விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். நான் 2011, 2012, 2014 ஆண்டுகளில் சென்னையில் இருந்தேன். கோவைக்கு வந்து விழாக்களில் கலந்துகொண்டேன். அப்போது இலக்கியத்திற்கு புதியவன். ஓர் ஆவலில் வந்தேனே ஒழிய எவருடனும் நெருங்கவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பேசினால் நாம் அதிகம் வாசிக்கவில்லை என்பது தெரிந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. ஆகவே அதிகம் பேசவில்லை. 2015 ல் நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன். இப்போது இவ்விழாவைப்பற்றிய செய்திகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்

திடீரென்று ஒருநாள் இங்கே ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஞானக்கூத்தன் பற்றி பேச்சுவந்தது. நான் அவரை விஷ்ணுபுரம் விழாவில் கண்டதைப்பற்றிச் சொன்னேன். நண்பர் ஆச்சரியமாக ‘என்ன நண்பா வரலாற்றில் எல்லாம் ஊடுருவியிருக்கிறீர்கள்” என்றார். உண்மையில் ஒரு திகைப்புதான் ஏற்பட்டது. அவர் வேடிக்கையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அது உண்மை. நான் வரலாற்றில் இருந்திருக்கிறேன். அதை நான் உணர்ந்திருக்கவில்லை

ஜே.ஜே.சில குறிப்புகள் வாசித்தபோது பாலு ஜேஜேயை சந்தித்த இலக்கியவிழா பற்றி கவனித்தேன். அதைப்போன்ற ஒரு இலக்கிய நிகழ்வுதான் இதுவும். ஒரு பத்தாண்டு கழிந்தால் நினைவில் சரித்திரமாக ஆகிவிடும். ஏனென்றால் இதில் பங்களிப்பவர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடமுள்ளவர்கள்.

ஓர் ஆண்டில் தமிழகத்தில் இலக்கியத்தில் என்ன நிகழ்கிறது என்று பார்த்தால் மிகமிகச் சொற்பம். அதில் முக்கியமானது இந்த விழாதான். மற்றவை எல்லாம் சின்னக்கூட்டங்கள்தான். இலக்கியம் நமக்கு அதன் சமகாலத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் காலம்போகப்போக அது வளர்ந்துவிடுகிறது. அரசியலில் சினிமாவில் பெரிய நிகழ்ச்சிகளகாத் தோன்றியவை எல்லாம் சாதாரண விஷயங்களாக ஆகிவிடுகின்றன. இது சரித்திரம் என்பதிலே சந்தேகமே இல்லை. அதில் பங்கெடுப்பது சரித்திரத்தில் பங்கெடுப்பதுதான். ஆனால் நமக்கு அப்போது தெரிவதில்லை

அன்று நான் இன்னும் கொஞ்சம் எல்லாரிடமும் பேசியிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். ஏக்கமாகவே இருக்கிறது

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,

இத்தகைய விழாக்கள் வரலாற்றின் பகுதிகள் என்பதில் ஐயமில்லை. 1980களில் குற்றாலத்தில் கலாப்ரியா அவர்கள் பதிவுகள் என்னும் இலக்கியவிழாவை நடத்தினார். விஷ்ணுபுரம் விழாவுடன் ஒப்பிடுகையில் சிறிய சந்திப்பு – அன்றைய சூழலே மிகச்சிறியது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை முறை அந்தச் சந்திப்பை நினைவுகூர்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியம். பெரும்பாலும் எல்லா இலக்கியக்கூட்டங்களிலும் உரைகளில் அந்தச் சந்திப்புகள் பற்றி எவரேனும் பேசுவார்கள். இன்று அது வரலாறு.

சமீபத்தில் மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கில் மூன்றுபேர் அதைப்பற்றிச் சொன்னார்கள். ஒரு நண்பர் என்னிடம் “என்ன சார் இது, கம்யூனிஸ்டுகளின் கல்கத்தா மாநாடு மாதிரி சொல்லிட்டிருக்காங்க” என்றார். நான் சிரித்தபடி “கம்யூனிஸ்டு கட்சியும் மாநாடுகளுக்கு சிந்தனையில் இவ்வளவு பெரிய பாதிப்பைச் செலுத்தும் இடம் உண்டா என்ன?” என்றேன்

இத்தகைய கூட்டங்களில் கூடுமானவரை அதிகம்பேரிடம் பேசவேண்டும். கூடுமானவரை எழுத்தாளர்களை அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். அதற்கு நாம் நிறையப் பேசவேண்டும் என்று அர்த்தம் கிடையாது.

ஜெ

ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்

அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா 2011

விஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,

 

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013

விஷ்ணுபுரம் விருது நினைவுகள்

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவு 2014

விழா 2014 [நினைவுகள்!]

விழா 2015 – விஷ்ணுபுரம் விருது

விஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்

விஷ்ணுபுரம் விழா நினைவுகள்

இலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017

முந்தைய கட்டுரைபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரைஎதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…