சசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி

இந்தியாவின் இருண்ட்காலம் வாங்க\

இவ்வாண்டு மலையாளத்துக்கு சாகித்ய அக்காதமி ஏமாற்றம். மதுசூதனன் நாயர் ஒரு கவிஞரே அல்ல. அலங்காரச் சொற்கூட்டி. பாடகர். ஆனால் பெரும்புகழ்பெற்றவர், வேறுவழியில்லை. ஆனால் இவ்வாண்டுக்குரிய சாகித்ய அக்காதமி விருதுகளில் இன்னொரு மலையாளி குறிப்பிடத்தக்கவர். சசி தரூர். அவருக்கு சாகித்ய அக்காதமி விருது பெற்றுத்தந்த நூல்An Era of Darkness: The British Empire in India இது ‘இந்தியாவின் இருண்டகாலம்’ என்ற பேரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது

வெறுமே ஒரு பார்வைக்கோணத்தை முன்வைக்கும் நூல் அல்ல இது. மிகமிக விரிவான தரவுகள் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட ஆய்வுநூல். நானறிந்தவரை அத்தரவுகள் எவையும் மறுக்கப்படவில்லை, மறுக்கவும் இயலாது. ஆகவே அமெரிக்க, பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களில் மரபுசார்ந்த கோணம் கொண்டவர்களுக்கு ஒவ்வாமையை அளிக்கும் நூல் இது. அதை அவர்கள் ஒற்றை வரியில் கடந்துசெல்லவே முயல்வார்கள். ஆனால் அவ்வாறு அவர்களால் கடந்துசெல்ல முடியாது. ஏனென்றால் இத்தகைய நூல்கள் ஆழ்ந்த கருத்தியல் செல்வாக்கை செலுத்தும் மூலப்படைப்புக்கள். வளரும் தன்மைகொண்டவை

வழக்கமான வரலாற்றாசிரியர்கள் சென்றடையமுடியாத தரவுகள் சசி தரூருக்கு அவருடைய தொடர்புகள், அரசியல்பதவிகள் காரணமாக கிடைக்கின்றன. ஆய்வுக்கென ஒர் உதவியாளர்குழுவையும் அமைக்க முடிகிறது. ஆகவே பிபின் சந்திரா போன்று இந்தியக் காலனியாதிக்க வரலாற்றை எழுதிய எவரும் கண்டிராத தரவுகளின் பெருந்தொகையாக உள்ளது இந்நூல். வழக்கமான வரலாற்றாசிரியர்கள் இதை எழுதியிருக்க முடியாது.

இந்தியவரலாற்றில் பிரிட்டிஷார் ஆண்ட இரு நூற்றாண்டுக்காலம் எப்படி அப்பட்டமான சுரண்டல், நேரடியான பாரபட்சம் ஆகியவற்றாலானதாக இருந்தது என்று விவரிக்கும் நூல் இது. நீதித்துறை ஆவணங்கள் வழியாக சசி தரூர் காட்டும் சித்திரம் பிரிட்டிஷார் குறித்து நாம் கொண்டிருக்கும் அத்தனை மதிப்பீடுகளையும் தகர்ப்பது. ஒரு பிரிட்டிஷ் அதிகார் தன் இந்திய ஏவலனை உதைத்தோ சுட்டோ கொன்றால் அதை ஒரு கவனக்குறைவாகவே பிரிட்டிஷ் நீதிமன்றம் அணுகியிருக்கிறது என்பது திகைப்பூட்டுகிறது.

சீராக ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மொத்த உபரிச்செல்வமும் உறிஞ்சி அகற்றப்படும் பெருஞ்சித்திரம், அதன் விளைவான பெரும் பஞ்சங்கள், இந்திய மக்கள் தொகையின் மூன்றிலொன்று செத்தும் நாடுகடந்தும் அழிந்தமை உலகவரலாற்றிலேயே ஒப்பிட பிறிதொன்றில்லாத மானுட அழிவு. எந்த குரலெழுகையும் இல்லாமல் , அரசியல் சொல்லாடல்களே இல்லாமல் வெறும் தரவுகள் வழியாகவே விவரித்துச்செல்கிறார் சசி தரூ

சாகித்ய அக்காதமி விருதுபெறும் சசி தரூருக்கு வாழ்த்துக்கள். சில தனிப்பட்ட அலுவல்கள் இல்லாமலிருந்திருந்தால் ஒப்புக்கொண்டபடி அவர் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருப்பார். தவறிவிட்டது. அடுத்த ஆண்டு பார்ப்போம்

முந்தைய கட்டுரைசோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 19