நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

பால்யகாலச் சித்திரங்கள் தொடர்ந்து ஆழ்மனதில் வண்ணம் உலராமல் தங்கி நிற்பவை. வயதேறும் தோறும் ஆழம் கொள்பவை. பிற்கால உலக அனுபவங்களை ஆழ்மனச் சித்திரங்களைக் கொண்டுதான் உரசிப் பார்த்துக் கொள்கிறோம். நல்லவை அல்லவை எனப் பிரித்துப் பார்ப்பதும் ஏற்பதும் மறுப்பதுமான உளத் தீர்மானங்களை இவையே உருவாக்கித் தருகின்றன. மனிதனின் அகத்தில் இவை நிகழ்த்தும் மாற்றங்களே அவனது குணாம்சங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன. சமூகத்தின் மீதான பார்வையும் அதனுடனான சமருக்கும் சமரசத்துக்குமான கருவிகளையும் காப்புகளையும் உருவாக்கித் தருவதும் இவையே.

பசி, வறுமை, குடும்பச் சூழல் போன்ற காரணங்களினால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வேலைக்கு செல்லவேண்டிய அவலத்துக்கு உள்ளாகும் சிறுவர்களின் அகம் உலகின் கசப்புகளையும் வாழ்வின் வாதைகளையுமே அதிகமும் திரட்டிக்கொள்கிறது. எதைக்கொண்டும் ஈடுசெய்ய முடியாதது மறுக்கப்பட்ட கல்வி. பள்ளிப் பருவத்தில் ஒன்றுகூடி பழகி விளையாடும் சிறுவனுக்குள் உருவாகும் உலகமும் அவையெல்லாம் மறுக்கப்பட்டு பேக்கரியிலும் பனியன் கம்பெனிகளிலும் பட்டறைகளிலும் உழைக்கும் இன்னொரு சிறுவனுக்குள் திரளும் உலகமும் முற்றிலும் வேறானது. எதிரெதிரானது. இவனுக்கு கல்வியை சாத்தியப்படுத்திய அதே சமூக பொருளாதார அமைப்புதான் அடுத்தவனுக்கு அதை எட்டாக்கனியாக்கி விலக்கி வைத்திருக்கிறது. கல்வியின் வழியாக உலகை அளப்பவனுக்கும் பட்டறிவின் மூலமாக வாழ்வை அணுகுபவனுக்குமான இடைவெளி பாரதூரமானது.

சிறுவர்களுக்கேயுரிய இயல்பின் காரணமாக பணியிடத்தில் உள்ளவர்களுடன் நட்புடன் பழக நேர்ந்தாலும் பலசமயங்களில் அவர்கள் ஏவல்களாகவும் சினம் தாங்கிகளாகவுமே திரிய நேர்கிறது. இவற்றுக்கு நடுவே அபூர்வமான சில தருணங்களும் அங்கங்கே வாய்க்கின்றன. அவ்வாறான அனுபவங்களே வாழ்வின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன.

வாழ்வின் யதார்த்தமான அனுபவங்களைத் தொடுவதற்கு முன்பான பருவத்தில் துள்ளலும் துடிப்புமாய் வெகுளித்தனத்துடனும் சிணுங்கலுடனும் போட்டிகளுடனும் பிடிவாதத்துடனும் திரியும் சிறுவர்களின் உலகத்தை துல்லியமாக சித்தரித்தவை ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’ போன்ற அழகிரிசாமியின் கதைகள். ‘சிலிர்ப்பு’, ‘சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்’ உள்ளிட்ட கதைகளின் வழியாக உழைக்கும் சிறுவர்களின் சூழலை நேர்த்தியாகவும் உயிரோட்டமாகவும் சொன்னவர் தி.ஜானகிராமன். இவர்களின் தொடர்ச்சியாக தமிழ்ச் சிறுகதைகளில் உழைக்கும் சிறுவர்களின் உலகை பலரும் எழுதியுள்ளனர்.

நாகபிரகாஷின் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சரடாக அமைந்திப்பது சிறுவர்களின் உலகம். இளமையில் உழைக்க நேர்ந்தவர்களின் மனக்கோலங்களும் அவற்றின் வெவ்வேறு திரிபுகளுமே கதைகளாக அனுபவமாகியுள்ளன. அப்பா வாங்கிய கடனை திருப்பித் தரும்வரையிலும் கடன்கொடுத்தவர்களின் பட்டறையில் உழைக்க நேரும் மகனையும், தாயத்துகள் செய்வதற்காக வெட்டி வைத்திருக்கும் பொடித் தகடுகளை வெங்காரத்தில் முக்கியெடுத்து அடுக்கும் சிறுவனையும், சரக்குப் பெட்டிகளில் இருக்கும் கூப்பன்களை கடைகளில் கொடுத்து காசு வாங்கி ஆசைப்படும் பண்டத்தை உண்ண நினைத்து அலையும் ஒருவனையும், உடல்நிலை சரியில்லாத அம்மாவை ஸ்டெரச்சரில் வைத்து தூக்கி வரக்கூட உடல்பலம் இல்லாத அப்பாவுடன் அல்லலுறும் சிறியவனையும் கதைகளில் சந்திக்க நேரும்போது உள்ளபடியே வாழ்வைக் குறித்தும் சமூகம் பற்றியும் நாம் கொண்டிருக்கும் பார்வைகளையும் தீர்மானங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது.

வறுமையின் காரணமாக உழைக்க நேர்ந்த சிறுவர்களின் நிலைக்கு நேர் எதிரானது கல்வியின் பொருட்டு ஆசிரமங்களில் தங்கிப் படிக்க நேரும் சிறுவர்களின் நிலை. ஆனால் இழந்து போன பால்யம் என்பது இரண்டுக்கும் பொதுவானது. ஒருவகையில் இரண்டுமே சிறுவர்களின் உலகின் மேல் செலுத்தப்படும் வன்முறை. ‘சுவருக்கு அப்பால்’ கதை அந்த வன்முறையின் பல்வேறு பேதங்களைத் தொட்டுக் காட்டியுள்ளது.

பசி, வறுமை, உழைப்பு, சுரண்டல் என எல்லா அவலங்களுக்கும் நடுவே   பதின்பருவத்தின் தவிர்க்கமுடியாத அனுபவமாக அமைவது முதிராக் காதல். வாழ்வின் பிற்காலத்தில் பல சந்தர்ப்பங்களிலும் தலைகாட்டி நிலைதடுமாறச் செய்யும் இதன் அவஸ்தையை முன்னிறுத்தும் ‘கோதைமங்கலம்’ கதையும் தொகுப்பில் உள்ளது.

*

பதின்பருவத்தின் துயர்பாடுகளைச் சொல்லும் நாகபிரகாஷின் கதைகள் எளிமையான மொழியில் அடர்த்தியாகவும் சொல்நேர்த்தியுடனும் அமைந்திருப்பவை. அனுபவங்களின் உண்மைத்தன்மை கதைகளுக்கு பலம் சேர்த்துள்ளன. சித்தரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பலவும் தமிழ் சிறுகதையில் சொல்லப்படாதவை என்பதும் கவனிக்கத்தக்கது.

சில கதைகளில் வடிவ ஒருமையும் கச்சிதத்தன்மையும் கூடிவரவில்லை என்பதும் சொல்ல உத்தேசித்தமைக்கு மாறாக கதைகள் சில கிளைபிரிந்து அலைபாய்கின்றன என்பதும் நாகபிரகாஷ் கவனிக்க வேண்டியவை. முக்கியமாக தனக்கான அனுபவங்களின் பின்னணியில் இயல்பாக அமையும் கதை மொழியை கைகொள்வது அவருக்கான மொழியை கண்டடைய உதவும். மாறாக ‘சுவருக்கு அப்பால்’ கதையில் உள்ளதுபோல முன்னோடிகளின் கதைமொழி அவரது தனித்துவத்துக்கு வலு சேர்க்காது.

*

எழுதத் தொடங்கும் எவர்க்கும் நேரடியான மரபான கதைசொல்லல் முறைக்கு மாறான ஒரு வடிவத்திலும் மொழியிலும் எழுதவேண்டும் என்ற ஆவேசமான உளப்பாங்குக்கு மாறாக நாகபிரகாஷின் கதைகள் யதார்த்தமான வடிவில் தமக்கேயான மொழியில் அமைந்துள்ளன. பெரும்பாலான கதைகளை அவர் தான் வாழ்ந்த நிலத்திலிருந்தும் தன் அனுபவத்திலிருந்தும் கண்டடைந்து அவற்றை தான் புழங்கிய மொழியிலேயே எழுதியிருக்கிறார். இன்றைய புதிய சிறுகதையாளர்களிடமிருந்து நாகபிரகாஷை தனித்துவப்படுத்தும் முக்கியமான அம்சம் இது.

ஒன்பது கதைகளுமே வாழ்வின் பல்வேறு தருணங்களை முன்னிறுத்துபவை. ஒருவகையில் ஒரே வாழ்வின் வெவ்வேறு காட்சிகளை சித்தரிப்பவை. பாசாங்குகள் எதுவுமில்லாமல் மிகையான விவரிப்புகளோ உரையாடல்களோ இல்லாமல் நேரடியாக சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் அவை வாசகனுக்கு நெருக்கமானவையாய், தான் கண்ட வாழ்வின் சில கணங்களை நினைவுறுத்துவதாய், தன் அனுபவத்தின் சில துளிகளை மீட்டுத் தருவதாய் அமையக்கூடும். அதுவே இக்கதைகளின் வரவுக்கு நியாயம் செய்வதாக இருக்கும்.

***

முந்தைய கட்டுரைவிழா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்