சிறுகதையின் திருப்பம்

ஓ.ஹென்றி

சிறுகதையின் வழிகள்

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மின்னஞ்சலில் மீண்டும் சந்திக்கிறேன். கன்பெராவில் 2009 இல் சந்தித்ததை முன்னைய எனது மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது ஒரு கேள்வி எழுந்தது – சிறு கதைகள் பற்றியது. சிறுகதையின் இறுதித் திருப்பம் என்பது எனக்கு இன்னும் நன்கு புலப்படாததாகவேயுள்ளது. இந்த இறுதி திருப்பம் என்ற வரைவிலக்கணம் யாரால், எப்போது, ஏன் வரையறுக்கப்பட்டது ?

யதார்த்தமாக நிகழ்ந்த நிகழ்வொன்றை சிறுகதையாய் எழுதினால் இந்த இறுதித் திருப்பமும் யதார்த்தமாய் அமைந்து விடுவதும், ஆனால் வலிந்து இறுதித் திருப்பமொன்றுக்கு இழுத்துச் செல்வது பல வேளைகளிலும் நாடகத் தன்மைக்கு இடட்டு செல்வதாயும் படுகிறது.

சிறுகதைகள் ஒரு முரண் ஒன்றை சுற்றிப் பின்னப்படுவது வழக்கம். இதிலும் திருப்பங்கள் இல்லாது முடியும் கதைகளையும் படித்திருக்கிறேன்.

அன்புடன்

யோகன் – கன்பெரா

***

எட்கார் அல்லன் போ

அன்புள்ள யோகன்,

படத்தில் முகத்தை கண்டபின்னர்தான் மெல்லிய நினைவு. பத்தாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன.

சிறுகதை என்றல்ல, எந்த இலக்கியவடிவத்திற்கு மாறா இலக்கணம் என்று ஒன்று இல்லை, இருந்தால் அதை படைப்பியக்கம் மீறிச்செல்லும். ஆனால் அது உருவாகி வந்த வரலாறு ஒன்று உண்டு. அது ஆற்றும் பணி என ஒன்று உண்டு. அவற்றினூடாக அதன் வடிவம் திரண்டு வந்திருக்கிறது. இன்றை அடைந்திருக்கிறது. வளர்ச்சியடைந்து மாறி நாளை நோக்கிச் செல்கிறது.

கதை என்பது என்றும் இருந்தது. சிறியகதைகள். தேவதைக்கதைகள், நீதிக்கதைகள், உதாரணக்கதைகள், அனுபவக்கதைகள். ஈசாப் குட்டிக்கதைகள், பஞ்சதந்திரக்கதைகள் என பலவகையான உதாரணங்கள். அந்தச் சிறியகதைகளில் நன்கு பழக்கம் கொண்ட வாசகன் அவற்றின் முடிவை ஊகித்துவிடுவான். ஆசிரியனின் நோக்கத்தையும் அறிந்துவிடுவான். ஆகவே கதைமுடிவில் அவன் பெரிதாக உளநகர்வு அடைவதில்லை

செக்கோவ்

அந்நிலையில் அவன் எதிர்பாராத ஒரு திருப்பத்தை அளிக்கையில் அவன் அகம் தூண்டப்படுகிறது. அவன் வியப்பும் திகைப்பும் அடைகிறான். இவ்வாறு எதிர்பாராத திருப்பம் கொண்ட கதையையே சிறுகதை என சிறுகதை முன்னோடிகள் உருவாக்கினர். முதன்மையானவர்கள் எட்கார் ஆல்லன் போ, .ஹென்றி போன்றவர்கள்.

இந்த வடிவத்தை மேலும் கூர்மையாக, வாழ்க்கையின் மெய்யான சிக்கல்களை பேச பயன்படுத்தலாமென கண்டடைந்த சிறுகதை முன்னோடிகள் இருவர். மாப்பஸான், செக்காவ். அவர்கள் வாழ்க்கையின் முரண்பாடுகளைச் சொல்ல மிகச்சிறந்த வடிவம் இது என உணர்ந்தனர். நாம் ஒன்றை நினைப்போம், அது அல்ல வாழ்க்கையின் உண்மை என மீறிச்செல்ல சிறுகதை சிறந்த வடிவம் என அவர்கள் காட்டினர்.

மாப்பஸான்

அதன்பின் நவீன இலக்கியம் பெருவளர்ச்சி கண்டது. சொல்வது அல்ல உணர்த்துவதே இலக்கியம் என்ற புரிதல் உருவாகியது. அதற்குச் சிறுகதை வடிவம் உகந்தது என கண்டடையப்பட்டது. ஒரு வாழ்க்கைச்சூழலை, ஒரு சந்தர்ப்பத்தைச் சொல்லி வாசகன் மேலும் சென்று தானே கற்பனைசெய்ய வைக்க அது வசதியானது.  ‘சொல்லாமல் உணர்த்தும் கதை’ என சிறுகதை வரையறை செய்யப்பட்டது.

சிறுகதையின்   ‘மெய்யான கதை’ இருப்பது அதன் முடிவுக்குப் பின்னர்தான். முடிவிலிருந்து மேலே செல்வதே நல்ல சிறுகதை. முடிவிலிருந்து மேலே செல்ல வாசகனுக்கு உந்துதல் வரவேண்டுமென்றால் முடிவு கூர்மையாக இருக்கவேண்டும். வாசகனை தூக்கி தன் கற்பனையின் உலகில் வீசிவிடும் ஆற்றல் அதற்கு இருக்கவேண்டும். அவ்வாறுதான் சிறுகதையின் முடிவு முக்கியமானதாக ஆகியது

அந்த முடிவு திருப்பமாக இருந்தாகவேண்டும் என்பதில்லை. திருப்பம் இருக்கலாம் [ஜெயகாந்தனின் அக்கினிபிரவேசம்] முத்தாய்ப்பு இருக்கலாம் [சுந்தர ராமசாமியின் ஜன்னல்] கவித்துவமான ஓர் உச்சமாக இருக்கலாம் [வண்ணதாசனின் நிலை] உருவகத்தன்மையாக இருக்கலாம் [அசோகமித்திரனின் புலிக்கலைஞன்] ஆனால் முடிவு வலுவானதாக இருக்கவேண்டும். இதுவே இன்றைய பொது இலக்கணம்

ஆனால் எதிர்பாராத முடிவு என்பது இன்னமும் கூட முக்கியமானதே. அது சிறுகதையின் ‘செவ்வியல் வடிவம்’ அது அளிக்கும் விசையை வேறுமுடிவுகள் அளிப்பதில்லை. செயற்கையாக இல்லாமல் உண்மையான வாழ்க்கைநுட்பம் ஒன்றைநோக்கி அந்த முடிவு திரும்பிக்கொள்ளும் என்றால் அது சிறந்த சிறுகதைதான். அசோகமித்திரனின் பல மகத்தான கதைகள் இறுதித்திருப்பம் கொண்டவைதான்.

இப்படிச் சொல்கிறேன். யதார்த்தமான ஒன்றை எழுதலாம், ஆனால் அது சிறுகதை அல்ல, கதைதான். அதில் நாம் கண்டடையும் ஒன்று, வாசகனுக்கு நம்மால் உணர்த்தப்படும் ஒன்று, இறுதிமுடிச்சாக எழும் என்றால் அது நல்ல சிறுகதை

ஜெ

***

முந்தைய கட்டுரைபிழைப்பொறுக்கிகள் – கடிதம்
அடுத்த கட்டுரைஇருளில், எரிசிதை – கடிதங்கள்