இமையச்சாரல்
அன்புள்ள ஜெயமோஹன்,
2017இல் தங்கள் முகங்களின் தேசம் தொடரால் ஈர்க்கப்பட்டு பல கதை கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்து, தங்களுக்கு கடிதங்களும் எழுதினேன். சில கடிதங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.
- இதில் குறிப்பிட வேண்டியது தங்கள் எழுத்து எங்கள் அமெரிக்க வாஸ தனிமைக்கு மருந்தாக அமைகிறது என்பது. அறுபதுகள் வரை ஆர்வமாக வாசித்து வந்த நான், அடுத்த ஐம்பது ஆண்டுகள் தமிழ் வாசிப்பை முக்காலும் விட்டு விட்டேன். எழுத்தின் தரம் என் ரசனைக்கு ஒப்பவில்லை. தங்கள் எழுத்தின் வருடும் தன்மை நிறைவை அளித்தது. குறிப்பாக பயணக்கட்டுரைகள் , இனிமையான குடும்ப சித்திரங்கள், மனைவி குழந்தைகளின் உறவின் பெருமை உணர்வு, நகைச்சுவை (அபிப்ராய சிந்தாமணி நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று), அறம் போன்ற சிறுகதைகள்.
- பயணங்கள் என்னை ஈர்த்ததன் காரணம் என் அனுபவங்களே. இயல்பாகவே பத்து பதினைந்து கிமீ ஸர்வஸாதாரணமாக நடப்பேன்; ஏழ்மையின் வரப்ரஸாதம் அது. இருபது வயது முதல் விடுமுறையும், காசும் இருந்தால் சென்னையைச் சுற்றி நூறு மைல் தொலைவுக்குள் பல தலங்களுக்கு காலை சென்று மாலை திரும்பவேன். 1968 சுதந்திர தினத்தன்று நண்பருடன் கோவையில் ஒரு மாலை கிளம்பி திருச்சூர், குருவாயூர் , பீச்சி, மலம்புழா சென்று மறுநாள் இரவு திரும்பியது ( சுற்றுலா பஸ் கட்டணம் ஆளுக்கு ரூ எட்டு!) பசுமையான நினைவு. பின் சபரிமலை பெரிய பாதையில். மேலும் பல பயணங்கள். 1975 மே மாதத்தில் விஜயவாடாவிலிருந்து தனியாக பத்ரிநாத் அடைந்ததும் , என் கதர் சட்டையையும் மெலிந்த உடலையும் பார்த்து அஷ்டாக்ஷரி தர்மசாலை அதிகாரி மறுநாளே திரும்ப அறிவுறுத்தியதும், டெல்லியில் ஜுரத்தோடு பிர்லா மந்திர் வராண்டாவில் இரவு தங்கியதும் நினைவு வந்தன. இதே போல் பல பயணங்கள் பைராகி போல. குடும்பம் என்று ஏற்பட்டவுடன் என் wanderlust குடும்பத்தினரையும் தொற்றிக்கொண்டது. ஆனால் உங்கள் பயணங்களோடு ஒப்பிட்டால் நான் கிணற்றுத்தவளை.
- 2006இல் பணி ஓய்விற்குப் பிறகு அமெரிக்காவுக்கு ஆண்டு தோறும் யாத்திரை. மகன் , மகள் அனைத்து இயற்கை எழில் தலங்களுக்கும் அழைத்துச் சென்றனர். ஆயினும் அவர்களுக்கு middle age உம் அலுவல் பொறுப்புகளும் அதிகரித்து, எனக்கும் மனைவிக்கும் உடல் தளர்ந்து , தனிமை உணர்வு அவ்வப்போது எழும்போது armchair travel சுகமாக இருக்கிறது.
தற்போது நான் வாசித்துக் கொண்டிருப்பது “இமயச்சாரலில்”.
அன்புடன்,
சா. கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்
பயணம் செய்வதற்குரிய உடல்நிலையில், சூழலில் இருப்பது ஓரு நல்ல விஷயம். ஆகவே கூடுமான வரை பயணம் செய்யலாம். பயணத்தில் நாம் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கிறோம். பாம்பு சட்டையை உரித்துவிட்டுச் செல்வதுபோல முந்தைய ஊரை முற்றாக உதிர்த்துவிட்டு அடுத்த ஊருக்குச் செல்லவேண்டும் என்பார்கள். நான் என் பயணங்களினூடாக பயணத்தின் செய்திகளை அல்ல பயணம் என்னும் உளநிலையையே முன்வைக்க விரும்புகிறேன்
ஜெ
***