ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

1998 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத பின்மதியத்தில் நடந்த நீண்ட உரையாடல் ஒன்றின் முடிவில் நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரியின் முதுநிலை தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் திரு.சிவராஜன் அவர்கள் என்னிடம் சொன்னார் – “நீ ஒரு சிறந்த பயிற்றுனராக வர முடியும் என நம்புகிறேன்”. முதுநிலை மாணவனாக அதற்கு முந்தைய நொடி வரை நான் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறேன் என்பது குறித்த எண்ணம் ஏதும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த நொடியிலிருந்து இருபது ஆண்டுகளைத் தாண்டிய இந்த நொடி வரை நான் பயிற்றுனராகவே இருக்கிறேன். நேர்கூற்றாகவே பயிற்சிகளை நடத்துவதில், உரையாடல் வடிவில் பயிற்சிகளை நடத்துவதில் இயல்பான மகிழ்வைக் கொண்டிருந்தபோதும் பயிற்சிகளைக் குறித்து சிறுகுறிப்புகள் கூட எழுதியதில்லை. மேலாண்மைப் பயிற்றுனராக, தலைமைப் பண்புகள் பயிற்றுனராக, விற்பனைத் திறன் பயிற்றுனராக, காப்பீட்டுத் துறை சார் தொழில்நுட்பப் பயிற்றுனராக என வெவ்வேறு வடிவங்களில் செயல்பட்டாலும் பயிற்சிக் கையேடுகளை எழுதும் பணியினைக் கூட நான் செய்ததில்லை. நான் கூறுவதிலிருந்து கையேடுகளை என் அணியினர் உருவாக்குவார்கள். பயிற்சியில் முயல் என இருந்தாலும் எழுதுவதில் நான் ஆமையே.

தமிழ் இலக்கிய வாசிப்பிற்குள் பள்ளி நாட்கள் தொட்டே இருந்தாலும் எழுதுவதில் ஒரு முனைப்பு ஏற்பட்டதேயில்லை. 2௦௦9 ஆம் ஆண்டு அதுவரை இணையத்தின் வழியே மட்டுமே அறிமுகமாகியிருந்த எழுத்தாளர் ஜெயமோகனை நேரில் சந்தித்தேன். இரண்டு சந்திப்புகளிலேயே நட்பு வட்டத்திற்குள் என்னையும் இணைத்துக்கொண்ட அவருடன் நிகழ்ந்த ஒரு உரையாடலில் இப்படிச் சொன்னார் – “இப்ப பேசினதை அப்படியே ஒரு கட்டுரையா எழுதி அனுப்புங்க”. நான் மறுக்க அவர் உறுதிபட மீண்டும் அதையே சொன்னார். நான் எழுத ஆரம்பித்தேன். எனது இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை, உரைகளின் கட்டுரை வடிவங்களை, சிறுகதைகளை தொடர்ந்து அவர் இணையப் பக்கத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்திருக்கிறார். இலக்கியத்தில் என் எழுத்துக்கு நான் ஜெயமோகன் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதும்படி உள்ளிருந்து ஒலிக்கும் ஒரு குரல் எப்போதும் அவர் குரலாகவே இருப்பதாக உணர்கிறேன்.

இப்படி ஒரு புத்தகம் நான் எழுதப்போவதாக சென்ற ஆண்டின் கால் பங்கு முடியும்வரை நான் நினைத்திருக்கவில்லை. சொல்வனம் இணைய இதழின் ஆசிரியக் குழுவில் ஒருவரும், என் அருமை நண்பருமான கிரிதரன் ராஜகோபாலன் என்னைச் சந்தித்தபோது பேசிய விஷயங்களிலிருந்து அதையே ஒரு தொடராக சொல்வனம் இதழுக்கு எழுதித் தருமாறு கேட்டார். என் ஆமைத்தனத்தை பொறுத்துக்கொண்டு சரியான நினைவூட்டல்கள், எதிர்வினைகள் மூலம் ஊக்கப்படுத்தல் ஆகியவற்றை செய்து “ஆட்டத்தின் ஐந்து விதிகளை” செம்மையுற வாங்கி வெளியிட்டார்.

இப்படி ஒரு புத்தகம் ஏன் தமிழில் வெளிவர வேண்டும்? அதற்கான தேவை என்ன இருக்கிறது ? தமிழில் இதுவரை அச்சில் வெளிவந்த புத்தகங்களில் இலக்கியம், பாடநூல்கள் தவிர்த்த பிற புத்தகங்களில் தன்னம்பிக்கைப் புத்தகங்கள் பெருமளவில் இருக்கும். இவற்றில் வெகுவானவையும் வெறும் உணர்ச்சித் தூண்டல்களே. “செய்” எனச் சொல்லும் இவை எவையும் ஏன், எப்படி என்றோ எவ்வாறு என்றோ சொல்லாமல் “கடின உழைப்பு”, “லட்சிய நோக்கம் “ போன்ற பொதுவான சொற்களைப் போட்டே நிரப்பப்பட்டவை.

துறைசார் நுட்பங்களைப் பேசும் புத்தகங்கள் கணிப்பொறித்துறையில் மட்டுமே சற்று நம்பிக்கை ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கின்றன. ஒரு துறையில் நுழைய விரும்புவோரும், அத்துறைக்குள் முன்னேற விரும்புவோரும் அத்துறையின் நடைமுறை சார்ந்த சாதக,பாதக அம்சங்களைப் பற்றிப் புரிந்துகொள்ளும் முறையிலான புத்தகங்களைத் தமிழில் தேடினால் ஏமாந்துதான் போகவேண்டும். தொழில் நுட்பங்களை மட்டுமே பேசுவது அல்லது வெறும் உணர்ச்சித் தூண்டல்களால் நிரப்புவது என இருவகை மட்டுமே தமிழில் அதிகமும் கிடைப்பது. அபூர்வமாய் துறை சார் வல்லுனர்களால் எழுதப்படும் புத்தகங்கள் தன்வரலாறு எனும் சட்டகத்திலேயே சென்று அமர்ந்து விடுவதால் அதிலுள்ள தொழில்பாற்தன்மை செம்புலப் பெயர் நீர் என ஆகிவிடுகிறது.

இப்புத்தகத்தில் நான் எழுதியுள்ளவை என் பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்து பேசி வருபவையே. ஆனால் பயிற்சியில் பங்குபெறுகையில் உணரும் பல விஷயங்களையும் தொடர்ந்து நினைவில் வைத்திருப்பதில் பங்கேற்பாளர்களுக்கு சிரமங்கள் உண்டு. அனைத்தையும் நினைவில் நிறுத்துவது இயல்வதில்லைதான்.

தன்னம்பிக்கை மற்றும் தொழில்சார் புத்தகங்களின் வழியே பேசுவோர் தம் சிந்தனையை, சிந்திப்பதால் தமக்குக் கிடைத்தவற்றை மட்டுமே பகிர்கின்றனர். ஆனால் சிந்தனையைத் தூண்டும், சிந்திக்கும் விதத்தில் ஒரு திறப்பை ஏற்படுத்தி நாமே உணரும் விதத்தை, சிந்திக்கும் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்தில் எழுதப்படும் எழுத்தே மெய்யான புரிதலைக் கொடுக்கின்றன. என் இலக்கிய வாசிப்புகள், இலக்கிய உரையாடல்கள், இலக்கிய ஆளுமைகளின் உடனான உரையாடல்கள் ஆகியவற்றின் வழியே நான் புரிந்து கொண்டது இது. இந்த புத்தகம் மேற்சொன்ன புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டது. நான் அறிந்தவை மட்டுமல்ல பேசுபொருள், நான் அறிய வந்த விதமும், அதை நான் கண்டடைந்த விதமும் சேர்ந்து என் சிந்தனையை வடிவமைத்த அனுபவங்களையும் இணைத்தே பேசுபொருளைக் கொடுத்திருக்கிறேன்.

விற்பனைத் துறை அனைத்து பொருட்கள் , சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தக்கூடியது. வணிக நோக்கில் உருவாக்கப்படும் எப்பொருளும், எச்சேவையும் விற்பனைக்காகவே என்பது அத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும். ஆனால் இன்று நமக்கிடையே விற்பனைத்துறை குறித்த குறைபுரிதல் மிகுந்துள்ளது. அத்துறையின் திறன்கள் மெய்ஞானம் போல ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில், தன் வழியில் கண்டடைவதாகவே இருக்கிறது. விற்பனை என்பதும் திறன் சார் நுட்பத்தின் பகுதியே என்ற புரிதல் மிகக் குறைவே. திறன் சார் நுட்பங்கள் அனைத்தையும் போலவே அடிப்படைப் பாடங்களைக் கற்று, தொடர் நடைமுறைப்படுத்தல் மற்றும் கூடுதல் பயிற்சிகள் மூலம் மேம்படுத்திக் கொள்ளல் ஆகியவை விற்பனைத்துறைக்கும் பொருந்தும். இந்த அடிப்படைப் புரிதலோடு இப்புத்தகத்தை வாசிப்பது கூடுதல் பயனைத் தரும்.

இப்புத்தகம் உருவாகத் தூண்டுதலாக இருந்த நண்பர் கிரிதரன் ராஜகோபாலனுக்கு மனமார்ந்த நன்றி. என்னை எழுதத் தூண்டிக்கொண்டேயிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என்றும் நான் நன்றி உடையவன். இதை எழுதும் நேரங்களிலும், நான் வாசிக்கும் நேரங்களிலும் எனக்கான பணி என்னை இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்வதோடு, இவ்வகையில் என்னை எப்போதும் பெருமிதத்தோடு நடத்தும் என் நண்பர்களும், பங்குதாரர்களுமாகிய அருண்குமார், சதிஷ்குமார் இருவருக்கும் நன்றி. தொடர்ந்து வெளியிட்டு வந்த சொல்வனம் இணைய இதழுக்கும், அதன் ஆசிரியர் குழுவிற்கும் நன்றி. விஷ்ணுபுரம் நண்பர்கள் குழுவின் பரந்துபட்ட வாசிப்பும், வெவ்வேறு துறைசார் அறிவும், எழுத்தை கூர் செய்யக் கிடைக்கும் களமாக அமையும் அவர்களுடனான உரையாடல்களும் அனைத்தையும் விட அவர்கள் என்மீது காட்டும் நட்பார்ந்த அன்புக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

வாசிப்பில், இலக்கியச் செயல்பாடுகளில் நான் ஈடுபடுவதைப் பொறுத்துக் கொள்ளும் பெற்றோரும், மனைவியும் எனக்கு அமையவில்லை. மாறாக அதில் பெருமை கொள்ளும் பெற்றோரால், மனைவியால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். குடும்பச் சூழல், தினசரித் தேவைகளால் என் எழுத்தும், வாசிப்பும், பயணங்களும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதில் என் பெற்றோரின் பங்கிற்கு சற்றும் குறைவில்லாது ஆற்றும் என் மனைவி சுபாஷிணிக்கும், என் பயிற்றுவிக்கும் திறனை எப்போதும் சவாலுக்கு அழைத்துக்கொண்டிருக்கும் என் மகன் விஸ்வஜித்திற்கும் என் நன்றிகள். இப்புத்தகத்தை அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன். என் படைப்புகள் என் குடும்பத்தாரின் பங்கின்றி முழுமை அடையாது.

முடிவாக என் எழுதும் திறன் மேல் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து என்னை எழுதும்படி கேட்டு இப்புத்தகத்தை வெளியிடும் வசந்தகுமார் அவர்களுக்கும், தமிழினி பதிப்பகத்தார்க்கும் மனமார்ந்த நன்றி.

சென்னை:

ராஜகோபாலன் ஜா

1.12.2019

[email protected]

***

முந்தைய கட்டுரைவிழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி
அடுத்த கட்டுரைபத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்