என்னை ஆளாக்கிய விசைகளில் தலையாயது மதுரை என்ற நகரம். பதினான்கு வயது முதல் இருபத்தோரு வயது வரை இந்த நகருக்குள் ஒரு பெண் குழந்தைக்கு எந்தளவுக்கு சாத்தியமாகுமோ அந்தளவுக்கு அலைந்து திரிந்திருக்கிறேன். தெய்வச்சிலைக்கெதிராக பொறிக்கப்பட்டு தினம்தினம் அதன் முகத்தை ஏந்தும் கண்ணாடியில் நம்முடைய முகத்தைக் காணும்போது ஏற்படும் துணுக்குரலை இந்த நகரத்தினுள் அமிழும் தோறும் என் தன்னிலையாக உணர்ந்திருக்கிறேன். மதுரை வரலாற்றாழமும் பண்பாட்டாழமும் உடைய தொன்மையான ஊர். காலாதீதத்தின் ஆழத்தை, அழுத்தத்தை உணராமல் இந்நகருக்குள் சற்றேனும் உணர்வுண்ட ஒருவரால் உலவி வர முடியாது.
அதே சமயத்தில் இதன் ஆன்மா அழகால், பூரிப்பால், கொண்டாட்டங்களால் நிறைந்தது. சர்வமங்களமும் பொருந்தியது. “கனி! கனி!” என்று கணந்தோறும் பாசத்தோடு அழைப்பது. கோயில்களில், கடைவீதிகளில், பேருந்து நிலையங்களில், உணவகங்களில் பேருவகையுடன் பொங்குவது. இந்நகரின் ஆன்மாவை ஒருநாளும் பிரியாமல் உள்ளுக்குள்ளே பொத்திவைத்து உலகமெல்லாம் சுற்றி வந்திருக்கிறேன். வாழ்க்கைத் தருணங்களிலெல்லாம் மீட்டெடுத்து அதன் கதகதப்பில் குளிர் காய்ந்திருக்கிறேன். அதன் பெருமதியாகவே எழுதுகிறேன்.
இந்தத்தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளிலும் இந்த அம்சமே பல்கிப்பெருகி வெளிப்படுவதாக நினைக்கிறேன். பதின்பருவம் முதல் எழுதியவற்றை இப்போது எடுத்து நோக்கும்போது இக்கதைகளின் தொடக்க வடிவங்களாகவே அவை தென்படுகின்றன. ‘என்’ கதைகளை சரியாகச் சொல்வது எப்படி என்ற தேடலில்தான் இத்தனை நாட்கள் இருந்திருப்பதாக இப்போது படுகிறது. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுத முயன்று, என் தேடலின் வெளிப்பாட்டுக்கு அந்த மொழி போதாமல், ஒரு இடைவெளிக்குப்பின் தமிழ் இலக்கிய மரபைக் கற்று அதன்வழியே இக்கதைகளை அடைந்திருக்கிறேன். இவை தொடக்க முயற்சிகள். என் கேள்விகளில் சிலவற்றுக்குள் செல்ல முயலும் ஆரம்பக்கட்ட பிரயத்தனங்கள். கதைவடிவையும் வெளிப்பாட்டு மொழியையும் இன்னும் பயின்றுகொண்டுதான் இருக்கிறேன்.செல்ல நெடுந்தூரம்.
கல்லூரி காலத்தில் நான் நிறைய வாசித்த இடங்களில் ஒன்று மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக்குளத்துப் படிக்கட்டுகள். கோபுரங்கள் சூழ காற்றாட அமர்ந்து ஓதுவார் இசைக்கும் வண்ணமாகப் பொங்கும் மானுடத்திரளுக்கும் மத்தியில் ஒரு புத்தகத்தினுள் முற்றிலும் அமிழ்ந்திருப்பது ஒரு தனி அனுபவம். அப்போது அந்த குளத்தின் தொன்மம் தெரியாது. சங்கப்புலவர்களை பற்றியும் அவர்கள் மிதந்து வென்ற பலகையைப் பற்றியும் தெரியாது.
இன்று தமிழிலக்கியமும் உலக இலக்கியமும் ஆழ்ந்து வாசிக்கையில் அந்த மரபின் அரவணைப்பில்தான் என்றும் இருந்திருப்பதாக உணர்கிறேன். என் மொழியின் மரபு மட்டும்மல்லாது, மானுடத்தின் அகம் இந்தப் பிரபஞ்ச வெளியை அர்த்தப்படுத்த கதைகளை உருவாக்கும் பெருமரபில் என் இருப்பை உணர்கிறேன். அறமும் மறமும் ரௌத்திரமும், அருளும் கனிவும் மானுடமும், தவமும் அழகும் பேரிருப்பும், எல்லாம் வந்தது கதை வழியே.
எல்லா இலக்கிய மரபுகளும் காலந்தோறும் ‘கதை’என்ற மாயவொளிப் பொருந்திய அருமணியை உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டிருக்கின்றன. எல்லா மரபுகளுக்கடியிலும் கதைகளை பொறுமையாகக் கேட்டு அதன் பெருமதியை அளக்கும் ரசனையுள்ளம் ஒன்று உள்ளது. எல்லாக் கதைகளையுமே பொற்றாமரை கேட்டுக்கொண்டிருக்கிறாள். தான் அங்கீகரிக்கும் கதைகளின் ஒளிபூண்டு மிளிர்கிறாள்.
பொற்றாமரை பெருத்த ரசனைக்காரி. நிறைய எதிர்பார்ப்பவள். வாழ்நாளில் அவள் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு கதையாவது நிகழ்த்திவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கியிருக்கிறேன். நடக்கட்டும்.
சுசித்ரா
பாசல், சுவிட்சர்லாந்து / திருநகர், மதுரை