‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43

பகுதி ஐந்து : விரிசிறகு – 7

சம்வகை துச்சளையை எவ்வுணர்ச்சியும் இல்லாத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வு துயரமா சலிப்பா இல்லை மெல்லிய ஆறுதலா என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் அவள் ஓய்வடைந்தவள் போலிருந்தாள். பொருட்டில்லாத ஒன்றை பேசவிருக்கும் முகம் கொண்டிருந்தாள். அது அரசியல்செய்திகளைப் பேச உகந்தது என சம்வகை உணர்ந்திருந்தாள். அவள் அச்சொற்களை நோக்கி செல்வதை எதிர்பார்த்தாள். துச்சளை மெல்ல அசைந்து அமர்ந்தபோது அவள் தொடங்கவிருக்கிறாள் என உணர்ந்தாள்.

துச்சளை “இந்நகரில் இன்று எனது இடமென்ன என்பது இன்னும் வகுக்கப்படவில்லை. சுரேசரும் நீயும் அளித்த வரவேற்பை பார்க்கிறேன். அது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. சுரேசரை நான் நம்புகிறேன். பாரதவர்ஷத்தின் அரசுகளும் குடிகளும் அந்தணரின் அறஉணர்வை நம்பியே இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவரை மீறி யுதிஷ்டிரன் ஒன்றை செய்யமாட்டார் என்று நான் எண்ணுகிறேன். இந்நகரில் நான் விரும்புவதென்ன என்று எனக்கு தெரியவில்லை. உன்னிடம் நான் பேச விழைந்தது அதைத்தான்” என்றாள். அவள் இயல்பான ஒழுக்குடன் பேசலானாள்.

இங்கு என் மைந்தர் புறக்குடியினர் என்று வாழ்வதை என்னால் ஏற்க இயலாது. திரௌபதி இங்கு வருகையில் அவளுக்கு ஏவற்பெண்டென அமைவதில் எனக்கு எந்தக் குறைவும் இல்லை. என்றும் அவளை என் அரசியாக எண்ணியிருக்கிறேன். அவளால் என் கொழுநர் கொல்லப்பட்டதில், குடி அழிந்ததில்கூட எனக்கு நிறைவே. பெண்ணென அவள் நிமிர்ந்து நிற்கவேண்டும். மும்முடி சூடி அஸ்தினபுரியின் அரியணையில் அமரவேண்டும். தேவயானியும் தபதியும் மூதன்னையர் வாழும் விண்ணிலிருந்து அவளை நோக்கி உளம் நிறையட்டும். ஆனால் என் மைந்தர் இங்கு குடியிலிகளாக இருக்கக்கூடாது. அஸ்தினபுரியின் படைவீரர்களில் சிலராக அவர்கள் ஆகக்கூடாது.

ஒரு துண்டு நிலமேனும் அவர்களுக்கு வேண்டும். அவர்கள் அரசுகொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் மைந்தர்களுக்கு குடியும் கோலும் விட்டுச்செல்லவேண்டும். ஜயத்ரதனின் பெயரை நிமித்திகன் ஒவ்வொருநாளும் அரசவையின் குலமுறை கிளத்தலில் கூவ வேண்டும். என் கொழுநரின் பொருட்டு நான் இயற்றவேண்டியது அது ஒன்றே. யுதிஷ்டிரனிடம் சுரேசர் இதை கூற வேண்டும். நானே இதை நேரில் அவரிடம் கூறலாம்தான். ஆனால் அது இரந்து பெற்றதாக ஆகும். அதுவும் சிந்துநாட்டரசர் ஜயத்ரதனுக்கு இழிவளிப்பது. நான் சுரேசரிடம் கோருவதுகூட இரப்பதே. இதை உன்னிடம் சொல்லலாம். நீ அரசகுடியினள் அல்ல. அமைச்சரும் அல்ல.

சிந்துநாட்டின் ஒரு பகுதியையேனும் யுதிஷ்டிரன் மீட்டு எனக்கு அளிக்கவேண்டும். கையளவு நிலம் போதும். ஒரு கோட்டையும் சிறுபடையும் போதும். அங்கு என் மைந்தர்கள் முடிசூட்டிக்கொள்ள வேண்டும். தனி முடி அமைக்க வேண்டும். அவர்களை அஸ்தினபுரியின் படை பாதுகாக்கவேண்டும். அவர்கள் என்றேனும் தனியுரிமை அரசர்களாகக்கூடும் என்றும் அவர்களின் கொடிவழியினர் மீண்டும் பேரரசர்களாக ஆகக்கூடும் என்றும் நம்பிக்கையாவது எஞ்சவேண்டும். நான் என் கொழுநருக்குச் செய்யும் கைமாறு அது மட்டுமே.

“முடியில்லாத வெறும் குடிகளாக அவர்களை எஞ்சவிட்டுச் செல்வேனெனில் விண்ணில் அவர் முன் என்னால் நிற்க இயலாது. இதை நீ சுரேசரிடம் கோரவேண்டுமென்பதில்லை. அவரிடம் உரைக்கக்கூட வேண்டாம். ஆனால் நீ இவ்வெண்ணம் கொண்டிருந்தாலே போதும். இவ்வெண்ணம் உன் சொற்களில் எவ்வகையிலேனும் வெளிப்பட்டாலே போதும்.”

சம்வகை தொண்டையைக் கனைத்து “அரசி, நீங்கள் இவ்வண்ணம் கோருவதே அவருடைய அறவுணர்வை ஐயப்படுவதுபோல. உங்களுக்கு ஆற்றவேண்டிய கடமை என்ன என்பதை அவர் அறிவார். அவர் அளிப்பதற்கு நிகராக கோரக்கூட நம்மால் இயலாது” என்றாள். துச்சளை தத்தளிப்புடன் “ஆனால் நான் இங்கு ஓர் அமைதியான வாழ்க்கையை விரும்பி வந்துள்ளேன் என்று அவர் எண்ணக்கூடும்” என்றாள். “நான் இங்குதான் வாழ விழைகிறேன். என் மைந்தருக்கு நகர் அமையும் என்றால்கூட நான் அங்கே செல்லமாட்டேன்… ஆனால்… தெரியவில்லை. இப்போதுபோல நான் எப்போதும் ஐயமும் குழப்பமும் கொண்டதில்லை.”

அவள் மேலும் தத்தளித்து பின் சொல் கண்டடைந்து “சம்வகை, உண்மையில் அரசுசூழ்தலின் நெறிகளை நான் ஐயப்படுகிறேன். ஏனென்றால் நான் அரசவையை அறிந்தவள். சிறுநிலமாயினும் தனக்கென்று ஓர் அரசைக் கொண்டிருக்கும் அரசன் எப்போது வேண்டுமானாலும் வளர்ந்து பரவக்கூடும். சருகு தேடும் அனல்துளிதான் அவன். பகைவர் அவனை சேர்த்துக்கொள்ளக் கூடும். அவன் இணையானவர்களுடன் கூட்டு வைக்கக்கூடும். அவன் குடியில் வெல்லற்கரிய மாவீரன் தோன்றலும் ஆகும். வரலாறு எப்படியும் திரும்பி வீசும். அரசுகள் எந்நிலையிலும் ஆற்றல் இழக்கக்கூடும். ஆகவே அரசியலறிந்தோர் எவருக்கும் முற்றுரிமையாக நிலம் அளிக்கமாட்டார்கள். அரசர்களை உருவாக்கமாட்டார்கள்” என்றாள்.

“யுதிஷ்டிரன் அவ்வாறு அஞ்சினால் நான் அதை பிழை என கருதமாட்டேன். அவ்வண்ணம் எண்ணம்சூழ்வது அரசருக்குரிய கடமைதான்” என துச்சளை தொடர்ந்தாள். “ஒரு துண்டு நிலம் என் மைந்தர்களுக்கு அளிக்கப்பட்டால் ஒருவேளை அவர்கள் கூர்ஜரத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு தருணத்தில் அவர்கள் சௌவீரர்களுடனோ யவனர்களுடனோ கூர்ஜரத்துடனோ அல்லது துவாரகையுடனோ ஒரு மணத்தொடர்பை உருவாக்கிக்கொள்ளக் கூடும். எண்ணியிராக் கணத்தில் படையும் ஆற்றலும் பெற்று அஸ்தினபுரிக்கு எதிராக எழவும் கூடும். நம் கையே பாம்பென மாறி நம்மை கடிக்கக்கூடும் எனும் எண்ணம் அரசனுக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று நெறி நூல்கள் கூறுகின்றன.”

“ஆகவே சுரேசர் அமைச்சர் எனும் நிலையில் அதையே அரசருக்கு உரைக்கவேண்டும். அவர் என் மைந்தருக்கு நிலம் அளிக்கலாகாது என உரைப்பார் எனில் அது பிழையும் அல்ல. என் மைந்தர் ஷத்ரியக் குருதி ஓடும் உடல் கொண்டவர்கள். ஆகவே முடி விழைவும் மண் விழைவும் அவர்களிடம் எப்போதும் இருக்கும். தொல்குடி அரசர்கள் தாங்கள் என்னும் ஆணவத்தில் இருந்து அவர்கள் வெளிவரவும் இயலாது. அவர்கள் ஜயத்ரதனின் மைந்தர்கள் என்பதை மறக்கவேண்டியதில்லை. அவர்கள் மேல் எனக்கு ஆணையும் இல்லை. ஆயினும் என் மைந்தர் பொருட்டு இதை என்னால் கோராமலும் இருக்க இயலாது” என்றாள் துச்சளை.

சம்வகை தன் சொற்களை ஒரே வீச்சில் மீண்டும் ஒருமுறை அகத்தே வைத்து எண்ணிநோக்கிவிட்டு “மீண்டும் அதையே நான் கூறுகிறேன், அரசி. இதை நீங்கள் எவரிடமும் கோரவேண்டாம். சுரேசரிடமே முற்றாக இதை விட்டுவிடலாம். முடிவு நலமாக இருக்கும் என்றே நீங்கள் நம்பலாம்” என்றாள். பின்னர் புன்னகைத்து “அவர் முடிவெடுத்தால் அவரே பொறுப்பேற்றுக்கொண்டதும் ஆகும். நீங்கள் அஞ்சவும் வேண்டியதில்லை” என்றாள். துச்சளை அறியாமல் புன்னகைத்து “ஆம், அதுவும் மெய்யே” என்றாள். “அவரிடம் நான் எதையும் பேசவேண்டியதில்லை என நானும் அறிவேன். நான் உன்னை அழைத்துப் பேசினேன் என்பதே போதும், என்ன பேசினேன் என அவர் உய்த்துக்கொள்வார்.”

சம்வகை மெல்லிய அக அதிர்வை உணர்ந்தாள். துச்சளை எண்ணியதுபோல அத்தனை எளியவளல்ல என்று தோன்றியது. அது பெண்டிரின் ஆற்றல், அவர்கள் எப்போதும் ஒரு துளியை கரந்திருக்கிறார்கள். நெடுங்காலம் கரந்துறைந்து வாழ்ந்தமையின் பேறு அது. அன்னையரோ மேலும் சில துளிகளை. அன்னையர் மைந்தரைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எண்ணி எண்ணி விரித்து, விரிந்தனவற்றை துளியெனச் சுருக்கிக்கொள்கையில் அவை கூர்மை மிக்கவை ஆகின்றன.

அங்கே அமைதி உருவாகியது. கிளம்பவேண்டியதுதான் என சம்வகை எண்ணினாள். துச்சளை மெல்ல அசைந்து கலைந்து “இங்கு பேசப்படுவதை நீ உள்ளே நுழைவதற்கு முன் சேடிகளிடம் இருந்து அறிந்தேன். நீ யுயுத்ஸுவுக்கு துணைவியாகக்கூடும் என்றார்கள். யுயுத்ஸுவே இங்கு மெய்யாக கோல்கொண்டு அமரக்கூடும் என்று நிமித்திகர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் முதன்மைப் படைத்தளபதியாக இன்று உன்னை அமைத்திருக்கிறார்கள். நாளை நீ அரியணை அமர்ந்தாலும் வியப்பதற்கில்லை” என்றாள்.

“அரசி!” என்று மெல்லிய துயருடன் சம்வகை சொன்னாள். துச்சளை புன்னகைத்து “இது புதிய வேதம் எழுந்த நிலம். குடிகளைக் கட்டியிருந்த இரும்புத் தளைகள் அறுந்துவிட்டன. பிறப்பினால் அல்ல இயல்பினாலும் செயலினாலும் மானுடர் பெருமையுறும் காலம் என்று அப்புதிய வேதம் சொல்வதாகச் சொல்கிறார்கள். அதுவே நிகழவும் கூடும். நிகழுமெனில் என் மைந்தருக்கு என்றும் அன்னையாக அரணாக நிற்கவேண்டும் என்று மட்டுமே உன்னிடம் நான் கூறுவேன். இது உன் குடி என, மூத்தோள் என என் கோரிக்கை” என்றாள்.

உடலைக் குறுக்கி தலைகுனிந்து சம்வகை அமர்ந்திருந்தாள். துச்சளை கைநீட்டி அவள் தொடையை மெல்ல தட்டி “நன்று, இச்சொற்கள் இங்கேயே இருக்கட்டும்” என்றாள். சம்வகை ஏனென்றறியாது விழிநீர் உதிர்த்தாள். “என்ன இது? என்ன இது? நான் என்ன சொல்லிவிட்டேன்?” என்றாள் துச்சளை. “ஒன்றுமில்லை, அரசி” என்றாள் சம்வகை. “எழுந்து உன் கவசத்தைப் போடு, மீண்டுவிடுவாய்” என்றாள் துச்சளை. அவள் கண்களைத் துடைத்தபடி எழுந்து தன் கவசங்களை அணிந்துகொண்டாள். மெய்யாகவே அப்போது விடுதலையை உணர்ந்தாள். ஆற்றல்கொண்டவளாக, நிமிர்வு அடைந்தவளாக ஆனாள்.

 

சம்வகை வெளியே சென்றபோது சுரதனும் சுகதனும் உடன் வந்தனர். சுகதன் “அன்னை துயிலவிருக்கிறார்கள்… இனி அவர்களால் துயில்கொள்ள முடியும் என்று சொன்னார்கள்” என்றான். சம்வகை புன்னகைத்து “நன்றல்லவா?” என்றாள். “அன்னை சொன்னது மெய்யா? இனி நீங்கள் அஸ்தினபுரியின் அரசியென அமர்வீர்களா?” என்றான். “அது அரசியின் வாழ்த்து. அதற்குமேல் அதற்குப் பொருளேதுமில்லை” என்றாள். சுகதன் சிரித்து “ஆனால் அதை சொன்னபோது உங்கள் விழிகள் மின்னின” என்றான். அவள் புன்னகை மட்டும் புரிந்தாள்.

சுகதன் “அன்னை எங்களுக்கென நிலம் கோரினார். எனக்கு அதில் உடன்பாடேதுமில்லை. ஓர் அயல்நிலத்தில் என்னால் வாழமுடியுமெனத் தோன்றவில்லை. சிந்து இல்லாத நிலம் நிலமே அல்ல. உண்மையில் நான் சிந்துநாட்டுக்கே திரும்பிவிடலாமென்று எண்ணுகிறேன். அங்கே நாங்கள் வஜ்ரபாகுவின் கீழே படைப்பணியாற்றக்கூடும் என்றால் எங்களுக்கு அங்கே இடமளிக்க அவர் சித்தமாவார் என்றே நினைக்கிறேன். அதைத்தான் சுரேசரிடம் சொல்ல விரும்புகிறேன். தகுந்த அந்தணரை அனுப்பி அதை வஜ்ரபாகுவிடம் பேசச் சொன்னாலே போதும்” என்றான்.

சுரதன் மெல்ல உறுமினான். அவனை நிமிர்ந்து நோக்கிய சம்வகை அவன் விழிகளைக் கண்டு திடுக்கிட்டாள். அவனை அந்த அறைக்குள் பலமுறை நேர்நோக்கியிருந்தபோதும் அந்த விழிகளை அவள் அவ்வண்ணம் கண்டிருக்கவில்லை. அவை பித்தெழுந்த அலைவுகொண்டிருந்தன. ஒருவனால் பித்தை மறைக்கமுடியுமா என்ன? சுரதன் “நான் அன்னை சொன்னதையே சொல்ல விழைகிறேன். எனக்கு ஒரு நிலம் வேண்டும். எனக்கென்று ஒரு நிலம். அங்கே நான் மட்டுமே இருக்கவேண்டும்…” என்றான். அவன் பித்து எழச் சிரித்து “இவன்கூட இருக்கவேண்டியதில்லை. அன்னை இருக்கவே கூடாது” என்றான்.

“அதை முடிவு செய்யும் இடத்தில் நான் இல்லை” என்று சம்வகை சொன்னாள். “நான் உங்களுக்கோ உங்கள் அன்னைக்கோ முறையான தூதாகவும் ஆக முடியாது. என் கடமை காவல் மட்டுமே. அமைச்சுப்பணிகளில் காவலரோ படைத்தலைவர்களோ ஈடுபடுவது எந்நிலத்திலும் ஏற்கப்படுவதில்லை.” அவன் புன்னகையிலிருந்த தீய தன்மை அவளை அகமுலையச் செய்தது. “ஆனால் நீங்கள் யுயுத்ஸுவுக்கு அணுக்கமானவர். அதை அன்னையிடம் சொன்னவனே நான்தான். நீங்கள் சொல்லவேண்டியதில்லை, எண்ணினாலே போதும்.” அவன் “நான் உங்களை தூதுபோகச் சொல்லவில்லை. எனக்கு நிலம் வேண்டுமென்று அன்னையைக் கொண்டே யுதிஷ்டிரனின் அவையில் இரக்கச்செய்ய என்னால் முடியும். அன்னை என்னிடமிருந்து தப்ப முடியாது” என்றான்.

அவன் விழிகள் அலைபாய்ந்துகொண்டே இருந்தன. “அன்னை என்னை அஞ்சுகிறார். அன்னையர் மைந்தரை அஞ்சுவதேன் என உங்களுக்கே தெரியும். தந்தைக்கு பிழையிழைத்துவிட்டோம் என உணரும் அன்னையர் மைந்தரிடம் அடிபணிகிறார்கள். அன்னை என் அடிமை. அவரை நான் ஆட்டுவிக்கிறேன். அவர் இங்கே வந்தது எனக்காக. எனக்கு நிலம் தேவை. ஒரு கோட்டை. ஒரு குடிச்சூழல். ஒரு கொடி. எனக்காக அல்ல, என் தந்தைக்காக. அவர் என்னிடம் அதை கேட்டார். திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார்.”

அவன் அவளருகே வந்து “நான் சிந்துநாட்டின் எல்லையை கடக்கும்போதுகூட அவர் என்னிடம் அதை கேட்டார். ஒலியால் அல்ல. விழிகளால். என் அரண்மனை அறைக்குள் அவர் வந்தார். அதை பிறர் பார்க்கமுடியாது. இவன் கூட பார்க்க முடியாது. நான் பார்த்தேன்” என்றான். சம்வகை “அவர் உங்களுடன் இருப்பது இயல்பே” என்றாள். “நாங்கள் அவருக்கு நீர்க்கடன் செய்தோம். நானும் இளையோனும். நீர்க்கடன் அவரை சென்றடையவில்லை. ஏனென்றால் அவர் இங்குதான் இருக்கிறார். தலைதுண்டிக்கப்பட்டவர்களுக்கு விண்ணுலகில்லை என்று எங்கள் தொல்குடியினர் எண்ணுகிறார்கள். அவருடைய தலை துண்டிக்கப்பட்டது. அதை மீண்டும் கண்டடையவே முடியவில்லை.”

“காட்டில் எங்கோ பிருஹத்காயரின் மடியில் விழுந்து அவரால் கீழே தள்ளிவிடப்பட்டது என்கிறார்கள். நெஞ்சுடைந்து அவர் உயிர்விட்டார் என்கிறார்கள். அவருடைய மாணவர்கள் அவரை கண்டடைந்து அவருடைய மைந்தனின் தலையுடன் சேர்த்து அவரை எரியூட்டினர். நாங்கள் அவருக்கு நீர்க்கடன் அளித்தபோது சிந்து அமைதியாக இருந்தது. அலைகளே இல்லை. அதில் மீன்கள் துள்ளவில்லை. பலிச்சோற்றை உண்ண அவை எழவில்லை. உணவென எதை வீசினாலும் ஆயிரம் வாய் திறந்து கவ்விக்கொள்ளும் சிந்து பளிங்குவெளியென உறைந்திருந்தது. நான் நீர்க்கரையில் நின்று நதியை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தேன்.”

“அவருடைய பதினெட்டு மைந்தர்களும் நீர்ப்பலி இட்டனர். அவர்களில் ஒருவனாகிய சுகோத்ரன் தன் பலியை சிந்து வாங்கிக்கொண்டது என கூச்சலிட்டான். உடனிருந்தவர்கள் ஆம் ஆம் என்றனர். ஏனென்றால் அவர்கள் திரும்பிச்செல்ல விழைந்தனர். சிந்து பலியன்னம் கொள்ளாது அவர்கள் திரும்ப முடியாது. அவன் சொன்னது பொய் என நான் அறிந்திருந்தேன். ஆனால் நானும் பேசாமல் திரும்பி வந்தேன். அவன் அவள் மைந்தன். பொய்யை நன்கறிந்தவன். அவளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அன்னை அவள் பெயரை சொல்லவே விரும்புவதில்லை. அரசி காமிகை.” சம்வகை அவளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. “இல்லை, நான் கேள்விப்பட்டதில்லை” என்றாள்.

“மல்லநாட்டிலிருந்து எந்தை கவர்ந்துகொண்டுவந்த எட்டாவது அரசி. மல்லநாட்டரசனின் ஆறாவது அரசியின் பன்னிரு மகள்களில் இளையவள். எந்தையைவிட முப்பதாண்டுகள் குறைந்த அகவை கொண்டவள். அவளுக்கு அங்கே அரசிநிலையே இருக்கவில்லை. ஆனால் இங்கே அவள் போருக்கு முந்தைய புருஷமேத வேள்வியில் அரசியென எந்தைக்கு நிகராக அமர்ந்தாள். காசியப கிருசரின் நாவால் அரசி என அழைக்கப்பட்டமையால் அவள் அரசியென்றானாள். அவள் சிந்துநாட்டுக்குத் திரும்பியதும் தனக்கென கோலும் கொடியும் கொண்டாள். தனி அரண்மனையை உருவாக்கிக்கொண்டாள். அன்னைக்கு நிகராக அரசுவிழவுகளில் அவையமர்ந்தாள். அன்னைக்கு மாற்றாக எங்கும் தன்னை முன்வைத்துக்கொண்டாள். இன்று அவள் தன் மைந்தன் சுகோத்ரனை அரசனாக்க வேண்டும் என்று வஜ்ரபாகுவுடன் இணைந்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு அவருடன் காமஉறவு உள்ளது என்பதும் எவரும் அறியாதது அல்ல.”

சம்வகை பெருமூச்சுவிட்டாள். “அன்னையின் இன்றைய உணர்ச்சிகளெல்லாம் ஒரே ஒரு பொருள்கொண்டவை. அதாவது பெண்கவரும் நாட்டம் கொண்டவராகிய எந்தை இனி எந்தப் பெண்ணையும் கவரப்போவதில்லை என்பதனால் எழுந்தவை” என்று சொல்லி சுரதன் வெடித்து நகைத்தான். “அவர் கவர்ந்து வந்து அரசியராக்கியவர் எண்மர். கவர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேலானவர்கள். அன்னை அவரை வெறுத்தது அதனால்தான். ஆனால் இன்று அவருடைய சாவுக்குப் பின் அவரைப்பற்றிய இனிய வடிவொன்றை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார். அது நன்று. அவ்வாறு ஒன்று இல்லையேல் அவரால் வாழமுடியாது. இனி வாழும்காலமெல்லாம் அவர் ஜயத்ரதனின் கைம்பெண் அல்லவா? வாழும்காலத்தைய கணவரைவிட இறந்த கணவர்கள் பெண்களுக்கு மேலும் சுமையென்றாகிறார்கள். ஓயாது உடனிருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் எத்தனை கொடியவராயினும் கீழோராயினும் மறைந்த கணவர்களை தூய்மைப்படுத்தி உயர்த்திக்கொள்கிறார்கள்.”

சம்வகை சலிப்புற்றாள். பித்தெழுந்த உள்ளம் எங்கும் நிலைகொள்ளாதது. அதன் அலைவை பித்திலாத உள்ளத்தால் பின்தொடர முடியாது. அனைத்தையும் சற்றேனும் ஒழுங்கமைத்துக்கொள்ளாமல் பித்திலா உள்ளங்கள் செயல்பட இயல்வதில்லை. எதையும் கேட்கலாகாது, கடந்துவிடவேண்டும் என எண்ணினாலும் அவள் கேட்டுவிட்டாள். “நீங்கள் உங்கள் தந்தையை தீயவர் என உணர்கிறீர்களா?” அவன் அதற்கும் நகைத்தான். “ஆம், ஐயமென்ன? அவர் தீயவர். தீமையே அவருடைய ஆற்றல். அதையே அவர் எனக்கு விட்டுச்சென்றிருக்கிறார். அவருக்கு அவர் தந்தை விட்டுச்சென்ற தீமை அது. ஒரு மாபெரும் படைக்கலம்.”

“அறிந்திருப்பீர்கள், என் மூதாதை பிருஹத்காயர் தன் தமையனை கொன்றவர். தன் கையால். அந்தக் கையால் அவர் என் தந்தையை தொட்டதில்லை. முதல்முறையாக தொட்டார், அக்கணமே தலை சிதறி உயிர்விட்டார். தொட்டதை அவர் அறிந்தாரா என்றே ஐயம்தான்.” அவன் அவளை மேலும் அணுகி அவள்மேல் விழிநாட்டி நின்று சொன்னான். “எந்தை என்னையும் தொட்டதே இல்லை. ஒருமுறைகூட. சடங்குகளின்போதுகூட. அவர் தன் தந்தையின் தொடுகையை அறியாதவர். ஆகவே என்னைத் தொட அவர் அஞ்சினார். அவரிடம் நிமித்திகர் சொல்லியிருந்தனர். அவருடைய தந்தை அவரை தொடாமையால் அவர் என்னையும் தொடலாகாது என்று. எனக்கு மைந்தர்கள் பிறந்தால் நானும் தொடமாட்டேன். தொடவேண்டுமென்ற விழைவை இதோ இப்படி இந்தக் கையில் தேக்கி வைத்திருப்பேன்.”

அவன் தன் கையைத் தூக்கி காட்டினான். “எந்தையும் பேசும்போது இப்படி கையைத் தூக்கி காட்டுவதை நான் கண்டிருக்கிறேன். அவருடைய தந்தையும் அவ்வாறே செய்வார் என்று அறிந்திருக்கிறேன். இந்தக் கை எங்கள் குடியின் படைக்கலம். எங்கள் நஞ்சனைத்தையும் இங்கே திரட்டி வைத்திருக்கிறோம். நாக நா என. தேளின் கொடுக்கு என. முதலை வால் என. கழுகின் அலகென.” அவள் மெல்ல தன்னை முழுமையாக பின்னிழுத்துக்கொண்டாள். அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என உளம்கூட்டினாள். அவன் மேலும் உரத்த குரலில் சொன்னான். “எந்தை இறப்பதற்கு முன் என் கனவில் வருவார். என்னை தொடாமல் அகன்று நின்று பேசிக்கொண்டிருப்பார். இறந்த பின் நேரில் வரலானார். இப்போதும் தொடுவதில்லை. நான் ஒரே ஒருமுறை அவரை தொட முயன்றேன். நீர்ப்பாவைபோல கலைந்து மறைந்தார்.”

“முன்பு அவர் என்னிடம் ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறார். இப்போது அவர் அதையும் பேசுவதில்லை. விழிச்சொற்கள் மட்டுமே. ஆனால் அவரை நான் நன்கறிவேன். மிகமிக அணுக்கமாக அறிவேன். அவரளவுக்கே அவரை அறிவேன். ஏனென்றால் அவரே நான். இல்லை, அவருடைய தந்தையும் நானே. அவர் பெண்கவர்ந்தார். வஞ்சங்கள் இழைத்தார். சிறுமைகளில் திளைத்தார். ஏனென்றால் அவர் அதிலேயே மெய்யான இன்பத்தை கண்டடைந்தார். தீமை நோக்கி செல்வதில் ஒரு பேரின்பம் உள்ளது. அது எல்லை மீறுதலின் இன்பம். நம் வாழ்க்கையின் எல்லா சலிப்புகளையும் போக்கிவிடுகிறது. ஒவ்வொரு கணத்தையும் புத்துணர்வுகொள்ளச் செய்கிறது.”

“தான் தீயவன் என பிறரால் கருதப்படவேண்டும் என்றும் தீயோர் விழைகிறார்கள். ஏனென்றால் அது ஆற்றலை அளிக்கிறது. நிமிர்வை உருவாக்குகிறது. எந்தை அதை விரும்பினார். தன் தந்தையிடம் அச்செய்திகள் சென்று சேர்ந்தபடியே இருக்கவேண்டும் என விரும்பினார். மூதாதையான பிருஹத்காயர் சிந்துவுக்கு அப்பால் சப்ததளம் என்னும் ஆற்றங்கரைக் காட்டில் தங்கி தவமியற்றினார். அங்கிருந்து ஒவ்வொன்றையும் அறிந்துகொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து அவர் கடந்துசென்றார். எங்கிருக்கிறார் என எவரும் அறியவில்லை.” அவன் பெருமூச்சுவிட்டான். “அமைச்சர் சுஃபூதர் என்னிடம் இருமுறை சொல்லியிருந்தார். அவர் எந்தையின் கனவுருவெனத் தோன்றுவதுண்டு என. அப்போது அவர் விழியற்றவராக இருப்பார் என.”

சம்வகை “நான் வருகிறேன், எனக்கு பெரும்பணி எஞ்சியிருக்கிறது இன்று” என்றாள். “நில்” என அவன் அவள் தோளை பற்றினான். “நான் சொல்லவந்தது இதுவே. நான் நேற்று மாலை இந்த அரண்மனையின் இடைநாழியில் எந்தையை பார்த்தேன். இதோ இங்கே. நான் கடந்துசெல்கையில் நின்றுகொண்டிருந்தார்.” சம்வகை நடுங்கும் குரலில் “யார்?” என்றாள். “என் தந்தை ஜயத்ரதன். மரவுரி அணிந்து கல்மாலையும் உருத்திரவிழிமணி குண்டலங்களும் சடைமுடிப்பரவலுமாக தூணருகே அவர் நின்றிருந்தார்.” சம்வகை மூச்சொலித்தாள். “ஆனால் அவர் விழிகள் இரண்டும் தசை கொப்புளங்களாக இருந்தன” என்றான் சுரதன். சம்வகை சொல்லுறைந்த உதடுகளுடன் அவனை நோக்கினாள்.

“முதலில் அது உண்மையுரு என்று எண்ணி நான் அவரை நோக்கி ஓடப்போனேன். என்னுடன் வந்த பிற எவரும் அவரை காணவில்லை என்று அடுத்த கணமே உணர்ந்து விழிமயக்கென்று தெளிந்தேன். ஆனால் விழிமயக்கு என்று எண்ணும்போதும் அவ்விழிமயக்கு அப்படியே நீடிக்கும் விந்தையை என் உளம் தாங்கவில்லை. நான் அஞ்சி என் அறைக்குள் ஓடிவிட்டேன்” என்றான் சுரதன். அவன் கைகள் அவள் தோளை உலுக்கின. “அவர் விழியற்றவராகிவிட்டாரா? ஏன்? என்னால் எண்ணக்கூடவில்லை. ஏன்?” அவன் விழிகள் சிவந்து அனல்கொண்டிருந்தன.

சம்வகை அவன் கையை மெல்ல விலக்கி “நான் விடைகொள்கிறேன், இளவரசே” என்று தலைவணங்கி நடந்தாள். “நில், நான் சொல்வதை முழுக்க கேள்” என்றான் சுரதன். “மூத்தவரே, நில்லுங்கள்” என அவனை சுகதன் பற்றிக்கொள்வதை அவள் தனக்குப் பின்னால் கேட்டாள்.

முந்தைய கட்டுரைகலைகளைப் பிரித்துப்பார்த்தல்
அடுத்த கட்டுரைவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்