பாம்பாக மாறும் கை – கடிதம்

வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை

அன்புள்ள ஜெ,

 

கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களின் சில கவிதைகளை நான் எண்பதுகளில் கேரளத்தில் எர்ணாகுளத்தில் வேலைபார்க்கும்போது மேடையில் கேட்டிருக்கிறேன். இன்றுதான் அதன் முழுமையான மொழியாக்கத்தை வாசித்தேன். அன்று அது ஒரு சொற்பொழிவுபோலத் தோன்றியது. இன்று அந்தக்கவிதையின் அழகு தெரிகிறது

 

அன்றைக்கு நான் தமிழ்நவீனக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஆகவே இக்கவிதை மிக நீளமானது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் இப்போது வாசிக்கையில் ஒன்று தோன்றுகிறது. இத்தகைய நீளமான கவிதைகளில்தான் ஒரு படிமத்தை பல வகையாக மாற்றி வளர்த்துக்கொண்டே செல்லமுடிகிறது. அவை ஆழமான ஒரு பார்வையை அளிப்பவையாக மாறிவிடுகின்றன. சுருக்கமான கவிதைகளில் படிமங்கள் அப்படியே அசையாமல் நின்றுகொண்டிருக்கின்றன

 

தலைக்கு அணைவைத்த கை

பாம்பாக மாறி

கொத்தவருவதுபோல

 

என்ற வரி என்னை ஓர் உலுக்கு உலுக்கியது. நம் இன்றைய அரசியல் சூழலை, என்றும் மாறாமலிருக்கும் நம் ஏமாற்றத்தை இதைவிட கூர்மையாகச் சொன்ன படிமத்தை நான் வாசித்ததில்லை. நம் கவிதை என்றால் இவ்வளவுதான் ஒரு கவிதையில் இருக்கும். ஆனால் இங்கே படிமம் உருமாறிக்கொண்டே செல்கிறது

 பாவம், கௌதமன் இப்போது வராமலிருக்கட்டும்

வந்துவிட்டான் என்றால் என்னதான் செய்வான்?

வெறும் பத்துவிரல்களின் கருணையால்

இவற்றில் எந்த முடத்தை அவன் மீட்பான்?

 

என்ற வரியில் அது இன்னொரு இடத்தை நோக்கிச் செல்கிறது. வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வந்தால் என்ன செய்யமுடியும் என்ற கசப்பாக மாறிவிடுகிறது.

 

அதோடு இந்தக்கவிதை எழுதப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. நக்ஸலைட் காலத்தில் எழுதப்பட்டது. ஆனால் இன்றைய மோடிசாம்ராஜ்யத்தைப் பார்த்து எழுதியதுபோலவே இருக்கிறது

 

எஸ்.நாகராஜ்

மும்பை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 19
அடுத்த கட்டுரைசோலை,பயம், உறக்கம்: கே.ஜி.சங்கரப்பிள்ளை