விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜானவி பருவா

 

அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜானவி பருவா. பெரும்பாலும் அசாமிலேயே வளர்ந்து பின்னர் கல்விக்காக வேறு பகுதிகளுக்கு சென்று தற்போது பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். கல்வியால் மருத்துவராக இருந்தாலும் மருத்துவ பணியை விட்டுவிட்டு முழு நேர எழுத்தாளராக மட்டும் இருக்கிறார். இவரின் முதல் சிறுகதை தொகுதி ‘அடுத்த வீட்டு கதவு’ (next door) 2008 ல் வெளியாகியது. இந்த தொகுதி பல்வேறுதரப்பட்ட வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்பட்டது. வடகிழக்கில் இருந்து முதன்முறையாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறுகதை தொகுதியில் அசாம் மொழியை ஆங்காங்கே பயன்படுத்தி அதில் இரு புதுமையை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து அவரைப்போலவே பிற வடகிழக்கு எழுத்தாளர்கள் அதை முயன்றனர். இந்தியாவில் அதிகம் அறியப்படாத பகுதிகளில் இருந்து எழுதுவோருக்கு அந்த பகுதியை அறிமுகப்படுத்துவதில் இருக்கும் பதற்றம் இவரின் எழுத்தில் இல்லை. வாசகர்களை கதைகளுக்குள் இழுத்துச்சென்று அங்கிருந்து அந்த நிலப்பகுதியையும் மக்களின் வாழ்வையும் அறிந்துகொள்ள வைத்தார். புதிய உலகத்தை காட்ட வேண்டும் என்ற மெனக்கெடல் இல்லாமல் கதைகளின் கருவிற்கு நெருக்கமாக இருக்கும் உலகை காண்பித்து அந்த நிலப்பகுதியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

‘வடகிழக்கு பகுதி’ என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சொல்லாடல். அதற்கு தனி அமைச்சகம் உள்ளது. பெரும்பாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழ்வோருக்கு அதைப்பற்றிய ஒரு பெரும் அறியாமை உள்ளது. வடகிழக்கு என்று ஒற்றை பெயரால் அழைப்பதனால் அங்கு இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்ற பொதுப்புத்தி உண்டு. இந்த அறியாமையும் இந்த ஒற்றைப்படை எண்ணமும் பல வடகிழக்கு எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வெவ்வேறு மொழியில் மெலிதாகவும் வன்மையாகவும் எதிர்க்கப்பட்டுள்ளன. ஒரு நேர்காணலில் ஜானவி பரூவா இதைப்பற்றி, “இந்த ஒரு மோதல் என்பது வடகிழக்குப்பகுதி மக்களை அந்நியப்படுத்தியதன் மூலம் உருவாகிய ஒன்று. இந்த மக்களின் உணர்வு என்பது இந்தியாவின் மையத்தில் இருந்து தாங்கள் விலக்கப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து எழுந்துவந்துள்ளது. ஒரு போர்க்களத்தின் பதற்றத்தில் எளிதாக செய்யக்கூடிய செயல்கள் கூட மிக கடினமானதாக தோன்றும். அந்த உணர்வு எப்படியோ என்னையும் அறியாமல் என் சிறுகதை தொகுதிக்குள் ஊடாடி வருகிறது. அந்நியமாகி உணர்வதும், சமூகத்தில் விளிம்பில் இருப்பதுபோல ஒரு எண்ணமும் என் கதைமாந்தர்களுக்குள் வருவது இதனாலாக கூட இருக்கலாம்’ என்கிறார்.

ஆங்கிலத்தை தன் எழுத்தின் மொழியாக கொண்டிருக்கும் ஜானவி, அந்த மொழியின் அழகியல் வழியாகவே பிரம்மபுத்ராவின் அழகையும் அசாம் நிலப்பகுதியின் அமைதியையும் சிறப்பாக தன் படைப்புகளில் கொண்டுவருகிறார். அந்த நிலப்பரப்பின் அமைதிக்குள் இருக்கும் அந்த சின்ன சின்ன அதிர்வுகள் அவருடைய சிறுகதைகளை மிகசுவாரசியமானதாக ஆக்குகின்றன. ‘தேசபக்தன்’ (the patriot) என்ற சிறுகதையில் அந்த நிலத்தில் இருந்த பயங்கிரவாத நிலையை ஒரு முதியவரின் எளிய வாழ்க்கையின் வழியே இயல்பாக காண்பித்திருப்பார். அதே சமயம் அந்த கதையில் பிற கதைமாந்தர்களின் ஊடே அந்த பயங்கிரவாதத்தின் ஊற்று பற்றிய எண்ணங்களையும் மிக மெலிதாக வெளிப்படுத்தியிருப்பார்.

அவருடைய கதைகளுள் ஒன்றான ‘the awakening’ (விழிப்பு) என்ற கதையில் பெங்களூரில் படிக்கும் மகனை ஒரு சின்ன சண்டையில் பறிகொடுத்த தாயின் துயரத்தைப்பற்றியது. துயரங்கள் ஜானவி பரூவாவின் கதைகளில் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த கதையில் வடகிழக்கில் இருந்து கல்விக்காக பிற பணிகளுக்காகவும் வெளியே செல்லும் பிள்ளைகள் பற்றிய ஒரு பயத்தை அந்த தாயின் உணர்வில் இருந்து காட்டியது மிகவலிமையாக இருந்து. அதே போன்ற ஒரு இழப்பை ‘a fire in winter’ (குளிர்கால நெருப்பு) என்ற கதையில் வேறு மாதிரி படைத்துக்காட்டியுள்ளார். துயரை அவருடைய மொழி நடை மிக ஆழமாக்கிக்காட்டுகிறது.

ஜானவியின் கதைகளில் அசாம் நிலத்தின் தன்மைகள் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. சிறார், முதியவர்கள், இளைஞர்கள் என்ற பார்வையில் தன் சிறுகதை தொகுதியை அமைத்திருக்கிறார். ஒரு எழுத்தாளரின் முதல் தொகுதிக்கு இந்த அமைப்பு மிக அபாரமாக பொருந்தி வந்திருக்கிறது.

இந்த எழுத்தாளருடைய கதைகளில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருப்பவை தனிமனித உணர்வுகள். பெரும்பாலும் அவருடைய எல்லா கதைகளின் மையத்திலும் தனிப்பட்ட ஒருவருக்குள் இருக்கும் மன கொந்தளிப்புகளும் வேதனைகளும் சீற்றத்தையும் கூறுபவையாக இருக்கின்றனர். தேசபக்தன் என்ற சிறுகதையில் கூட தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவை மையக்கதை ஓட்டத்திற்குள் அழகாக சேர்த்துள்ளார். அவருடைய இரண்டாம் புத்தகமான ‘மறுபிறப்பு’ (rebirth) ஆசிய இலக்கிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் முதல் குழந்தையை எதிர் நோக்கி இருக்கும் தாய்க்கும் இன்னும் பிறக்காத அந்த சிசுவிற்குமான உறவை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவருடைய படைப்புகள் காமன்வெல்த் பரிசுக்கும் ஃப்ராங்க் ஓ கோன்னர் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் தன் கணவரோடும் மகனோடும் பெங்களூரில் வசித்து வருகிறார். கல்விக்காக மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப இருவரும் முயன்று வருகின்றனர். ஜானவியின் பெற்றோர் அசாமில் வசித்து வருகின்றனர். அவருடைய சில கதைகளை நம் குழும நண்பர்கள் மொழிபெயர்க்கின்றனர். ஜானவியின் மூன்றாவது புத்தகம் ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

***

விஷ்ணுபுரம் விருந்தினர்கள்

1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை

2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா

3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர்  யுவன் சந்திரசேகர்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.என்.செந்தில்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருந்தினர் 6 ரவி சுப்ரமணியம்

விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை

விஷ்ணுபுரம் விருந்தினர் 8 வெண்பா கீதாயன்

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் பெருந்தேவி 

முந்தைய கட்டுரைநூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
அடுத்த கட்டுரைகரவுப்பாதைகள்