சோலை
வழியோர மரங்கள்
உடன்பிறந்தார் அல்ல
அகன்று வளர்வதில்லை
நண்பர்களும் அல்ல
அருகே வந்து முட்டிக்கொள்வதில்லை
தோழர்களல்ல
நிலைபாடுகளில் மாற்றமில்லை.
காதலர்கள் அல்ல
கட்டித்தழுவிப்புரள்வதில்லை
அன்புநோயும்
துரோகநோயும் இல்லை
இறந்தவர்களில் நிலைபேறுகொண்டவர்கள் மட்டுமே
மரங்களாக உயிர்த்தெழுகிறார்கள்
எரிவெயிலில்
நிழல் வரையும் ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே
பெருமரங்களென எழுகிறார்கள்.
பயத்தால் ஒருவன்
பயத்தால் ஒருவன்
பேசிப்பேசி பொழுதைப்போக்கினான்
காதலியை தொடவேயில்லை
சினிமா போல் ஒன்றும் நடக்கவில்லை
யாருமில்லா இடம், நிலவு
இருந்தபோதிலும்
வார்த்தைக்கு வார்த்தை
நீ சிறியவனாகிறாய்
அவள் சொன்னாள்
பல முறை
பயத்தால் ஒருவன்
ஓடினான்
நேஷனல் ஜியோகிராபி சானலில்
புலிக்கு முன்னால் மாரீசனைப்போல
புராணம்போல் ஒன்றும் நடக்கவில்லை
உயிர்ச்சுழுயில் கோரைப்பற்கள் இறங்கின
பலமுறை
பயத்தால் ஒருவன் தவழ்ந்தான்
ஒரு கேள்விக்குப்
பல பதில்களை சொன்னான்
பல கமிஸார்களிடம்
பாவம், காவலில் மரணம்
பலமுறை
பயத்தாலா என்று தெரியவில்லை டாக்டர்
ஒன்றும் வெளியேறவில்லை
ஒருவன் சொன்னான்
வெளியேபோகாதது என்ன?
பழையவை எதுவும்
அசைந்தால் பின்பக்கம் வலி
பொருத்துகளில் வெட்கக்கேடு
நிமிர்ந்தால் கூன்
நடந்தால் ஊனம்
எந்தப் பசியும் குறையவில்லை
பயத்தால் என நினைக்கிறேன்
எல்லாம் நடிப்பில் போயிற்று டாக்டர்
என்னவெல்லாம்?
கல்வி
கமிட்மெண்ட்
பதவி
கொள்கை
ஆகியவை என்னை காக்கும் என்னும் நம்பிக்கை
நான் ஆகாத என்னுடையவை எல்லாம்
நானே என்னும் தோரணையும் போயிற்று டாக்டர்
ஒரு பயந்தாங்கொள்ளி
பயத்தால்
எல்லாரையும் பயப்படுத்தி
அடித்து எலும்பை முறித்து
பொய்ப்பட்டாளத்தை இறக்கி
கலவரத்தை அடக்கி
கிரீடத்தை தக்கவைத்துக்கொண்டான்
உறக்கத்தான்
ஓடும் ரயிலில்
நானும் இப்படி
வாய் திறந்து
இருந்து
உறங்கியிருப்பேனா
என்றாவது
ஆழ்ந்த அமைதிச்சின்னமாக
என் முன் இருக்கையில்
இந்த பாட்டா
இருந்து உறங்குவதுபோல?
மடியில்
விரித்த நாளிதழ்
அருகே தூங்கிவழியும் மனைவி
எழுகிறது ரயில்தொண்டைகளின்
போர்க்கூச்சல்
ஒழுகும் வெயில்திரையில்
மறைகின்றது பிரக்ஞைப்பிசாசு
உறங்கமுடிவதே
யோகம்தான்.
ஒரு பழைய வெற்றி
இழந்த நீதி
வந்து
வந்து
வராமல்போன நண்பன்
பின்னோக்கிப் பாயும்
நகரங்கள்
எரியும் பாக்தாத்
நிற்காத கதறல்
ஒன்றும் வந்து தொடாமல்
உறங்கமுடிவதே யோகம்
எனினும்
ஓர் உறக்கமில்லாமை.
உன் நாளிதழில்
இராக்கின் இளைய மகன்
இரண்டு கைகளும் அறுபட்டு
ஆட்டங்கள் அற்று
உற்றாரற்று
இரவுக்கு இரவென படரும்
கதைகளற்று
வரும் வெற்றிகள் அற்று
ஒரு குழந்தை.
அலி இஸ்மாயில்.
ஓநாய்கள் தின்றதன் மீதி
அதோ உறங்காமல் உன் மடியில்.
ரத்தம் நிறைந்த
பெப்ஸி குடுவைபோல்.
எல்லார் மடியிலும்.