அன்பின் ஜெமோ சார்,
நலம். என்றும் உங்களுக்கு நாடுவதும் அதுவே.
தங்களின் மலேசியா வருகை அளிக்கும் உவகை சொல்லின் பாற்பட்டதல்ல. கூடுதலாக இவ்வாண்டு தியான ஆசிரமத்தின் அருள் விழாவில் தாங்கள் சொற்பொழிவாற்றுவதோடு இவ்வாண்டு அருளாளர் விருதை நீங்கள் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டதும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
இவ்விருதை இவ்வருடம் உங்களுக்கு வழங்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டப்போது ஆச்சர்யமாக கூடவே எங்கள் அனைவருக்கும் எழுந்த எண்ணம் இவ்விருதை நீங்கள் ஏற்பீர்களா என்ற சந்தேகமே. தங்களைத் தொடர்ந்து பின் தொடரும் இக்குழுவினருக்கு முக்கியமாக சுவாமிக்கு நீங்கள் இவ்விருதைப் பெற்றுக் கொள்வீர்களா என்ற ஐயம் எழுந்தது ஆச்சர்யமில்லைதான். ஏனென்றால் இத்தகு விருதுகள் அளிக்கும் ஊக்கமோ பெருமை உணர்வையோ கடந்து விட்டவர் தாங்கள்.
இருப்பினும் உங்களுக்கு இவ்வருடம் இவ்விருதை வழங்க வேண்டுமென்ற விருப்பம் சுவாமிக்கு மிகுந்திருந்தது. இவ்வருடம் மலேசியாவில் நடக்கவுள்ள இலக்கிய முகாமிலும் தொடர்ந்து தியான ஆசிரமத்தில் நடைபெறவுள்ள அருள்விழாவிலும் உங்கள் உரை இடம்பெறுகிறது என்பது மட்டும் அதற்கான காரணமல்ல. கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மலேசிய இலக்கியச் சூழலில் தாங்கள் நிகழ்த்தி வரும் தொடர் உரையாடல்கள் இங்கு புதிதாக எழுதத் துவங்கிய தலைமுறைக்குச் சிறந்த வழிக்காட்டுதல்களாக அமைந்தன. தங்களின் ஆன்மீகக் கட்டுரைகளையும் பேச்சுகளையும் இலக்கியம் சாராத மலேசியா அன்பர்கள் பலர் தொடர்கிறார்கள் என்பதும் அவர்களில் சிலர் உங்களோடு கடிதத் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் தங்களின் சிந்தனையும் செயல்பாடுகளும் அடைந்திருக்கும் வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் சுவாமி தெள்ளென அறிந்திருக்கிறார்கள் என்பதே முதன் காரணம் என வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அருள் விழா நடந்து வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சாதனை விருதை வழங்க வேண்டும் என்ற கடப்பாட்டை சுவாமி கொண்டிருக்கவில்லை. டாக்டர் ஜெயபாரதி, பத்திரிகையாளர் ஆர்.துரைராஜ் போன்ற சிலரைத் தவிர மற்றவர்களை இவ்விருதால் அன்றி அன்றைய தலைமுறையும் நாளையை தலைமுறையும் குறைந்தபட்சம் அறிந்திருக்கவோ அல்லது னைவில் கொள்ளவோ போவதில்லை என்பதே நிதர்சனம். ஆனாலும் சல்லடைப் போட்டு அலசி தேடித் தேடி சுவாமி இவ்விருதை அத்தகு பெரியவர்களுக்கு வழங்கி கெளரவித்திருக்கிறார். இலக்கியச் சூழலில் நாம் எதிர்பார்க்கும் விருது ஒட்டிய தர மதிப்பீட்டை சுவாமி எளிதாக ஆன்மீகம் வழியாகவே கண்டடைந்திருக்கிறார்.
இவ்விருது ஜெமோவிற்கு புதிய உயரங்களையோ கெளரவங்களையோ கொண்டு வருமா என்பதை அறியேன். ஆனால் இவ்விருது ஜெயமோகன் எனும் மாபெரும் எழுத்தாளன் இலக்கியம், ஆன்மீகம், அரசியல், அறிவியல், சூழியல் என இன்னும் விரியும் பல்வேறு சமூகம் சார்ந்த உள்ளீடுகளை நோக்கி தொடர் எழுத்துகளாலும் பேச்சுகளாலும் வெளிச்சங்களையும் திறப்புகளையும் உருவாக்கி மேம்பட்ட தமிழ் வாசகர்கள் உருவாக கனவு காணும் ஜெயமோகனை மலேசியத் தமிழர்கள் கொண்டாடும் விருதாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்பதே எங்கள் ஆவா.
கனிந்த அன்புடன்,
சு.யுவராஜன்,
மலேசியா
அன்புள்ள யுவராஜன்
நலம்தானே? நீண்ட இடைவேளைக்குப்பின் கடிதம்
சில தருணங்களில் சில மனிதர்கள் வரலாற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். சுவாமி பிரம்மானந்தா அவர்களில் ஒருவர். அவரை ஆசிரியர் என்று, ஒரு பெருமைமிக்க மெய்மரபின் தொடர்ச்சி என்றும் நம்புகிறவன் நான். எனக்கு இவ்விருது அவ்வகையில் ஒரு வாழ்த்து என்றே தோன்றியது
மலேசியாவில் சந்திப்போம்
ஜெ
ஜெயமோகனுக்கு மலேசிய விருது -நவீன்
மலேசியப் பயணம்,விருது