மாயவி(த்)தை- ஜானவி பரூவா

விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா

 

நவம்பர் மாதத்தின் ஒரு காலை. நபகிரஹா மலைப்பகுதியில் இருக்கும் ஹாப்பி வில்லாவில் வசிக்கும் ஜியு தாஸ் உற்சாகத்துடன் விழித்துக் கொண்டாள். படுக்கையில் எழுந்தமர்ந்து தன்னைச் சுற்றியிருந்த போர்வையை மெதுவாக விலக்கினாள். நளினமாக சுழன்று திரும்பியவள் படுக்கை விளிம்பில் நிலைகொண்டு சிமெண்ட் தரையை பார்த்தாள்.  அவளுடைய செருப்புகள் குட்டையான அவளது கால்களுக்கு எட்டாத தூரத்தில் தரையில் ஒழுங்காக விடப்பட்டிருந்தன. ஜியு கன்னங்களை உள்ளிழுத்து உறிஞ்சி உள்ளங்கைகளை படுக்கையில் தனக்கு இருபுறமும் அழுந்த வைத்தாள். கைகள் இரண்டும் விறைத்து நிமிர்ந்தன. இப்படி தன்னை தாங்கியபடி உடம்பை உயர்த்தி செருப்புகளை நோக்கி ஊஞ்சலாடியபோதும் செருப்புகள் தொலைவிலேயே இருப்பது தெரிந்தது. நீளமாக மூச்சிழுத்து மீண்டும் உடலை ஊஞ்சலாட்டினாள். கால்களையும் பாதங்களையும் கால்விரல்களையும் வலியெடுக்கும் அளவு நீட்டினாள். கைகள் வழுக்குவது போலானது. மூச்சைப் பிடித்தபடி இன்னும் உடலை நீட்டியபோது அவள் விரல்கள் ரப்பரை தொட்டன. மெல்ல செருப்புகளைப் பற்றி தன்னை நோக்கி இழுத்துக்கொண்டாள்.

அவள் பாதங்கள் சில்லிட்ட தரையில் படாமல் தப்பின. அவளுடைய குறுகலான அறையின் கோடியில் இருந்த அகன்ற இரட்டை ஜன்னலருகே சென்றாள் ஜியு. ஜன்னல் நன்றாக மூடப்பட்டிருந்தது. ஒரு நாற்காலியில் ஏறி நின்று முகத்தை சில்லிட்ட கண்ணாடியில் பதித்தபடி வெளியே பார்த்தாள். எல்லாம் முந்தைய தினம் இருந்ததைப் போலவே இருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தாள். மலைப்பகுதி அவர்களது வீட்டை ஒட்டி சடுதியில் சமதளம் நோக்கி இறங்கும். அந்தச் செங்குத்தான சரிவு சிறுசிறு பச்சைப் பரப்புகளில் அமைந்த வீடுகளால் மூடப்பட்டிருக்கும். அதைத் தாண்டி தாழ்நிலங்களிலும் ஒன்றன்மேல் ஒன்றாக சாய்ந்தபடி வீடுகள் நிரம்பியிருக்கும்.

கண்ணுக்கெட்டும் தொலைவின் பாதி தூரத்தில் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். பிரம்மபுத்திரா. ஆற்றின் பாதையை ஜன்னல் கண்ணாடியில் நகலெடுத்தாள் ஜியு. மலை மேல் அவள் இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் நதியின் வளைவு தெரியும். வலதுபுறமிருந்து பாயும் ஆறு மந்தமாக சுழித்து இடதுபுறம் விரிந்து பரவிச் செல்லும். வளைவின் நடுவில் இன்னும் சில குன்றுகள் நெருக்கமாக இருக்கும்.

வானில் சூரியன் ஒரு மஞ்சள் பந்தாக இருந்தது. தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த கொய்யா மரத்தின் மேல்கிளைகள் மேலும் கீழுமாக ஆடுவதிலிருந்து பலத்த காற்று வீசுவது தெரிந்தது. ஒரு கணம் தயங்கியவள், முன்புறம் குனிந்து கொக்கியை நீக்கி ஜன்னலை திறந்தாள். சில்லென்று காற்று உள்ளே வீசி அடித்து அறையைச் சுற்றி வந்தது. அவளுடைய ஃப்ளானல் இரவுடைக்குள் நுழைந்து அவளுடைய நீண்ட தலைமுடியை உலைத்தது. குளிரில் நடுங்கிப்போனாள் ஜியு.

அவளுக்குப் பின்னால் கதவு திறந்ததை ஒரு கணம் கழித்தே உணர்ந்தாள்.

‘என்ன செய்யறேன்னு தெரியுதா உனக்கு?’ காற்றைப்போலவே அவள் அம்மாவின் குரலும் கூராக ஒலித்தது. ‘ஜன்னலை உடனே மூடு. அப்படியே குளிக்க வா. உடனே வா!’

சூடான வெந்நீர் தோலை பதம் பார்த்தது. ஆனால் ஜியு எதுவும் சொல்லாமல் குளித்தாள். அவள் அம்மா ஒரு சுரைக்கூட்டை வைத்து தோல் சிவக்கும் வரை தேய்த்துக் குளிப்பாட்டினாள்.

ஜியுவின் பள்ளிச் சீருடை அவளுடைய பெற்றோரின் இரட்டைக் கட்டில் மேல் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அவள் சீருடை அணிய கட்டில் முனையில் அமர்ந்தபடி அம்மா உதவினாள்; முதலில் பருத்தி உள்ளாடை, செமீஸ், பிறகு வெள்ளை மேல் சட்டையும் கொசுவித் தைத்த சாம்பல் நிற ஸ்கர்ட்டும். கடைசியாக, மரூன் கார்டிகன்.

இத்தனையும் நடக்கும்போது ஜியுவின் அப்பா கட்டில் தலைச்சட்டத்தில் பாதி சாய்ந்தபடி காலை தினசரியை படித்துக்கொண்டிருந்தார். அவள் அம்மா கார்டிகனின் கடைசி பொத்தானை போடுகையில் அவர் தினசரியை கீழே வைத்தார்.

‘நீலிமா, நாம அம்மாவை பத்தி ஒரு முடிவெடுத்தாகணும்’ என்றார் அப்பா.

ஜியுவின் அம்மா கூரிய பற்கள் கொண்ட சீப்பால் அவள் தலையை வாரிக்கொண்டிருந்தாள். கணவன் சொன்னதைக் கேட்டவள் வெறியோடு சீப்பை கீழே இழுத்ததில் சீப்பின் ப்ளாஸ்டிக் பற்கள் ஜியுவின் மண்டையை கீறின.

‘அம்மா!’ ஜியு அலறினாள்.

அம்மா அவள் தோளைப் பிடித்து இழுத்தாள். ‘அசையாம இரு!’

அப்பா தொடர்ந்தார் ‘சொன்னது காதுல விழுந்ததா இல்லையா? அம்மாவ ஷில்லாங்கிலேருந்து எப்போ கூட்டிட்டு வரதுனு நாம முடிவு செய்யணும்.’

ஜியுவின் அம்மா வேகமாக பின்னலிட்டுக்கொண்டிருந்தாள். ஒரு சிறிய இடைவெளி விட்டு சடுதியில் ‘டைனி டாட்ஸ்ல என் வேலைய நான் விடணும்னு நீங்க எதிர் பாத்தா, அது நடக்காது’ என்றாள். ஜியுவின் தலைமுடியை வெடுக்கென்று இழுத்தாள். ‘நாலு வருஷமா வீட்லதான் கிடந்தேன். இப்போ ஒரு வழியா இந்த வேல கிடைச்சிருக்கு. அத விட்டுட்டு வீட்ல உக்காந்து உங்க அம்மாவ நான் பாத்துக்கறதா இல்ல.’

‘புரிஞ்சுக்கோ, நீலிமா’ என்றார் அப்பா. ‘அவங்களுக்கு எண்பத்தாறு வயசாவுது. யாராவது ஒருத்தர் கூட இருந்து அவங்கள கவனிச்சுக்கணும்.’

‘அந்த யாராவது ஒருத்தர் நாந்தான். அப்படித்தானே?’ அம்மாவின் குரல் உயர்ந்தது. ‘அது நீங்களா இருக்கக் கூடாதா?’

ஜியுவின் அப்பா தன் வலது கையை வெறுப்பு தெரிய முகத்திற்கு நேராக வீசினார். ‘நடக்கக்கூடியத பேசு, நீலிமா. என் சம்பளம் இல்லாம நம்மால சமாளிக்க முடியுமா? உனக்கு என்ன பெரிய சம்பளம்? தொள்ளாயிரம்?’

‘அதனால என்ன?’ ஜியுவின் அம்மா எதிர்த்தாள். ‘உங்களுக்கு என்ன பெரிசா வருது? அதுல ஜியுவையும் உங்க அம்மாவையும் பாத்துக்க வேலைக்கு ஒரு ஆள கூட வெச்சுக்க முடியாது.’

‘வாயை மூடு, நீலிமா!’

‘மாட்டேன். நல்லா கேட்டுக்கோங்க! என்ன வற்புறுத்தினீங்கனா நான் விட்டுட்டு போயிடுவேன்!’

ஜியு நடுவில் புகுந்தாள். ‘அம்மா, அயிதா வரட்டும். அவங்க வந்தா என்ன ஆயிடும்?’

‘வாய மூடு. பெரிய மனுஷி!’ கணவனை நோக்கி வெறியோடு திரும்பினாள். ‘பாருங்க! அவள எனக்கு எதிரா திருப்பி விட்டுருக்கீங்க! அஞ்சு வயசுகூட ஆகல. எதிர்த்து பேசறா!’ அவள் ஜியுவின் தலைமுடியை முரட்டுத்தனமாக பிடித்திழுக்க சிறுமியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

ஜியுவின் அப்பா இறுகிய குரலில் ‘தயாரா இருந்துக்கோ, நீலிமா’ என்றார். ‘அடுத்த மாச ஆரம்பத்துல நான் எங்க அம்மாவ கூட்டிட்டு வருவேன்.’

சிற்றுண்டியின்போது அவள் அப்பா கோணங்கி செய்தபோதும் அவளுக்கு சிரிப்பு வரவில்லை. கார்ன்ஃப்ளேக்ஸை சாப்பிட்டுக்கொண்டே தன் பெரிய கண்களால் அவரை பார்த்துக்கொண்டிருந்தாள். முடித்துவிட்டு தன் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு சென்றாள். பிறகு கூடத்திற்குச் சென்று படுக்கையறையில் அவள் அம்மா மேகலா அணியும் ஓசையைக் கேட்டபடி உட்கார்ந்திருந்தாள். காலையில் இருந்த குதூகலம் தன்னை விட்டு அகன்றுவிட்டதை உணர்ந்தாள்.

வெளியே காற்று பலமாக வீசியது. அம்மா வாயிற்கதவை தாழிட அருகே அவள் காத்திருந்தாள். ஒரு கணம் மலை மேலிருந்து இறங்கிய காற்று அவள் ஸ்கர்ட்டை பறக்க வைத்து, செம்பருத்திப் புதர்களை உலைத்து சரிவில் இறங்க அவள் உள்ளம் துள்ளியது. அம்மா அவள் கையை அழுந்தப் பற்றி அழைத்துச் சென்றாள்.

வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். அது நீண்ட, செங்குத்தான நடை. ஜியுவும் அம்மாவும் டைனி டாட்ஸ் பள்ளியின் முதல்வர் திருமதி பேஸ்பரூவாவுடன் அவரது காரில் சென்றிருக்கலாம். ஆனால் தாய்க்கும் மகளுக்கும் வளைந்து வளைந்து செல்லும் பாதையில் நடந்து செல்வதற்குதான் ஆசை.

வழி நெடுக அற்புதமான காட்சிகள். சில சமயம் மலை அவர்களுக்கு இடதுபுறம் இருக்கும். வலதுபுறம் நெருக்கமாக அமைந்திருந்த வீடுகளுக்கு இடையே சூரிய ஒளியில் மின்னும் அகன்ற நதியை பார்க்க முடியும். ஓரிடத்தில் சாலை கூராக திரும்புகையில் மலை அவர்களுக்கு வலப்புறம் நீண்டுயர்ந்து நிற்கும். மறுபுறம் அவர்கள் காலடியில் நகரம் விரியும். அது ஒரு பொம்மை நகரம் போலிருக்கும். ரிப்பன் போன்ற சாலைகளில் எறும்புகள் போல் ஊரும் கார்களைப் பார்த்து ஜியு கூச்சலிடுவாள். எப்போதும் உள்ள குறுக்கீடும் உண்டு. அவ்வப்போது குரங்குகள் சாலையை ஒட்டி மரங்களில் தாவி ஓடும். அவை அவர்களைப் பார்த்து சீண்டும்போது ஜியு பயத்தில் அம்மாவை இறுக பற்றிக்கொள்வாள்.

வளைந்து செல்லும் சாலையில் வரிசையாக நிற்கும் வீடுகளில் இருப்பவர்கள் எல்லோரையுமே அம்மாவுக்கு தெரியும். எட்டு வருடங்களுக்கு முன் இளம் மணப்பெண்ணாக அவள் இங்கு வந்தாள். நட்போடு பழகும் அவளுடைய குணம் எல்லோருக்குமே பிடிக்கும். ஜியுவின் கையை பிடித்துக்கொண்டு கடந்து செல்கையில் அவர்கள் அவளை கூப்பிடுவார்கள். அப்படி அவர்கள் கூப்பிடும்போது ஜியு வெட்கத்தில் தலையை குனிந்துகொள்வாள். வீட்டை மறைக்கும் மரங்கள் பக்கம் பார்வையை திருப்பிக்கொள்வாள். பச்சைப் பரப்பில் நட்சத்திரங்கள் போல் மின்னும் வெள்ளை மலர்கள் அடர்ந்த புதர்களை பார்ப்பாள். அங்கிருந்து தப்பிச் செல்வதில் குறியாக இருப்பாள்.

இன்று காலை ஜியுவின் அம்மா டீக்கடைக்கு அருகில் வசிக்கும் திருமதி கோகோயுடன் பேசுவதற்காக நின்றாள். பத்து நிமிடங்களுக்கும் மேலாக பேச்சு நீண்டது. சலித்துப்போன ஜியு கறுப்பு ஷூவால் புழுதியில் வரைந்துகொண்டிருந்தாள்.

ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பியதும் ஜியு பொறுமை இழந்தாள். தன் அம்மாவிடம் ‘பினிதா-மாஹி கிள்ளின கதை சொல்லுமா’ என்றாள்.

‘ஐயோ… மறுபடியுமா?’ என்றாள் அம்மா.

ஜியு தாடையை நீட்டி ‘ப்ளீஸ்! ப்ளீஸ்!’ என்றாள்.

ஜியுவின் அம்மாவுக்கு சிரிப்பு வந்தது. சிரிக்கையில் அவள் பேரழகி. கண்களின் ஓரங்கள் சுருங்க அகன்ற வாயின் ஓரங்கள் மேல்புறமாக திரும்புவதை பார்க்கையில் ஜியுவின் இதயம் நின்று துடிக்கும்.

‘சரி சொல்றேன்’ ஒப்புக்கொண்டு கதையை ஆரம்பித்தாள். அவள் சிறுமியாய் இருக்கையில் தன் தாயுடனும் தங்கை பினிதாவுடனும் ஒரே கட்டிலை பங்குபோட்டுக்கொண்ட கதையை சொல்லத்தொடங்கினாள். பினிதா பார்க்க இனிமையாக பழகக்கூடியவள்தான், ஆனால் ஆழத்தில் அவ்வளவு நல்லவளல்ல. ‘இதெல்லாம் போய் யார்கிட்டயும் சொல்லிட்டிருக்காத, புரிஞ்சுதா?’ ஜியுவின் அம்மா அவளை எச்சரிப்பது போல் பார்த்தாள்.

பினிதா நீலிமாவை பல விதமாக துன்புறுத்தியிருக்கிறாள். ஆனால் எல்லாவற்றையும் புத்திசாலித்தனமாக செய்வாள் என்பதால் அவளை நீலிமாவால் மாட்டிவிட முடியாது. ஓரிரவு பினிதா நீலிமாவை தூங்கவிடாமல் ஐந்து நிமிடத்திற்கொருமுறை நன்றாக கிள்ளிக்கொண்டிருந்தாள். நீலிமா அழுது அம்மாவை அழைத்தபோது பினிதா தூங்குவதுபோல் நடித்தாள். அம்மாவுக்கு தன் தூக்கத்தை கெடுத்துவிட்டாள் என்று நீலிமா மீது கோபம். கடைசியில் அம்மா சிறுமிகளை விலக்கி நடுவே தான் படுத்துக்கொண்டார். சிறிதுநேரம் அமைதி. பிறகு நீலிமாவின் அம்மா அலறிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தார். அறியாமல் அவரை கிள்ளிவிட்டிருந்தாள் பினிதா!

‘ரகசியம் அம்பலமாச்சு, பினிதாவுக்கு நல்லா கிடைச்சது’ ஜியுவின் அம்மா சொல்லி முடித்தாள்.

அயிதம்மா கிள்ளப்பட்டதை நினைத்து ஜியு சிரிக்கத் தொடங்கினாள். அவள் அம்மாவும் சிரிக்கத் தொடங்கி ஒருவரை ஒருவர் இறுக்கமாக பற்றிக்கொண்டு வயறு வலிக்க சிரித்தார்கள்.

மலைக்குக் கீழே வளைந்து செல்லும் பாதை நெரிசலான சாலையில் முடியும்.  செவிடாக்கும் இரைச்சலும், புழுதிபடர்ந்த சாலையில் கார்களும், ரிக்‌ஷாக்களும், பேருந்துகளும் போடும் போட்டியும் எரிச்சலூட்டும். ஜியு அம்மாவின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். அங்கிருந்து அவளது பள்ளி ஐந்துநிமிட தூரத்தில் இருந்தது. அவள் பத்திரமாக உள்ளே போய்விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அம்மா இன்னும் பத்துநிமிட தூரத்தில் இருந்த தன் பள்ளிக்கு நடக்கத் தொடங்கினாள்.

அன்று முழுவதும் பள்ளியில் எதையோ நினைத்துக்கொண்டிருந்தாள் ஜியு. அப்படி கவனமில்லாமல் அவள் இருந்ததே இல்லை என்பதால் ஆசிரியை அவளை கூப்பிட்டு விசாரித்தார். ஜியு எதுவும் சொல்லாததால், அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்து விட்டுவிட்டார். நீலிமா வருவதற்குள் ஜியு களைத்துப் போயிருந்தாள். ஒரு நல்ல விஷயம், எப்போதும் அவர்கள் மலையேறி வீடு திரும்புவது திருமதி பேஸ்பரூவாவின் காரில்தான்.

அவர்கள் நுழையும்போது ஹாப்பி வில்லா அமைதியாக இருந்தது. நீலிமா சந்தோஷமாக இருந்தாள்.  வீடு திரும்புவது என்பது அவளைப் பொறுத்தவரை எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி ஒவ்வொரு அறையாக போய் அந்தியில் கொசுக்கள் வந்துவிடாமல் தடுக்க ஜன்னல்களை மூடினாள். அதற்கு இன்னும் நேரமிருக்கிறது. இப்போது மணி நாலுதான். ஆனால் நீலிமா இரவுணவும் சமைக்க வேண்டும்.

ஜியு பள்ளிச் சீருடையை களைந்துவிட்டு அசையாமல் நின்றாள். அம்மா அவளுடைய கை கால் முகம் எல்லாம் கழுவிவிட்டு பருத்தி பினஃபோர் ஒன்றை அணிவித்தாள். ஜியு பாலை குடித்ததும் விளையாட வெளியே சென்றாள்.

வீட்டு வாசலில் இருந்த சிறிய தோட்டத்தில் மல்லிப் புதருக்கு அருகில் நின்று என்ன செய்யலாம் என்று யோசித்தாள் ஜியு. பினஃபோரின் பைகளுக்குள் கைகளை நுழைத்துக்கொண்டாள். புதருக்கு மறுபக்கம் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது. மாலா, ரீடா, நைனா சிரித்துக் கூச்சலிட்டு விளையாடுவதை கேட்டாள். ஆனால் இன்று அவள் அவர்களோடு சேர்ந்துகொள்ளப்போவதில்லை. பதிலாக, வீட்டின் மறுபுறம் சென்றாள். சிறிது நேரம் நின்று நதியை பார்த்துக்கொண்டிருந்தாள். பின் வேகமாக சென்று அவளுடைய படுக்கையறை ஜன்னலுக்குக் கீழே வீட்டின் மூலையில் நின்றாள். அவள் தேடியது அங்கேதான் இருந்தது: வீட்டின் மஞ்சள் வண்ண சுவரில் சாய்ந்து நிற்கும் மூங்கில் பந்தலில் பற்றி ஏறி இருந்த. கொடி கொஞ்சம் காய்ந்து வாடியிருந்தாலும் சில இடங்களில் பசுமையோடு உயிரோடிருந்தது. மழைக்காலத்தில் அழகிய ஊதா மலர்கள் பூத்திருக்குக்ம். ஆனால் ஜியு தேடியது பூக்களை அல்ல. பந்தலுக்குக் கீழே தவழ்ந்து போய் விதைக்காய்களை தேடினாள். கொத்துக்கொத்தாக நிறைய இருந்தன. அவற்றில் சில வெடித்துத் திறந்து கருஞ்சிவப்பு விதைகள் தெரிந்தன. ஜியுவுக்கு சந்தோஷம். கொடியிலிருந்து அவற்றைப் பறித்து பைகளில் திணித்துக்கொண்டாள்.

கொடிக்குக் கீழே நிரம்பியிருந்த சருகுக் குப்பைமேல் உட்கார்ந்து கொண்டு தன் வேலையை தொடங்கினாள் ஜியு. ஒரு காயை எடுத்து அதிலிருந்த விதைகளை உரித்தெடுத்தாள். தன் உள்ளங்கையில் இருந்த அழகான கருஞ்சிவப்பு விதைகளை பார்த்து புன்னகைத்தாள். கண்ணாடி மணிகளைப் போல் அவை மின்னின. சிவப்பாய், வழுவழுப்பாய், பளபளவென்று ஒரு ஓரத்தில் கருப்புக் கண்ணோடு – அழகான விதைகள். மாய விதைகள். மாலாவின் தாதி மினோதி அப்படித்தான் சொல்லியிருந்தாள்.

‘மாயம்னு ஏன் சொல்றீங்க?’ ஜியு சந்தேகத்தோடு கேட்டிருந்தாள்.

‘எல்லா வியாதியையும் குணப்படுத்திடும்’ என்றாள் அந்தப் பெண். ‘எங்க கிராமத்தில அதை நிறைய உபயோகப்படுத்துவோம். நம்மோட வேண்டுதலை எல்லாம்கூட அது நிறைவேத்தும்னு சில பேர் சொல்லுவாங்க.’

ஜியு தன் உள்ளங்கையில் விதைகளை உருட்டினாள். அவளுடைய வேண்டுதல்களை அவை நிறைவேற்றும் என்று நம்பினாள். என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள். முதலில் பிரார்த்தனை. பிறகு விதையை சாப்பிட வேண்டும்.

ஜியு முட்டி போட்டு உட்கார்ந்துகொண்டாள். அவளுடைய அம்மா பூஜை அறையில் அப்படித்தான் உட்கார்ந்திருப்பாள். தன்னுடைய முதல் வேண்டுதலை சொன்னாள் ஜியு. அவளுடைய அம்மாவும் அப்பாவும் வாக்குவாதம் செய்து சண்டை போடும்போதெல்லாம் தன் வயிறு வலிப்பதையும், அவர்களின் சண்டை நாராசமாக இருப்பதையும் நினைத்துக்கொண்டாள். இனி சண்டை நடக்கக்கூடாது, அம்மா வீட்டைவிட்டுப் போகிறேன் என்று சொல்லக்கூடாது என்று வேண்டிக்கொண்டாள். பிறகு நகைபோன்ற விதைகளில் ஒன்றை வாயில் போட்டு மெல்லத்தொடங்கினாள். தோலை உடைப்பது சிரமமாக இருந்தாலும் அவளுடைய விடாமுயற்சியால் உடைந்து கெட்டியான திரவம் அவள் வாயில் இறங்கியது.

அவள் தன்னுடைய இரண்டாவது பிரார்த்தனையை சொன்னாள்: ஒரு தங்கை பாப்பா வேண்டும். சொல்லிவிட்டு இரண்டாவது விதையை மென்றாள்.

அன்றிரவு ஜியுவின் படுக்கையறையிலிருந்து மூச்சுத் திணற வாந்தி எடுக்கும் சத்தங்கள் கேட்டு நீலிமா விழித்துக்கொண்டாள். இருட்டிலேயே ஜியுவின் கட்டிலுக்கு ஓடினாள். கவிழ்ந்துகிடந்த சிறுமியின் தலை படுக்கை முனையில் தொங்கியபடி இருக்க ஓங்கி ஓங்கி தரையில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள். அறையில் வேறொரு நாற்றமும் இருந்தது. ஏறத்தாழ இனியதாக இருந்த அந்த நாற்றம் கௌதம் வேகமாக வந்து விளக்கை போட்டதும்தான் ஜியு படுக்கையில் சிறுநீர் கழித்திருந்ததால் என்பது நீலிமாவுக்கு தெரிந்தது.

அவர்கள் ஜியுவை குளியலறைக்கு கொண்டு சென்றனர். நீலிமா அவள் தலையை தாங்கிப் பிடிக்க குழந்தை மேலும் மேலும் வாந்தி எடுத்தாள். சிறு இடைவேளையில் வயறும் தலையும் வலிக்கிறது என்று சொல்லி அழுதாள். விரைவிலேயே அழுகையை நிறுத்தியவள் அவர்களை தன் பளிங்குக் கண்களால் நிலைகுத்திப் பார்த்தபடி இருந்தாள். நீலிமா பயத்தில் உறைந்துபோனாள். நெஞ்சை பற்றிக்கொண்டாள்.

‘கௌதம், உடனே ஹாஸ்பிடலுக்கு போகணும்’ என்றாள்.

ஜியுவை நீலிமா தன் கைகளில் பிடித்துக்கொள்ள கௌதம் பக்கத்து வீட்டிலிருந்து மஹந்தாவை அழைத்து வந்தான். இன்னமும் ஜியுவிற்கு வாந்தி நிற்கவில்லை. வாந்தியில் ரத்தத் திட்டுக்களை பார்த்தாள் நீலிமா. சிறு தலையை மடியில் சாய்த்துக்கொண்டவள் அடக்கமுடியாமல் நடுங்க ஆரம்பித்தாள்.

கர்குலியில் இருந்த போர்டொலாய் க்ளினிக்தான் அருகில் இருந்த மருத்துவமனை. அதை நோக்கி மஹந்தாவின் வேன் ஆளரவமற்ற தெருக்களில் சீறிப் பாய்ந்தது.

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த இளம் மருத்துவர் ஜியுவை பரிசோதித்தார். அவருக்கு அது ஃபுட் பாய்ஸனிங் – கேஸ்ட்ரோஎண்டரைடிஸ் – என்று தோன்றியது. ஜியு நீர்ச்சத்தில்லாமல் இருக்கிறாள் என்று சொல்லி நரம்பு வழியாக நீர்மங்களை செலுத்த ஆரம்பித்தார். கவலைப்பட ஒன்றுமில்லை என்று சொன்னவர், ‘ஆனா எதுக்கும் டாக்டர் போர்டொலாயையும் கூப்பிடறேன்’ என்றார்.

நீலிமா ஜியுவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். இப்போது அவளிடம் அசைவே இல்லை. நீலிமா அழைத்தாலும் எந்த பதிலும் இல்லை. கௌதமிடம் மெல்ல ‘ரொம்ப களைச்சு போயிட்டா’ என்றாள் நீலிமா.

ஜியு நீர்ச்சத்தெல்லாம் இழந்துவிட்டாள் என்பதை ஒப்புக்கொண்ட மருத்துவர் போர்டொலாய் அது வெறும் ஃபுட் பாய்ஸனிங் மட்டுமல்ல என்று நினைத்தார். ‘என்ன சாப்பிட்டா?’ என்று கேட்டார். ‘வழக்கத்துக்கு மாறா எதுவும்?’

நீலிமாவுக்கும் கௌதமுக்கும் எதுவும் தோன்றவில்லை. மூன்று பேரும் ஒன்றாகத்தான் சாப்பிட்டிருந்தார்கள். அவர்கள் இரண்டு பேரும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்!

ஜியுவின் வயிற்றை சுத்தம் செய்து ஏதேனும் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்க முடிவு செய்தார் மருத்துவர் போர்டொலாய். நீலிமாவையும் கௌதமையும் அறையை விட்டு வெளியேறச் சொன்னார்கள். இருவரும் சில்லிட்ட தாழ்வாரத்தில் காத்திருந்தனர்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து மருத்துவர் போர்டொலாய் வெளியே வந்தார்; அவர் கையில் சிறிய சிவப்புத் துணுக்கு இருந்தது. ‘வயித்துலருந்து எடுத்ததுல இது இருந்தது. இது என்னன்னு தெரியுதா?’ என்று கேட்டார்.

நீலிமா வடிவமில்லாத அந்த சிவப்புத் துணுக்கை உற்றுப் பார்த்தாள். மெல்ல ‘ஆமாம்’ என்றாள். ‘குந்துமணின்னு நினைக்கிறேன்… எங்க வீட்டுத் தோட்டத்துல ஒரு கொடி இருக்கு.’

மருத்துவர் போர்டொலாய் தன் நெற்றியை துடைத்துக்கொண்டார். ‘ஆமாம். நான் நினைச்சேன் அதுவாதான் இருக்கணும்னு’ வருத்தத்தோடு சொன்னார். பின்னர் மெதுவாக ‘உங்களுக்கு தெரியுமான்னு தெரியல, ஆனா அது விஷம்’ என்றார்.

நீலிமா சத்தமின்றி மீண்டும் அழத் தொடங்கினாள்.

‘எங்களால முடிஞ்சத செய்யறோம், திருமதி தாஸ்’ மருத்துவர் போர்டொலாய் நம்பிக்கை கொடுத்தார்.

இரவு முழுவதும் நீலிமாவும் கௌதமும் ஜியுவின் படுக்கையருகிலேயே உட்கார்ந்திருந்தனர். இரண்டு பேரும் விழித்திருந்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குத் துணையாக வெளியே தாழ்வாரத்தில் மஹந்தாவும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்.

ஜியு அசையவே இல்லை. சுவாசம் இருந்தது; அவள் நெஞ்சு ஏறி இறங்குவது தெரிந்தது, ஆனால் கண்கள் மூடியே இருந்தன.

கிழக்கில் வானம் வெளுக்கத் தொடங்கியது. மருத்துவமனைக்கு மேலே  மரங்களடர்ந்த மலைச்சரிவில் முதல் பறவைக் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

மெல்ல ‘நீலிமா, நீ வீட்டுக்கு போய் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோயேன்’ என்றான் கௌதம். ‘நான் ஜியுவோட இருக்கேன்.’

நீலிமா மஹந்தாவோடு வீட்டுக்குத் திரும்பினாள். வேகமாகச் சென்ற காரில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மருத்துவர் சொன்னதை நினைத்துக்கொண்டு வந்தார் மஹந்தா. அவர் அதை நீலிமாவோடும் கௌதமோடும் பகிர்ந்து கொள்வதாக இல்லை. பாதி குன்றிமணி விதை போதும் ஒரு குழந்தையின் உயிர் போக. ஜியுவின் வயிற்றில் இருந்து எடுத்ததில் இரண்டு விதைகள் இருந்த தடயம் இருந்தது. அது ஒரு வித்தியாசமான தாவரம் என்று சொன்னார் மருத்துவர் போர்டொலாய். விஷமான விதை உள்பட அதன் உறுப்புகள் எல்லா விதமான நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. ஒரே சீரான எடையோடு இருப்பதால் தங்கத்தை நிறுப்பதற்கு அவை பொற்கொல்லர்களால் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் அதை ஜெப மாலையில் உபயோகப்படுத்துவதால் அதை பிரார்த்தனை மணி என்றும் சொல்வதுண்டு.

நீலிமா உள்ளே நுழையும்போது ஹாப்பி வில்லா மெல்லிய பனித்திரையால் மூடப்பட்டிருந்தது. உள்ளே காற்று அசையாமல் அமைதியாக இருந்தது.

அவள் ஜியுவின் அறைக்குள் நுழைந்து சுத்தம் செய்யத் தொடங்கினாள் – நனைந்த படுக்கை விரிப்புகளை எடுத்துப் போட்டுவிட்டு புதியவற்றை விரித்தாள். அலமாரியை தூசி தட்டி துணிகளை அடுக்கி வைத்தாள். சுத்தம் செய்து அறையை சரிசெய்கையில் அவளுக்கு தான் சுயநலமாக இருந்துவிட்டதாகத் தோன்றியது. வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருக்க வேண்டும், ஜியுவுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ஜியு நச்சரித்துக் கொண்டிருந்தபடி இரண்டாவது குழந்தைகூட பெற்றுக்கொள்ளலாம். கௌதமிடம் அவன் அம்மாவை கூட்டி வரச் சொல்ல வேண்டும்; ஜியுவுக்கும் அது நல்லது, அவள் ஓரகத்திக்கும் அந்த இடைவேளை தேவைப்படலாம்.

மருத்துவமனையில் ஜியுவின் தொய்ந்துபோன கையை பிடித்துக்கொண்டிருந்த கௌதமுக்கு தான் இப்போதெல்லாம் நீலிமாவோடும் மகளோடும் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்பது உறைத்தது. நீலிமாவின் சிரிப்பைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! என்ன அழகான சிரிப்பு அவளுடையது! இந்த வருடம் தன்னால் அம்மாவை அழைத்துக்கொள்ள முடியாது என்று தம்பியிடம் சொல்ல வேண்டும். அடுத்த வருடம் அழைத்துக்கொள்ளலாம். தன் குடும்பத்தோடு கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் ஸ்ரீனிவாசன்

பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா

முந்தைய கட்டுரைபீடமா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 26