கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
அன்பு ஜெயமோகன்,
கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். பல கவிதைகள் எனக்குப் பிடிபடவில்லை. சிலவற்றை என்னில் இருந்து விலக்க முடியவில்லை. சிதையும் சிதறலும் அப்படியான ஒரு கவிதை,
வீடு காடாவதைச் சுட்டும் சித்திரங்களுக்குப் பின்னிருக்கும் அகத்தத்தளிப்பில் இருந்து என்னால் விடுபடவே இயலவில்லை. பலநாட்கள் அக்கவிதையைத் தொடர்ந்து வாசித்தபடியே இருந்தேன்.
நெளியும் உயிர் போல ஒரு கெட்ட வெளிச்சம், செம்புக்குடத்தில் இருந்த இருள், சற்றே பெய்த ஒரு குளிர்கனவு போன்ற பதங்களால் திகைத்ததைப் பகிர்ந்து கொள்தல் சாத்தியமற்றது.
அம்மா போய்விட்டால் வீடு காடாகி விடும் – துவக்க வாக்கியத்திலேயே துவண்டு சிதறுண்டேன். மரணத்தை எதிர்நோக்கி அப்பா படுக்கையில் இருந்த காலகட்டம் அது. மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது போன்ற ஒரு சப்தம் அவர் அறையில் கேட்டுக்கொண்டே இருக்கும். படுத்திருக்கும் மரக்கட்டிலில் அவர் விரல்களால் கொட்டுவதாலேயே அச்சப்தம். விழித்திருக்கும் வேளைகளில், சப்தத்தை சீராக எழுப்பியபடியே இருப்பார். அப்பா போய்விட்டால் கட்டில் மெளனமாகி விடும் எனும் எனக்கான பதம் ஒன்றை சங்கரப்பிள்ளை கையளித்திருக்கிறார் என்பதாகப் பட்டது.
நவீன வீடு ஒரு தொன்மக்காடாக உருக்கொள்ளும் காட்சியாக அக்கவிதையை எளிமைப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், அதன் உயிர்ச்சூடு அபூர்வப் பித்தேறியது. வீட்டின் மாமிசம் மண்ணாகிவிடத் துடித்தலை, மெளனம் முனகத் தொடங்குவதை, வீடு ஒரு மூத்த பூனையாக உருமாற எத்தனித்தலை.. விதிர்த்தபடியேதான் எதிர்கொண்டேன்.
அம்மாவையும், கிளியையும் கொண்டு சங்கரப்பிள்ளை வீட்டின் கதையை ஒரு புனைகதை என்று சொல்வார். அங்கு கவிதை முடிந்திருப்பின் என் வாசிப்பு எரிச்சலடைந்திருக்கக் கூடும். சற்றே பெய்த குளிர்கனவைப் போன்ற அதுதான் வீட்டின் உயிர் என்று நீளும் வரிகளால்தான் கவிதையை வாசிக்கவே துவங்கினேன். ஆம், உண்மையாக கவிதையை அப்போதுதான் வாசிக்கத் துவங்கி இருந்தேன்.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.
அன்புள்ள ஜெ
கே ஜி சங்கரப்பிள்ளை கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலவகையிலும் நவீனமான கவிதைகள். இன்று இசை போன்றவர்கள் எழுதும் கவிதைகளை அவர் இருபதாண்டுகளுக்கு முன்னரே எழுதியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக தலைச்சேரி கொலைகள் பற்றிய கவிதை. கொலைசெய்யும் மனநிலை, அந்த கொள்கைகள் அனைத்தையும் நுட்பமான கிண்டலுடன் பார்க்கும் அந்தக்கவிதையில் இருக்கும் சீண்டல்களை வாசித்து உள்வாங்க பலமுறை வாசிக்கவேண்டியிருந்தது.
மொத்த கேரளப்பண்பாட்டையும்பாதி குதப்பி உமிழப்பட்ட வெற்றிலைச் சாறாக உருவகிக்கிறார். பாதி காவி பாதி சிவப்பு முழுக்க மெல்லப்படவில்லை. கேரளத்தில் இந்த அரைவேக்காடு அரசியல், படுகொலை அரசியல் எந்தெந்த கொள்கைப்பாவனைகளுடன் செய்யப்படுகிறது என்பதை கிண்டல் செய்யும் அக்கவிதை இங்கே நாம் எழுதவேண்டிய அரசியல் கவிதைகளுக்கு மிகச்சிறப்பான உதாரணம். நாம் இங்கே அரசியல்கவிதைகளை நேரடியான அறைகூவல், செண்டிமெண்ட் ஆகவே எழுதிக்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்
ஸ்ரீனிவாஸ்