சந்திரா ‘என்ன சொல்றது?’ என்றபின் ‘ஐ யம் டைம்லெஸ் யூ நோ’ என்றாள்
இது சந்திரா.
சுப்பு அய்யர் சொல்லியபடி பால சுப்ரமணியனைப்பார்த்து கண்ணடித்து ‘சும்மா சிக்குன்னு இருக்கா இல்ல?’
வர்ர ஆவணியிலே இவளுக்கு முப்பத்தஞ்சாறது. பாத்தா இருவத்தஞ்சு சொல்ல முடியுமா?’
இது சுப்பு ஜயர்
முகத்தின் ஆழமான சிலகோடுகள் வயதைக் காட்டத்தான் செய்கின்றன என்று தோன்றியது.
இது பாலு.
ராமன் அசாதாரணமான ஒரு மௌனத்தில் இருப்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது
இது ராமன்.
இந்த சில வரிகளிலேயே எல்லோரும் மிக அழகாக செய்யப்படுகிறார்கள்.
சந்திரா ஒரு வகையில் femme fatale என்ற ஒரு architype in இன் நிழலான ஒரு உருவம் , ஒரு வகையில் muse உம் கூட .
மற்ற கதைகளை விட இந்தக் கதையில் பாத்திரப்படைப்பும் அவர்களிடையே இயற்கையாக அமைந்த வித்தியாசமும் அதனால் வரும் ஊடாட்டமும் மிக நன்றாக அமைந்துள்ளது .
குறிப்பாக பாலுவிற்கும் ராமனுக்கும் இடையில் ,தாயார் பாதத்தில் ஆரம்பித்ததை இங்கு விரிவாக எழுதி இருக்கின்றீர்கள் .
சந்திரா என்ற enticing and eluding பிம்பத்தை ,மூவரும் தங்களில் ,ஒரு பிம்பம் என்று தெரிந்தே பலவாறாக பிரதிபலித்துக் கொள்கிறார்கள்.
ஒரு வகையில் சந்திரா இங்கு சிம்பாலிக் மட்டுமே,அவள் kaleidoscope உள்ள ஒரு உடைந்த ஒரு கண்ணாடி வளையல் மாதிரி அதை மூன்று வேறுபட்ட கலைஞர்களும் , கலை என்ற வெளிச்சத்தில் வைத்து முடிவில்லா pattern களாக தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
சந்திராவின் தரப்பை விரிவாக்காமல் விட்டிருப்பது மிகச் சரி , அது அப்பொழுது தான் ஒரு engima வாக இருக்கும்.
மயில்திரும்புவதுபோல. மயில் கழுத்தை திருப்புவதை மட்டும் வார்த்தையாக்கிவிட முடியுமா?
குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன? சட்டென்று எரிச்சலும் நிம்மதியின்மையும் எழ பாலசுப்ரமணியன் தன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டார்.
அழகு அவகிட்டயா இருக்கு? என் தாபத்திலே இருக்கு பாலு. எனக்குள்ள தீயா எரியற இந்த தாபத்தில இருந்துதான் நான் பாக்கற எல்லா அழகும் பொறந்து வருது
‘வள்ளிக்குதான்…நீலம்னா அது காட்டோட நெறம்ல?
கலைஞனுடைய ஓயாத அலைச்சலையும், தேடலையும் அதை அவன் sublimate செய்து மேலெழுவதையும் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.
எளிமையான அகம் கொண்ட பிறவிக்கலைஞன். எழுத்தையும் சங்கீதமாக்கியவன். அவரைச் சற்றும் சீண்டாமல் அவரது அந்த மனநிலையை சென்று தொடும் சொற்றொடரை பாலசுப்ரமணியன் உடனே கண்டுகொண்டார்.
அவர் எப்போது ஒருமையில் கூப்பிடுவார் என்று பாலசுப்ரமணியன் யோசித்தார். அவருக்குள் ஒரு கணக்கு இருக்கும் போல.
‘அண்ணா கவனிச்சிருப்பர். அவரு கண்ணு அப்டி
கலைஞர்களுக்கிடையே அமையும் நுட்பமான ஒரு புரிதலும், அவதானிப்பும் கதை முழுதும் வருகிறது
கழிப்பறை, இருட்டில், தனிமையில் ,இறுக்கம் தளர்ந்த வேளையில் அந்த ஒளி பாலுவையும் மூச்சுத்திணறடித்து மூழ்கடிக்கிறது .
எனக்கு அறத்துக்கு நிகராக பிடித்த கதை இது
-கார்திக்
ஜெ,
“நெஞ்சடைக்க கைகூப்பியபடி ஒரு சொல் மிச்சமில்லாமல் மனமிழந்து நின்றேன்”. இதன் பேர் தான் சரணாகதமா? அலகிலா விளையாட்டுடைய பிரபஞ்சத்தின் முன்பு செயலற்று, சொல்லற்று தன்னைச் சிறிதிலும் சிறிதாய் உணரும் தருணம்.
ஒரு அலையை அனுபவித்துத் தீர்க்குமுன் அலை அலையை சிறுகதைகள் குவிகின்றன! :-)
நன்றி,
சுந்தரவடிவேலன்.
அன்பிற்கினிய ஜெயமோகன்,
இந்தக் கணம்தான் யானை டாக்டர் கதை(?) வாசித்து முடித்தேன்.
படித்தபோது எனக்கு நேர்ந்தது – குறிப்பிடத்தக்க இரு நிகழ்வுகள்.
என கண்ணில் தொடர்ந்து வழிந்த கண்ணீர்;
நான் அந்தக் காட்டில் நடமாடிய கதை சொல்லியாகவே மாறி விட்டிருந்தது.
‘ஒண்ணுபண்ணுவோமா? சொறியாமல் இருக்க முயற்சிபண்ணுங்க. அரிக்கும், அந்த அரிப்பை கூர்ந்து கவனியுங்க. என்ன நடக்குதுன்னு பாத்துண்ட்டே இருங்க. உங்க மனசு எதுக்காக இப்டி பதறியடிக்குது? எதுக்காக உடனே இத சரிபண்ணியாகணுனும் துடிக்கறீங்க? எல்லாத்தப்பத்தியும் யோசியுங்க…செஞ்சுடலாமா? – இதை நான் சத்குரு ஜக்கியின் வகுப்பில் உணர்ந்திருக்கிறேன்.
‘ஆமா அவங்களுக்கு தெரியும், அதுவும் வாழ்க்கைதான்னு….மனுஷன்தான் அலறிடுறான். மருந்து எங்க மாத்திர எங்கன்னு பறக்கிறான். கைக்கு அகப்பட்டதை தின்னு அடுத்த நோயை வரவழைச்சிடறான்…மேன் இஸ் எ பாத்தடிக் பீயிங்– நீங்க வாசிப்பேளா?’
கதையில் வரும் அதே அருவருப்பு எனக்கும் புழுக்களிடம் இருந்தது இது வரை. இனி இருக்காது.
மனிதனுக்கு இருக்கும் அதே உரிமைதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்தப் புவி மீது உள்ளது. அதை உணர மறுப்பதுமின்றி பிற உயிர்களை கீழ்மையாக எண்ணுவதும் மனிதன் செய்யும் மோசமான தவறு.
Man, a vain insect என்பதை அவன் என்றுமே உணர்ந்ததில்லை. அதன் விளைவுதான் அத்தனை ஆரவாரங்களுக்கும் காரணமாகிறது.
சொல்லாட்சி, நிகழ்வுகள், இயல்பான போக்கு – எதைச் சொல்ல?
‘சரி அது, அத இந்தக்காட்டிலே வச்சுண்டு நான் என்ன பண்ணறது? வெளியே போயி செல்வாகிட்ட காட்டி இந்தபாரு இனிமே நீ மரியாதையா நடந்துக்க நான் பிரம்மஸ்ரீயாக்கும்னு சொல்லவா?
‘இந்தக்காட்ட நீ புரிஞ்சுகிட்டாத்தான் இங்க எதையாவது செய்ய முடியும். காட்ட புரிஞ்சுக்கணும்னா காட்டிலே வாழணும். இங்க வாழணும்னா முதல் விஷயம் உன்னோட அந்த உலகத்திலே இருக்கிற பணம் புகழ் அதிகாரம் லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் உதறிண்டு நீயும் இந்த குரங்குகளை மாதிரி இந்த யானைமாதிரி இங்க இருக்கிறதுதான். உனக்கு இவங்களை விட்டா வேற சொந்தம் இருக்கக்கூடாது. போய்யா, போயி வெளிய பாரு. அந்தா நிக்கிறானே செல்வா…அவனை மாதிரி வேற ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியுமாய்யா? அந்த நிமிர்வும், அந்த கருணையும், அற்பத்தனமே இல்லாத அந்த கடல்மாதிரி மனசும்…அதை அறிஞ்சா அப்றம் எந்த மனுஷன் உனக்கு ஒரு பொருட்டா இருக்கப்போறான்? பிரதமரா, ஜனாதிபதியா? அந்த யானைக்கு உன்னை தெரியும்கிறத பெரிசா நெனைச்சேன்னா டெல்லியிலே எவனோ நாலு கேணையனுங்க எதையோ காயிதத்திலே எழுதி கையிலே குடுக்கறத பெரிசா நெனைப்பியா?‘
இந்த வரிகளைத் தாண்டிச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது என்றே தெரியவில்லை.
பேசத் தெரிந்த மனிதர்கள் நோய் வயப்பட்டு வந்தாலே அவர்களிடம் அதி மேதாவித் தனத்துடன் மேலோட்டமாக மருத்துவம் பார்க்கும் டாக்டர்களிடையே, வாய் திறந்து சொல்லத் தெரியாத உயிர்களை நேசித்து, அவற்றுடன் வாழ்ந்து, அவற்றை உணர்ந்து, அவற்றுக்கு மருத்துவம் செய்த டாக்டர் கே – என் நினைவுள்ள வரை என்னால் மறக்க முடியாது – புதுமைப் பித்தனின் சிற்பியின் நரகத்தில் வந்த பைலார்க்கஸ், ஜெயகாந்தனின் கல்யாணி இவர்களுடன் என் நினைவில் டாக்டர் கேவும் இருப்பார்.
அறம், சோற்றுக் கணக்கு, வணங்கான், தாயார் பாதம் – படித்த போதே எழுதியிருக்க வேண்டியது. எல்லாவற்றையும் மீறி என்னுள் இவ்வளவு பதிப்பை ஏற்படுத்தியது யானை டாக்டர்தான். தூக்கத்திலும் கனவிலும் யானை எப்போதும் என்னுடன் இருக்கும். நினைவில் டாக்டர் கே இருப்பார்.
சிந்தனைக்கு வடிவம் கொடுத்து, எழுத்தில் வடித்த உங்கள் கைகளை கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்.
உங்கள் நல்லியல்பு மேலும் வளமும் பொலிவும் பெறட்டும்.
அன்புடன்
இளைய குமார் சு
அன்புள்ள இளையகுமார்
ஒவ்வொரு கதையிலிருந்தும் நான் உடனே வெளியேறிக்கொண்டே இருப்பதனால் பலசமயம் கதைகளுக்குள்ளே ஓடும் பொதுமை அல்லது வேறுபாடு அல்லது தர வரிசை எனக்கு ஆச்சரியமாகவும் புதியதாகவும் தான் இருக்கிறது.
இக்கதைகளில் கற்பனை உண்மையை ஒளிபெறச்செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மட்டுமே என்னால் சொல்லப்பட முடிவது
நன்றி
ஜெ
ஜெ மோ சார்,
யானைகள் பிச்சை எடுக்க வைக்கப்படும் காட்சி கண்களை உறுத்தும் எப்பொழுதும்.
உங்கள் யானை டாக்டர் போல ஒரு நாலு பேர் இருந்தால் போதும்.
யானைக்கு இதேமாதிரி முள்ளு எடுத்தோமே. அப்ப அந்த பெரிய மஞ்சணாத்தி மரத்தடியிலே நின்னது இவன்தான். அப்ப ரொம்ப சின்னக்குட்டி. எருமைக்குட்டி மாதிரி இருந்தான்..’ என்றார். ‘எப்டி தெரியும்?’ என்றேன். ’ஏன், அங்க பாத்த ஒரு மனுஷனை உன்னால திரும்ப பாத்தா சொல்லிட முடியாதா என்ன?’
நமஸ்காரங்கள்.
—
அன்புடன்,
ரேவதி.
http://pukaippadapayanangal.blogspot.com
அன்புள்ள ரேவதி நரசிம்மன்
மிக எளிய விஷயம். ஒருநாள் முழுக்க குருவாயூர் யானைக்கொட்டிலில் இருந்தால்போதும் யானைகளை தனித்தனி முகங்களாக காண ஆரம்பித்துவிடுவோம்
ஜெ
அன்புள்ள ஜெ,
யானைடாக்டரை வாசித்தேன். மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். தாங்கள் குறிப்பிடது போல வாசிப்பு ஒரு நல்ல அனுபவமாக அமைகிறது. மிருகங்களைப் பற்றி ஒருவர் எழுதிய கடிதத்திற்கு தங்களின் பதிலையும் படித்தேன். நான் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
எனது அனுபவம் ஒன்று.
கஜகிஸ்தானில் டெமிர்டாவ் (TEMIRTAU) என்னும் ஊரில் இருந்து எழுதுகிறேன். இப்பொது இங்கு – 20 செல்சியஸ் வெப்பம். எங்கும் வெள்ளையாக வெண்பணி. குளிர். குளிர் எங்கும் குளிர். இந்த குளிரிலும் குருவிகளும் புறாக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன! இந்த பணியில் எங்கே இவை இரை எடுக்கும் என்று பலமுறை யோசித்துள்ளென். எங்கள் இருப்பிடத்தை சுற்றி குருவிகள் பறப்பதுண்டு.
வண்டு வைத்துவிட்ட கோதுமை ரவை என்னிடமிருந்தது. பால்கனியில் இருந்த பணியை அகற்றி அந்த ரவையை தூவினேன். குருவிகள் வருமா அந்த இரையை எடுக்குமா என்று காத்திருந்தேன். முதல் நாள் வரவில்லை. அடுத்த நாள் அதிகாலை வெலைக்கு சென்று விட்டு மாலை திரும்பி வந்ததும் முதலில் பால்கனி சென்று பார்த்தேன். ரவையை காணவில்லை. மனம் மகிழ தினமும் போட ஆரம்பித்தேன். காலையில் இரை இடுவதும் மாலையில் அது தின்னப்படுவதைக் கண்டு மகிழ்வதுமாக ஒரு வாரம் கழிந்தது. அடுத்த ஞாயிறு வந்தது. அந்த குருவிகளைக் காண ஆவலாய் இருந்தேன். இரை இட்டு விட்டு காத்திருந்தேன். இதோ ஒன்று வந்தது. அடுத்தது ஒன்றாக ஒரு கூட்டமே வந்தது. திரைச்சீலையை கொஞ்சம் விளக்கினேன். அனைத்தும் ஓடி விட்டன. பின்னர் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் வந்தன. ஆனால் என்னைக் கண்டால் ஓடி விடுகின்றன். இப்படியே நாட்கள் கழிகின்றன.
வண்டு வைத்துவிட்ட ரவையை தீர்ப்பதற்காக செய்ய ஆரம்பித்தது, விலைக்கு வாங்கி தினமும் இட தொடர்ந்தது. ஒரு முறை வேறு ஏதும் இல்லாமல் போக ஊரிலிருந்து கொண்டு வந்த பொன்னி புழுங்கலரிசியை இட்டேன். இங்கு கிடைக்கும் தானியங்களை வாங்கி இடுவது வழக்கமாகி விட்டது.
கண்ணாடி வழியாக குருவிகள் என்னைப் பார்ப்பதுண்டு. ஓரு நட்பு உருவாவதாக உணர்கிறேன். என்றாவது அவை என்னைக் கண்டால் பறந்து ஓடாமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். உங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது.
நெரம் ஒதுக்கி இந்த மடலைப் படித்ததற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டிருந்த NHM மென்பொருளை உபயோகித்து இதை எழுதுகிறேன்.
நன்றி. வாழ்க.
அன்புடன்,
சம்பத்.
அன்புள்ள சம்பத்
பொதுவாக பறவைகள் மெல்லமெல்லத்தான் மனிதர்களை அடையாளம் காண்கின்றன. அவை பெரிதும் உள்ளுணர்வுக்ளால் ஆனவை, தர்க்கம் குறைவானவை.
பறவைகள் பற்றி கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது மணிநேரம் ஓடும் காட்சிச் சித்திரத்தை அஜிதன் சேர்த்து வைத்திருக்கிறான். ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தன் முட்டைகளை பாதுகாக்க ஒரு சிறு பறவை போடும் நாடகத்தையும் நடிப்பையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு மகத்தான கவிதை அளிக்கும் எழுச்சி ஏற்பட்டது.
வானிலும் மண்ணிலும் நிறைந்திருக்கிறது ‘பிரக்ஞை’ என்ற ஒன்று.
ஜெ