விஷ்ணுபுரம் விழா- நிறைவும் கனவும்

விஷ்ணுபுரம் விருதுவிழா தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. பத்தாண்டுகளுக்கு முன் மிகச்சிறிய அளவில் இதைத் தொடங்கினோம். நண்பர்களின் நிதியுதவி மட்டும். அன்று ஒருலட்சம் ரூபாய் மொத்தச்செலவு – ஐம்பதாயிரம் விருது. இன்று கருத்தரங்குகளுடன் பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது

இதைத்தொடங்கும்போது  உருவான புழுதிகிளப்பல்கள் அன்று பல நண்பர்களுக்கு சோர்வளித்தன. இது ஒரு நபர் அல்லது குழு தங்களை தூக்கிக்கொள்வதற்காகச் செய்வது என்றார்கள். நக்கல்கள், கிண்டல்கள், உள்நோக்கம் கற்பித்தல்கள், சிறுமைப்படுத்தல்கள் அவதூறுகள். நான் அப்போது சொன்னேன். சிற்றிதழ்ச்சூழலின் உளநிலை மட்டுமல்ல, தமிழ்ச்சூழலின் பொது உளநிலையே இதுதான். எதையுமே செய்ய முடியாதவர்கள், அதற்கான நல்லெண்ணம் இல்லாதவர்களே இங்கே மிகுதி. அவர்களே கூச்சலிடுவார்கள். உண்மையில் அவர்களைப்பற்றி பரிதாபமே கொள்ளவேண்டும். அவர்கள் எழுத்தால் செயல்பாட்டால் எந்த அழுத்தமான பங்களிப்பையும் ஆற்றமுடியாதவர்கள். மிகச்சிறியவர்கள். அந்த தன்னுணர்விலிருந்து எழும் கசப்பு அது. அவர்கள் அதில் சிக்கிக்கொண்டவர்கள்

நாம் நம் செயல்பாட்டை சீராக முன்னெடுக்கவேண்டும், நம் பங்களிப்பே வரலாறாகும், அதுவே நமக்கான விளக்கமும் ஆகும் என்று நான் சொன்னேன்.  எங்கள் செயல்பாடுகளே அனைத்துக்குமான விளக்கமாக அமையவேண்டும் என உளம்கொண்டோம். பத்தாண்டுகளுக்குப்பின் இப்போது மெய்யான ஆர்வம் கொண்ட  எவருக்கும் எந்த ஐயமும் இருக்காது, விஷ்ணுபுரம் விருது என்பது தமிழ்ச்சூழலில் இன்று அளிக்கப்படும் உயரிய இலக்கியவிருது. இது வாசகர்களால் அளிக்கப்படுகிறது. பெறுபவரை மட்டுமே மையப்படுத்தி நடைபெறுகிறது. அனைத்துவகையிலும் அவரை கௌரவிக்கிறது.

ஆவணப்படம், விமர்சனநூல், கருத்தரங்கு என. அவரை ஆழ்ந்து வாசிப்பதற்கான ஓர் ஆண்டாக அவர் விருதுபெறும் ஆண்டை ஆக்கிவிடுகிறது. இவ்விருது பெறுபவர் மேல் இலக்கியநோக்கு விழுமளவுக்கு இன்று தமிழகத்தில் வேறெந்த விருதினாலும் நிகழ்வதில்லை. இந்திய இலக்கியச்சூழலை நான் நன்கறிவேன், இதற்கிணையான வேறொன்று எந்த மொழியிலும் இல்லை. இதைவிடப்பெரிய அமைப்புசார் விருதுகள் உள்ளன. புகழ்பெற்றவை உள்ளன. இத்தனைநேரடியாக வாசகர்களால் அளிக்கப்படும் விருது வேறொன்று இல்லை.

விருதுவிழாவை ஒட்டி இயல்பான நண்பர் சந்திப்புகள் நிகழ்ந்தன. அவை இலக்கிய உரையாடல்களாக மாறின. இன்று முறையான எழுத்தாளர் சந்திப்புகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் எழுத்தாளர்களை சந்தித்து விவாதிப்பதற்கான ஒரு இடம் இது. மேடைக்கு வெளியிலும் இச்சந்திப்புகள் நிகழலாம். இம்முறையும் சந்திப்புகளில் மூத்தபடைப்பாளிகள் கலந்துகொள்கிறார்கள். அவர்களுடன் இளையவர்கள், வாசகர்கள் உரையாடவேண்டும் என்று அழைக்கிறோம். மேடையுரையாடல்களுக்குச் சில எல்லைகள் உண்டு. நேரடியான கூரிய விவாதம் அங்கே நிகழ்வதற்கு நேரம் இல்லை. அவற்றை வெளியே நிகழ்த்திக்கொள்ளலாம்

இது விஷ்ணுபுரம் நண்பர்களுக்கான விழா அல்ல. இதில் பங்கெடுப்பவர்கள் எல்லா வகையான வாசகர்களும்தான். அனைவரையும் அழைத்து தான் இதை நடத்துகிறோம். இதை ஒருங்கிணைப்பாவ்ர்கள் மட்டுமே விஷ்ணுபுரம் நண்பர்கள். எப்போதும் விவாத அரங்குகள் வருகைதந்துள்ள பலதரப்பட்ட இலக்கியவாதிகளால், வாசகர்களால்தான் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

வழக்கம்போல அனைத்து அரங்குகளும் குறித்த நேரத்தில் தொடங்கும். வெள்ளியன்று காலை 9.45க்கே முதல் அமர்வு தொடங்கும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

ஜெ
விஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்
இலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை
விஷ்ணுபுரம் விருதுவிழா இதுவரை
விஷ்ணுபுரம் விழா- வழக்கமான வினாக்கள்
விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
விஷ்ணுபுரம் விழா :எழுத்தாளர் சந்திப்புகள் ஏன்?
விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் 2018
முந்தைய கட்டுரைவேதம்,இறந்தோர்,முள்ளம்பன்றி: கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரை’நான் நினைச்சதையே எழுதிட்டீங்க!’