விழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு வந்துவிட்டு திரும்பி அந்த மீட்டலிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். என்னைப்போன்ற வாசகர்களுக்கெல்லாம் இத்தகைய திருவிழாக்கள் பெரிய அனுபவம். திரைப்படவிழாவுக்கு நான் வழக்கமாகச் செல்வதுண்டு. ஆண்டு முழுக்க சினிமா பார்க்கிறோம். ஆனால் ஒரு சினிமாவிழாவின் கொண்டாட்டமே வேறு. அப்போது மனம் தளும்பிக்கொண்டிருக்கிறது. சினிமா பற்றி மட்டுமே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறோம்.

அதேபோலத்தான் இந்த விழாவும். இந்த விழாவிலே ஏராளமானவர்கள் கலந்துகொள்வதற்கான காரணம் இந்தப்போதைதான். நிறைய வாசிக்கிறோம். ஆனால் அதைப்பற்றிப் பேச ஆளில்லை. அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேச்சில்லை. சண்டை சச்சரவுகள்தான். இந்த விழாமனநிலையில் எல்லாமே பாஸிட்டிவான பேச்சுக்கள். மறுப்புக்கள்கூட நட்புடன்தான் நடக்கின்றன. ஒரேநாளில் நாம் கற்பவை மிக அதிகம்.

இந்த ஆண்டு ஏராளமான புதிய எழுத்தாளர்களைச் சந்தித்து ஒரு ஹலோ சொன்னேன். இது முக்கியமான ஒரு விஷயம். ஒரு இளம்எழுத்தாளர் நமக்கு அறிமுகமாவது ரொம்ப கடினம். நிறைய நூல்கள் வெளிவருகின்றன. பல முகங்கள். நூலகத்திலோ புத்தகக் கண்காட்சியிலோ அவர்களின் நூல்களைக் காணும்போது அடையாளம் காணமுடிவதில்லை. ஞாபகத்தில் நிற்பதில்லை. அதேபோல அவர்களின் ஒரு கதையை வாசித்தால் அவர்களின் மற்றகதைகள் ஞாபகம் வருவதில்லை. அப்படி வந்தால்தான் நம்மால் அவர்களின் பார்வை, அவர்களின் ஏஸ்தெடிக்ஸ் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கமுடியும்.

ஆனால் ஒரு விழாவில் நேரிடையாகப் பார்த்து அவர்கள் பேசுவதையும் கேட்டுவிட்டால் நமக்குத் தெரிந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் அவர்களை நம்மால் தொகுத்துக்கொள்ள முடியும். இதற்காகவே மேலைநாடுகளிலும் இந்தியாவின் பலமொழிகளிலும் ஏராளமான இலக்கியவிழாக்கள் பெரிய செலவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இங்கே தமிழ்நாட்டில் தமிழுக்கென இருக்கும் ஒரே இலக்கியவிழா விஷ்ணுபுரம் விருதுவிழாதான். இந்த வாய்ப்பை ஏன் நம் எழுத்தாளர்கள் பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை என்று தெரியவில்லை.

அவர்களுக்கு வாசகர்கள் மேல் நம்பிக்கையும் ஈடுபாடும் இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் சின்னச்சின்னப் பூசல்களையும் அடையாள அரசியலையும் விட்டு வெளியே வந்தால் அவர்களால் தங்கள் சிறந்த வாசகர்களை இங்கே சந்திக்கமுடியும். சென்ற ஆண்டுதான் நான் சுனீல் கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், விஷால்ராஜா ஆகியோரைச் சந்தித்தேன். இன்றைக்கு அவர்களெல்லாம் நெருக்கமான எழுத்தாளர்களாக மனசுக்குத்தோன்றுகிறார்கள். நான் ஜெயகாந்தனிடம் பரிச்சயம் உள்ளவன். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரையும் சந்தித்திருக்கிறேன். லா.சரா.வை பார்த்திருக்கிறேன். இன்றைய எழுத்தாளர்கள் எல்லாரும் ஒரு இடத்தில் திரளும் இதைப்போன்ற விழாக்கள் தேவை. உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

எஸ்.ரங்கராஜன்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நானும் நலம்

விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பாக நடைபெற்றது. மிகச்சிறந்த உணவு, உபசரிப்பு. எழுத்தாளர்களுடன் சந்திப்பு. பேச்சுக்கள். இரவெல்லாம் பேசிக்கொண்டே இருந்தோம். பலர் இதுவரைக்கும் சந்திக்காத நண்பர்கள். நான் கோவைக்கு அடிக்கடி வருபவன். பலர் கோவையில் இருந்து கொண்டே என்னால் சந்திக்க முடியாதவர்கள்.

இலக்கிய விவாதங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் தங்கள் இலக்கிய நம்பிக்கைகளைப் பேசினார்கள். இலக்கியம் என்பது ஒரு கனவு என்று ஒரு பார்வை இருந்தால் அதை மிக மெட்டீரியலிஸ்டிக்காக பார்க்கும் ஒரு பார்வை. பொதுவாக ஒரு வாசகன் இங்கே வந்தால் என்னதான் சொல்கிறார்கள் என்ற குழப்பம்தான் வரும். ஆனால் தனக்கு எது நெருக்கமானதோ அதை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என்பதுதான் அவன் கற்றுக் கொள்ளவேண்டியது என்று நினைக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு யுவன் சந்திரசேகரும் கே.என்.செந்திலும் பேசியவை நெருக்கமாக இருந்தன. அவர்களின் கதைகளை அவர்கள் ரொம்பவும் விளக்கவுமில்லை, டிபெண்ட் செய்து பேசவுமில்லை. எது அவர்களிடம் இருந்து கதையாக வெளியே வருகிறது என்று மட்டுமே சொன்னார்கள். அந்த நிதானம் முக்கியமான ஒன்று என நினைக்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

செல்வக்குமார்

***

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் 2019

அபி -ஆவணப்படம்

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்

முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்

விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 37
அடுத்த கட்டுரை’அகதி’ ராம்குமார் முன்னுரை