காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது
உலகுக்கு வந்துசேர்வது கடினம்
உலகை விட்டுச்செல்வதும் கடினம்
போவது என்றால்
என்னை நான் விடுவித்து எடுப்பதா
அல்லது எல்லாம் என்னை விட்டு அகல்வதா?
எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று வளர்வது தொலைவு
எல்லாவற்றிலும் வாழ்வதும் தொலைவு
வெயில் தொடுவதில்லை வந்து
காற்று தழுவுவதில்லை வந்து
காதலும் வாழ்த்துவதில்லை முழுக்க
மரணமும் மறைப்பதில்லை முழுக்க
எதிரியும் கசப்பதில்லை முழுக்க
தோல்வியும் வீழ்த்துவதில்லை முழுக்க
பிரக்ஞை செயல் கொந்தளிப்பு எதுவும்
நிகழ்வதில்லை முழுக்க
நினைவோ கனவோ காயமோ
காட்டுவதில்லை முழுக்க
எந்த ஆழமும் நிரம்பிவருகின்றன
எந்த தொலைவிலும் ஒரு நெருக்கம்
எந்த எருக்கத்திலும் ஒரு தொலைவு
எந்த நிறைவிலும் ஒரு குறைவு
எல்லா நூறும் தொண்ணூறு
எங்கு முழுக்க பெய்வேன்
நான் என் மழையை?
எவரில் முழுக்க எரிவேன்
நான் என் வெயிலை?
எதில் முழுக்க தாண்டுவேன்
நான் என் கடலிரவை?
காலில் எப்போதும் எஞ்சுகிறது வழி
கடைசி சூரியன் எழும் நாள்
என்றாவது ஒருநாள் இறக்காமலிருக்க முடியாது
என்று சொல்கிறது உலகம்
அதில் மாற்றமில்லை என்றால்
எனக்கு அன்று ஒரு எதிர்க்கூட்டம் உடனிருக்கவேண்டும்
அந்நாளில் நான் தூயனும் முழுமையடைந்தவனும் ஆகவேண்டும்
பத்திரிகைகள் வேண்டும் அன்று
உதிக்கவேண்டும் நீதிநிலாவெளிச்சம்
ஒரு மயக்கதில் பார்க்கவேண்டும்
மைந்தரின் முதற்புன்னகை போன்ற கைலாயம்
முதல் அழுகை போன்ற கல்வாரி
மற்றொரு மயக்கத்தில் இளமையின் குருதிக்குழாயில்
அவள் வரைந்த அழியாத்தழல்
சாவிலா வேள்வி
நரைப்பதுபோல
முடியுதிர்வதுபோல
பனை பூப்பதுபோல
அத்தனை மெல்ல
ஓசையே இல்லாமல்
வரவேண்டும் இறுதி
இனிய வாழைப்பழம் என
கறை கனிந்து
கிளியுக்கும்
குழந்தைக்கும்
எவருக்கும்
இனிப்பும் மணமும் மட்டுமே
அளிப்பதற்குள்ளது என்னும்
அமைதியான சுவையான முடிவு.
அது வரும் நேரம்
அதன் மெல்லிய அலைகள்மேல்
அந்திச்சுடரிலும்
சிறு புன்னகையாக தொலைவிண்மீனிலும்
வயல்பனித் துளியின்
கனவுப்பிறப்பிலும்
சொல்லாமல் நான் விட்ட
அனைத்தும்
தங்கள் கதைகளும் பாட்டுமாக
வந்து நிற்கலாகும்
இக்கரையில் ராமன் இருந்தால்
நான்கு வம்பர்கள் கூடிய சபையில் இருக்கையில்
ஆற்றல் வந்தது எனக்கு அவனை நாறடிக்க.
முதல் பீடியை இழுத்தபோதிருந்த இருமலோ
முத்தமிட்டபோதிருந்த நடுக்கமோ
குடித்தபோதிருந்த குமட்டலோ
புளுகியபோதிருந்த திக்கலோ
விகடம் அமையாதுபோன பம்மலோ
கதை வெளிப்பட்டதன் தோல்வியோ
ஒன்றும் நிகழவில்லை முதல் புறம்கூறுதலில்.
குருதியின் சூடான மணம்
அந்நிமிடத்தின் கோப்பையிலிருந்து எழுந்தது என்றாலும்
ஒரு கடும் கசப்பு
அகநாவில் படிந்தது என்றாலும்
உடனிருப்போரை தோற்கடிக்காமல்
நான் எப்படி ஜெயிப்பது?
தோழரை சிறியவர்களாக்காமல்
நான் எப்படி வளர்வது?
மற்ற நர்சத்திரங்களை மூடாமல்
நான் எப்படி சுடர்வேன்?
இதோ என் சொற்களைச் சுற்றி
அர்த்தங்கள் செறியத் தொடங்குகின்றன.
என் படிமத்தைச் சூழ்ந்து விசிறிகளும்.
மற்ற தோழனோ?
அவனுக்கு எதிராக சூழ்ச்சிகள்
என் நதி அதுவே முடையும் சுழிகள்
மூழ்கி எழுந்து மூழ்கி
அவன் என்னுடன் இருந்தாகவேண்டும்
எதிரியில்லாமல் என்ன வெற்று?
என்ன மகிழ்ச்சி?
மனிதர்களெல்லாரும் ஒன்றுபோல் ஆகப்போவதில்லை
ஒருபோதும்
இக்கரையில் ராமன் இருந்தால்
ராவணன் உண்டு அக்கரையில்.
ராவணன் இல்லாமல்
எத்தனை சலிப்பூட்டுவது
ராமனின் வாழ்க்கை!