‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41

பகுதி ஐந்து : விரிசிறகு – 5

துச்சளை ஓரளவு இயல்பாக இருப்பதாகவே சம்வகைக்கு தோன்றியது. ஆனால் அவளுடைய உடலின் இயல்பு அது என்று பின்னர் புரிந்துகொண்டாள். பருத்த உடல் உள்ளவர்கள் இயல்பிலேயே எளிதாக, ஓய்வாக இருப்பது போன்ற ஒரு பாவனையை வந்தடைந்துவிடுகிறார்கள். கவலைகொண்டிருப்பதோ பதற்றமோ உடலில் வெளிப்படுவதில்லை. மெலிந்த உடல் கொண்டவர்கள் இயல்பாக இருக்கையில்கூட அவ்வுடலில் இருக்கும் அலைபாய்தலும் கன்னங்களின் ஒடுங்குதலும் இணைந்து அவர்கள் சோர்ந்தும் சலித்தும் இருப்பதான ஒரு பாவனையை அளித்துவிடுகின்றன.

துச்சளை நிலைகுலைந்திருக்கும்போது எப்படி இருப்பாள் என்பதை முன்பு உணர்ந்திருந்தாலன்றி அவளை புரிந்துகொள்ள முடியாதென்று தோன்றியது. நெடுந்தொலைவில் மக்கள்திரளுக்கு கைகூப்பியபடி நின்று அப்பால் தேரில் மக்களின் வாழ்த்துக்களை ஏற்றபடி செல்லும் துச்சளையையே அவள் பார்த்திருக்கிறாள். அத்தனை அருகே அஸ்தினபுரியின் இளவரசியை தன்னால் பார்க்க முடியுமென்றுகூட எண்ணியிருக்கவில்லை. அத்தருணத்தில் அவளுக்குள் எழுந்த உணர்வெழுச்சி எழுந்து நின்று தன் தலையை தானே வெட்டி அவள் காலடியில் வைக்கவேண்டும் என்பது போலிருந்தது. மறுபக்கம் அவளுக்குள் அனைத்தையும் கடந்த உறுதி ஒன்று இருந்தது. அந்த இரும்புக் கவசம் தன் உடலுக்குள் எலும்புக்கூடு என ஆகிவிட்டதுபோல.

துச்சளையின் கால்கள் அசைந்துகொண்டிருந்தன. கட்டைவிரலால் நிலத்தில் நெருடிக்கொண்டிருந்தாள். வலது கையின் சுட்டுவிரல் அவள் அமர்ந்திருந்த மஞ்சத்தின் பட்டுவிரிப்பின்மீது மெல்ல சுழித்துக்கொண்டிருந்தது. அவளே பேசட்டும் என்று சம்வகை காத்திருந்தாள். துச்சளை தான் தொடங்குவதற்குரிய சொற்களுக்காக உளம் துழாவுகிறாள் என்று சம்வகை புரிந்துகொண்டாள். அவள் தன் இயல்பில் திறந்த உள்ளமும் நேர்ப்பேச்சும் கொண்டவளாக இருக்கலாம். அத்தகையோர் பெரும்பாலான தருணங்களில் தன்னியல்பாக சொல்லெடுத்து மேலே செல்வார்கள். அவர்கள் எண்ணாது உரைப்பதனாலேயே அச்சொற்கள் பொருத்தமென அமையவும்கூடும்.

ஆனால் உண்மையிலேயே அறத்துயர் அளிக்கும் தருணங்களை அவர்களால் சொற்கூட்ட முடிவதில்லை. சூழ்ச்சிகளில் எனில் ஒரு சொல்லும் எழுவதில்லை. ஒரு நேருக்குநேர் தருணம் விரிவடையுமெனில் திகைத்துவிடுகிறார்கள். அதற்குரிய உளச்சூழ்கைகளை, முகநடிப்புகளை அவர்கள் அறிந்திருப்பதில்லை. அத்தகைய தருணங்களில் முறைமைச்சொற்கள் பயனளிப்பதில்லை. முறைமைச்சொற்களினூடாக ஓர் உரையாடலை தொடங்கி, அப்போக்கில் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று, அதில் உருவாகும் ஒரு சொற்றொடர் வழியாகச் சென்று பேசவேண்டியதை அணுகலாம். பெரும்பாலும் யுதிஷ்டிரன் அவ்வாறே செய்தார். அத்தகைய முறைமைப்பேச்சுகளும் அவளுக்கு பழக்கமில்லை என்று சம்வகைக்கு தோன்றியது. அத்தனை அவைகளிலும் சூழ்ச்சிகள் எவற்றையும் அறியாமல் திறந்த பேருள்ளத்துடன் இருந்தவள் போலும்.

துச்சளை பெருமூச்சுவிட்டு “எப்படி இதை உன்னிடம் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை” என்றாள். அது மிக தவறான தொடக்கச் சொற்றொடர் என்று உணர்ந்து உள்ளூர புன்னகைத்தும் முகத்தை அசைவின்றியும் வைத்துக்கொண்டாள் சம்வகை. “உன்னை என் இளையவள் என்று எண்ணுகிறேன்” என்று துச்சளை சொன்னாள். அதுவும் ஒரு பிழையான சொற்றொடர். ஏனெனில் அத்தகைய சொற்றொடர்கள் ஒருவரை கவரும் பொருட்டு, அவரை தன்வசம் இழுக்கும் பொருட்டு சொல்லப்படுபவை. அத்தகைய ஒரு சொற்றொடர் அரசுசூழ்தலில் எழுமெனில் அக்கணமே எதிரில் இருப்பவர் ஐயம்கொண்டவர் ஆகிவிடுகிறார். அகத்தே எச்சரிக்கை கொள்கிறார். ஆனால் உணர்வுநடிப்பால் அவர் அதை மறைத்துக்கொள்ளும் வாய்ப்பையும் அச்சொல் வழங்குகிறது.

ஆனால் துச்சளையின் விழிகள் சிறுகுழவியுடையதைப்போல் கள்ளமற்றிருந்தன. அவள் முகத்தில் தெரிந்த உணர்வு அச்சொற்களை முற்றிலும் தானும் வெளிப்படுத்தியதனால் அது சம்வகையின் உள்ளத்தை தொட்டது. “என் கடன் தங்களுக்கு அடிபணிந்திருப்பது, அரசி” என்று அவள் சொன்னாள். துச்சளையின் விழிகளில் துயர் எழுந்து வந்தது. “நான் அரசியல்ல, தேரிலிருந்திறங்கியதுமே அதை உணர்ந்தேன். அதை சொல்லக்கூடவில்லை. சிந்துநாட்டில் என்னை அரச பதவியிலிருந்து விலக்கிவிட்டார்கள். என் மைந்தர்களும் இன்று நாடற்றவர்களே” என்று அவள் சொன்னாள்.

சம்வகை அவள் தான் சொல்லவிருப்பதை தொடங்கிவிட்டாள் என்று புரிந்துகொண்டாள். எந்த நடிப்பும் இன்றி நேரடியாகச் சொன்னதுமே அவளுக்கு தயக்கங்கள் மறைந்தன. சொற்கள் ஆற்றல்கொண்டன. “நான் அடைக்கலம் தேடியே இங்கே வந்தேன்” என்றாள் துச்சளை. சம்வகை தலையசைத்தாள். “சிந்துநாட்டின் அரசியலை இங்கு எவருக்கும் சொல்லி புரியவைத்துவிட முடியாது. அது வளம் மிக்க நாடு. ஆனால் பாலைவனமும் கூட. சிந்து நதியின் நீரை பாலைவனத்தில் கிளை பிரித்து கொண்டுசென்று உருவாக்கப்பட்ட வயல்களால் ஆனது அந்நிலம். இப்பாசனமுறை அங்கு உருவாவதற்கு முன்பு அங்கு வாழ்ந்தவர்கள் தொல்வேடர் குடிகள். அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கூட அதே பாலைவனத் தொல்குடி வாழ்க்கையையே மேற்கொண்டிருக்கிறார்கள்.”

சிந்துவைத் தேக்கி, கால்வாய்களை உருவாக்கி, வயல்களை அமைத்துக்கொண்டவர்கள் வெவ்வேறு காலங்களில் அந்நிலம் நோக்கி வந்த புறநிலத்து மக்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறிதல்களுடன் வந்தனர். சிந்துவின் பெருநீரை அணை கட்டி தேக்க முடியும் என்பதை இன்று எண்ணுவதேகூட திகைப்பூட்டுவது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதை எப்படி செய்தார்கள் என்பது தேவர்களின் பணியோ என்று ஐயுறத்தக்கது. ஆனால் அதை செய்திருக்கிறார்கள். ஆண்டில் ஒருபோதும் நீர் குறையாத அப்பெருநதிக்குள் மூழ்கியவைபோல் பல அணைக்கட்டுகள் உள்ளன. ஒன்றோடொன்று தொடுக்கும் கற்களை இறுக்கிப்பொருத்தி அவற்றை கட்டியிருக்கிறார்கள். அவை நீரின் விசையை குறைக்கின்றன. விசைகுறைந்த நதி மெல்ல விரிந்து கரைகளை முட்டுகிறது. அங்கே கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“நதியிலிருந்து மூன்று ஆள் உயரத்திலிருக்கிறது சிந்துநாட்டின் சராசரி நிலப்பகுதி. அந்த நிலங்களுக்கு நீரேற்றம் செய்யப்பட இயலும் என்பதும் பிறிதொரு விந்தையே. நீரை தேக்கி அத்தேக்கத்தினூடாகவே நீரை மேலேற்றும் ஒரு வழிமுறையை அங்கு உருவாக்கியிருக்கிறார்கள். சிந்துநாட்டை நரம்பு வலைப்பின்னலென நிறைத்திருக்கும் அக்கால்வாய்களில்தான் அதன் உயிர் உள்ளது. அந்நிலங்களும், கால்வாய்களின் மேல் ஆட்சியும் வந்து குடியேறிய மக்களிடம் உள்ளன” என்று துச்சளை சொன்னாள். அவள் அதை ஏன் அத்தனை விரிவாக தன்னிடம் சொல்கிறாள் என சம்வகை உள்ளூர வியப்புற்றாள். அவ்வியப்பு சுரதனுக்கும் இருப்பது அவன் உடல் நிலைகொள்ளாமல் அசைந்தமையில் தெரிந்தது.

இன்று சிந்துநாட்டை நான்கு குடிகளாக பிரிக்கலாம். இன்னமும் மலைப்பகுதிகளின் பாலைச்செறிவுகளில் வேட்டையாடி வாழும் தொல்குடியினர். விரிந்த வயல்களில் வேளாண்மை செய்யும் மருதநிலக்குடிகள். கால்வாய்களை தங்கள் ஆட்சியில் வைத்திருக்கும் போர்க்குடிகள். தொடர்ந்து இக்கால்வாய்களினூடாக சிந்துவிலிருந்து வந்து வணிகம் செய்து மீளும் வணிகக்குடிகள். அங்கு ஆயர்கள் இல்லை. நிலத்துடன் இணைந்து வாழும் தொழும்பர்களும் இல்லை. சிந்துநாட்டின் தொல்முறைமைப்படி அங்கு எல்லா அரசு அவைகளிலும் முதன்மை அமர்வு உரிமை கொண்டவர்கள் அந்த நிலத்தின் தொல்குடிகளாகிய வேட்டைக்குடி மக்கள்தான். அவர்கள் அந்நிலத்திற்கு முற்றுரிமை தாங்களே என்று எண்ணுகிறார்கள். அந்நிலத்திற்குரிய ஆலயங்களிலும் முதன்மைப் பூசனை உரிமை கொண்டவர்கள் அவர்கள். நெடுங்காலம் அந்நிலத்தின் அரசகுடிகூட அவர்களிடமிருந்தே உருவாகியது. என் கொழுநரின் தொல்மூதாதை பிரகதிஷுவே முதலில் சிந்துநாட்டின் பட்டத்திற்கு வந்த ஷத்ரிய குடியினர்.

சிந்துநாட்டின் வேட்டைத் தொல்குடிகளைச் சேர்ந்த பழங்கால அரசர்கள் சிபிநாட்டினராலும் கூர்ஜரத்தாராலும் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டு முற்றழிந்தார்கள். சிந்துநாடு எட்டு தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூர்ஜரத்திற்கும் சிபிநாட்டிற்கும் யவனப் படையெடுப்பாளர்களுக்கும் அடிபணிந்து கிடந்தது. அதன் ஒரு பகுதி பாஞ்சாலத்தாலும் இன்னொரு பகுதி அஸ்தினபுரியாலும் ஆளப்பட்டது. அப்பொழுதுதான் பிரகதிஷு தன் சிறுபடையுடன், நூறு குடியினர் தொடர அங்கே வந்தார். வெற்றுநிலத்தில் ஒரு சிற்றூரை உருவாக்கிக்கொண்டார். அங்கே ஒரு ஆற்றல் மிக்க வில்லவராகவும் மல்லராகவும் அறியப்பட்டார். சிலர் இயல்பிலேயே அரசர்கள். நிலம் காதல்மகள் என அவர்களை தேடிச்செல்கிறது என்பார்கள். அவர் அத்தகையவர்.

ஷத்ரியக் குடியினரை பிரகதிஷு ஒருங்கு திரட்டினார். நூறு மறக்குடியினரை அவர் வென்றும் பேசிக்கவர்ந்தும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவர்கள் அப்போது சிந்து நதியின் பெருக்கையும் கிளை ஆறுகளையும் கால்வாய்களையும் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தனர். அங்கு செல்லும் படகுகளுக்கு காவலாக அமைந்து பொருளீட்டிக் கொண்டிருந்தனர். சிந்துவைக் கைப்பற்றிய நாடுகள் அந்நிலத்தைப் பேணுவதை மறந்து தங்களுக்குள் போரிடத் தொடங்கிவிட்டிருந்தன. அவை போரிட்டு ஆற்றல் இழந்திருந்த காலம் அது. பிரகதிஷு சிந்துவை சிபிநாட்டின் பிடியிலிருந்து மீட்டார். அந்நிலப்பகுதியில் ஒரு சிறு அரசை தான் அமைத்தார். சிந்து நிலம் மீட்கப்பட்டபோது பிற பகுதிகளிலிருந்து அவர் குடியைச் சேர்ந்த மறவர்கள் அவரிடம் படைப் பணிக்கு வந்தனர். அவர் அதன்பின் சிந்துவின்மேல் சுங்கம் கொள்ளலானார். தொலைநிலங்களுக்குச் சென்று யவன வணிகர்களை கொள்ளையிட்டார். விரைவுப்படகுகளில் சென்று கடலிலும் கொள்ளையிட்டார்.

தன்னிடம் இருந்த செல்வத்தால் அவர் யவனர்களையும் சோனகர்களையும் தன் படைக்குள் சேர்த்துக்கொண்டார். சிந்து நிலத்தை ஆட்சி செய்தாலும் கூர்ஜரர்களோ பிறரோ அந்நிலத்தின் மீது கோன்மை கொள்ள இயலாது. அக்கால்வாய்களை எவர் ஆள்கிறார்களோ அவர்களே சிந்துவின் ஆட்சியாளர்கள். அக்கால்வாய்களில் செல்லும் விரைவுப்படகுகள், அவற்றின் சிக்கலான வலைப்பின்னல் ஆகியவற்றை அறிந்தவர்கள் அங்கேயே பிறந்தெழுந்த மறவக்குடியினரே. ஆகவே அவர்களிடமே அந்நிலத்தின் ஆட்சியை அளித்து அவர்களிடம் கப்பம் பெற்று மையத்தில் தன் ஆட்சியை நிறுவினார். மறவர்கள் ஒருங்கு திரண்டதும் கூர்ஜரம் செயலற்றது. மூன்று முறை கூர்ஜரப் படைகள் சிந்துநாட்டை கைப்பற்ற வந்தன. அவை களங்களில் முறியடிக்கப்பட்டன. தன் ஆட்சிக் காலத்திலேயே நாட்டை ஒருங்கிணைத்து தனிக்கோன்மை கொண்டதாக ஆக்கினார் பிரகதிஷு.

“அவர் மைந்தர் பிரகத்ரதர் மீண்டும் சிந்துவை முற்றாக ஒருங்கிணைத்து ஆற்றல்கொண்ட அரசாக்கினார். அவர் கொடிவழியினரான பிருஹத்காயர் தன் தமையனிடமிருந்து முடியை பெற்றுக்கொண்டு இரக்கமின்மையினூடாக, கூர்மதியினூடாக, தருணங்களில் தன்னை மாற்றிக்கொள்ளும் துணிவினூடாக வெல்ல முடியாத அரசராக உயர்ந்தார். அவர் மைந்தராகிய என் கொழுநர் முடிசூடியபோது அனைவரும் அஞ்சும் ஒரு நாடாக சிந்து இருந்தது. அனைவரும் மதிக்கும் வில்லவராக அவர் திகழ்ந்தார்” என்று துச்சளை சொன்னாள். அவள் அதை பெருமிதத்துடன் சொல்லவில்லை என்பதை சம்வகை கண்டாள். ஆனால் சுரதன் மெல்லிய உறுமலோசை ஒன்றை எழுப்பினான்.

சிந்துவின் குடிகளுக்கு இழந்த பொற்காலத்தை மீட்டு அளித்தவர்கள் என் கொழுநரும் அவர் தந்தையும் மூதாதையரும்தான். அவ்வெண்ணம் அங்குள்ள மறவருக்கும் உழவருக்கும் இருந்தது. வணிகர்கள் அவர்களை கொண்டாடினார்கள். ஆனால் மலைப்பழங்குடிகள் எந்த அரசியல் சூழலையும் புரிந்துகொள்பவர்கள் அல்ல. அவர்களுக்கு சிந்துவின் மறக்குடியினரது ஆட்சியும் கூர்ஜரத்தின் ஆட்சியும் சிபிநாட்டின் ஆட்சியும் ஒன்றே. அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக மட்டுமே போராடினார்கள். பிருஹத்காயர் அவருடைய காலத்தில் தொல்குடியினரின் அவைமுதன்மையை பெருமளவு குறைத்தார். அவர்களுக்குரியது சடங்கு சார்ந்த இடம் மட்டுமே என வகுத்தார்.

அவர்கள் சிந்துநாட்டின் அவைகளில் குடிக்கோலேந்துவது, அறிவிப்புகளுக்கு முதலேற்பு கொடுப்பது, ஆலயங்களில் முதற்பூசனை செய்வது, விழவுகளில் கோலேந்தி முதலில் வருவது போன்றவற்றை மட்டுமே இயற்றலாம் என வகுக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு முடிவுகளில் எச்சொல்லுரிமையும் அளிக்கப்படவில்லை. அதைவிட அவர்கள் பிற குடியினரை தாக்கினாலோ கொன்றாலோ முன்பு அவர்களின் குடித்தலைமையிடமே அரசர் முறையிடவேண்டும் என்றும், அவர்களை தண்டிக்கும் உரிமை அவர்களின் குடியவைக்கு மட்டுமே உண்டு என்றும் இருந்த நிலையை பிருஹத்காயர் அகற்றினார். அவர்களும் சிந்துநாட்டின் பிற குடியினரைப்போல தண்டிக்கப்பட்டனர்.

ஆயினும்கூட தாங்கள் தங்கள் கோன்மையை இழந்துவிட்டோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களில் பஷ்டகக் குடியின் தலைவர்களில் ஒருவர் யவனநாட்டுக் கொள்ளையர்களுக்கு உதவி செய்து அவர்களிடமிருந்து பொருள் பெற்றுக்கொண்டார். யவனக் கொள்ளையர்களை ஒடுக்கிய பிருஹத்காயர் அவர்களுடன் இருந்த அத்தொல்குடித் தலைவரை சிறைபிடித்தார். மண்ணுக்கு வஞ்சம் இழைத்ததாக குற்றம்சாட்டி அவரை தலைவெட்டிக் கொல்ல ஆணையிட்டார். தொல்குடிகளின் களமுற்றத்திலேயே அது நிறைவேற்றப்பட்டது. அச்செயலினூடாக தொல்குடிகள் தங்கள் கோன்மை பறிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள்.

அதுவரை அவர்களின் குடியைச் சேர்ந்த எவருமே அவ்வாறு தண்டிக்கப்பட்டதில்லை. அவர்களின் குடியவை கூடி அளிக்கும் தண்டனை என்பது பெரும்பாலும் விலக்குவதும் அச்சுறுத்துவதும் மட்டுமே. தலைவெட்டிக் கொல்லப்படுவதென்பது அவர்களுக்கு மிகப் பெரிய தீங்கென, சிறுமையெனப்பட்டது. துண்டிக்கப்பட்ட தலை கொண்ட உடல் விண்ணுலகு செல்வதில்லை என்று அவர்கள் நம்பினார்கள். துண்டிக்கப்பட்ட அவ்வுறுப்புகளை ஒன்றாக இணைக்கும் பொருட்டு அவ்வுயிர் துடித்துக்கொண்டிருக்கிறது என்பது அவர்களுடைய எண்ணம். உயிரின் ஒரு துண்டு தலையிலும் உடலிலும் இருந்து இரு முனைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து முடிச்சிட்டுக்கொள்ளும் பொருட்டு நெளிந்துகொண்டிருப்பதாக அவர்களின் பாடல்கள் கூறின.

கொல்லப்பட்ட பஷ்டகர் குடித்தலைவர் பாலைநிலத்திலேயே எரித்து அழிக்கப்பட்டார். அவருடைய நுண்ணுயிர் அக்குடிகளின் பெரும்பாலான பூசனை நிகழ்வுகளில் கயிற்றுத் துண்டுகளின் நெளிவெனத் தோன்றியது. தன் இரு முனையையும் ஒன்றுடன் ஒன்று நெருங்க வைத்து முடிச்சிட்டுக் கொள்ளும் பொருட்டு அது நின்று துடித்தது. அதைக் கண்டு அக்குடிகள் அலறி அழுதனர். பெண்கள் மயங்கி விழுந்தனர். வீரர்கள் சீற்றம்கொண்டு தங்கள் கோல்களையும் வாள்களையும் வானுக்குத் தூக்கி வெறிக்கூச்சலிட்டனர். அவர்களின் சீற்றம் ஒவ்வொரு நாளுமென பெருகிக்கொண்டிருந்தது.

என் கொழுநர் ஆட்சிக்கு வந்த பின் அதை ஆறுதல்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட பரிசுகள் அவர்களால் ஏற்கப்படவில்லை. அப்பிழையை நிகர் செய்வதற்காக எடுக்கப்பட்ட பூசனைகள் அவர்களை நிறைவுறச் செய்யவில்லை. தங்கள் நிலத்திலிருந்து அயலவர் முற்றிலும் அகலவேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அவர்களை அழிக்க முடியாது என்ற நிலையில் அவர்களின் தொல்நிலங்களிலிருந்து பிற நிலங்களுக்கு அவர்கள் வராதபடி படைகளை நிறுத்தி வைப்பது ஒன்றே அரசரால் செய்யக்கூடுவதாக இருந்தது.

அந்நிலையில்தான் குருக்ஷேத்ரப் போர் தொடங்கியது. அப்போரில் ஜயத்ரதன் வீழ்ந்தார். அவருடைய மைந்தர்களுடன் நான் சிந்துநாட்டில் இருந்தபோது அவருடைய வீழ்ச்சிச் செய்தி எங்களை வந்தடைந்தது. போர் முடிந்து சிந்துவில் அரசருக்கான நீர்க்கடன்களை முடித்த பின்னர் என் முதல் மைந்தனை அரசனாக்கவேண்டும் என அமைச்சர் என்னிடம் சொன்னார். அதுவே ஆற்றவேண்டியது என்ற நிலைமை இருந்தமையால் அதற்கான ஆணைகளை பிறப்பித்தேன். ஆனால் முடிசூட்டுவிழா தொடங்குவதற்கு முன்னர் தொல்குடிகள் அவனை அரசனாக ஏற்க முடியாது என்ற செய்தியை அறிவித்தார்கள். சிந்துநாட்டில் எழும் அந்தச் சடங்குகளுக்கு அவர்கள் தங்கள் ஒப்புதலை அளிக்க முடியாதென்றர்கள்.

அவர்களின் ஆறு காற்றுத்தெய்வங்களின் ஆணையின்றி சிந்துநாட்டில் அதற்கு முன் அரசர்கள் முடிசூட்டிக்கொண்டதில்லை. அவர்களின் பூசகர்களின் ஒப்புதலின்றி நிகழும் முடிசூட்டுவிழா முழுமையானதல்ல என்று அமைச்சர்களும் நிமித்திகர்களும் கூறினார்கள். எவ்வண்ணம் அதை கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் அமைச்சர் சுஃபூதர் என்னிடம் முதலில் முறைப்படி அரசர் முடிசூட்டிக்கொள்ளட்டும், அதன் பிறகு எதிர்ப்புகளை பார்ப்போம் என்றார். ஆகவே சிறிய அளவில் முடிசூட்டுவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்தேன். வேறென்ன எதிர்ப்புகள் நாட்டில் திரண்டு வருகின்றன என உணரத் தவறிவிட்டேன். தொல்குடி ஆதரவை நாடி நின்றதே என்னை ஆற்றலற்றவள் என காட்டிவிட்டது என நான் பிந்தியே அறிந்தேன்.

முடிசூட்டுவிழா அணுகும் நாளில் எங்கள் நாட்டின் வடபகுதியில் ஒரு சிறுநிலத்தை தன்னாட்சி புரிந்துவந்த மறக்குலத்தவனாகிய வஜ்ரபாகு தன் படையுடன் கிளம்பி வந்து நகருக்கு வெளியே தங்கினான். விருஷதர்புரம் அரைப்பாலை புல்வெளிகளால் சூழ்ந்த நகரம். அவன் அங்கே ஒரு இணைநகரம்போல படைகளை நிறுத்தி பாடிவீடுகளை அமைத்தான். சிந்துவின் கால்வாய்களை ஆளும் பன்னிரு மறக்குலத்தவர்களில் ஒருவனாகிய அவன் தானே அரசன் என்று அறிவித்தான். அவனுக்கு தொல்குடிப் பூசகர்களின் ஒப்புதல் இருந்தது. அதை அறிந்ததும் அனைத்து மறக்குடியினரும் அவனை அரசனாக ஏற்றுக்கொண்டனர். அவன் அச்செய்தியை சூதர்களினூடாக நகர் மக்களுக்கு தெரிவித்தான்.

நகர் மக்களிலேயே பலர் அதை திகைப்புடனும் ஏளனத்துடனும்தான் நோக்கினார்கள். ஆனால் நோக்கியிருக்கவே ஓரிரு நாட்களில் அவ்வெண்ணம் மறைந்தது. குடிகளில் பாதிப்பேர் அதுவும் சரியானதே என்று சொல்லத் தொடங்கினார்கள். அரசருக்குப் பணிந்திருந்த குடிகளின் உளமாற்றம் என்னை திகைப்படையச் செய்தது. என்ன இப்படி நிகழ்கிறது என்று அமைச்சரிடம் கேட்டேன். சுஃபூதர் எப்போதுமே ஒரு புதிய கருத்தின்மேல் மக்களுக்கு ஆர்வம் ஏற்படுகிறது அரசி என்றார். இளையோர் புதிய கருத்து என்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள். அது மாற்றம் என்றும், மாற்றங்கள் அனைத்தும் நன்மையே என்றும் நினைப்பார்கள். முதியவர்கள் மாற்றமின்மையை, தொன்மையை ஆதரித்து நிற்பதனால் முதியவர்களுக்கு எதிராகவே புதுமையை நோக்கிச் செல்லும் இளையவர் உருவாகிறார்கள் என்றார்.

சிந்து இப்போது போரில் தோற்று உளம் சோர்ந்திருக்கிறது. அத்தோல்வியிலிருந்தும் சோர்விலிருந்தும் வெளிவருவதற்கு ஒரே வழி முற்றிலும் புதிய ஒருவரை அரசராக்கி, அவர் மேல் நம்பிக்கை கொண்டு, புதிய ஒரு காலகட்டம் எழப்போகிறது என்பதை கனவு காண்பதே என்று அமைச்சர் சொன்னார். படை வல்லமையுடன் எழுந்து எதிர்ப்புகளை அழித்து நம் அரசர் தன் நாட்டை கைப்பற்றுவாரெனில் நன்று. குடிகள் அவரை ஏற்பார்கள். இல்லையெனில் வஜ்ரபாகுவுடன் ஒத்திசைந்து பேசி முடிவு செய்வதே ஒரே வழி என்றார். எனக்கு வேறு வழியில்லை. ஆகவே வஜ்ரபாகுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். அவனிடம் சிந்துநாட்டின் அரசுரிமையை அளித்துவிடும்படியும் அதற்கு கைமாறாக படைத்தலைவர் பதவியை அவனுக்கு அளிப்பதாகவும் பேசினோம்.

அது நாங்கள் செய்த அடுத்த பெரும்பிழை. அது எங்களை மேலும் ஆற்றலற்றவர்களாக காட்டியது. அவனை நாங்கள் பேச்சுக்கு அழைத்ததுமே எங்கள் இயலாமையை புரிந்துகொண்ட வஜ்ரபாகு அதை ஊராருக்கு காட்ட விழைந்தான். பேச்சுக்கு வருவதையே ஒரு பெருநிகழ்வாக மாற்றினான். அது எத்தகைய அரசியல்சூழ்ச்சி என்பது அப்போது தெரியவில்லை. திறந்த பொற்தேரில் தானே உருவாக்கிக்கொண்ட மணிமுடியும் பொற்கவசங்களுமாக அவன் நகருக்குள் நுழைந்தான். அவனுடைய ஏவலரும் ஆதரவாளர்களும் வழி நெடுக நின்று வாழ்த்துரைத்தனர். வீரர்கள் அவன் முன்னும் பின்னும் படைக்கலமேந்தி வந்தனர். அது ஓர் அரசரின் நகர்நுழைவெனத் தோன்றியது. அணிகளும் முடியுமே அரசனை அரசன் எனக் காட்டுகின்றன. அவனைக் காணக் கூடிய மக்கள் அறியாது வாழ்த்துக்குரல் எழுப்பிவிட்டனர்.

விருஷதர்புரத்தில் இருந்து அவனுக்கு அரச முறைப்படி வரவேற்பளிக்கவேண்டும் என்று அவனுடைய அமைச்சராகிய ஸ்ரீமுகர் மீளமீளக் கூறியிருந்தமையால் அவ்வண்ணமே செய்தோம். அதுவும் பெரும்பிழையென்று பின்னரே உணர்ந்தோம். சூதர்களும் மங்கலச்சேடியரும் அவனை எதிர்கொண்டு அழைத்து வந்தனர். அச்செயலினூடாக அவன் தானும் நிகரான அரசனே என்பதை நகர்மக்களின் உள்ளத்தில் நிறுவிவிட்டான். அதுவரை அரசுரிமையை குடிமகன் எதிர்ப்பதா என்ற ஐயத்தால் தயங்கிக் கொண்டிருந்த பலர் அவனும் ஓர் அரசனே என்ற உளநிலையை அடைந்தனர். அவன் அந்தப் பேச்சை பல படிகளாக பல நாட்களுக்கு நீட்டினான். அதனூடாக மக்கள் மேலும் இரண்டாகப் பிரிந்தனர். ஒருபுறம் ஆற்றல்மிக்க புதிய அரசர். இன்னொரு பக்கம் பெண்துணையால் முடிசூடும் முதிரா இளைஞன். முன்பு ஜயத்ரதனின் மூதாதை பிரகதிஷு சிந்துநாட்டை உருவாக்க எழுந்து வந்ததுபோல பிறிதொருவர் தோன்றியிருக்கிறார் என்ற எண்ணத்தை விரைவாக வஜ்ரபாகு உருவாக்கினான். ஒரு கட்டத்தில் விருஷதர்புரத்தின் மக்களில் பெரும்பாலானோர் அவனுடைய ஆதரவாளர் ஆனார்கள்.

அவன் அறுதியாகக் கூறிய இருபுற ஏற்புநிலை என்பது அவன் சிந்துநாட்டின் படைத்தலைவர் பதவிக்கு மாறாக நிகர்அரசன் என்ற பதவியை மட்டுமே ஏற்றுக்கொள்வான் என்பது. அதாவது என் மைந்தன் சிந்துநாட்டின் மணிமுடியைச் சூடி அரியணையில் அமரலாகாது. அவனும் பிறிதொரு சிற்றரசனாக அமைந்து நகரை மட்டும் ஆளலாம். நகருக்கு வெளியிலிருக்கும் நிலம் முழுக்க வஜ்ரபாகுவின் கட்டுப்பாட்டில் இருக்கும். மணிமுடி சூடலாகாதென்பதே பிறிதொரு சூழ்ச்சி. அதையும் நன்குணராமல் ஏற்றுக்கொண்டோம். ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை. அஸ்தினபுரியின் எதிரிகள் நாங்கள் என அங்கே நிறுவப்பட்டுவிட்டிருந்தது.

இரு அரசர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். நகருக்கு வெளியே உள்ள நிலங்களனைத்தும் தன் கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் எஞ்சிய சிந்துநாட்டுப் படைகள் அனைத்தையும் ஒருங்கு திரட்டினான் வஜ்ரபாகு. அதன்பின் மலைக்குடிகளுக்கு ஒரு தூதனுப்பினான். அவர்களின் குடித்தலைவரை கொன்றவர் என் கணவரின் தந்தை என்றும், அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்றும், அது மலைக்குடிகளின் தெய்வங்களால் நிகழ்ந்ததென்றும், தான் அதற்கு மறுநிகர் செய்வதாகவும் சொன்னான். சிந்துநாட்டின் மணிமுடியை தொல்குடிகளில் ஒன்றே ஏற்கவேண்டும் என்றும், அதன்பொருட்டே ஜயத்ரதனின் மைந்தரை தடுத்து வைத்திருப்பதாகவும் சொன்னான்.

“அவர்கள் அப்பசப்புப் பேச்சை நம்பி அவனுக்கு ஆதரவளித்தனர். அவர்களின் ஆதரவுடன் அவன் சிந்துநாட்டின் மீது படையெடுத்து வந்து தலைநகர் விருஷதர்புரத்தை சூழ்ந்துகொண்டான். என் ஏவலரன்றி எவரும் என்னிடம் எஞ்சியிருக்கவில்லை. நான் இயற்றுவதற்கு ஒன்றும் இல்லை. அங்கிருந்து மைந்தருடன் உடனடியாகக் கிளம்பி அகன்று செல்வதொன்றே எனக்கு அவன் அளித்த வாய்ப்பு. அதுவும் எனது அமைச்சர் சென்று மன்றாடி கேட்டுக்கொண்டதன் பொருட்டு” என்றாள் துச்சளை.

“எவ்வகையிலோ எனக்கோ மைந்தருக்கோ தீங்கிழைக்கப்பட்டால் அதை அஸ்தினபுரியின் அரசர் ஒருவேளை தனக்கிழைக்கப்பட்ட சிறுமையென கொள்ளக்கூடும், பிற அரசர்களின் பார்வைக்கு முன் தான் இகழ்ச்சி அடையக்கூடாதென்பதற்காகவேகூட சிந்துநாட்டின் மீது அவர் படையெடுத்து வரக்கூடும் என்று சுஃபூதர் சொன்னபோது வஜ்ரபாகு சற்று அஞ்சினான். எங்களை அஸ்தினபுரிக்கு திருப்பி அனுப்பினால் அஸ்தினபுரியில் எங்களுக்கு எந்த அரசமுறைமையும் அளிக்கப்படாது என்றும் சிறுமை செய்யப்பட்டு ஒரு புறக்கணிக்கப்பட்ட இடத்தில் நானும் என் மைந்தரும் எஞ்சிய வாழ்நாளை கழிக்க நேரும் என்றும் சுஃபூதர் அவனிடம் கூறினார். எங்களை கொன்றால் ஒருவேளை மற்ற மறக்குடியினர் அதை ஏற்காமல் முரண்கொள்ளக்கூடும் என்ற ஐயமும் அவனிடமிருந்தது.”

“திரௌபதிக்கு ஒரு சேடிப்பெண்ணையும் பாண்டவர்களுக்கு இரு ஏவலர்களையும் அனுப்புவதில் உங்களுக்கு என்ன குறை, அது உங்களை பெருந்தன்மையானவராகவே சிந்துநாட்டின் குடிகளிடம் காட்டும் என்று அவர் சொன்னபோது அதை மிகச் சிறந்த அரசசூழ்ச்சியாக வஜ்ரபாகு எண்ணினான். ஆகவேதான் நாங்கள் நகரிலிருந்து கிளம்பிவருவதற்கு ஒப்புதல் அளித்தான். இங்கு இதோ வந்துசேர்ந்திருக்கிறோம். யுதிஷ்டிரனுக்கு கப்பமும் பரிசில்களுமாக இன்னும் இரு நாட்களில் வஜ்ரபாகுவின் அமைச்சர் சுஃபூதர் இங்கே வருவார்” என்று துச்சளை சொன்னாள்.

முந்தைய கட்டுரைசென்னை, ’கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழா
அடுத்த கட்டுரைவிழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி