பீடமா?

அன்புள்ள ஜெ

 

மீண்டும் ஒரு கேள்வி, இதையும் கேட்டுவிட்டால் முடிந்தது. நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டாலும் சரி. நீங்கள் ஒரு இலக்கியபீடம் ஆக, இலக்கிய அதிகாரமையம் ஆக முயல்கிறீர்களா? விஷ்ணுபுரம் விழா உட்பட நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல்களுக்கான காரணம் இதுதானா?

 

எஸ்.செல்வக்குமார்

அன்புள்ள செல்வக்குமார்,

 

இத்தகைய வம்புகள் விஷ்ணுபுரம் விழா எப்படி நிகழ்வது என்பதை நேரில் வந்து பார்க்காதவர்கள், பார்த்தும் உளம்கொள்ளாதவர்களின் வம்புகள் மட்டுமே. இவ்விழா தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. இன்றுவரை ஓர் அரங்கில்கூட என் படைப்புக்கள் விவாதிக்கப்பட்டதில்லை. என் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுமில்லை. பிறபடைப்பாளிகளின் கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன. என்னை மறுப்பவர்களும் கூட பேசியிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்பவர்களும் ஆளுமைகொண்ட வேறு எழுத்தாளர்கள்தான்.

இலக்கியத்தில் அப்படி உண்மையில் அதிகாரம், பீடம் உண்டா? அப்படி நம்புபவர்கள் உண்மையில் இலக்கியம் செயல்படும் விதமென்ன என்றே அறியாதவர்கள். இலக்கியத்தை வேடிக்கை பார்ப்பவர்கள். இலக்கியத்தை தாங்கள் அறிந்த அரசியல் வழியாக அணுகுபவர்கள்.

இலக்கியத்தில் சிலகுரல்கள் மதிக்கப்படும். சிலகுரல்கள் கவனிக்கப்படும். அது தவிர்க்கமுடியாது. அது ஏனென்றால் அக்குரல் தொடர்ச்சியாகச் சூழலில் ஒலித்துக்கொண்டிருப்பது, ஒரு கோணத்தை வாசகர்களிடம் முன்வைத்து அதை நிறுவிக்கொண்டுவிட்டது. சுந்தர ராமசாமியோ, வெங்கட் சாமிநாதனோ, ஞானக்கூத்தனோ, தேவதச்சனோ, க.நா.சுவோ சி.சு.செல்லப்பாவோ அப்படித்தான் செயல்பட்டார்கள். அந்த ஏற்பே அவர்களுக்கான இடம்.

ஆனால் அது எந்த வகையிலும் அதிகாரம் அல்ல. அவர்களே பிழையான, குறைவான ஒரு படைப்பைச் சுட்டிக்காட்டினால் உடனே நிராகரிக்கப்படும். ஒருகாலகட்டத்தின் இலக்கிய இயக்கத்தின் மையமாகத் திகழ்ந்த க.நா.சுவால்கூட எவரையும் இலக்கியச் சூழலில் நிறுவ முடியவில்லை. அவர் சுட்டிக்காட்டிய ஷண்முகசுப்பையா, ஆர்.ஷண்முகசுந்தரம். ந.சிதம்பரசுப்ரமணியம் ஆகியோர் நிலைகொள்ளவில்லை. ஏன் அவருடைய கதைகளிலேயே இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே நிலைகொண்டன.

சி.சி.செல்லப்பா பி.எஸ்.ராமையாவைப் பற்றி புகழ்ந்து இரவுபகலாக எழுதிக்குவித்தும்கூட சிறுகதையில் அவருக்கு ஓர் இடம் உருவாகவில்லை. சுந்தர ராமசாமியால் காசியபனை நாவலாசிரியராக நிலைநிறுத்த முடியவில்லை. நாரணோ ஜெயராமனை கவிஞராக நிலைநிறுத்த முடியவில்லை.

இத்தனைக்கும் அவர்கள் அதிகாரத்தால் அவர்களை நிலைநிறுத்த முயலவில்லை, உண்மையிலேயே அவர்கள் அவ்வெழுத்துக்களை விரும்பி கொண்டாடினார்கள்.

இலக்கியத்தில் அதிகாரமையம், பீடம் என எதுவும் கிடையாது. ஒருவர் ஓர் அழகியல்நோக்கை, ஒரு பார்வைக்கோணத்தை முன்வைத்து வாசகர்களிடம் பேசி, புனைவுகள் மூலம் அதை நிறுவினால் அந்த அழகியல், அந்த கோணம் ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அவர் எந்தவகையிலும் அதிகாரம் அடைவதில்லை. இலக்கியமறிந்த எவரும் அப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை. எனக்கு இலக்கியத்தின் செயல்பாடு தெரியும். ஆகவே நான் ஒருபீடம் என்றோ அதிகாரம் என்றோ நினைக்கும் அளவுக்கு அறிவின்மை என்னிடம் இல்லை. அறிவிலிகள் என்னை அவர்களைப்போன்ற ஒருவன் என நம்பலாம் – நான் அப்படி அல்ல.

தன் அழகியலை, தன் பார்வையை சூழலில் பேசி எழுதி புனைவெழுதி நிறுவவேண்டியது ஒவ்வொரு படைப்பாளிக்கும் உள்ள அடிப்படைக் கடமை. அதன்வழியாகவே கருத்துச்செயல்பாடு, இலக்கிய இயக்கம் நிகழ்கிறது. சுந்தர ராமசாமி அதைத்தான் செய்தார். க.நா.சு செய்தார். சி.சு.செல்லப்பா செய்தார். அவர்கள் இலக்கிய இயக்கங்களை உருவாக்கினர். இதழ்களை நடத்தினர். பிரசுர நிறுவனங்களை உருவாக்கினர். நண்பர்கூடுகைகளை அமைத்தனர். வாழ்நாளெல்லாம் செயல்பட்டனர். மு.தளையசிங்கமும், கைலாசபதியும் அதைத்தான் செய்தார்கள். இன்று எழுதவரும் ஒவ்வொருவரும் அதைத்தான் செய்யவேண்டும், நீங்களும் அதையே செய்யவேண்டும். உங்கள் எழுத்தால் பேச்சால் உங்கள் அழகியலை பார்வையை முன்வைத்து சூழலில் அழுத்தமான செல்வாக்கை உருவாக்குவதே உங்கள் கடமை..

க.நா.சு , சி.சு.செல்லப்பா முதல் அத்தனைபேரும் பீடமாக மாறவும், அதிகாரத்தை அடையவும்தான் அதையெல்லாம் செய்தார்கள் என ஒருவன் சொன்னான் என்றால் அவனுடைய இலக்கியப்புரிதல்தான் என்ன? அவன் எவரை இழிவுசெய்கிறான்? இலக்கியம் என்னும் மாபெரும் இயக்கத்தை, அதன் மகத்தான முன்னோடிகளைப்பற்றி இப்படி புரிந்துகொண்டிருக்கும் அந்த தாழ்வுணர்ச்சி நோயாளியின் கருத்துக்களுக்கு என்ன மதிப்பு?

ஜெ

துதிபாடி வட்டம் தேவையா?

அயல் இலக்கியங்களும் தமிழும்

முந்தைய கட்டுரைசொல்
அடுத்த கட்டுரைமாயவி(த்)தை- ஜானவி பரூவா