அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
விஷ்ணுபுரம் பத்தாம் ஆண்டின் விருதுவிழா ஒரு வாசகனாக மனநிறைவு அளித்தது இசை, யுவன் சந்திரசேகர், கே.என். செந்தில், வெண்பாகீதாயன், அமிர்தம் சூரியா, சுரேஷ்குமார இந்திரஜித், ரவிசுப்பிரமணியம், ஜானவி பருவா, பெருந்தேவி, சங்கரப்பிள்ளை, அபி என அமர்வுகள் அனைத்தும். நன்றாக இருந்தது. ஆவணப்படம் நன்றாக இருந்தது.
சினிமா தாக்கம், சங்கீத ரசனை, இந்துஸ்தானி இசை, கர்நாடக இசைக்கலைஞர்கள், எழுத்தில் மேற்கு உலகின் தாக்கம், எளிய மக்களின் துயர், அமானுஷ்யம், பழந்தமிழ் இலக்கியத்துடனான உறவு, அஸ்ஸாமின் இயற்கை, மக்கள் மற்றும் அரசியல், பெருநகர் லிவிங் டுகெதர், பகடிக்கவிதை, எதிர்கவிதை, அருவ கவிதை, சூபி மரபு என பேசப்பட்டவை பல.
ஒரு உண்மையான கம்யூனிஸ்டின் உள்ளம் எத்தகையது என்று அறிந்துகொள்ளும் விதமாக மிகுந்த மதிப்பையும் அன்பையும் தோற்றுவித்தது சங்கரப்பிள்ளை அவர்களின் பேச்சு. அவர் கால்பந்தை தன்போக்கில் எடுத்துக்கொண்டார் என்று முதலில் எண்ணினேன் ஆனால் சரியான இடத்தில் சரியாக எடுத்தார். கம்யூனிஸம் என்பது ஒரு உள்ளம் அதன் கோல் என்றும் ஒன்றுதான். எதிர்ப்புணர்வு வேண்டும். நுகர்வு கலாச்சாரத்தின் சுரணையற்ற அடிமைத்தனம் சுட்டுகிறார்.
”நான் கலைஞன்” என்று ஆவேசம் மிக்க ஜெயகாந்தனை கண்முன் நிறுத்தினார் ரவிசுப்பிரமணியம்.
இருக்கின்றவற்றிற்கு இல்லாமை இல்லை எனத் தன் பிம்பங்களை வெவ்வேறு இடங்களில் வாழ்ந்திருக்கச் செய்திருக்கும் அபி, கவிதையின் அதிகபட்ச ஆன்மீக சாத்தியத்தை உணர்த்தினார்.
அன்பும் நண்பர்களும் இலக்கியமும் அவதானிப்பும் என இனிது ஓர் கனவுபோல. இனி கனவின் இனிமை சிறிதும் கலைவுறாவண்ணம் நானும் கலந்திருப்பேன்.
நன்றி.
அன்புடன்
விக்ரம்
கோவை
***
அன்புள்ள ஜெ
நலம்தானே?
விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். விரிவாக எழுதவேண்டும். ஆனால் என் தொழிலில் நெருக்கடி. ஆகவே சுருக்கமாக. எனக்கு இந்த விழா என்பது எல்லா தரப்புக்களையும் ஒரே மூச்சில் பார்த்துவிடுவதற்கான ஒரு வாய்ப்பு. விஷ்ணுபுரம் விழாவில்தான் இலக்கியத்தில் எத்தனை நுட்பமான வேறுபட்ட தரப்புகளும் மறுக்கும் குரல்களும் உள்ளன என்பதைக் காண்கிறேன்.
நான் அதுவரை நினைத்திருந்தது இலக்கியத்திலுள்ள மாறுபட்ட தரப்புகள் அரசியலால் மாறுபட்டவை என்றுதான். அப்படியல்ல, அவை அழகியலால் மாறுபட்டவை என்பதை இங்கேதான் காண்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்னும் கருத்தில் ஒன்றாகவே இருப்பவர்களிடம் கூட இத்தனை பல்வேறுபட்ட தரப்புக்கள் இருப்பது ஆச்சரியமானதுதான்.
இந்த அரங்கிலேயே இலக்கியத்தை அன்கான்ஷியஸ் ஆக எழுதவேண்டும் என்று ஒரு குரல் ஒலித்தது. அதற்கு எதிராக இலக்கியம் ஒரு பயின்றுசெய்யும் கலை என்று ஒரு குரல் ஒலித்தது. இரண்டுமே நேர்த்தியான நேர்மையான தரப்புக்கள். தன் எழுத்தில் கட்டுப்பாடே இல்லை என யுவன் சந்திரசேகர் சொன்னார். தன் எழுத்து மிகமிக யோசித்து கொஞ்சம் கொஞ்சமாக எழுதப்படுவது என்றார் சுரேஷ்குமார இந்திரஜித்
அதேபோல இலக்கியத்திற்கு சமூகப்பொறுப்பு அரசியல் எல்லாம் இல்லை, அது அழகியல் என்ற நிலைபாடு யுவன் போன்றவர்களிடம் இருந்தது. கே.ஜி.சங்கரப்பிள்ளை தன்னுடைய இலக்கியம் தெளிவான போராட்ட அரசியலே என்று சொன்னார். பெருந்தேவி அரங்கில் இலக்கியத்தின் இந்தியத்தன்மைக்கும் மேலைநாட்டு சார்புக்குமான முரண்பாடு பேசப்பட்டது
இந்த எல்லா விவாதங்களும் அரங்குக்கு வெளியிலும் நடந்தன. இந்த விவாதங்களை இன்றைக்கு எங்கும் வெளியே பார்க்கமுடியவில்லை. இத்தனை நட்பார்ந்த சூழலில்தான் இதையெல்லாம் செய்யமுடியும். யுவன் சந்திரசேகர் பேசியவற்றுக்கெல்லாம் தேவதேவன் நேர்ப்பேச்சில் கூர்மையான மறுப்புக்களை சொன்னார்.
இரண்டுநாள் நான் கற்றவை ஆண்டுமுழுக்க கற்றவற்றைவிட மேல். ஏனென்றால் மனம் முழு விழிப்பு நிலையில் இருந்தது
சந்திரசேகர்
***
விழா-சுனீல் கிருஷ்ணன்
விழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்
விழா- லோகமாதேவி
விழா – ஆனந்தகுமார்
விழா ,கடிதம்-கதிர்முருகன்
விழா- கடிதங்கள்- சுபா, யோகா
***