மலேசியா- இரு விருதுகள்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

மலேசியாவிலிருந்து நேற்று [25-12-2109] நள்ளிரவில் திருவனந்தபுரம் வந்திறங்கினோம். பின்னிரவு மூன்று மணிக்கு நாகர்கோயில். தூங்கி விழித்து இன்று [26-12-2109] மாலை கோவை விழாவிற்கு. கோவை விழாவில் என்னுடைய பங்கு என்பது அவ்வளவுதான். முழுக்கமுழுக்க நண்பர்களே நடத்தும் விழாவாக மாறிவிட்டிருக்கிறது. நான் கடைசி நேரத்தில் மற்ற விருந்தினர்களுடன் ஒருவராகச் சென்று சேர்கிறேன். என்ன நடக்கிறது என அதற்குமேலும் கண்டுகொள்வதில்லை.

 

சொல்லப்போனால் விழா முதல் ஆண்டுமுதலே இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதன் அமைப்பாளர்கள் தொழில்முறையாகவே நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள். இதைவிடப்பெரிய அரங்குகளை நடத்திய அனுபவம் கொண்டவர்கள். எனில் என் பங்களிப்பு என்ன என்று கேட்கலாம். இப்போதைக்கு இந்த இணையதளம் என்னும் முகப்படையாளம் மட்டுமே என்று சொல்வேன்.மற்றபடி ஒவ்வொன்றும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் சூழலில் சென்றிறங்கி நான் தான் திருதிருவென்று முழித்துக்கொண்டிருப்பேன்

 

சை பீர்முகம்மது உரை

ஏறத்தாழ மலேசியாவில் சுவாமி பிரம்மானந்தர் அவர்கள் நடத்திவருவது இதைப்போன்ற, இன்னும் பெரிய ஓர் இயக்கம். இன்னும் இருபதாண்டு வரலாறு கொண்டது. இன்னும் எதிர்மறையான சூழலில் செயல்படுவது. அவருடைய வட்டமும் மிகப்பெரியது. சுவாமி பிரம்மானந்தர் வேதாந்த மரபினர், தயானந்த சரஸ்வதி அவர்களின் மாணவர். ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சின்மயானந்தர், தயானந்தர் என வரும் ஒரு குருமரபின் தொடர்ச்சி.

 

இந்த மாபெருக் குருமரபின் பங்களிப்பு குறித்து மரபால் மனம்மூடிப்போனவர்களும் சரி வரலாற்றுணர்வில்லாத ஆய்வாளர்களும் சரி விளங்கிக்கொள்ள முடியாது. இது ஒரு பெரும் நதி போல கிளைவிரித்து பரவி உலகை தழுவியிருக்கிறது இன்று. இந்தியா என்னும் சிறு வட்டத்தில் இருந்து வேதாந்தத்தின், இந்துமெய்யியலின், இந்து மதத்தின் செய்தியை உலகமெங்கும் கொண்டுசென்றது இதுவே. சென்ற அனைத்து இடங்களிலும் சேவை, ஒருங்கிணைப்பு, ஒத்திசைவு ஆகியவற்றின் வழியிலேயே செயல்பட்டு வரும் இவ்வியக்கத்தை கருத்தியல் சார்ந்து தொகுத்து நோக்கினால் இன்று உலகில் நிகழும் மாபெரும் அறிவியக்கங்களில் ஒன்று எனலாம்.

 

ஒவ்

 

ஒவ்வொரு சூழலிலும் இப்பணி வெவ்வேறு வகையானது. மரபான ஆசாரங்களைக் கடந்து செல்ல முடிந்தமையால்தான் இது உலகளாவ விரிய முடிகிறது. அவ்வாறு ஆசாரங்களைக் கடந்துசெல்ல வேதாந்தமே அரசப்பெரும்பாதை. ஏனென்றால் தூய அறிவே பிரம்மம் என முன்வைக்கும் ஒரு மரபு அது – இந்து மெய்மரபின் மையமும் கூட. ஆசாரங்களால் வழிமூடப்பட்ட சூழலில் ஆசாரங்களைக் கடக்கும் அறைகூவலாகவும், வெற்றுவழிபாடுகளில் தேங்கியிருக்கும் சூழல்களில் மெய்யியலை வலியுறுத்துவதாகவும். மரபே அறுபட்டுவிட்ட சூழலில் வழிபாடுகள் ஆசாரங்கள் உள்ளிட்ட மரபின் அத்தனை கூறுகளையும் முன்னிறுத்தும் இயக்கமாகவும் அதனால் தன்னை உருமாற்றிக்கொள்ள முடியும்.

 

மலேசியச் சூழலில் ஆன்மிகப்பணி என்பது ஒருவகையான அடையாள ஒருங்கிணைப்பும்கூட. ஆகவே சைவம்,வைணவம் உள்ளிட்ட அனைத்து மதமரபுகளையும் உள்ளடக்கியது ஆசிரம வழிபாடு. பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, சமகால அரசியல் வரை தன் செயல்பாட்டில் ஒருங்கிணைத்துக் கொண்டது. ஆனால் அதன் முதன்மை அறைகூவல் என்பது மாபெரும் ஒருங்கிணைவுதான். ஆகவே இங்கிருந்து கொண்டுசெல்லப்படும் பிளவுபடுத்தும் எண்ணப்போக்குகளை, உட்காழ்ப்புகளை முற்றாக ஒதுக்கிவிடவேண்டியிருக்கிறது. அதை மிக மென்மையாக ஆனால் உறுதியாகச் செய்யும் அமைப்பு அது.

சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே இவ்வாண்டு ஆண்டுவிழாவில் நான் கலந்துகொள்வதைப்பற்றி சுவாமி பிரம்மானந்தர் சொல்லியிருந்தார். விஷ்ணுபுரம் விருதுவிழா தேதி அணுகிவருவதை உணர்ந்தாலும் அதில் நமக்கென்ன வேலை என எண்ணி செல்ல ஒப்புக்கொண்டேன். 19 ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பினோம். நண்பர் ஷாகுல் ஹமீது விமானநிலையம் வந்து வழியனுப்பினார். நேராக பினாங்கு சென்றேன். விமானநிலையத்தில் பேராசிரியர்கள் குமாரசாமி, தமிழ்மாறன் ஆகியோர் வந்திருந்தார்கள்.

 

கூலிம் குருநிலை சுவாமி பிரம்மானந்தர் அவர்களின் முன்னோர் நிலத்தில் அமைந்திருக்கிறது. நான்காண்டுகளுக்கு முன்னர்தான் அருகே செம்பனைக்காட்டுக்குள் சிறு குன்று ஒன்றின்மேல் பெரிய குருநிலை கட்டப்பட்டது. இருநூறுபேர் வரை வசதியாகத் தங்கவும் பெரிய கருத்தரங்குகள் நடத்தவும் உகந்த கட்டிடத்தொகை. இந்திய மரபுப்படி கட்டப்பட்டது. அங்கே ஆன்மிக நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது மலேசியத்தமிழர்களின் எல்லா வகை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன

இம்முறை தொடர்ச்சியாக இரு நிகழ்ச்சிகள். டிசம்பர் 20,21,22 மூன்றுநாளும் வல்லினம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நவீன இலக்கிய முகாம். அதில் ம.நவீனின் பேய்ச்சி என்னும் நூல் வெளியிடப்பட்டது. வல்லினம் வழங்கும் வாழ்நாள் இலக்கியச் சாதனையாளருக்கான விருது மலேசிய இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான சை.பீர்முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர் எழுதிய அக்கினி வளையங்கள் என்னும் நாவலும் வெளியிடப்பட்டது. நானும் சு.வேணுகோபாலும் சாம்ராஜும் அருண்மொழியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டோம்

 

22 மாலை முதல் 25 வரை கூலிம் பிரம்மவித்யாரண்யத்தின் ஆண்டுவிழா. அதில் எனக்கு கூலிம் பிரம்மவித்யாரண்யம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. அதில் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்தன. இரு நிகழ்ச்சிகளிலும் வெவ்வேறு பங்கேற்பாளர்கள். எண்ணியதுபோல ஆன்மிகத்திற்கே பங்கேற்பாளர் மிகுதி. ஆனால் இலக்கியத்திற்கும் அவ்வளவுபேர் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது.

இரு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு நாளும் இரண்டு உரைகள் வீதம் ஆற்றவேண்டியிருந்தது. நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம், இலக்கிய மதிப்பீடுகள் பற்றிய உரைகள். வல்லினம் அரங்கில் நான் 2010 முதல் கலந்துகொள்கிறேன். இப்போதிருப்பவர்கள் அடுத்த தலைமுறை பங்களிப்பாளர்கள். ஆனாலும் பேச்சை திரும்பச்சொல்லுதலாக ஆக்காமல் புதிதாகச் சொல்லவேண்டும் என்பது எனக்கான சூளுரை. அங்கே பேசிய எவையும் நான் இங்கே இதுவரை பேசியவையோ எழுதியவையோ அல்ல.

 

பொதுவாக இப்படி நிறையப்பேசுவது எனக்கு உடன்பாடானது அல்ல. ஆண்டு முழுக்க சொற்பொழிவுகளை குறைத்துக்கொண்டே வருகிறேன். ஆனாலும் பேசியாக வேண்டியிருக்கிறது. எப்போதுமே நான் முன்வைக்கும் பிற படைப்பாளிகளைப் பற்றிய உரைகள் அவை. அவ்வாறு அவர்களை முன்வைப்பது விமர்சகனாக, ஓர் இலக்கிய இயக்கத்தை உருவாக்க முனைபவனாக என்னுடைய கடமை. மலேசியாவிலிருந்து வந்தபின் ஜனவரி 15 வரை தொடர்ச்சியாக இலக்கியச் சந்திப்புக்கள் உள்ளன

 

மலேசியச் சூழல் மேலும் உள்ளத்திற்கு உகந்தது. ஒன்று அங்கே எதிர்மறை உளநிலைகள் இல்லை. அங்குள்ள அரசியல்சூழல் சாந்த ஐயங்களும் பதற்றங்களும் இருந்தாலும் தங்கள் பண்பாடு சார்ந்த நம்பிக்கையும் எதிர்காலம் சார்ந்த ஊக்கமும்தான் அங்கே உள்ளன. அத்துடன் சென்ற சில ஆண்டுகளாக தரமான இலக்கிய ஆக்கங்கள் வந்துகொண்டே இருப்பதனால் உவகையூட்டும் ஒரு சூழல் அனைவரிடமும் உள்ளது. அது அங்கே தங்கும் நாட்களை இனியவையாக ஆக்கிவிடுகிறது. அத்துடன் உள்ளத்திற்கு உகந்த நண்பர்கள். நம் சுவைக்கு உவப்பான உணவு.

 

அருண்மொழி நவீனின் நூலை வெளியிட்டு பேசினாள். ம.நவீனின் பேய்ச்சி இதற்குள்ளாகவே தமிழில் வெளிவந்த நல்ல நாவல்களில் ஒன்று என்னுமிடத்தை அடைந்துவிட்டிருக்கிறது. வெவ்வேறு வாசகர்கள் அதைப்பற்றி நிறைவான கருத்துக்களைச் சொல்லிவருகிறார்கள்.  அருண்மொழி பேய்ச்சியை வெளியிட்டு பேசினாள்.

 

 

 

அருண்மொழி அவளுடைய கல்லூரிக்காலத்தில் மேடைகளில் பேசியிருக்கிறாள். கால்நூற்றாண்டுக்குப்பின் அவள் பேசுவதைப் பார்க்கும் அனுபவம். ம.நவீனின் பேய்ச்சி உருவாக அவளுடைய தூண்டுதல் ஒரு காரணம் என்று அவர் நினைக்கிறார். ஆகவே அவள் அதை வெளியிட்டு உரையாற்றவேண்டும் என அழைத்தார். அருண்மொழி தெளிவாகத் தயாரித்துக்கொண்டுவந்து 40 நிமிடம் பேசினாள். அரங்கில் நான் இருக்கக்கூடாது என்பது அவள் ஆணை என்பதனால் நான் நழுவிவிட்டேன். மிகச்சிறப்பாக பேசியதாகச் சொன்னார்கள்.

 

பேசி முடித்தபின் மேலும் மகிழ்ச்சியுடன் மேடையிலேயே தனக்கு சில புதிய எண்ணங்கள் தோன்றியதைப்பற்றிச் சொன்னாள். அது கூர்ந்து கேட்கும் அரங்கில் நிகழும் ஒன்று. நான் மேடையில் பேசும்போதும் பெரும்பாலும் அரங்கில் எதிர்வினை – கைதட்டல் அல்ல, அச்சொற்களத்தின் உள்ளே வந்துவிட்டதைக் காட்டும் விழிகள்- ஆழமான ஊக்கத்தை அளிக்கின்றன

 

சு.வேணுகோபால் பேசுவதென்பது ஒரு கொப்பளிப்பு. படைப்பூக்கமும் கூடவே வடிவமற்ற பொங்குதலும் கொண்டபேச்சு. நான் அவர் பேச்சை 25 ஆண்டுகளாக கேட்டுவருகிறேன். ஒரே உரையிலேயே நூற்றுக்கணக்கான தகவல்கள், வழக்காறுகள் வெளிப்படும். எவையுமே மீண்டுமொருமுறை பேசப்பட்டு நான் கேட்டதில்லை. அவரிடம் அவ்வளவு வேளாண்மை சார்ந்த நுண்செய்திகள், நாட்டார்மரபு சார்ந்த அறிதல்கள் உள்ளன.

 

ஆனால் அவை அனைத்துமே பெரும் புனைவொன்றில் வெளிப்படவேண்டியவை. மேடைகளில் இப்படிச் சிதறடிக்கப்படவேண்டியவை அல்ல. அவருக்கு அவற்றை நிதானமாக அமர்ந்து விரிவாக எழுதுவதற்கான உலகியல் வாழ்க்கை அமையவில்லை. வேலைச்சூழல், குடும்பச்சுமை. இன்னொரு மொழியில் என்றால் அவரைப் போன்ற பெரும் படைப்பாளிகளுக்கு உதவ அமைப்புக்கள் இருக்கும். தனியார் அறக்கட்டளைகள் இருக்கும். மலையாளத்தில்கூட அவ்வாறுதான்.

சாம்ராஜ் மலேசியக் கவிதைகளைப் பற்றி மெல்லிய நகைச்சுவையுடன் பேசினார். மூன்று பகுதிகளாக பிரித்து மூன்றுவகையில் அக்கவிதைகளை நிராகரித்தார் என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் இலக்கியவாசகர்களான மலேசியர்களுக்கு நிறைவு அளிக்கும்படியாகவே அந்த உரை இருந்தது. மலேசிய எழுத்தாளர்களான சீ.முத்துசாமி, சு.யுவராஜன், பாலமுருகன், அ.பாண்டியன் , தோழி போன்ற பலர் பங்கெடுத்தார்கள்.

 

மலேசிய இலக்கியவெளியில் இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியான நல்விளைவுகளை உருவாக்கி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. சமீபத்தில் அங்கே நிகழ்ந்த சிறுகதைப்போட்டிகளில் பங்கெடுத்து வெளியான கதைகளில் பெரும்பாலானவை வடிவமும் நோக்கும் செறிவுகொண்டவையாக, நவீனத்தன்மை கொண்டவையாக இருந்தன. இந்நிலை முன்பு இருந்தது இல்லை’

விழாவில் நான் சை.பீர்முகம்மது அவர்களுக்கு விருது அளித்தேன். மலேசியச்சூழலில் வல்லினம் விருது இன்று முக்கியமான ஒன்றாக, ஏறத்தாழ விஷ்ணுபுரம் விருதுக்குச் சமானமானதாக ஆகிவிட்டிருக்கிறது. ஏனென்றால் விருதின் தகுதி என்பது முன்பு அவ்விருதைப் பெற்றவர்களால்தான் முடிவாகிறது.

 

சை.பீர்முகம்மது அவர்கள் இன்று ம.நவீன் ஆற்றும்பணியை முப்பதாண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் தொடங்கியவர். ஒருவகையில் கு.அழகிரிசாமி மலேசியாவில் உருவாக்கிய நவீன இலக்கியம் சார்ந்த தன்னுணர்வை அறுபடாமல் கொண்டுவந்து சேர்த்தவர் அவர். அவர் தொகுத்த வேரும்விருதும்- மலேசியச் சிறுகதைகள் என்னும் நூல் வழியாகவே நான் மலேசியாவில் தமிழிலக்கியம் இருக்கிறது என்னும் செய்தியை அறிந்துகொண்டேன். சு.வேணுகோபால், சாம்ராஜ் ஆகிய அடுத்த தலைமுறையினருக்கும் அப்படித்தான் என்பது வியப்பாக இருந்தது.

முப்பதாண்டுகளுக்கு முன் அப்படி ஒரு நூலை தொகுத்து தமிழகப்பதிப்பகம் வழியாக வெளியிட்டு தமிழகம் முழுக்கக் கொண்டுசென்று சேர்ப்பதென்பது எளிதல்ல. அதற்கு ஒருவகை விடாமுயற்சி தேவை. சை.பீர்முகம்மது ஜெயகாந்தனின் நண்பர். தன் படைப்புகளை விட மலேசிய படைப்புக்களை முன்னிறுத்தும் தீவிரம் கொண்டிருந்தார். மலேசிய இலக்கியச்சூழலின் முதல்தலைமுறைப் படைப்பாளிகளைத் தேடித்தேடி ஆவணப்படுத்தியிருக்கிறார். இன்றும் எல்லாவகைச் செயல்பாடுகளுடனும் இணைந்திருக்கிறார்.

 

அவருடைய நாவல் அக்னிவளையங்கள் மலேசியா நாடு உருவான காலகட்டத்தில் , அங்கே குறுகிய காலம் வலுப்பெற்று பின் மறைந்த இடதுசாரி இயக்கங்களின் வரலாற்றை புலமாகக் கொண்டு மலேசியத்தமிழர் வாழ்க்கையைப் பேசும் நாவல். மலேசியாவின் இன்றைய அரசியல்சூழலில் இடதுசாரி அரசியல் அனைவராலும் அகற்றப்பட்ட ஒன்று. அன்றைய இடதுசாரி இயக்கங்களின் வரலாறே மறைக்கப்பட்டுவிட்டது. அவற்றின் ஆக்கபூர்வமான பங்களிப்பை துணிந்துபேசுவது இந்நாவல்.

 

 

மார்க்ஸிய –பெரியாரிய சிந்தனையாளர் அ.மார்க்ஸ் அவர்களின் தந்தையார் அந்தோணிச்சாமி அவர்கள் அன்றிருந்த இடதுசாரி இயக்கங்களில் ஈடுபட்டமையால் வேட்டையாடப்பட்டு நாடுவிட்டு துரத்தப்பட்டவர். இந்நாவல் அ.மார்க்ஸ் அவர்களின் கவனத்திற்குரியது என நினைக்கிறேன். சை.பீர்முகம்மது அவர்களைப்பற்றிய ஒர் ஆவணப்படம் ம.நவீன் இயக்கத்தில் திரையிடப்பட்டது. சை.பீர்முகம்மது தன் மூதாதையர் மலேயாவில் வந்த காலத்தைத் தொட்டு சமகாலம் வரை நீண்ட , ஆனால் சுருக்கமான உரை ஒன்றை ஆற்றினார்.

 

கூலிம் பிரம்மவித்யாரண்ய குருநிலையின் விழாவில் நான் இந்துமெய்யியலின் அமைப்பு, பரிணாமம் பற்றி நான்கு உரைகள் ஆற்றினேன். முதல் உரை, இந்துமெய்யியலின் அடிப்படைக்கட்டமைப்பு பற்றியது. இரண்டாம் உரை, இந்துமெய்யியலில் செயல்படும் ஏழு முரணியக்கங்கள் குறித்தது. மூன்றாம் உரை, இந்து மெய்யியலின் மூன்று அடிப்படைக் கருத்துநிலைகள் அல்லது தரிசனங்கள் பற்றியது. நான்காவது உரை இந்து மெய்யியலின் ஐந்து மறுமலர்ச்சிப்புள்ளிகள் குறித்து. மூன்று தரிசன மறுமலர்ச்சிகள். இரண்டு கட்டமைப்பு மறுமலர்ச்சிகள். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் ஊட்டி நித்யா குருநிலையில் இவற்றை விவாதித்தபின் ஓர் உரையாக மேடைகளில் தொகுத்துக்கொள்வது இதுவே முதல்முறை.

 

இவற்றைப்பற்றி பொதுவெளியில் பேச ஒரு தயக்கம் உண்டு. ஏனென்றால் நாராயணகுருவின் வழிமுறை என்பது சமன்வயம், ஒருங்கிணைதல். ஆனால் வெவ்வேறு வகை திரிபுநிலைகள், பிரிவினைநோக்குகள், அவைசார்ந்த காழ்ப்புகள் ஓங்கிய சூழல் இன்று உள்ளது. அத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் ஆணவத்தை முன்வைக்க வாய்ப்பு உள்ளது. இன்று பொதுத்தள விவாதத்திற்கு இவற்றைக் கொண்டுவருவது ஒவ்வொரு கருத்தின்மேலும் ஒரு டன் சொற்குப்பை வந்து குவியவே வழிவகுக்கும். அக்கருத்தே திரிபடைந்து அழியும். ஆகவே உகந்த கூர்நோக்கு கொண்டவர்களிடம் தனிப்பட்டமுறையிலேயே இவற்றை முன்வைக்கவேண்டும், விவாதிப்பதென்றால் தனக்கென ஆசிரியர் மரபு ஒன்று கொண்டவர்களிடம் மட்டுமே பேசவேண்டும் என்று நினைக்கிறேன். இது என்னுடைய சொந்த புரிதல்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவுதான். ஆனால் சுவாமி பிரம்மானந்தர் அவர்களின் மேல் கொண்ட பெருமதிப்பால் இவ்வுரைகளை ஆற்றவேண்டியிருந்தது.

விழாவில் விருதை சுவாமி பிரம்மானந்தர் அவர்களும் கூலிம் குருநிலையில் அறங்காவலர் ராஜசேகரன் அவர்களும் வழங்கினார்கள். ஓர் ஏற்புரை வழங்கினேன். ஏற்புரையில் என்னையோ என் எழுத்தையோ பற்றி பேசவேண்டியதில்லை என முன்னரே முடிவுசெய்துவிட்டிருந்தேன். என் ஆசிரியர்களைப் பற்றி மட்டும் நினைவுகூர்ந்தேன்

 

சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவி வர்மா, நித்ய சைதன்ய யதி ஆகிய மூவரின் நினைவுகளினூடாக சென்ற அவ்வுரை எனக்கு நிறைவளித்த ஒன்றாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட அகவையில் நம்மை மீறலாகவும் இன்னொரு அகவையில் தொடர்ச்சியாகவும் இயல்பாக உணர்கிறோம். இத்தகைய தருணங்கள் அத்தொடர்ச்சியை முன்வைப்பதற்குரிய மேடைகள் என நினைக்கிறேன்

 

இப்போது கூலிம் மிகப்பழகிய ஒரு ஊரென ஆகிவிட்டிருக்கிற்து. எப்போதுமே ஊட்டி பற்றி அப்படி ஓர் எண்ணம் உண்டு, அது என் ஊர் என. நண்பர் குமாரசாமி அவர்களின் இல்லத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம் சுவாமி பிரம்மானந்தர், தமிழ்மாறன், குமாரசாமி ஆகியோருடன் தண்ணீர்மலை முருகன் ஆலயத்திற்குச் சென்றோம். பயணங்களில் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கென சென்றுகொண்டே இருப்பது ஒருவகை அனுபவம் என்றால் ஒரே ஊரிலேயே ஒருவாரம் வரை தங்கி மீள்வது இன்னொருவகை அனுபவம். ஒரு முழு வாழ்க்கையே அங்கே நிகழ்ந்து நிறைவதுபோல உணர்வேன்

 

திரும்பும் வழியில் கொலாலம்பூரில் மூன்றுமணிநேரம் வெளியே செல்ல முடிந்தது. சிவா பெரியண்ணனும் மணிமொழியும் நண்பர்களும் வந்திருந்தனர். மலேசியாவில் எடுக்கப்பட்ட அசலான முதல் படம் என புகழ்பெற்ற ஜாகட் படத்தின் இயக்குநரான சஞ்சய்குமார் வந்திருந்தார். புத்ர ஜயா வரைச் சென்று சுற்றி சாப்பிட்டு மீண்டும் விமானநிலையம் வந்தோம்.

நாளை முதல் விஷ்ணுபுரம் விருதுவிழா. 29 அன்று மாலை கிளம்பி ஊட்டி செல்லலாம் என நினைக்கிறேன். வியாசப்பிரசாத் சுவாமியை பார்க்கவேண்டும். ஊட்டி குருகுலம் என்னை கொஞ்சம் தட்டி மீண்டும் பழைய அளவுக்கே கொண்டுவந்துவிடும்.

 

இந்த ஆண்டு புத்தாண்டுப்பிறப்பை வழக்கம்போல நண்பர்களுடன் கொண்டாடுகிறேன். புதிய இடம், நண்பர் ஆனந்தகுமார் ஆனைகட்டி அருகே உருவாக்கியிருக்கும் கானகவிடுதியில். ஆற்றோரம் அமைந்திருக்கும் இவ்விடம் எழுத்தாளர்கள், ஆன்மிகத்தேடல் கொண்டவர்களுக்கு தங்குமிடமாக அமைய உகந்தது. மீண்டும் ஓர் ஆண்டு. வழக்கம்போல எழுத்து, வாசிப்பு, பயணங்கள், சந்திப்புகள் என்றே நிறைவுற நிகழுமென நம்புகிறேன்.

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்
அடுத்த கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருது விழா