கிட்டத்தட்ட சுற்றுப்பயண விவரத்தை வெளியிடவேண்டிய கட்டாயம் உருவாகும் நிலை. எனக்குத்தெரிந்து நவீன எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன் மட்டுமே இந்த அளவுக்கு ஆடிக்காற்றில் அலைக்கழிபவர். அவர் வீட்டுக்குள் பெட்டியுடன் நுழைகையில் ஆச்சி அடுத்த பெட்டியை அடுக்கி தயாராக வைத்திருப்பார் என்று கேள்வி. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து இறங்கி மறுநாளே பாரீஸ் சென்றிருக்கிறார். உலகம்சுற்றும் [கிட்டத்தட்ட] வாலிபர்.
நான் கொஞ்சம் கவனமாக இருப்பவன். ஆனாலும் என்ன ஏது என்று புரியாமல் தேதிகளை கொடுத்துவிட்டேன். காரணம் தேதிகளை கொடுத்தபோது இதெல்லாம் அடுத்த ஆண்டுதானே என்ற எண்ணம் இருந்தது. அடுத்த ஆண்டு மிகத்தொலைவானது. எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் அது இருபது நாட்களுக்கு அப்பால் இருந்தது.
ஒருநாள் சட்டென்று நினைத்துக்கொண்டபோது நெஞ்சடைத்தது. ஒரே தேதியை பலருக்குக் கொடுத்துவிட்டேனா? இல்லை, நல்லவேளை. ஆனால் மூன்றாம்தேதி திரூர். நான்காம்தேதி மதுரை. ஐந்தாம் தேதி பாண்டிச்சேரி. எப்படி செல்வது? ஏதோ செய்யலாம். நடுவே இரவுகள் உள்ளனவே என ஓர் ஆறுதல். எக்கேடோ போகட்டும், இப்போது வெண்முரசை எழுதுவோம் என்பது எனக்கு எப்போதும் ஒரு நல்ல தப்பும் வழி.
விஷ்ணுபுரம் விழா, புத்தாண்டுக்கொண்டாட்டம் எல்லாம் முடிந்து ஜனவரி 2 ஆம்தேதி காலை நாகர்கோயில் வந்தேன். அன்று சுசித்ரா வீட்டுக்கு வந்திருந்தார்கள். கொஞ்சம் உரையாடல், கொஞ்சம் எழுத்து. விழாக்குறிப்பு, ஊட்டிக்குறிப்பு, புத்தாண்டுக்குறிப்பு ஆகிய மூன்றையும் எழுதினேன். ஆறாம்தேதிக்கான வெண்முரசு எழுதி முடித்தபோது எட்டரை. ஒன்பது மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸில் கிளம்பிவிட்டேன்.
நிகழ்ச்சி திரூரில். அது குருவாயூரிலிருந்து மேலும் ஒன்றரை மணி நேரப் பயணத்தொலைவில். குருவாயூருக்கு அந்த ரயில் 7 மணிக்குச் செல்லவேண்டும். ஒன்பதரைக்குச் சென்றார்கள். நடுவே கோட்டயத்தில் ஏதோ பாலக்கட்டுமானப் பணி. அங்கிருந்து பதினொரு மணிக்கு திரூர். செல்லும் வழியெல்லாம் மத்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சி, கூடவே நூற்றுக்கணக்கான தொழிற்சங்கக் கிளர்ச்சிகள். கேரள பத்திரப்பதிவு எழுத்தர்கள் சங்க மாநிலம்தழுவிய கிளர்ச்சி என ஒரு சுவரொட்டி. புரட்சி மக்களின் திருவிழா என்றார் லெனின். கேரளம் எல்லாவற்றையும் திருவிழாவாக ஆக்குமளவுக்கு செல்வமும் பொழுதும் கொண்டிருக்கும் நிலம்.
மாத்ருபூமி லிட் ஃபெஸ்ட் மாத்ருபூமி இதழால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச இலக்கியவிழா. அதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்தலைநகரிலும் ஒரு சிறு இலக்கியவிழா நடத்துகிறார்கள். அங்கிருந்து பங்கேற்பாளர்களை தெரிவுசெய்கிறார்கள். திரூர் விழாவை நான் தொடங்கிவைத்தேன்.
அதற்கு முன் காலையில் திரூரில் உள்ள மலையாளப் பல்கலையில் ஓர் உரை. திரூர் அருகே உள்ள துஞ்சன்பறம்பு என்னுமிடத்தில் மலையாள மொழியின் தந்தை எனப்படும் துஞ்சத்து எழுத்தச்சன் பிறந்தார் என்பது தொன்மம். அங்கே துஞ்சன் நிலையம் என்னும் இலக்கிய அமைப்பு உள்ளது. ஆண்டுதோறும் இலக்கியத்திருவிழா நடைபெறுகிறது.
துஞ்சன்நிலையத்தை மலையாளப் பல்கலையாக ஆக்கியிருக்கிறார்கள். தொடங்கி ஆறாண்டுகளே ஆகின்றன. இன்னும் சொந்தமாக இடம் உருவாகவில்லை. அங்கே ஓர் உரை. ஆனால் இங்கேபோலத்தான், முனைவர் பட்ட ஆராய்ச்சியில் பெரும்பாலானவர்கள் மாணவிகள். அந்த நிதியுதவிக்காக மட்டுமே அதைச்செய்பவர்கள். அரங்கில் ஒருவர் கூட அடிப்படை ஆர்வமோ இலக்கியப் பயிற்சியோ ஆய்வுப்புலமோ கொண்டவர்கள் எனத் தோன்றவில்லை.
தமிழகத்தில் இத்தகைய மாணவர்கள் மூளையை மூடிவிட்டு வெறுமே வெறித்துப்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். மலையாளச்சூழலில் கொஞ்சம் தெனாவெட்டாக அமர்ந்திருப்பார்கள். அவ்வளவே வேறுபாடு. ஒட்டுமொத்தமாக அத்தனை அறியாமைகளும் ஒன்றுதிரண்டு பருவடிவாக இருப்பதைக் காணவேண்டும் என்றால் இதேபோல சமூக அறிவியல் – கலை இலக்கியக் கல்லூரி வகுப்புகளுக்கே செல்லவேண்டும்.
மாலை நிகழ்ச்சி அங்கே ஒரு பள்ளியில். அதற்கு முந்நூறுபேர் வந்திருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள், சொல்லை பின் தொடரக் கற்றவர்கள். பேச்சுக்குப்பின் அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள், சிறுவணிகர்கள். ஆனால் தொடர்ந்து படிக்கிறார்கள். பண்பாட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தீவிரம் வியக்கச்செய்வது. பேசவேண்டிய இடம் இதுவே என எண்ணச்செய்தது.
மாலை அங்கிருந்து கிளம்பி பாலக்காடு வந்தேன். பாலக்காட்டில் இரவுணவு. காரிலேயே பொள்ளாச்சி வழியாக மதுரை. காரில் அரை தூக்கத்தில் இருளை கிழித்து வௌவால் போல சென்றுகொண்டே இருந்தேன். மதுரையில் ஓட்டல் தமிழ்நாட்டில் இடம் போடப்பட்டிருந்தது. விடியற்காலை மூன்றுமணிக்கே வந்துவிட்டேன். தூங்கி எழுந்தது எட்டு மணிக்கு.
காலையில் டி.தர்மராஜ் வந்தார். அவருடைய மாணவர்கள் வந்தனர். அவர்களில் கார்த்திக் சூட்டிகையானவர். முருகபூபதியின் நாடகங்களில் நடித்தவர். நாட்டாரியலில் முனைவர் ஆய்வுசெய்கிறார். நாளை கவனிக்கப்படுவார் என நினைக்கிறேன். சுரேஷ்குமார இந்திரஜித் அறைக்கு வந்தார். அவருடன் நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நிதானமான உரையாடல்.
நண்பர் கதிரேசன் கேரளத்திலிருந்து வந்திருந்தார். எப்போதும் மதுரையில் எனக்கு அணுக்கமானவரான டாக்டர் ரவி வந்திருந்தார். இப்பயணங்களின் முதன்மையான உவகை என்பது நண்பர்களைச் சந்திப்பதே. ஆனால் தமிழகத்தில் வேறெந்த நகரங்களைவிடவும் எனக்கு மதுரையில்தான் வாசகர்கள் குறைவு. ஆகவே மதுரையில் மட்டுமே குறைவான நண்பர்களுடன் இருக்கநேரும். மதுரைக்கு நான் செல்வதும் குறைவாகத்தான்.
பேரா.முரளி, மதுரா கல்லூரியின் முன்னாள் முதல்வர், அவருடைய யூடியூப் சானலுக்காக காந்தி பற்றி ஓரு பேட்டியை எடுத்தார். பெரும்பாலான வினாக்கள் காந்தி, அம்பேத்கர் முரண்பாடு பற்றி. அதை ஏற்கனவே விரிவாக பேசியிருக்கிறேன்.
மாலையில் விழா. அத்தனை கூட்டம் அதற்கு வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. சு.வெங்கடேசன் விமானத்தில் சென்னையிலிருந்து வரவேண்டும். ஆகவே அவர் இல்லாமலேயே விழாவை சற்று தாமதமாகத் தொடங்கினோம். நான் பேசிக்கொண்டிருக்கையிலேயே சு.வெங்கடேசன் வந்துவிட்டார். சமஸும் அவரும் பேசினார்கள். அயோத்திதாசர் ஆய்வுகளின் புதியசெல்நெறிகள் பற்றி பலகோணங்களில் நிகழ்ந்த ஒர் உரையாடல்.
விழா முடிந்து நானும் சமஸும் வெங்கடேசனும் தர்மராஜும் சேர்ந்து உணவருந்தினோம். வெங்கடேசனுக்கும் எனக்கு ஒரு பொதுரகசியம் இருந்தது, அதைப் பேசிக்கொள்ளவில்லை [இயல்]. எனக்கு நள்ளிரவு 11 மணிக்கு விழுப்புரத்திற்கு ரயில். கதிரேசன் ஏற்றிவிட்டார்.
ரயிலில் ஒரு விசித்திர நிகழ்வு. எனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த முதல்வகுப்பு கூபேயை தட்டினால் திறக்கவில்லை. சற்று ஓசையெழ தட்டினேன். திறந்த வட இந்தியர் நான்கு படுக்கைகளும் நிறைந்துவிட்டன, உள்ளே அவர் தன் குடும்பத்துடன் இருப்பதாகச் சொன்னார். நான் என் சீட்டைப் பார்த்தேன், சரியான படுக்கை எண்தான்.
ரயில்நடத்துனரிடம் சென்று சொன்னேன். அவர் வந்து உள்ளே சோதனைசெய்தார். வடஇந்தியரின் சீட்டும் அவர் மனைவி, மகளின் சீட்டும் சரிதான். ஆனால் உள்ளே இன்னொருவர் இருந்தார். நல்ல தூக்கம். விளக்கை போட்டால்தான் அவரை காணமுடிந்தது. ஒரு பழைய பொட்டலம், ஒரு தடி. பழைய செருப்பு. அறுபது வயது இருக்கும். நல்ல போதை வேறு. தட்டி எழுப்பி சீட்டைக் கேட்டால் அவர் எடுத்துக்காட்டியது பொதுப்பெட்டிக்கான சீட்டு. கோயில்பட்டியில் ஏறி படுத்துவிட்டிருக்கிறார்.
அவரை கிளப்பிவிட்டு வேறு கம்பிளி,போர்வை கொண்டுவரச்சொல்லி நான் படுத்தபோது 12 மணி. எனக்கு ஒர் ஐயம் ஏற்பட்டது. வட இந்தியரிடம் “அவர் தவறுதலாக ஏறிவிட்டார் என உங்களுக்கு தோன்றவில்லையா?” என்று கேட்டேன். “இல்லை, எனக்கு தென்னிந்தியா பழக்கமில்லை, மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நினைத்துவிட்டேன்” என்றார்.
விடியற்காலை ஐந்து மணிக்கு விழுப்புரம் சென்றேன். அங்கே ஓட்டுநர் காத்திருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினேன். காலை பத்துமணிக்கெல்லாம் பாண்டிச்சேரி நண்பர்கள் அரிகிருஷ்ணன், கடலூர் சீனு, தாமரைக்கண்ணன், நாகராஜன், மணிமாறன் என திரளாக வந்துவிட்டார்கள். எனக்குப் பேசிப்பேசி தொண்டை அடைத்துவிட்டிருந்தது. ஆனாலும் நண்பர்களிடம் பேசாமலும் இருக்க முடியவில்லை. பொதுவாக வெண்முரசு எழுதிய அனுபவங்களையும் அடைந்தவற்றையும் பற்றி உரையாடினோம்.
வெண்முரசின் சிறந்த வாசகராகிய ஆனந்தன் வந்திருந்தார். வெண்முரசின் எல்லா பகுதிகளையும் அச்சு எடுத்து அட்டையிட்டு பெரிய தொகைகளாக தன் இல்லத்தில் அடுக்கி வைத்திருக்கிறார். செம்பதிப்புகளையும் வாங்கியிருக்கிறார். அவர் இல்லமே வெண்முரசால் நிறைந்திருக்கிறது. அவருடைய குடும்பமே வெண்முரசை வாசிக்கிறது. இப்படி குடும்பமாக வாசிக்கும் நூறுபேரையாவது எனக்குத்தெரியும். ஒரு பெரிய கதை தன்னுள் இழுத்துக்கொண்டு பின் தன் விசையாலேயே வாசகர்களைக் கொண்டுசெல்கிறது. அதை வாசிக்க எதையும் செய்யவேண்டியதில்லை, வாசிக்காமலிருப்பதே கடினம். போதையை நிறுத்துவதுபோல.
மணிமாறனின் மனைவி வீடு விழுப்புரம், அவர் அங்கிருந்து உணவு கொண்டுவந்தார். சென்ற ஆண்டுமுழுக்க உண்ட உணவுகளில் சுவையானது அது என ஐயமின்றி சொல்லமுடியும். சற்றே ஓய்வெடுத்தேன். ஆனால் அது ஓய்வல்ல, உடனிருந்த சீனுவின் தொலைபேசி அழைப்பை தொலைபேசி அறைகூவல் என்றுதான் சொல்லவேண்டும். மருதமலை மாமணியே என்பதுபோல வான் நோக்கிய ஒரு வீரிடல்
மாலை நான்கரைக்குக் கிளம்பி பாண்டிச்சேரி சென்றேன். பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம்பிள்ளை விழாவிற்கு அத்தனை கூட்டம் வந்து நிறையும் என நான் எண்ணியிருக்கவில்லை. பெரிய விழா. நான் 11 மணிக்கு விழுப்புரத்திலிருந்து நாகர்கோயில் வரவேண்டும். ஆகவே விழாவின் ஒரு பகுதியில் மட்டுமே கலந்துகொண்டேன் என்று சொல்லவேண்டும். பாண்டியின் பெரும்பாலான முதன்மை மனிதர்கள் கலந்துகொண்ட விழா.
விழாவில் கி.ராஜநாராயணனைச் சந்தித்து அவர் கைகளைப் பற்றிக்கொண்டது மிக மிக நிறைவளித்தது. 96 வயதில் அவருடைய உரை ஓர் ஆச்சரியம், அந்த ஆச்சரியம் என்னிடம் எப்போதுமிருப்பது.சொற்குழறல் இல்லை, மறதி இல்லை, கூறியகூறல் இல்லை, பொருத்தமற்ற ஒரு சொல்கூட இல்லை. நகைச்சுவை, சரியான நீளம், கச்சிதமான சொற்தெரிவு. ஆனால் அவருடைய தனியுரையாடல்கள்கூட அவ்வகைப்பட்டவைதான். கி.ராஜநாராயணனை அவர் மகன் பிரபாகரன் அழைத்துவந்திருந்தார்.
நான் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு மறுபதிப்பாவது பற்றிப் பேசினேன். மிகமுக்கியமான ஒரு பெரும்பணி அது. ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு [எட்டு தொகுதிகள்] சரியான மொழிக்குறிப்புகள், நூலடைவு , சொல்லடைவுடன் இன்றைய எழுத்துருவில் வெளியாகியிருக்கின்றன. மு.ராஜேந்திரன், அ.வெண்ணிலா இருவருமே அவ்வகையில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். இன்று இத்தகைய பெரும்பணிகள் உடனடிக் கவனிப்பை பெறுவதில்லை. ஆனாலும் ஓர் அர்ப்பணிப்புடன் இவற்றை எவரேனும் செய்தாகவேண்டியிருக்கிறது.
ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகள் இன்று இப்படி வாசிக்க எளிதான மொழியில் வெளிவந்துள்ளன. இந்நூல்தொகையின் ஏதேனும் ஒரு பக்கத்தை பிரித்து வாசிப்பது ஒரு நல்ல உத்தி. ஐந்து பக்கங்களுக்குள் ஆச்சரியமூட்டும், வெடிச்சிரிப்பு அளிக்கும், புதியவரலாற்று திறப்பை அளிக்கும் ஏதேனும் அகப்படாமலிருக்காது. அவ்வகையில் இது இன்றைய புனைகதையாளர்களுக்கான ஒரு பெட்டகம்.
இந்நூல்தொகையின் அவலநாயகன் டியூப்ளே தான். அனைத்து தகுதிகளும் கொண்டவர், விதியால் தோற்கடிக்கப்பட்டவர். விதி அவரைவிட தந்திரசாலியான கிளைவ் வடிவில் வந்தது. மு.ராஜேந்திரனிடம் அவர் ஏன் டியூப்ளேயை வைத்து ஒரு நாவல் எழுதக்கூடாது என்று கேட்டேன். இனி தனியாக ஆய்வுசெய்யவேண்டியதில்லை, அவர் முழுமையாகவே இந்த ஆவணங்களை வாசித்துவிட்டார். அவருடைய வடகரை என்னும் நாவல் அவர் நாவலாசிரியராக தகுதி கொண்டவர் என்பதற்கான சான்று. எழுதவேண்டும் என எடுத்துவைத்து நெடுநாட்களாக மேஜையிலேயே இருப்பது அது. [ஆனால் கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் எழுதியது என நினைத்துக்கொண்டிருந்தேன்]
அ.வெண்ணிலாவின் கங்காபுரமும் ஒரு குறிப்பிடத்தக்க நாவல். அதைப்பற்றியும் எழுதவேண்டும் என எண்ணியிருக்கிறேன். அவர்கூட முயலலாம், அவருக்கு நான் சந்தாசாகிபின் கதையை பரிந்துரைப்பேன். குறிப்பாக அத்தகைய ஒருவரின் மனைவியின் கதையை. அவரைப்பற்றி பல குறிப்புகள் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பில் வருகின்றன. இக்குறிப்புகளிலிருந்து அவ்வகையில் பல நாவல்களை உருவாக்கமுடியும்.
கிளம்பும்போது ரமேஷை சந்திக்க முடியவில்லை என நினைத்துக்கொண்டேன். விழுப்புரத்தில் தங்கியதே காரணம். நான் பாண்டிச்சேரியில் இருந்ததே நான்கு மணிநேரம்தான். ரமேஷ் நன்றாக இருக்கிறார் என சிவராமன் சொன்னார். அவருடைய நாவல் பிரதியை நண்பர் அளித்தார்
ஆனால் கிராவை சந்தித்தது நிறைவு. கி.ரா மனிதர் என்ற வகையிலும் ஒரு மாபெரும் உதாரணம். அவர் இலக்கியவாதி, ஆனால் இலக்கியவாதி மட்டும் அல்ல. விவசாயி. விவசாயத்தில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். ஆனால் அதற்கும் மேல் ஓர் அரசியல்செயல்பாட்டாளரும்கூட. அத்தனையிலிருந்தும் ஒட்டாமல் அவரை துயரில்லாதவராக, ஏமாற்றம் இல்லாதவராக நிலைநிறுத்தியது அவருடைய நகைச்சுவை
அவரை நான் சந்தித்து இப்போது முப்பதாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. இப்போதும் அதே சிரிப்பு. சிரிப்பில்லாத கி.ராவின் முகமே நினைவில் எழுவதில்லை. முதுமையைக் கடந்த சிரிப்பு. இப்போது ஒர் இழப்புக்குப்பின் இருக்கிறார். அதே சிரிப்பு. “இடைச்செவல் போய் எத்தனை காலமாகிறது?” என்றேன். “நெடுங்காலம், இனி போகவே போவதில்லை” என்று புன்னகைத்தார்
“கரிசலுக்கு சாகித்ய அக்காதமிகளாக கிடைக்கின்றன” என்றேன்.“யார் யார்?” என்றார். “கு.அழகிரிசாமி, நீங்கள், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி, எஸ்.ராமகிருஷ்ணன், சோ.தர்மன் என்றேன். ஒரே தெருவில் இருவருக்கு கிடைத்திருக்கிறது, நீங்களும் கு.அழகிரிசாமியும். மாமனுக்கும் மருமகனுக்கும் கிடைத்திருக்கிறது, பூமணியும் தருமனும்” என்றேன். வாய்விட்டுச் சிரித்தார்.
விடைபெறும்போது பல வாசகர்கள் வந்து பேசினர். அத்தனை வாசகர்கள் பாண்டிச்சேரியில் எனக்கு இருப்பது வியப்புதான். எனக்காகவே வந்ததாக பலர் சொன்னார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஆனால் உள்ளே விழா தொடர்ந்து நடந்துகொண்டிருந்தமையால் வேறுவழி இல்லை,. உடனே கிளம்பிவிட்டேன். பாண்டிச்சேரியில் நண்பர்களை சந்தித்ததும் முழுமையாக இல்லை.
11 மணிக்கு ரயில். ஏறிப் படுத்து கைகால்களை நீட்டிக்கொண்டதும் நிறைய பேசிவிட்டேன் என்று தோன்றியது. பொதுவாக ஆண்டுக்கு பத்துபேச்சுக்களுக்குமேல் செல்லக்கூடாது என்பது என் கட்டுப்பாடு. அதை ஆண்டுத்தொடக்கத்திலேயே மீறிவிட்டேன். சென்ற டிசம்பர் முதல் இதுவரை 17 பேச்சுக்கள் கடந்துவிட்டன. ஒருவகையில் இதுதான் அதிகப்பிரசங்கித்தனம். ஆனால் நிறைவாக கி.ராவைப்பார்த்தது ஒரு முழுமையுணர்வை அளித்தது அவருடைய சிரிப்பையே இந்நாட்களின் விழுப்பொருளாகக் கொள்கிறேன்
மாயவரத்தில் இருந்து, அதாவது தலைச்செங்காட்டிலிருந்து, யோகேஸ்வரன் வந்திருந்தார். விழுப்புரத்தில் என்னை ரயில் ஏற்றிவிட்டார். காலை நாகர்கோயில். ஒரு பிரமிப்புதான் எஞ்சியிருந்தது. இந்த ‘நெட்டோட்டம்’ தொடங்கியது டிசம்பர் 18 அன்று. பதினெட்டுநாள். பதினெட்டாம்படி ஏறிவிட்ட களைப்பு, நிறைவு.