இரு பறவைகள்
வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு
சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகளின்மீது எம்பித் தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிக்கடல்
இரு பறவைகள்
இரண்டிலிருந்தும் வானம்
சமதூரத்தில் இருக்கிறது
தேவன் மொழி
பொருளின்றிச் சிதறும் இச்சொற்களால்
எவருக்கான மொழியை உருவாக்குகிறோம் நாம்?
மீட்பரே நீர் இதைக்கேட்க வரப்போவதில்லை
இந்த மொழி உமக்குப் புரிவதில்லை
ஏனெனில் இதில் எம் பாவங்களை அறிக்கையிட முடியாது.
இது சாத்தானின் மொழியும் அல்ல
நமது துயரங்களின் ஒலி அவனுக்கு ஒரு பொருட்டேயல்ல
அறிவாளிகளின் தருக்கத்திற்கும்
கவிஞர்களின் கண்ணீருக்கும்
அப்பால் இருக்கிறது எங்கள் மொழி
ஆண்டவரே
பனிவெளியில் மட்கும் மரக்கிளைகள்போல
சிதைந்த கரங்களை விரித்துப் பரவி
உம்மை அழைக்கிறோம்
இங்கு வந்து உறைபனியின் மொழியை அறிக.
எமது பாவங்களை மன்னித்தருள்க.
பிறகு
உமது பாவங்களை நாங்கள் மன்னிக்கிறோம்.
கடிதங்கள்
தபால் வசதி அனுமதிக்கப்படாத ஊர்களில்
பலநூறு கடிதங்கள் தினம்
எழுதப்படுகின்றன.
அவை காற்றில் குளிர்போல
கனத்து தொங்குகின்றன.
சிறு
காற்றில் வருடலில்
மழையாகி அவர்கள் மீதே விழுகின்றன.
குளிர்ந்து அவர்களைச்
சுற்றி இறுகிவிடுகின்றன.
கடிதங்களின் கடுங்குளிரில் அவர்கள் தூங்குகிறார்கள்.
அப்போது வெப்பமான காற்றை
அவர்கள் கனவு காண்கிறார்கள்
வானில் ஒளியாக
சொற்கள் பரவ
ஆத்மாக்கள் அவற்றை உண்ணும்
ஒரு மகத்தான தினத்தைக்
காண்கிறார்கள்
பின்பு விழித்தெழுந்து கண்ணீர் விடுகிறார்கள்
மறுநாள்
மீண்டும்
இறுகும் பனியை உடைத்தெழுந்து
கடிதங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.
யாருக்காக
யாருக்காக எழுதப்படுகின்றன கவிதைகள்?
இன்னும் சூரியன்
உதிக்கிறது
ஒளிபட்ட பனிப்பாறை போல
அவ்வளவு கடும் குளிருடன்.
எலும்பைத்
துளைக்கும் அதன் புன்னகை
மலர்கள் மலர்கின்றன.
தொடும்போதே உதிர்கின்றன.
இன்னும் மிச்சமிருக்கின்றன என நான்
அள்ளியள்ளித் திரட்டும் நம்பிக்கைகளை
உடைக்கிறது தூரத்து ஓலம்.
கையேந்தி நின்று ரொட்டிக்காக மன்றாடும்
இந்தச் சிறுகுழந்தை கேட்கவில்லை
யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்
இக்கவிதைகளை என்று.
மண்
இறந்த குழந்தையை தானே புதைக்கும்
தாய் ஒருத்தியை நேற்றுப் பார்த்தேன்.
பிடிப்பிடியாக மண்ணை அள்ளி
மெதுவாக சொரிந்துகொண்டிருந்தாள்.
பிஞ்சுக் கால்கள் மறைந்தன.
குட்டிக் கைகள் பிறகு.
உருண்ட சிறு முகத்தை மெல்ல வருடினாள்.
மென்மையான மண்ணை அள்ளி
மெதுவாகப் பரப்பினாள்.
ஒவ்வொரு பிடி மண்ணாக
மெல்ல மெல்ல…
அம்மா
இந்த பூமியையே அள்ளி எடுத்துவிடுவாயா?
1999 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் கவிதைகளில் சில .
http://www.jeyamohan.in/?p=12996