ஜெயமோகன் அவர்களுக்கு
மீண்டும் ஒரு இலக்கிய திருவிழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது ஆம் கே.ஜி சங்கரப்பிள்ளை அவர்கள் மேடையில் சொன்னபோதுதான் நானும் உணர்ந்தேன் இது பெரும் திருவிழா என்று , இருநாட்கள் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் வேலை நாளான வெள்ளிக்கிழமை 250 பேருக்கு மேல் கலந்து கொண்டது ஆச்சர்யம். இரண்டாம் நாள் சனிக்கிழமை கூட்டம் இன்னும் அதிகமாயிற்று அனைவருக்கும் மொத்தம் 6 வேளைக்கு மேல் உணவும் இரு நாட்கள் தங்குமிடமும் (சிலர் மூன்று நாள் தங்கி இருந்தனர் ) இறுதியாக விருது விழா என இவை அனைத்தும் மிகச் சிறப்பாக எந்த பிசிறின்றி நடத்தித் தந்த விழாக்குழுவினர் ஆச்சரியப்பட வைத்தனர் விழாக்குழுவினர் துயிலின்றி, அனைவரும் உண்ட பின்பே உண்ண சென்றதையும் கண்டேன்.
வரும் ஆண்டில் இந்த திருவிழாவை சர்வதேச அளவில் நடத்த வேண்டும் என்ற உங்கள் பெருங்கனவை உங்கள் நண்பர்கள் சாத்தியப்படுத்துவார்கள் என்பதில் எனக்கு ஐயம் ஏதுமில்லை. இவை அனைத்தும் மிக சிறப்பாக நடந்ததற்கு நிதி ஒரு முக்கிய காரணம். வள்ளுவர் சொன்னதுபோல பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை. உலகம் முழுவதும் இருந்து நிதி அனுப்பித் தந்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் விழாக்குழுவினர் சார்பாகவும் ,ஜெயமோகன் அவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஷாகுல் ஹமீது ,
நாகர்கோவில்.
***
பின்குறிப்பு விழா நாயகன் ஹபிபுல்லா அவர்கள் தனது ஏற்புரையில் இந்த விஷ்ணுபுரம் வாசகர் வட்ட குழுவில் தலைவன்,செயலாளர்,பொருளாளர் என எவரும் இல்லை உணர்வு மட்டுமே உள்ளது என்றார்
அன்புள்ள ஜெ
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவின் ஹைலைட் ஸ்வேதா சண்முகம்தான். கடிதங்களில் அவரைச் சொல்கிறார்களா என்று கவனித்தபின்னர் இதை எழுதுகிறேன். அவருடைய கன்னிப்பேச்சு. மிக இளம் வயதாக இருந்தாலும் தைரியமாக தன் கருத்தை சொன்னார்கள். பொதுவாக இப்படி இளம் வாசகிகள் பேசவரும்போதும் ரொம்பவும் இறங்கிப்போய் பேசுவார்கள். அல்லது ரொம்பவும் எகிறுவார்கள். இரண்டுமில்லாமல் மிக மென்மையாக அமைதியாக தன் கருத்தைச் சொன்னார்கள். அக்கருத்தும் கூட மிக அசலானதாக இருந்தது. தான் சொல்ல வந்ததை ஒரு நல்ல இமேஜ் வழியாகச் சொல்லவும் அவரால் முடிந்தது. அந்த ஆசிரிய மாணவர் அலிகரி அபி கவிதைகளுக்கு மிகச்சரியான ஒரு உவமை.
இளம் புயலுக்கு என் பாராட்டுக்கள்
நான் விழாவில் பங்கெடுக்கவில்லை. ஆனாலும் உரைகள் பங்கெடுத்த உணர்வை உருவாக்கின
கதிர் செல்வக்குமார்.
***