பாலும் அனைவருமே அப்போது டிரெண்ட் ஆக இருக்கும் ஒரு விஷயத்தைப்பற்றி அவ்வப்போது காதில் விழுந்ததை ஒட்டி எதையாவது சொல்லி வைத்திருப்பார்கள். அது தொண்ணூறுசதவீதம் சினிமா, கொஞ்சம் அரசியல். அவ்வப்போது ஏதேனும் நையாண்டி.

இ. ஏதேனும் புதிதாகச் சொல்லப்பட்டிருந்தால் அது ஒரு நூல்சார்ந்த குறிப்பாகவே இருக்கும். அரசியல் சினிமா பற்றியானாலும்கூட புதிய ஒரு கோணம் பேசப்பட்டிருந்தால் அது ஒரு நூலைப்பற்றியாகவே இருக்கும். வேறெங்கும் புதிய எதைப்பற்றியும் சொல்லும் செய்திகள் அகப்படாது

இதுதான் யதார்த்தம். புத்தகம் வாசித்தால்தான் அறிவு வருமா என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால் வாசிக்காமல் அறிவார்ந்த எதைப்பற்றியாவது எதையாவது எழுதும் எவரும் கண்ணில்படுவதே இல்லை.

இச்சூழலில் ஒவ்வொரு வாசகனும் ஓர் அரிய மனிதனே. எழுத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் வாசகர்களை இழிவுசெய்ய மாட்டார்கள். எந்த வாசகரையும். ஏனென்றால் எதை வாசித்தாலும் அவர்கள் வாசிப்பினூடாக முன்னகர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பொழுதுபோக்காக வாசித்தாலும்கூட. வாசகனின் தரத்தை, நிலையை வைத்து எள்ளிநகையாடுபவன் எழுத்தாளன் அல்ல.

வாசகனுக்கு அவன் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டலாம், செல்திசையை அறிவிக்கலாம். அவமதிக்கவும் நகையாடவும் முயல்பவன் அறிவியக்கவாதியே அல்ல. எந்த தரப்பினன் ஆயினும், எந்த வகையினன் ஆயினும் வாசகனை தனக்கான தோழனாக மட்டுமே ஓர் எழுத்தாளனால், அறிவியக்கவாதியால் அணுகமுடியும்.

எனினும் இந்த கிண்டல் எப்படி உருவாகிறது? தமிழ்ச்சூழலில் அறிவியக்கம் மீதான நையாண்டி எப்போதும் உள்ளது. இது பாமரர்களின் இயல்பான உளநிலை. வாசிப்பவனுக்கு மூளைகுழம்பிவிடும் என்பதில் தொடங்கி வாசிக்காமலேயே அறிவுவரும் என்பது வரை இதற்கு பலவகையான தயார்நிலைச் சொற்றொடர்கள் உண்டு. இந்தப்பாமரர்களின் குரலை சொந்த அறிவின்மையால் எதிரொலிக்கும் எழுத்தாளர் [எழுத்தாளர் என நடிப்போர்] பலர் உண்டு.

புத்தகக் கண்காட்சி என்னும் பெருநிகழ்வு ஒவ்வொருவரையும் அவரவர் இடத்தில் அமையச்செய்கிறது. சூழலில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானவர்கள் மிகையாகவே கற்பனைசெய்து வைத்திருப்பார்கள். புத்தகக் கண்காட்சிகள் அவர்களின் மெய்மதிப்பை நேருக்குநேர் கண்ணாடி என காட்டுகின்றன. ஆகவே சீண்டப்படுகிறார்கள்.

புத்தகக் கண்காட்சியை ஒட்டி கவனம்கவர முயல்பவர்கள் இத்தகையோர்தான். புத்தகக் கண்காட்சியையே நிராகரிப்பவர்களும் ஏளனம் செய்பவர்களும் இத்தகையவர்களே. தாங்கள் புத்தகக் கண்காட்சியை பொருட்படுத்தாத கலகக்காரர்கள் அல்லது புரட்சியாளர்கள் என்பதும் புத்தகக் கண்காட்சிச் சூழலைவிட ஒரு படி மேலானவர்கள் என்பதும் இவர்களுக்கு கவசமாக அமையும்  ஒருவகை பாவனைகள். பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

புத்தகக் கண்காட்சி வெறும் விற்பனைக்கூடம் அல்ல. எந்தக் கண்காட்சியும் விற்பனையை மாட்டும் இலக்காக்கியது அல்ல.அது ஓர் ஒட்டுமொத்தக் காட்சிப்படுத்தல். எந்தப்புத்தகக் கண்காட்சியானாலும் முதலில் ஒட்டுமொத்தமாக, அனைத்து கடைகளையும் சென்று பார்ப்பது அவசியம். பொறுமையாக, கவனமாக. அது இலக்கியப்போக்குகள், சிந்தனை அமைப்புகள் பற்றிய ஒரு பொதுப்புரிதலை அளிக்கும்.

என்னென்ன வகையான நூல்கள் வெளிவருகின்றன, அவற்றின் விகிதாச்சாரம் என்ன, எந்தெந்த வகையான அறிவியக்கங்கள் சூழலில் இயங்குகின்றன என்னும் ஒரு புரிதல் உருவாகும். அது வேறெங்குமே கிடைக்காத தெளிவு. நாம் அதை கணக்கிட்டு, ஆராயவேண்டியதில்லை. சும்மா பார்த்துச்சென்றாலே போதும், நமக்குள் ஒரு சித்திரம் உருவாகிக்கொண்டே இருக்கும். அது அறிவுச்சூழலில் செயல்படுபவர்களுக்கு மிகமிக அவசியமான ஒன்று

நூல்களை வாங்கியாகவேண்டும் என்றில்லை. எந்தெந்த நூல்களை நூலகங்களில் வாசிக்கலாம் என்பதற்கும் புத்தகக் கண்காட்சியே வழிகாட்டி. நூல்களை தொட்டு நோக்குவது, பின்னட்டை வாசிப்பது போன்றவை வாசகனின் மிகப்பெரிய இன்பங்கள். அது வாசிக்கும் வழக்கமில்லாதவர்களுக்கெல்லாம் புரியாத ஒன்று.

அதேபோன்றதே இலக்கியவிழாக்களுக்குச் செல்வதும். இலக்கியவிழாக்களிலும் மேலே சொன்ன தற்சிறுமையை உணர்பவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல என்னும் தன்னுணர்வால் அவ்விழாக்களை அவர்கள் மறுப்பார்கள்.அதை ஏளனம் செய்வார்கள். புறக்கணிப்பார்கள். வந்தாலும் வெளியே நின்று அரட்டையிடுவார்கள். தோற்றுப்போன, வெல்லக்கூடுமெனும் தன்னம்பிக்கை இல்லாத எழுத்தாளர்களின் உளநிலை அது.

இலக்கியவாசகன், எழுத்தாளனைப் பொறுத்தவரை புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கியவிழாக்களில் உள்ள உளநிலை முக்கியமானது. நாம் அன்றாடம் வாழ்வது சலிப்பூட்டும் ஒரு சுழற்சியில். அங்கே சிந்தனைக்கே இடமில்லை. கலையிலக்கியம் பொருளற்றது. அதிலிருந்து தப்பி இங்கே வருகிறோம். இங்கே நம் உள்ளம் திறந்திருக்கிறது. இங்கே உருவாகும் கூட்டுமனநிலைபோல நம்மை கூர்மைப்படுத்துவது வேறில்லை.

விழாக்களில் நாம் பிற அனைத்தையும் துறந்து அங்கேயே முழுமையாக இருக்கிறோம். உள்ளம் அனைத்தையும் தொட்டுத்தொட்டு எடுத்துக்கொள்கிறது. அந்த அளவுக்கு நாம் வேறெங்கும் கற்றுக்கொள்வதில்லை. ஆகவே இலக்கியவிழா, திரைப்படவிழா, நாடகவிழா எதையுமே நல்லவாசகன் தவறவிடலாகாது. அவை நாம் இங்கே நுண்ணுணர்வுள்ளவர்களாக வாழ்வதற்கு எஞ்சியிருக்கும் வழிகள்.

பலசமயம் விழாக்கள் சலிப்பூட்டுவதுண்டு. ஆனால் நெடுங்காலம் கழித்து எண்ணிப்பார்க்கையில் விழாக்கள்தான் நினைவில் நிற்கின்றன. கவனியுங்கள், பேச்சுக்களில் பெரும்பாலானவர்கள் விழாக்கால நினைவுகளையே பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு நினைவிருக்கிறது என்றால் அந்த அளவுக்கு உள்ளே சென்றுகொண்டிருக்கிறது என்றுதானே பொருள்? அந்தச் சலிப்பும்கூட ஒருவகையான ஆழ்ந்த நிலையின் விளைவுதான்.

நாம் தனியர்களாகக்கூட இருக்கலாம். விழாக்களில் நாம் தனியாக அலையலாம். ஆனால் அப்போது நாம் தனியாக இல்லை. நம்மைச்சூழ்ந்திருக்கும் இணையுள்ளங்களுடன் நம்மையறியாமலேயே உரையாடிக்கொண்டிருக்கிறோம். திரளாக இருக்கையில் மனிதன் அடையும் விடுதலையை மகிழ்ச்சியை வேறெங்கும் அடையமுடியாது

ஆக்கசக்திகொண்ட, அகவிசைகொண்ட மனிதர்களை அணுகியிருக்க முயலுங்கள். தோல்வியின் , இயலாமையின் கசப்பால் எதிர்மறைப் பண்பு கொண்டவர்களின் நட்பையும் சொற்களையும் புறக்கணியுங்கள். அவர்களை எழுத்தாளர்களாகவே  எண்ணாதிருங்கள். இச்சூழலுக்கு அவர்கள் எவ்வகையிலும் பொருட்டு அல்ல.

கொண்டாடும் ஒரு தருணத்தையும் விட்டுவிடாதீர்கள்.  கிளம்பும்போதுள்ள மெல்லிய சலிப்பை உடனே தள்ளிவையுங்கள். சில்லறை லௌகீகக் கடமைகள் குறுக்கே நின்று தடுக்க விடாதீர்கள். சாக்குபோக்குகளை கண்டுபிடிக்கும் சோம்பலை அகற்றிவிடுங்கள். அங்குள்ள மனநிலை என்னவாக இருந்தாலும் நீங்கள் உங்களை கொண்டாட்டநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் மெய்யாகவே கற்றுக்கொள்கிறீர்கள் என்றால் அக்கல்வி ஒரு கொண்டாட்டமாகவே இருக்கமுடியும். நீங்கள் மெய்யாகவே செயலாற்றுகிறீர்கள் என்றால் அச்செயல் ஒரு களியாட்டடமாகவே இருக்கமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைபத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விழா