பகுதி ஐந்து : விரிசிறகு – 3
கொம்பொலி எழுந்ததும் சம்வகை வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் கோட்டை முற்றத்தில் அணிவகுத்திருந்தவர்கள் நடுவே ஓர் ஓசையில்லா அசைவு நிகழ்ந்தது. அவள் கைதூக்கியதும் படைவீரர்கள் ஓருடல் என அணிகொண்டு கோட்டை வெளிமுற்றத்தை நோக்கி செல்லத் தொடங்கினார்கள். சம்வகை படிகளினூடாக கீழிறங்கி வந்து பீடத்திலிருந்த தன் தலைக்கவசத்தை எடுத்து அணிந்துகொண்டு புரவியில் ஏறி பெருநடையில் படை அணிவகுப்பின் முகப்பில் சென்றாள். அவளுக்குப் பின்னால் சீரான குறடுகளின் ஒலி படையென்று ஆகியது. பின் அதில் படைக்கலங்களின் கிலுக்கமும் கவசங்களின் உரசலோசையும் இணைந்து ஒழுகும் தாளமென்றாயின.
வெளிமுற்றத்தில் சாய்வெயிலில் அவர்கள் நிரைகொண்டனர். இசைச்சூதர்கள் இடப்புறமும் அணிச்சேடியர் வலப்புறமும் நிற்க நடுவே வேதியர் நின்றனர். அஸ்தினபுரியின் கொடியுடன் ஒரு வீரன் முகப்பில் நின்றான். காற்று கடந்து சென்றது. எல்லா சடங்குகளிலும் இறுதிக் கணம் அமைதியான காத்திருப்பு. அப்போது காற்று மெல்ல வீசுகிறது. சூழல் ஒலிகளென மாறி சுற்றி அமைகிறது. ஒவ்வொருவரும் தன்னந்தனியாக தங்களை உணர்கிறார்கள். எவரோ இரும, எவரோ அசைவொலி எழுப்ப, எவரோ கால்மாற்றிக்கொள்ள, கொடி ஒன்று நுடங்க அந்தக் கணம் நீண்டு நீண்டு செல்கிறது.
சிந்துநாட்டின் கொடிவீரனின் புரவியை நெடுந்தொலைவில் சம்வகை பார்த்தாள். அவர்கள் அருகே நின்றிருந்த கொம்பூதிகள் ஓசையெழுப்பினர். அஸ்தினபுரியின் கொடியுடன் முகப்பில் சென்ற கவசம் அணிந்த வீரன் எதிரில் வந்த சிந்துநாட்டின் கொடிவீரனை அணுகி கொடி தாழ்த்தி தலை வணங்கினான். இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை சுற்றி வலம் இடமாக விலக, தொடர்ந்து வந்த சிந்து நாட்டின் காவல்படையினரை அஸ்தினபுரியின் படையினர் சந்தித்து வேல்களை தாழ்த்தி முறைமைசார்ந்த வரவேற்பளித்தனர். அவர்கள் இருபுறமும் விலக தன் வாளை உருவி தாழ்த்தியபடி சம்வகை முன் சென்று நின்றாள். அவளுக்குப் பின்னால் படையணி படைக்கலம் தாழ்த்தி நின்றது. அது தன் ஓசையின்மையால் இருப்புணர்த்தியது.
துச்சளையின் தேர் தயங்கி நிற்க அதை தொடர்ந்து வந்த புரவியிலிருந்த காவல்வீரன் தேரின் அருகே நெருங்கி வரவேற்பு நிகழ்வதை அறிவித்தான். துச்சளை திரை விலக்கி தேரிலிருந்து இறங்கினாள். முரசுகளும் கொம்புகளும் ஓங்கி ஒலித்தன. அணிச்சேடியர் முன்சென்று மங்கலத் தாலங்களை அவளுக்கு காட்டினர். குரவையொலி எழுப்பி வரவேற்றனர். சூதர்கள் தங்கள் இசைக்கலங்களுடன் இடம் நோக்கி விலக அணிச்சேடியர் வலம் நோக்கி விலக அந்தணர் எழுவர் நிறைகுடங்களுடன் சென்று கங்கை நீர் தெளித்து வேதம் ஓதி அவளை வாழ்த்தினர். வரவேற்புகளைக் கண்டு துச்சளை சற்று திகைத்தவள் போலிருந்தாள். இயல்பான பழக்கத்தால் அவற்றை அவள் எதிர்கொண்டாள். ஆனால் அவள் நெஞ்சின் அதிர்வை முகம் காட்டியது.
சம்வகை அச்சடங்குகளை எங்கிருந்தோ என நோக்கிக்கொண்டிருந்தாள். அத்தருணத்தில் அவ்வாறு பலவாக பிரிந்துவிடுவதை அவளால் தடுக்கமுடியவில்லை. போர்க்களத்தில் அவ்வாறு பலவாகப் பிரிந்து போரிடுவதையே எங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருப்பார்கள் என அவள் கேட்டிருந்தாள். அவள் விழிகளைத் தாழ்த்தி துச்சளையை நோக்கினாள். அவளுடைய பாதங்கள் அத்தனை சிறிதாக இருப்பதைத்தான் சம்வகை வியப்புடன் பார்த்தாள். ஒப்பிடுகையில் தனது பாதங்கள் அதைவிட மும்மடங்கு பெரியவை என்று தோன்றியது. இளமையிலேயே பெரிய கால்களைக் கொண்டவள் என்று அவளைப்பற்றி கூறுவார்கள். பெண்களுக்கு சிறிய கால் அழகென்று அவள் அன்னை கூறுவதுண்டு. பெரிய கால்கள் நடக்கையில் ஓசை எழுப்புவன. பெண்கள் ஓசையெழாது நடக்கவேண்டும். இல்லத்தில் ஓசையெழுப்பி நடப்பவள் அங்குள்ள ஆண்களுக்கும் மூதாதையருக்கும் அறைகூவல் விடுப்பவள்.
பெரிய கால்கள் கொண்டிருந்தமையால் இளமையில் அவளுக்கு கணையாழியோ சிலம்புகளோ அணிவிக்கப்பட்டதில்லை. பெரும்பாலான பொழுதுகளில் அவள் தன் ஆடையை பாதங்கள் முற்றும் மூடும்படி அணிந்திருந்தாள். காவல்பணிக்கு வந்த பிறகு பாதங்களின்மேல் எப்போதும் குறடுகளை அணிந்தாள். குறடுகளுடன் சேர்ந்து அவள் பாதங்கள் மேலும் பெரிதாயின. ஆனால் அவை பெரிய குறடுகள் என்றே தோன்றின. காவல் பணிக்கு வந்த பிறகு தன் பெரிய கால்களைப்பற்றி அவளுக்கு பெருமிதமே எழுந்தது. நடக்கையில் எழும் ஓசை அவளுக்கு பிடித்திருந்தது. மண்ணிலும் பலகையிலும் நடப்பதற்கு வாய்ப்பிருந்தால் ஓசையெழும் பொருட்டு அவள் பலகையிலேயே நடந்தாள்.
தன் கைகளும் பெரியவை என்று அவள் உணர்ந்திருந்தாள். விரல்கள் நீண்டிருப்பது பெண்டிருக்கு அழகு. ஆனால் அகக்கை அகலம் கொண்டிருக்கக் கூடாது என்று ஒருமுறை அவள் கை பார்த்து குறியுரைத்த விறலி கூறினாள். “உங்களுடைய இவ்விரல்களால் நீங்கள் யாழ் மீட்ட இயலாது. முரசு வேண்டுமானால் அறையலாம்” என்று சொல்ல கூடியிருந்த பெண்கள் வாய்பொத்தி நகைத்தனர். அவள் சீற்றமடைந்தாள். சுபத்திரையின் கைகளும் கால்களும் பெரியவை என்பதை அவள் முன்னர் கண்டிருந்தாள். சுபத்திரையின் தோள்களும் அவள் தோள்கள்போல பெரியவை.
“நான் யாதவ அரசியைப்போல” என்று அவள் சொல்ல “எனில் சென்று கதை பழகுங்கள்” என்று விறலி சொன்னாள். அவள் “ஆம், கதை பழகத்தான் போகிறேன் ஒருநாள்” என்றாள். “இந்நிலத்தில் நான்காம் குலத்தவர் படைக்கலம் பயிலும் ஒரு காலம் வந்தால் உங்களுக்கு ஒரு கதை அளிக்கப்படும்” என்று விறலி சொன்னாள். “அவ்வண்ணம் ஒருகாலம் வருமா என்ன?” என்று ஒருத்தி கேட்க “அத்தகைய பொழுதொன்று எழுகிறதென்று எங்கள் குடிப்பூசகர்கள் இரண்டு தலைமுறையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் விறலி. “நான் கதை கைக்கொள்வேன்” என்றாள் சம்வகை.
துச்சளை அணுகிவர சம்வகை நான்கு அடி முன்னால் சென்று வாளை உருவி தலை தாழ்த்தி முழங்கால் வளைத்து வணங்கி வாழ்த்துரை கூவினாள். “சிந்துநாட்டின் அரசியை அஸ்தினபுரி வரவேற்கிறது. அமுதகலக் கொடி தழைந்து பணிகிறது. இத்தருணத்தை இந்நகரை அமைத்த தெய்வங்களும் மூதாதையரும் வாழ்த்துக! குடிகள் வணங்குக! இக்கணம் தெய்வங்களுக்குரியதாகுக!” துச்சளை முகம் மலர்ந்தாள். உடனே விழிகள் கசிய நோக்கு தழைத்து “நன்று! அனைவரையும் வணங்குகிறேன்” என்று தழைந்த குரலில் சொன்னாள். “தேரில் ஏறிக்கொள்ளுங்கள், அரசி” என்று சம்வகை கூறினாள்.
துச்சளை அவள் தோளில் கைவைத்து “நீ அருகே வரும் வரை உன்னை ஆணென்றே நினைத்தேன். உன் குரல் பெண்ணென்று காட்டியது” என்றாள். “காவலர்தலைவியாகிய என் பெயர் சம்வகை” என்றாள் சம்வகை. “ஆம், உன்னைப்பற்றி கேட்டிருக்கிறேன். இக்கோட்டையை நீதான் ஆள்கிறாய் என்றார்கள். நன்று, பெண்கோன்மை அஸ்தினபுரிக்கு வரும் என்று எண்ணியிருந்ததில்லை. வந்தது சிறப்பு” என்றாள் துச்சளை. சம்வகை தலைவணங்கினாள். துச்சளை தேரை திரும்பி நோக்கி “செல்வோம்” என்றாள். அவள் அந்தச் சிறு பொழுதுக்குள்ளாகவே களைப்படைந்துவிட்டிருந்தாள். மேலுதட்டிலும் மூக்குநுனியிலும் வியர்வை பூத்திருந்தது.
சம்வகை அவளுடைய தோற்றத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருந்தாள். திரண்ட பெரும்தோள்களும், பருத்த உடலும், உருண்ட முகமும், சிறு உதடுகளும் கொண்டிருந்தாள். எவ்வகையிலும் அழகென்று கூற முடியாத தோற்றம். ஆனால் அவள் கண்களிலும் புன்னகையிலும் உளம் கவரும் கனிவொன்றிருந்தது. அது வட்ட முகங்களுக்கே உரியது என்று தோன்றியது. சிறிய உதடுகள், எப்போதும் சிரிப்பில் கூர்கொள்ளத்தக்க சிறிய விழிகள், சிறிய மூக்கு, சிறிய காதுமடல்கள், கொழுவிய கன்னங்கள், செறிந்த கழுத்து.
அவள் கைகளும் மிகச் சிறியவை என்று சம்வகை கண்டாள். அவை மெல்லிய ஈரத்துடன் இருந்தன. அவள் சம்வகையின் தோள் மேல் வைத்த கையை விலக்கவில்லை. தேரில் ஏறிக்கொண்டபோது அவள் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை சம்வகை உணர்ந்தாள். அது உடலில் ஆற்றலில்லாமையின் நடுக்கம். அவள் முறையாக உணவுண்டு, துயின்று நெடுநாட்கள் ஆகியிருக்கலாம். அவள் கண்கள் தளர்ந்து இமைகள் தொய்ந்திருந்தன. கரிய உடலில்கூட வெளிறல் தெரிந்தது. தேரின் தூணை அவள் இடக்கையால் பற்றிக்கொண்டு நின்றாள். வெயில் அவள் முகத்தை சுருங்க வைத்தது.
அவளைப்போல் எவரையோ எங்கோ பார்த்திருக்கிறோம் என்னும் எண்ணம் ஏற்பட்டது. அவளிடமிருந்த சாயல் திருதராஷ்டிர மாமன்னருடையது என்பார்கள். அவள் துச்சளையை பலமுறை அவைகளில் பார்த்திருக்கிறாள். அப்போதும் அதுவே தோன்றியது. ஆனால் அப்போது துச்சளையிடம் இருந்தது காந்தாரியின் சாயல் என்று தோன்றியது. அவளுருவில் அவர்கள் இருவரும் நகர்புகுந்துவிட்டனர் என்னும் எண்ணம் எழுந்தபோது சம்வகை மெய்ப்பு கொண்டாள். உடனே அவள் உருவம் என்ன என்றும் தோன்றியது. சாங்கியப் படையலின்போது வெல்லம் கலந்த அரிசி மாவில் முதலன்னை வடிவைச் செய்து படைப்பதுண்டு. அவ்வுரு அவளுடையது.
“என் மைந்தர் பின்னால் தேர்களில் வருகிறார்கள்” என்று துச்சளை சொன்னாள். “ஆம், அவர்களுக்கும் உரிய வரவேற்பு அளிக்கப்படும். அவர்கள் சிந்துநாட்டு இளவரசர்களாக கொள்ளப்படுவார்கள். கோட்டைக்காவலர்தலைவியால் எதிர்கொண்டு அழைக்கப்படுவார்கள்” என்றாள் சம்வகை. துச்சளை “இங்கே இவ்வகை வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை” என்றாள். “இது அரசியருக்குரிய முறைமை” என்றாள் சம்வகை. “நான் இப்போது சிந்துநாட்டு அரசியல்ல” என்றாள் துச்சளை. “அஸ்தினபுரி தங்களை அரசி என்றே ஏற்கிறது” என்றாள் சம்வகை.
மெல்லிய தவிப்புடன் “ஆனால் இந்நகரின் முறைமைகள்…” என துச்சளை தொடங்க சம்வகை மறித்து “புகுந்த வீட்டு உறவு ஊழின் தெரிவு. அது ஊழுக்கேற்ப மாறவும் கூடும். பிறந்த வீட்டில் பெண்ணின் இடம் பிறந்தமையாலேயே உருவாகிவிடுகிறது. அது தெய்வத் தெரிவு. அதை எவரும் மாற்றமுடியாது என்று கிருஹ்யகாரிகை சொல்கிறது, அரசி” என்றாள். துச்சளை மெல்லிய ஓசையெழச் சிரித்து “உனக்கு பேசத் தெரிந்திருக்கிறது, உன் அரசருக்குத் தேவை நூல்கோள் என அறிந்திருக்கிறாய்” என்றபின் தேரிலேறி பீடத்தில் அமர்ந்தாள்.
தேர் கோட்டைக்குள் நுழைந்தபோது இருபுறமும் கூடியிருந்த மக்கள் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் படைகளால் அனைத்து ஊர்களில் இருந்தும் திரட்டப்பட்டவர்கள். வாழ்த்தொலி எழுப்புவது எப்படி என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் எவரும் அதற்கு முன் துச்சளையை பார்த்திருக்கவில்லை. உண்மையில் அவள் எவ்வகையில் ஒரு பொருட்டென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே ஒரு விளையாட்டுபோல வாழ்த்தொலிகளை கூவினார்கள். சிரித்தபடி தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் தூக்கி வீசி உரக்கக் கூவி கொப்பளித்தனர்.
வாழ்த்தொலிகளினூடாக சென்றுகொண்டிருந்தபோது துச்சளை உளம் வருந்தக்கூடுமோ என்று சம்வகை எண்ணினாள். கணவனை இழந்த பின் முதல் முறையாக தன் பிறந்தகத்துக்குள் நுழைகிறாள். அவள் உள்ளம் துயருற்றிருக்கும்போது வெளியே என்ன ஏது என்று அறியாது இத்திரள் இவ்வாறு கொந்தளித்துக்கொண்டிருப்பது அவளை ஏளனம் செய்வதுபோல் பொருள்படக்கூடுமோ? ஆனால் ஒருவகையில் அது ஆறுதலாகவும் இருக்கும் என்று தோன்றியது. அங்கிருந்து அவள் செல்கையில் விட்டுச்சென்ற அனைத்தும் அவ்வண்ணமே நீடிக்கின்றன என்பதுபோல. பின்னடி வைத்து இறந்தகாலத்திற்கு திரும்பிவிட முடியும் என்னும் நம்பிக்கையே பெண்களை பிறந்தவீடு நோக்கி வரவழைக்கிறது என்று அவள் அன்னை அடிக்கடி சொல்வதுண்டு. அவள் அஸ்தினபுரிக்குள் நுழைந்து ஒவ்வொரு அடிக்கும் தன் அகவையை இழந்துகொண்டே செல்வாள். அரண்மனையை அடைகையில் அங்கு சிறுமியாக மாறிவிட்டிருக்கக்கூடும்.
அஸ்தினபுரியில் அப்போது அரசியரென எவரும் இருக்கவில்லை. ஒவ்வொரு ஊரிலிருந்தும் அரசியரை அழைத்து வருவதற்காக அமைச்சர்கள் தூது சென்றிருந்தார்கள். சிபிநாட்டிலிருந்து தேவிகை கிளம்பிவிட்டதாக செய்தி வந்திருந்தது. மத்ரநாட்டிலிருந்து விஜயை அன்று காலை கிளம்புகிறாள். துவாரகையிலிருந்து சுபத்திரை வர மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. திரௌபதி வந்துகொண்டிருக்கிறாள், மறுநாள் காலை அஸ்தினபுரியை வந்தடைவாள் என்றார்கள். அவர்கள் வந்து சேரும்போது அவர்கள் விட்டுச்சென்ற நகர் அல்ல என்பதை காண்பார்கள். அப்புது நகர் அவர்களுக்கு திகைப்பளிக்கும். ஆனால் விந்தையானதொரு ஆறுதலையும் அளிக்கக்கூடும். அது அவர்களை பழைய நினைவுகளிலிருந்து காக்கும். ஊர் திரும்பும் ஆறுதலையும், பழைய நினைவுகளின் எடை இல்லாத விடுதலையையும் ஒருங்கே அடையமுடியும்.
அரண்மனையில் துச்சளையை வரவேற்க மங்கலச்சேடியரும் இசைச்சூதர்களும் நின்றனர். சுரேசர் முற்றத்து முகப்பில் தோளில் சுற்றப்பட்ட பட்டுச் சால்வையுடன் நின்றார். தேர் வந்து நின்றதும் இசைச்சூதர்கள் முழக்கமிட, மங்கலச்சேடியர் தாலங்களுடன் முன்னால் வந்து வரவேற்றனர். அவள் தேரிலிருந்து இறங்கியதும் சுரேசர் அணுகி வணங்கி நற்சொல்லுரைத்து வரவேற்றார். துச்சளையின் முகம் மலர்ந்திருப்பதை சம்வகை கண்டாள். ஆனால் களைப்பில் நிற்க முடியாமல் அவள் தேரின் தளத்தை சற்று பற்றிக்கொண்டாள். நெஞ்சு விம்ம அண்ணாந்து அஸ்தினபுரியின் கோட்டையை பார்த்தாள். அவள் முகம் அழுகையில் உடைவதற்கு முந்தைய கணம் என, நீர்த்துளி காற்றில் உலைவது என, விம்மி நெளிவுகொண்டது.
அரண்மனையின் முகப்பு புதிய அரக்கும் மெழுகும் பூசப்பட்டு அன்று கட்டியதுபோல் மாறியிருந்தது. அனைத்துச் சாளரங்களிலும் பீதர்நாட்டு ஆடிகள் பதிக்கப்பட்டு பலநூறு நீர்ப்பரப்புகள் என வானையும் முற்றத்தையும் தெருக்களையும் நெளித்து அலையளித்துக் காட்டின. தூண்கள் வெண்சுண்ணப் பூச்சில் பளிங்கென நின்றன. துச்சளை “இவ்வரண்மனை நோக்கு கொண்டுவிட்டது” என்றாள். சுரேசர் “அரசரின் ஆணை” என்றார். “முன்பு இது விழியற்று இருந்தது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்” என்றபின் திரும்பி “எங்கே அந்தப் பெண்?” என்றாள்.
சம்வகை தலைக்கவசத்தை எடுத்து “இங்கிருக்கிறேன், அரசி” என்றாள். துச்சளை “இவளை நான் விரும்புகிறேன். இன்று காலை இவளை சந்திக்கும்வரை என் உள்ளம் துயரிலும் நம்பிக்கையின்மையிலும் மூழ்கியிருந்தது. இங்கு மீள்வது சரியா என்றே குழம்பிக்கொண்டிருந்தேன். திரும்பிவிடலாம் என்றுகூட எண்ணியிருந்தேன். இவள் நடந்து வந்து வாள்தாழ்த்தி என்னை வரவேற்றபோது ஒருகணம் என் மூத்தவரே வருவதுபோல் உணர்ந்தேன். இவளுக்கும் அவருக்கும் எந்த உடலொற்றுமையும் இல்லை. எவ்வண்ணம் மூத்தவரென்று நினைத்தேன் என்பதுகூட எனக்கு வியப்பாக உள்ளது” என்றாள்.
சுரேசர் புன்னகைத்து “அவள் அணிந்திருப்பது உங்கள் மூத்தவருக்கு உகந்த பெருங்கவசத்தை” என்றார். துச்சளை மூச்சொலி எழுப்பி “ஆம், மெய்!” என்றாள். “இது வஜ்ரதந்தரின் கவசம். அவர் என் தமையனை தோற்றத்திலும் அசைவிலும் பின்பற்றுபவர். நான் கண்டது அவரை, அவராகி வந்த என் தமையனை” என்றாள். பற்கள் தெரிய சிரித்தபோது தான் கண்டவர்களிலேயே பேரழகியாக அவள் மாறுவதுபோல் துச்சளைக்குத் தோன்றியது. “என் மைந்தர்களை சிந்துநாட்டிலிருந்து கிளம்பிய பின் நான் பார்க்கவே இல்லை. அவர்கள் எவ்வண்ணம் உணர்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பயணம் அவர்களை ஆறுதல்படுத்தும் என எண்ணினேன். என் துயர் அவர்களை அடையவேண்டாம் என்று எண்ணி அகன்றேன்” என்றாள். சுரேசர் “இது அவர்களின் நிலம்” என்று மட்டும் சொன்னார்.
மைந்தர்கள் வந்த தேர் அணுகியபோது இசைக்கலங்களும் வாழ்த்தொலிகளும் முழங்கின. தேரைத் திறந்து துச்சளையின் மைந்தர்கள் சுரதனும் சுகதனும் வெளிவந்தனர். அரச ஆடை அணிந்திருந்தாலும் நெடும்பயணத்தாலும் துயிலின்மையாலும் களைத்து அவர்கள் நிற்க தள்ளாடினார்கள். காலையொளியில் கண்கள் கூச கைகளால் மறைத்துக்கொண்டார்கள். சுகதன் தன் மூத்தவனைவிட உயரமானவன், ஆனால் அவன் உடலசைவு சிறுவர்களுக்குரியதாக இருந்தது. அவன் “இதுதான் அரண்மனையா?” என்றான்.
சம்வகை அவர்கள் இருவரையும் கூர்ந்து நோக்கினாள். இருவரும் இருவகை இயல்பினர் என்று தெரிந்தது. சுரதன் இறுக்கமானவனாக, அகத்தனிமை கொண்டவனாக தோன்றினான். அவன் ஜயத்ரதனின் சாயல்கொண்டவனாக இருக்கலாம். மெல்லிய நீண்ட உடல் கொண்டவன். யவனர்களுக்கு நிகரான வெண்ணிறம். நீள்முகம். சிவந்த செவிகள். சிவந்த வெட்டுப்புண் போன்ற உதடுகள். எச்சரிக்கை கொண்ட விழிகள். இளையவனாகிய சுகதன் அன்னையைப் போலிருந்தான். கரியவன், பெரிய தோள்களும் பருத்த உடலும் கொண்டவன். அவன் மண்மறைந்த கௌரவ மைந்தர்களில் ஒருவன் எனத் தோன்றினான். சிரிக்கும் விழிகள் ஒவ்வொன்றையும் தொட்டுத்தொட்டு வியந்தன.
சுரேசர் சென்று அவர்களை தலைவணங்கி முகமன் உரைத்து வரவேற்றார். “சிந்துநாட்டு இளவரசர்களுக்கு அஸ்தினபுரியின் நல்வரவு. விஷ்ணு, பிரம்மன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், பிரகதிஷு, பிரகத்ரதன், பிருஹத்காயன் எனத் தொடரும் கொடிவழி சிறப்புறுக! பிருகத்காயரின் மைந்தர் ஜயத்ரதன் விண் நிறைந்து வாழ்த்துக! ஜயத்ரதனின் மைந்தர்கள் சுரதனும் சுகதனும் பெரும்புகழ்கொண்டு நிலம்புரந்து கோல்பெருகி புகழ்நிறைக! ஆம், அவ்வாறே ஆகுக!”
அவர்களை அந்த வாழ்த்தொலி உணர்வுநிலை பிறழச் செய்தது. முகம் கலங்க, என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றனர். சுகதன் அன்னையை நோக்க சுரதன் வெறுமனே தலைகுனிந்து நின்றான். அச்சூழலை கடக்கும்பொருட்டு மெல்லிய புன்னகையுடன் “அவர்கள் நினைவறிந்த பின்னர் இப்போதுதான் இங்கு வருகிறார்கள்” என்று துச்சளை சொன்னாள். “கதைகளினூடாக அவர்கள் பார்த்த அஸ்தினபுரி பிறிதொன்றாக இருக்கும். இந்நகரை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.” இளைய மைந்தன் சுகதன் அவள் அருகே வந்து “எத்தனை பெரிய அரண்மனை! மேலே நீர்ச்சுனைகள்! நான் இதைத்தான் எண்ணினேன்! இப்படித்தான் இது இருக்கும் என்று எண்ணினேன்!” என்றான்.
“அவை நீர்ச்சுனைகள் அல்ல, இளவரசே. பீதர்நாட்டு ஆடிகள். மேலே சென்றால் அவற்றில் உங்கள் முகத்தை பார்க்கமுடியும்” என்றார் சுரேசர். “உங்கள் முழு உடலையே பார்க்க முடியும். நீர்ச்சுனைப்பாவைபோல.” சுகதன் “ஆடிகளா? அத்தனை பெரிய ஆடிகளா?” என்று வியப்புடன் சொன்னான். “நான் இப்போதே மேலே செல்லவேண்டும்…” என்றான். மூத்தவன் சுரதன் “வரும்வழிதோறும் பார்த்தேன், அனைத்து மாளிகைகளிலும் ஆடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மாளிகைகள் தங்கள்மேல் சுனைகளைச் சூடியிருப்பதாகவே தோன்றியது” என்றான். “இதை நாம் அங்கு நம் நகரிலும் அமைக்கவேண்டும்” என்றான் சுகதன். சுரதனின் முகம் மாறியது. “ம்” என்று அவன் சொன்னான்.
“இளவரசர்கள் வருக!” என்று சுரேசர் அவர்களை அழைத்துச் சென்றார். “தங்கள் அறை அவ்வண்ணமே பேணப்படுகிறது, அரசி. மைந்தர்களுக்கு அருகிலேயே புஷ்பகோஷ்டத்தில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று சற்று ஓய்வெடுங்கள். அரசர் தங்களை உச்சிப்பொழுதுக்கு மேல் தன் தனி அவையில் சந்திப்பார்” என்றார். துச்சளை “ஆம், நான் களைத்திருக்கிறேன். உள்ளத்தாலும்” என்றாள். புன்னகையுடன் சம்வகையை நோக்கி “இன்று நான் சற்று துயில்கொள்ளக்கூடும்” என்றாள்.
சுரேசர் “நாளை புலரியில் பேரரசி திரௌபதி நகர்நுழைகிறார். பிற அரசியர் ஓரிரு நாட்களில் இங்கு வருகிறார்கள். நாளை அந்தியில் இளவரசர் சகதேவன் தன் வேள்விப் பரியுடன் நகர் மீள்வார். ஐந்தாறு நாட்களுக்குள் பிற மூவரும் வந்துவிடுவார்கள். அவர்கள் வந்த பின்னர் முறைப்படி ராஜசூயம் அறிவிக்கப்படும்” என்றார். “இந்நகர் இழந்த அனைத்தையும் பன்மடங்காக மீட்டுக்கொண்டிருக்கிறது, அரசி. இங்கு முன்பு உகக்காதவை பல நடந்தன. அவையனைத்தையும் மறந்து அகல்க! இது மீண்டெழுவதற்கான தருணம்.” துச்சளை “ஆம், அவ்வாறு எண்ணியே நானும் வந்தேன்” என்று சொன்னாள். சுரேசர் தலைவணங்கினார்.
ஏவலர்கள் துச்சளையை அழைத்துச் செல்ல அவள் ஓரிரு அடி வைத்தபின் நின்று சம்வகையிடம் “நீ என் அறைக்கு வந்து பார். உன்னிடம் பேசவேண்டும் போலிருக்கிறது” என்றாள். “ஆணை” என சம்வகை தலைவணங்கினாள்.