விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜானவி பரூவாவின் மாயவி(த்)தைக் கதையை வாசித்தபின் அவரின் தொகுப்பைச் சென்னையில் தேடினேன். கிடைக்கவில்லை. ப்ரதி அமேசானில் இருக்கிறது. டெலிவரி சார்ஜ் என அவர்கள் போடும் தொகை புத்தகத்தின் விலையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இருப்பதால் மலைத்துக்கொண்டு வாங்கவில்லை. அவரின் மின்னஞ்சல் முகவரி தாருங்களேன். புத்தகத்தை வாங்கி படித்தபின் அவருடன் புத்தகங்களைப் பற்றி எண்ணங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு அந்தக் கதைப் பிடித்திருந்தது.

நன்றி,

சங்கர்

***

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

இருபது வருடங்களுக்கு முன்பாக ஈரோட்டில் ராணா லட்சுமண் என்றொருத்தர் இருந்தார். அவரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு செயலியக்கமே இத்தனை வருடங்கள் தாண்டியும் அவரை என்னை நினைத்திருக்கச் செய்கிறது. ஈரோட்டில், ராணா திருமண மண்டபம் என்ற பெயரில் பெரியதொரு அரங்கு அவருக்கு இருந்ததது. ஒவ்வொரு வருடமும், அம்மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் (அன்றைய ஈரோட்டுச் சூழ்நிலையை ஒப்பிடுகையில்) ஒரு இலக்கிய விழாவினை அவர் நிகழ்த்துவார். அதுவும் ஒரு முழுநாள் இலக்கிய நிகழ்வாக அது இருக்கும். வேலையிலிருந்து நிகழ்வுகள் துவங்கி நடந்து, பிறகு மதிய உணவு, இருவேளை தேநீர் உட்பட எல்லாமும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டு மாலைவரை நிகழ்வுகள் நிகழும்.

அந்நிகழ்வின் தனித்ததொரு அம்சமாக நானறிந்தது, அந்நிகழ்வுக்கு அழைக்கப்படும் அழைப்பாளர்கள். வெறும் பட்டிமன்ற பேச்சாளர்கள் போன்ற மேடைப்பேச்சாளர்கள், நகைச்சுவையாளர்களை அவர்கள் அந்நிகழ்வுக்கு அழைப்பதில்லை அவர்கள். அன்றைய காலநிலையை எண்ணிப்பார்த்தால் அதுவொரு சராசரித் தன்மையிலிருந்து விலகியிருந்த இலக்கியநிகழ்வாக எனக்குப்பட்டது. அக்காலகட்டதிலேயே, வருடாவருடம் பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பையும் தொகையையும் பாராட்டுப் பத்திரத்தையும் தேர்ந்தெடுத்த ஒரு எழுத்தாளருக்கு அளித்து அவரை கெளரவிப்பார்கள். அசோகமித்ரனுக்கு, பொன்னீலனுக்கு, தோப்பில் முகமது மீரானுக்கு… என நிறைய எழுத்தாளர்களைத் தொடர்ந்து வருடா வருடம் கெளரவித்து இன்னும் அதிக வாசகர்களிடம் அவர்களைக் கொண்டு சேர்க்கிற காரியத்தை அவ்வமைப்பு தொடர்ந்து செய்துவந்தது. நான் என் வாழ்வில் முதன்முதலாக அசோகமித்திரன் அவர்களை நேரில் சந்தித்தது அந்நிகழ்வில்தான். காயாத உள்ளீரத்தோடு அந்நொடிகள் இப்பவரை என்னுள்ளிருக்கிறது.

அவருடைய உருவத்தோற்றம் எப்பொழுதும் ஒரு நிறைவைத் தருவதாகவே இருக்கும். வெள்ளைவேட்டி வெள்ளை சட்டையுடன் குள்ளமான உருவத்தில் முகமலர்ந்து புன்னகைத்திருப்பார். சுண்டுவிரல் நுனியளவுக் குங்குமத்தை நெற்றியில் இட்டிருப்பார். சட்டைப்பையில் பழனிமலை முருகன் படத்தை எப்போதும் உடன்வைத்திருப்பார்.

கணிக்கவேமுடியாத காலத்துயர் ராணா லட்சுமணனுக்கும் நிகழ்ந்தது. பெரும் கடன் சிக்கலால் அவருடைய திருமண மண்டபம் விற்கப்பட்டது. மீளவே முடியாத ஆழத்துக்குள் அவர் சென்றடைந்தார். நெஞ்சுள் அடுத்தடுத்து நிறைய அழுத்தங்கள் சேரச்சேர, வாழ்வதை வெறுத்த ராணா லட்சுமணன் ஒருகட்டத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ஒருநாள் செத்துப்போனார்.

அவ்வளவு மனிதர்களுக்கு ஒரு புரவலராகவும், யாருமற்றவர்களுக்கு உற்ற நண்பராகவும், எத்தனையோ பேருக்கு வாழ்நாள் கொடையாளராகவும், என்னைப்போன்ற எண்ணிலாத மனங்களுக்கு உணவு வழங்கிய பேருள்ளமாகவும் ஊர்போற்ற வாழ்ந்த ஒரு மனிதர், தன்னைத்தானே துர்முறையில் மாய்த்துக்கொண்டு இறந்துபோகிறார். வாழ்வின் இவ்விநோதம் எவராலும் விளக்க முடியாததாக நீள்கிறது எக்காலத்திலும். ஆனால் அவர் முன்னெடுத்திருந்த அந்த இலக்கிய அசைவு உண்டாக்கிய மனவெழுச்சி என்பது அதியுன்னதமானது.

எங்களைப்பொறுத்தவரையில், இச்சமகாலத்தில் இலக்கியத்தின்வழி ஒரு அகம்சார் உரையாடல் தளத்தை உருவாக்கி, நேரடிச்சந்திப்புகளின்வழி அதன் உள்ளாற்றல் பெருக்கி, விருதுகளின் வழியாக ஒரு தேர்ந்த படைப்பாளரை இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, கொண்டாட்டத்தின் கூடுகையாக தமிழ்ச்சூழலில் நிகழ்கிற நற்சந்திப்பு என்றால், அது நீங்களும் நண்பர்களும் இணைந்து முன்னெடுக்கும் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவிழா தான். முப்பத்தியெட்டாயிரம் பக்கங்களுக்கும் மேலாக எழுதி நீளும் உங்களுடைய மனதின் மைக்குப்பி… எத்தனை இன்னல்களைத் தாண்டி இத்தகைய நன்னிலையை அடைந்திருக்கும் என எங்களுக்குள் நாங்கள் உரையாடிக் கொள்வதுண்டு. தான் நம்பும் உண்மைக்கு, தன்னை முற்றிலுமாக ஒப்படைக்கும் துவழாத ஒரு மனதினால்தான் இத்தகைய எண்ணத்திரள் சாத்தியம்!

தயங்கித் தயங்கி வாழ்வின் படிகளிலோ, படைப்பின் படிகளிலோ ஏறிச்செல்பவர்களை நம்பிக்கையோடு நீங்கள் கரங்கொடுத்து மேலுயர்த்தி அருகமரச் செய்துவிடுகிறீர்கள். விஷ்ணுபுரம் விழாவில் அறியும் இளம்மனதுகளின் மனவிசாலமும் அறிவுப்பரவலும் நினைத்து நினைத்து வியக்கவைக்கிறது. விழாவின் ஒருங்கிணைப்பு நேர்த்தியென்பது நாங்கள் எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. வாசிப்பின்வழி ஒரு சமூகத்தில் நிகழ்கிற சிறுமாற்றத்தை கண்கூட காண்பதென்பது நிச்சயம் ஒரு பெருநிகழ்வுதான்.

இவ்விழா சுட்டுகிற மனிதர்களின் நல்லதிர்வு வாழ்வு முழுமைக்கும் உடன்வரும் இயக்கவிசையாக எங்களுக்குள் மாறிப்போகிறது. மனயிறுக்கத்தைத் தளர்த்தும் ஒரு உயவாக இலக்கியம் இருதயமிறங்குகிறது. ஒவ்வொரு வருடமும் விஷ்ணுபுரம் விழாநிகழ்வு துவங்குவதற்கு மூன்றுமாதங்களுக்கு முன்பாகவே விழாவின் அதிர்வுகள் எங்களுக்குள் தொடங்கிவிடுகிறது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் ‘பெயரற்ற யாத்ரீகன்’ தொகுப்பிலிருந்த ஜென்கவிதைகளை எடுத்து, குழந்தைகள் வரைந்த கிறுக்கல் ஓவியங்களோடு இணைத்து ‘எல்லா குளங்களிலும் ஒரே நிலா’ என்ற புத்தகத்தை தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிட்டிருந்தோம். அப்புத்தகத்தை இம்முறை தயங்கித் தயங்கி யுவன் சந்திரசேகரின் கைகளில் ஒப்படைத்தோம். அதைக் கையில் பெற்றவுடன், கண்கள் கலங்க கரங்கூப்பி நன்றிசொல்லி எங்களோடு அவர் உரையாடிய நெகிழ்வுரையாடல் என்றைக்கும் எங்களால் தொலைக்க முடியாத பொக்கிஷ நிமிடங்கள்.

நீங்கள், ஏதோவொரு நண்பரிடத்து தன்னறம் புத்தகங்களின் வடிவமைப்பு குறித்தோ, புத்தகங்கள் குறித்தோ, குக்கூ நண்பர்கள் குறித்தோ நீங்கள் சொல்கிற ஒரு சொல்… எங்களை தீவிரமாக செயலை நோக்கி நகர்த்துகிறது. அச்சொல்லுக்கான நேர்மைக்கு இன்னும் உழைக்க வேண்டிய ஒரு அகப்பொறுப்பை எங்களுக்கு நாங்களே வார்த்துக்கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் இலக்கியச் சந்திப்பில் குக்கூ- தன்னறம்  நூல்வெளி அரங்கும் இருப்படைவது எங்களுக்கான செயலுழைப்பை ஈட்டிக்கொள்வதற்கான ஆற்றலைப் பெற்றுத்தருகிறது.

 

2019ம் விஷ்ணுபுரம் நிகழ்வு தந்திட்ட செயலூக்கத்தில், மாதாமாதம் ஒரு புத்தகத்தை தன்னறம் நூல்வெளி வாயிலாகக் கொண்டுவரகிற ஒரு நீண்டநாள் மனயோசனையை சாத்தியச் செயலாக இனி மாற்றவுள்ளோம். மேலும் மேலும் இதில் தீவிரமடைந்து இயங்கும் ஒரு உள்விசையை நீங்களும் உங்களுடைய நண்பர்களின் அருந்துணையும் எங்களுக்கு வழங்கியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நிகழ்வு முடிந்த அந்த இரவில் நீங்களும் மற்ற எல்லா நண்பர்களும் சூழ்ந்தமர்ந்து உரையாடிச்சிரித்திருக்கும் புகைப்படம் மனதுக்குள் மீளமீள எழுகிறது. ஏதோவொருவகையில், இவ்விழாவின் நிறைவுத்தருணங்கள் எங்களுக்குள் சுந்தர ராமசாமியுடைய இருப்பின் நீட்சியை தோற்றுவிக்கிறது. உங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இதே உளமகிழ்வும், பூரண நிறைவும் எக்காலத்தும் வாழ்வமைய எல்லாம்வல்ல பேரிறையின் பெருங்கருணையைப் பிரார்த்திக்கிறோம். எல்லோருக்குமான மனவேண்டுதல்களும் அன்பின் நன்றிகளும்!.

இப்படிக்கு
சிவராஜ்
தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42
அடுத்த கட்டுரைஅருண்மொழியின் உரை