கலைகளைப் பிரித்துப்பார்த்தல்

வணக்கம் ஜெ

கலைகளை நான் அறிவதற்கு செய்த சிறுமுயற்சி இது.

கலைகளை இவ்வாறு பிரிக்கிறேன் இயக்க கலை மற்றும் நிலை கலை. ஒரு கதையை படித்தவுடன் அது அழுகை கோபம் போன்ற ஏதோ ஒரு ரசனையை நம்முள் எழ செய்தால் அது இயக்க கலை. மாற்றாக ஒரு கதை நம்முள் இருக்கும் அனைத்தையும் வெளி கொண்டு வந்து நம் கண் முன்னே அவற்றை காண செய்து உணர்ந்து பகுத்து புரிந்து கடந்து அறிந்து அமைய செய்தால் நிலை கலை.

உதாரணமாக தி க்ரேட் கேட்ஸ்பி. முதலில் கேட்ஸ்பி யாரென்று ஊகிக்கிறோம் பின் அவனுடன் சேர்ந்து டேய்ஸியை காதலித்து பிரிந்து இணைந்து திரும்ப பிரிகிறோம். இறுதியில் இறக்கிறோம். இயக்க கலையை வாசிக்கையில் கதைமாந்தர்கள் புரியும் போரில் நாமும் அவர்கள் அருகில் இருந்து போர்புரிகிறோம். வாள்வீச்சின் சத்தத்தையும் தெறிக்கும் ரத்தத்தின் வெம்மையையும் அருகே அனுபவிக்கிறோம்.

டால்ஸ்டாயை வாசிக்கையில் ஒரு குன்றின் மேல் நின்றுகொண்டு போரை காணும் அரசனை போல் இருக்கிறோம். அந்த குரூரமும் வன்மமும் அழகியலும் தவிர்க்க முடியாததும் நம் கண் முன்னே எடுத்து வைக்கப்பட்டுள்ளது. நாம் அதை ஒருவகை விலகலுடனே அனுபவிக்கிறோம். கூண்டிற்குள்ளிருக்கும் புலியை பார்ப்பதை போல, மேடையில் நடக்கும் நாடகத்தை பார்பதை போல.

நிலை கலை அதன் பாகமாக இயக்க கலையை கொண்டு நிகழலாம். போரும் அமைதியும் நாவலிலுள்ள பல பகுதிகள் அவ்வாறானவை. உதாரணமாக போல்கோன்ஸ்கி இறக்கும் காட்சி. ஒரு உச்சகட்ட நாடக தருணம் அது. அவர் இறக்கையில் மேரியிடம் அன்பே வெள்ளை நிறம் உனக்கு நன்றாக உள்ளது என்பதை தன் கடைசி வார்த்தைகளாக கூறுகிறார். கதையின் போக்கில் பார்க்கையில் அதுவரை தன் இறுகிய முகத்தை மட்டுமே காட்டி வந்த கறார் தந்தை இறுதி தருவாயில் தன் கனிந்த முகத்தையும் காட்டியது நம்மை கரையச் செய்கிறது . இயக்க கலையின் யுத்தி இது. ஆனால் அதே சமயத்தில் இந்த தருணத்திலிருந்து உலகிலுள்ள அனைத்து தந்தைகளின் உணர்வு நிலைகளையும் விரித்து அறிய ஆசிரியர் நமக்கு வாசலளிக்கிறார். போல்கோன்ஸ்கி தன் வேலைக்காரருடன் கொண்டுள்ள உறவும் அவ்வாறான ஒரு விரிந்து அறியும் தருணத்திற்கு சாத்தியமுள்ள காட்சி.

கேட்ஸ்பியின் வாழ்வும் மரணமும் அவனுடையது மட்டுமே. நாம் உணர்வதும் அறிவதும் அவனை மட்டுமே. அங்கிருந்து விரிந்து சென்று உலகை நோக்க இயக்க கலையின் சுற்றுசுவரில் வாசல் இல்லை. எளிய உணர்ச்சிகளை மட்டுமே அது தூண்டுகிறது.

கிரேக்க நாடகங்கள் நிலை கலைக்கு முன்னோடி என கூறலாம். உச்ச தருணங்களை கொண்ட உணர்ச்சிகளை தூண்டும் வசனமும் நடையும் கொண்டுள்ள போதிலும் அது ஒரு மேம்பட்ட கருத்தை தன் இழையாகக்கொண்டு அதன் மேல் கட்டமைக்க பட்டுள்ளது. அறம் முடிவிலி சுழற்சி போன்ற பேருண்மைகளின் மூலம் அனைத்து மானுடத்தையும் ஒன்றென கருதி அறியவைக்கிறது. இவ்வாறான கலைகளிலே catharsis முழுமையடைகிறது. உணர்ச்சிகளை தூண்டுவது மட்டுமல்லாமல் அந்த காரியத்தின் காரணத்தையும் அறியவைத்து நம்மை அமைய செய்கிறது. மாபெரும் காவியங்களை வாசித்து முடிக்கையில் நம்முள் தோன்றும் அமைதியம் வெறுமையும் இந்த அமைவே, அது நம்மை நிலையாக்குகிறது. இதனாலேயே இவை நிலை கலைகள். இக்கலைகளில் ஈடுபடுவது ஒருவகை தவமே.

மகாபாரதத்தை நாம் நிலை கலையாக கொள்ளலாம். அடிப்படையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கும் குடும்பச்சண்டை என்றெண்ணினாலும் அதன் உணர்ச்சிகள் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் அறியகூடுவையே. அவ்வகையில் அது மொத்த மானிடத்தை பற்றியும் மானுடத்தையும் பிரபஞ்சத்தையும் இணைக்கும் உண்மைகளை பற்றியும் பேசுகிறது.

ஒரு கலையை இவற்றை கொண்டு நிலை கலை என கூறலாம்:

அ. ஒரு குறிப்பிட்ட நபரின் குடும்பத்தின் சமூகத்தின் கதையை கூறினாலும் அங்கிருந்து விரிந்து சென்று ஒட்டுமொத்த மானுடத்தையும் அறிய வழி கொண்டிருக்கவேண்டும்.

ஆ. பேருண்மைகள் தத்துவமோ அறமோ நேரடியாகவோ படிமமாகவோ அதனுள் உறைந்திருக்கவேண்டும்.

இ. பெரும்பாலான கதைகளுக்கு தொடக்கம் முடிவு என உறுதியான கட்டமைப்பு இருக்க வேண்டும். அதன் பகுதியாக மீபுனைவு கால இட தாவல்கள்போன்ற யுத்திகளை பயன்படுத்தலாம்.

ஈ. அக்கலையில் மூலமாக நம்முள் ஒரு அறிதல் உண்டாக வேண்டும். அவ்வறிதல் புதிதான ஒன்றாயிருக்கலாம் அல்லது முன்பே அறிந்த ஒன்றை கூர்மை படுத்தலாம்.

உ. அவ்வறிதல் நம்மை நிலைவிற்கு இட்டுசெல்வதாக அமைய வேண்டும்.

தமிழில் சுஜாதா எழுதிய பெரும்பாலான கதைகளை இயக்க கலை என்று கொண்டால் ஜெயமோகனின் பெரும்பாலான கதைகள் நிலை கலைகளாகும். வெண்முரசு நிலைகலைக்கான சிறந்த எடுத்துக்காட்டு என கூறுவேன்.

இம்முறையில் கலையை பிரித்தறியலாமா?

ஸ்ரீராம்

***

அன்புள்ள ஸ்ரீராம்

கலையை பற்றிய இப்பிரிவினைகள் எல்லாமே ஒருவரின் சொந்த ரசனை சார்ந்தவை. அவர் எதை கொள்கிறார், எவ்வளவு தொலைவு செல்கிறார் என்பதைப்பொறுத்தே இவை மதிப்பு பெறுகின்றன.

இத்தகைய எத்தனை பிரிவினைகளை கலைசார்ந்த விவாதங்களில் கண்டிருக்கிறேன் என எண்ணிக்கொள்கிறேன். தற்காலிகக் கலை- நிரந்தரக்கலை என ஒரு பிரிவினை உண்டு. அன்றன்றுள்ளவற்றுக்கு எதிர்வினையாற்றுவதும் அன்றைய தேவைக்குரிய அரசியல், கருத்தியல் விளைவுகளை மட்டுமே உத்தேசிப்பதும் தற்காலிகக் கலை. என்றுமுள்ள மதிப்பீடுகள், கேள்விகளைச் சார்ந்தது நிரந்தரக் கலை. சுவரோவியங்கள், கோஷங்கள், துண்டிலக்கியங்கள் போன்றவை தற்காலிகக் கலைகள். சிற்பங்கள், நாவல்கள் போன்றவை நிரந்தரக் கலைகள்.

இதே பிரிவினை காட்சிக் கலையில் கலைக்கான பொருள் சார்ந்தும் பிரிக்கப்படுகிறது. உதாரணமாக ஒளியை வெவ்வேறுவடிவில் வீழ்த்தியோ மானுடரை வெவ்வேறுவடிவங்களில் வண்ணம்பூசி நிறுத்தியோ உருவாக்கும் காட்சிக்கலைகள் உண்டு. அவை நிகழ்ந்ததுமே மறைந்துவிடும். அவை தற்காலிகக்கலைகள். ஓவியங்களும் சிற்பங்களும் நிரந்தரமானவை. நாடகநடிப்பு தற்காலிகக்கலை. சினிமா நிரந்தரக்கலை.

இன்னொரு பிரிவினை உண்டு. முதன்மைக்கலை – இரண்டாம்நிலைக் கலை. முதன்மைக்கலை என்பது இசை,நாடகம், இலக்கியம், ஓவியம் போல மானுட உருவாக்கத்துடனேயே தானும் உருவாகி வந்தது. தனக்கேயான அழகியல்மரபும் இலக்கணமும் உள்ளது. இரண்டாம்நிலைக் கலை என்பது தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுவது. அந்த முதனிலைக் கலைகளை இணைத்து உருவாக்கப்படுவது. உதாரணம் சினிமா. இன்னும் புதியகலைகள் எழலாம்.எதிர்காலத்தில் அச்சும் சினிமாவும் இணைந்த கலைகள் பிறக்கலாம்

இந்தப்பிரிவினைகள் அனைத்தையும் மறுக்கவும் முடியும். ஏனென்றால் கலையை இப்படி முழுமையாக பிரித்துவிடமுடியாது. ஆகவே ‘உண்மையிலேயே’ இப்பிரிவினை உண்டா என்பதைப்பற்றிப் பேசுவதில் பொருளேதுமில்லை. இப்பிரிவினையைச் செய்பவர் அதன் வழியாக கலை சார்ந்த விவாதங்களில் மேலதிகமாக எதை பேசி நிறுத்துகிறார் என்பதே முக்கியமானது. என்ன வினாக்களை எழுப்பி என்ன புதியவிடைகளைப் பெறுகிறார் என்பதைக்கொண்டே இவ்விவாதத்தின் பெறுமதியை மதிப்பிடவேண்டும்.

நீங்கள் இப்பிரிவினையைச் செய்வதன் வழியாக கலையின் ரசனையில், கலைக்கும் தரிசனத்திற்குமான உறவில் எதை புதிதாகக் கண்டடைகிறீர்கள் என எண்ணிப்பாருங்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரைஅருண்மொழியின் உரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43