அன்புள்ள ஜெ,
“என் மனதில் இருந்ததை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்” என்று சொல்வது பாராட்டு அல்ல; அவமதித்தல். “இதில் புதிதாய் ஏதும் இல்லை, எல்லாம் நான் ஏற்கனவே அறிந்தது தான்” என்பதே அதன் உட்பொருளாகக் கொள்ள முடிகிறது. அதைக் கேட்டு எழுதியவர் சந்தோஷப்படுவார் என்றா நினைக்கிறீர்கள்! நான் மாட்டேன்.
இது எழுத்தாளர் சரவணக் கார்த்திகேயன் சொன்ன வரி. இது உண்மையில் பிழையா? எனக்கு நல்ல படைப்புக்களை படிக்கையில் அப்படித் தோன்றியிருக்கிறது. பலரிடம் சொல்லியிருக்கிறேன்.
ராஜ்
அன்புள்ள ராஜ்,
இல்லை, அப்படி உணர்வதே இலக்கியவாசிப்பின் இயல்பான நிலை. அப்படி உணரவைப்பவனே நல்ல எழுத்தாளன். அதைத்தான் evocation என்கிறர்கள்.
இலக்கியம் சொல்லும் ஒரு விஷயம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது? அறிவுத்துறைகள் தாங்கள் சொல்லும் கருத்துக்களை நம்பவைக்க தர்க்கபூர்வமாக விளக்குகின்றன.நிரூபிக்கின்றன. இலக்கியம் அதைச் செய்வதில்லை. வாசித்ததுமே வாசகன் ஆம், உண்மை என உணர்கிறான். பெரும்பாலான நல்ல படைப்புக்களை நாம் தலையாட்டிக்கொண்டே வாசிப்போம் என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார்
இலக்கிய உண்மை என்பது நிரூபணம் தேவையில்லாமல் தன்னை நிறுவிக்கொள்வது’ என்ற கூற்று நினைவுக்கு வருகிறது. ஏன் நிரூபணம் தேவையில்லை? ஏனென்றால் வாசகன் ஏற்கனவே அறிந்திராத ஒன்றை இலக்கியம் சொல்வதில்லை. அவன் இலக்கியத்திலிருந்து அறிவது இலக்கியப்படைப்பில் இல்லை, அவனுள் இருக்கிறது. அவனுடைய வாழ்க்கை அனுபவத்தில். இலக்கியம் அதைச்சுட்டிக்காட்டுகிறது
இலக்கியப்படைப்பு வாசகனை மெய்நிகர் வாழ்க்கை ஒன்றை வாழச்செய்கிறது. கற்பனையில் அவன் உண்மையான எல்லா அனுபவங்களையும் அடைகிறான். அந்த வாழ்க்கைப்பரப்பில் உண்மைகளை கண்டடைகிறான். அதன் செயல்பாட்டு முறை அது
அந்த உண்மைகள் வாசகனின் ஆழுள்ளத்தில் – நனவிலியில் உள்ளன. அவன் அறிந்திருப்பதில்லை. அல்லது தெளிவாக உணர்ந்திருப்பதில்லை. அல்லது சொல்வடிவமாக ஆக்கிக்கொண்டிருப்பதில்லை. இலக்கியப்படைப்பு தன் evocation வழியாக அந்த ஆழுள்ளத்தை தீண்டுகிறது. அங்கே வாசகனே அறியாமல் அவனுள் இருக்கும் உண்மையை அவன் அறியும்படி கொண்டுநிறுத்துகிறது. ஆகவேதான் இலக்கியம் ஆழுள்ளத்திற்கு ஓர் ஊடுருவல் – raid in to the unconscious- என்று சொல்லப்படுகிறது
அவன் அதை பரவசத்துடன் கண்டடைகிறான். அது அவனுடைய உண்மை என்பதனால்தான் அதை நம்புகிறான். தன் கூற்றாகவே கொள்கிறான். தன் தரப்பைச் சொல்ல முன்வரும்போது மெய்யான அனுபவத்தை சான்றாகக் காட்டுவதற்கு இணையாகவே தான் வாசித்த இலக்கியப்படைப்பையும் சான்றாகச் சுட்டிக்காட்டுகிறான். தன் வாசிப்பனுபவத்தையே அவன் முன்வைக்கிறான் என்பதைக் கவனியுங்கள்.
இலக்கியவிமர்சனத்தின் சொற்கள் அறியாத வாசகன் ’நான் நினைத்ததை அப்படியே எழுதிவைத்திருக்கிறீர்கள்’ என்று சொல்வது இதைத்தான். அவன் ஆழுள்ளத்தில் ஊடுருவி அவன் உணர்ந்து ஆனால் அறியாமலிருந்த ஒன்றை அப்படைப்பு காட்டிவிட்டது என்று அவன் கூறுகிறான்.அது இலக்கியவாதிக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த பாராட்டே
நீங்கள் என் ஆழுள்ளத்தில் ஊடுருவிவிட்டீர்கள் என்றுதான் அவ்வாசகன் கூறுகிறான். நீங்கள் நான் என்னைக் கண்டடைய உதவினீர்கள், நீங்கள் எனக்குச் சொற்களை அளித்தீர்கள், நீங்கள் என் அனுபவங்களை நான் அறிய உதவினீர்கள், நீங்கள் என் எண்ணங்களை வரையறுத்துக்கொள்ள வழிவகுத்தீர்கள் என்று சொல்கிறான். இலக்கியவிமர்சனச் சொற்கள் இல்லாமல் வரும் வாசகனின் கருத்து என்பது மிகமுக்கியமானது
ஜெ