பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

2007ல் நான் நாகர்கோயிலில் இருந்து ஈரோடு நண்பர்களைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் விஜயராகவன் அறிமுகமானார். அவர் என்னை வாசித்திருந்தார். ஈரோடு நண்பர்களை என் வழியாக அறிமுகம் செய்துகொண்டார். அதன்பின் இன்றுவரை பயணத்தோழராகவும் விஷ்ணுபுரம் அமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்துவருகிறார். தொடர்ந்த வாசிப்பாளர். உலக இலக்கியத்தில் நீடித்த கவனம் கொண்டவர். தொடர்ச்சியாக மொழியாக்கங்கள் செய்துவந்தாலும் இப்போதுதான் முதல் நூல் வெளிவருகிறது

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)

எனது பெற்றோருக்கு தலைமகனாக போடிநாயக்கனூரில் பிறந்து, அரசு பொறியாளரான தந்தையின் பணி காரணமாக மூன்று வருடங்களுக்கு ஒரு ஊர் வீதம்,அவர் பணி ஓய்வு பெரும் வரை தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்த அனுபவம் உண்டு.

விலங்கியலில் முதுகலை பட்டபடிப்பிற்குபின் தொழிலாளர் மேலாண்மையில் பட்டைய படிப்பை சென்னை பல்கலையில் முடித்தபின், பல நூற்பாலைகளில் தொழிலாளர் நலஅதிகாரியாக ஒரு பத்தாண்டு பணிபுரிந்து சலித்தபின் அதைவிட்டு வெளியேறி துணிகள் பதனிடும் ரசாயன பொருள்களை வாங்கி விற்கும் சொந்த தொழில் தொடங்கி பொருள்வயின் தேடி நிறைந்தேன்.

2012 ல் இதுவும் போதும், என தோன்றியதால் விவசாயத்தில் நுழைந்துள்ளேன்.மனைவி அரசு ஆரம்ப பாடசாலையில் தலைமை ஆசிரியை. இரு மகன்கள்.

இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?

அப்பாவின் தனி நூலகத்தில் ஆங்கில நூல்களும், காமிக்ஸ் புத்தகங்களும் நிறைந்திருந்ததால் சிறுவயதிலேயே இலக்கிய பரிச்சயம் நிகழ்ந்தது.

இளமையில் ஆதர்சங்களாக, அகதா கிரிஸ்டியும், ஏர்ல் ஸ்டான்லி கார்டனரும், அலிஸ்டர் மெக்ளீனும் காமிக்ஸில் வேதாள மாயாத்வாவும் டின் டின்னும் ஆஸ்ட்ரிக்ஸும் இரும்புகை மாயாவியும் மனதை கவர்ந்தார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கையில் சிவகாமியின் சபதத்தை படித்து பின் பொன்னியின் செல்வனில் நுழைந்து தமிழ் எழுத்துகளுக்குள் வந்து சேர்ந்தேன். கல்லூரி காலங்களில் பாலகுமாரனில் தொடங்கி ஜெயகாந்தனின் எழுத்தை பின்பற்றி சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி தி.ஜா, அதன் பின் கி.ராஜநாராயணன் அதன்பின் சுந்தர ராமசாமி, கடைசியாக ஜெயமோகனில் வந்து சேர்ந்துள்ளேன்.

தற்போது திரும்பி பார்த்து ஆதர்சங்களாக சொல்லவேண்டுமென்றால் ஆங்கிலத்தில் ஜான் ஸ்டீன்பெக், ஐசக் பாஷாவிஸ் சிங்கர், ரேமண்ட் கார்வர். தமிழில், தி.ஜா, கி.ரா, ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, ஜெயமோகன் ஆகியோரை சொல்வேன்.

தேரையின் வாய் தொகுப்பின் கதைகள் மொழியாக்க அனுபவம் மற்றும் சவால்கள் என்ன?

தேரையின் வாய் மொழிபெயர்ப்பு தொகுப்பில், சிறப்பான பெயர் பெற்ற உலக படைப்பாளர்களின் கதைகளை தேர்ந்து படிக்கும்போது மனித வாழ்வின் பலதரப்பட்ட உணர்வு நிலைகளையும் அந்த கதைமாந்தர்கள் வாழ்வின் பக்கங்களை அணுகும் முறைகள் மனதைக் கவர்ந்தது.

அதனால் இப்படைப்பாளிகளின் படைப்பை தேர்வு செய்தேன்.சவாலாக நினைப்பது ஒவ்வொரு நிலப்பரப்பு சார்ந்த,வேறு வேறு கலாச்சாரம் சார்ந்த, வேறு வேறு மதங்களை பின்பற்றும் ஆத்திக & நாத்திக படைப்பாளிகளின் படைப்பில் மிளிரும் பார்வைக் கோணங்களை சிதையாமல் கொண்டுவருவது.

மொழியாக்கத்திற்கும் தொகுப்பாக்கத்திற்கும் கதைகளை தேர்வு செய்வதில் நீங்கள் கைக்கொள்ளும் அடிப்படைகள் எவை?

அபுனைவு மற்றும் புனைவு, கவிதைகள் என எல்லாவற்றையும் எடுத்தாண்டாலும் என் மனம் தோயுமிடம் புனைவின் பக்கமே என உணர்ந்தபின் உலக படைப்பாளிகளின் புனைவுகளை மொழிபெயர்க்க தொடங்கினேன்.

இத்தொகுப்பிற்கு புனைவில் உள்ள உணர்வு வித்தியாசங்களுக்காகவும், படைப்பாளிகளின் படைப்புபார்வையில் பெண் எனும் பிரகிருதியை அவர்கள் பார்க்கும் பல்வேறு கோணங்களுக்காகவும் ரசிப்பின் அடிப்படையில் தேர்வு செய்தேன்.

இந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்ன. இந்த நூலின் சமகால முக்கியத்துவம் என்ன?

இந்த மொழிபெயர்ப்பு தொகுப்பை தொகுத்தபின் இந்த கதாசிரியர்கள் பெண் எனும் ஆளுமையை காட்சிபடுத்தும் விதங்களையும் அவரவர் சூழல், கலாச்சாரம், மதவுணர்வு, அரசியல் சார்ந்து படைக்கும் பார்வைகளையும் ஒரு பறவை பார்வையாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்து என்ன?

அடுத்து என்ன? என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லவேண்டுமென்றால், மொழிபெயர்த்து உதிரிகளாக பல சிற்றிதழ்களுக்கு கொடுத்து கொண்டிருந்த போது இதனால் என்னாகபோகிறது என்ற மனசலிப்பு ஏற்பட்டது உண்மைதான்.

அதன்பின் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக இத்தொகுப்பை முடித்துள்ளேன்.இதன்பிறகு Alan Lightman எழுதியுள்ள Einstein’s Dreams எனும் நாவலை மொழிபெயர்க்க மீண்டும் ஆரம்பித்துள்ளேன்.

***

 

===============================================================================

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ்

எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார்

அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா

ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

முந்தைய கட்டுரை‘தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34