தருமை ஆதீனம் -கடிதம்

அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்

 

அன்பு ஜெமோ,

 

நலம்தானே?

 

என்னுடைய சித்தப்பா ஒருவர் தருமை ஆதீனத்தில் வேலையில் இருந்ததாலும், அவ்வப்போது துறவிகளை சந்தித்து ஆசி பெறும் வழக்கம் குடும்பத்தில் இருந்ததாலும், தருமை சன்னிதானம் அவர்களை நாலைந்து முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன். “சாமியார்கள்” மேல் எனக்கிருந்த பார்வையை மாற்றியவர் என்று உறுதியாகச் சொல்வேன்.

 

துறவிகளின் மேல், அதிலும் குறிப்பாக மடாதிபதிகள் மேல் எந்த மரியாதையும், நம்பிக்கையும் அற்ற பதின் வயதில் இருக்கும் போது முதலில் அவரை சந்திக்க வற்புறுத்தி அழைத்துச் சென்றார்கள். 1993 என்று நினைவு. மாலை 8 மணிக்கு மடத்துக்கு சென்றோம். உள்ளேயே கோயில்கள், குளம், யானைக்கொட்டில், எந்நேரமும் பறவைகள் சத்தமிடும் பழங்கள் மண்டிய தோட்டம்  எல்லாம் இருக்கும் பிரம்மாண்டமான கட்டிட வளாகம். பெரிய முற்றத்தில் 40, 50 பேர் அவரை சந்திக்க காத்திருந்தனர். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டினர், சைவசித்தாந்தத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள்.

 

பத்து, பதினைந்து பேர் கொண்ட குழுக்களாக அவர்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர் மடத்தில் வேலைசெய்பவர்கள். அலுத்து தூங்கி வழியும் கண்களுடன் காத்திருந்தபோது இரவு 11:30 மணிக்கு உள்ளே அழைத்துச்சென்றார்கள். தமிழ்நாட்டின் ஒரு புகழ்பெற்ற பெரும் வணிகக்குடும்பம், நாங்கள் 6 பேர் என ஒரு 15 பேர் உள்ளே சென்றோம். இருண்ட அறைகளின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டோம்.

 

ஒரு பெரிய அறையின் நடுவில் சிம்மாசனம் ஒன்றில் சன்னிதானம் அமர்ந்திருந்தார். அந்தக்  கண்கள்! அப்படி சுடர்விட்டு ஒளிரும் கண்களை நான் பார்த்ததில்லை. திரும்பி என்னை நோக்கிய போது, அதை சந்திக்க இயலாமல் பார்வையை தாழ்த்திக்கொண்டேன்.

 

அறிமுகங்கள் முடிந்த பிறகு, அங்கு இருந்ததிலேயே இளையவனாகவும், நிமிர்ந்தும் நின்றிருந்த என்னைப்பார்த்து புன்னகையுடன் எதற்கு கண்ணாடி போட்டிருக்கிறாய் என்றார். பதின்வயதில் கண்ணாடி அணியும் தாழ்வுணர்ச்சியை கொண்டிருந்ததால் அவர் வேண்டுமென்றே என் குறையை சுட்டுவதாகத் தோன்றியது. நான் மெதுவாக கிட்டப்பார்வை என்றேன்.  மீண்டும் புன்னகையுடன் “அது தெரிகிறது, கிட்டப்பார்வை எப்படி வருகிறது என்று தெரியுமா?” என்றார். நான் பேசாமல் இருந்தேன். “சயன்ஸ் படிக்கிறாய்தானே, தெரியாதா?” என்று சீண்டினார்.

 

அடுத்த ஐந்து நிமிடங்களில் கண்களில் உள்ள லென்ஸ் எப்படி மாறினால், பிம்பம் விழித்திரைமேல் விழாமல் அதற்கு முன்னால் குவிந்துவிடும் என்றும், எப்படி குழி ஆடி அந்த பிம்பத்தை சற்றுத்தள்ளி விழித்திரைமேல் சரியாக விழவைக்கும் என்றும் விளக்கினார். அதேபோல விழித்திரையை தாண்டி பிம்பம் விழுந்தால் அதன் பெயர் தூரப்பார்வை என்றும், எப்படி குவி ஆடி அதை சரிசெய்யும் என்றும் சொன்னார். “இன்னும் கொஞ்ச வருஷம்தான், லேசர் சிகிச்சை வந்துவிடும். கண்மேல டார்ச் லைட் அடிக்கிற மாதிரி அடிச்சா, கண்ல இருக்க லென்சே விரிஞ்சி சரியாயிடும்”. நான் உண்மையில் சாமியார் ஏதோ அடிச்சி விடுகிறார் என்றே நினைத்தேன். ஆனால், இவ்வளவு தெளிவாக ஒரு சாமியார் அறிவியல் பேசியது என்னை நிலைகுலையைவும் வைத்தது.

 

பின்னர், அருகில் இருந்த தொழிலதிபரை என்ன என்பதுபோல் பார்த்தார்.  “சாமியோட ஆசீர்வாதம் வேணும், குரூட் எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலை தொடங்கப்போறோம். நம்மோட சிமெண்ட் ஆலைக்கும் உதவியாய் இருக்கும்னு சொல்றாங்க” என்றார். சன்னிதானம் மீண்டும் என்னிடம் திரும்பி “ஒயிட் பெட்ரோல்னா என்னான்னு தெரியுமா?” என்றார். நான் அமைதியாக நின்றேன். இத்தனை பேர் பார்க்க வந்திருக்கும் போது என்னை ஏன் சீண்டுகிறார் என்று நினைத்தேன்.

 

“குரூட் ஆயில எடுத்து சுத்திகரிக்க ஆரம்பிச்சா, கொஞ்சம் கொஞ்சமா கசடு எல்லாம் வெளியேறும். டீசல் கிடைக்கும். இன்னும் சுத்தம் பண்ணினா பெட்ரோல் கிடைக்கும். பெரும்பாலான கசடு எல்லாம் போன பின்னாடி ஒயிட் பெட்ரோல் கிடைக்கும். அதைத்தான் ஃபிளைட்டுக்கு போடணும். ஏன்னா, எந்த அளவுக்கு கசடு குறைவா இருக்கோ அந்தளவு மேலே போகலாம்” என்று சிரித்தார்.

 

உண்மையில் அந்த சந்திப்பில் அவர் என்ன பெரிதாக சொல்லிவிடப்போகிறார்- தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும், அல்லது ஏதாவது மந்திரம் சொல்லவேண்டும், வெள்ளிக்கிழமை விளக்கு போட வேண்டும்- என்று வழக்கமாய் ஏதாவது சொல்வாரென்றே நம்பிக்கொண்டிருந்தேன்.

 

அதன்பின் பலவருடங்கள் கழித்து, திருமணமான பின் ஆசீர்வாதம் வாங்க ஒருநாள் சென்றிருந்தோம். என்னுடைய நாத்திக சித்தப்பா அறிவுரை சொன்னார்- சாமியார் பலபேர் முன்னாடி எடக்கு மடக்கா கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துவார், போகாதே என்றார்.

 

உள்ளே சென்றோம். அறிமுகம் செய்துவைக்கப்பட்டோம். படித்து பெரிய நிறுவனத்தில் இருவரும் வேலையில் இருப்பதாக சித்தப்பா சன்னிதானத்திடம் தெரிவித்தார். சன்னிதானம் “வீட்டையும் பார்த்துவிட்டு, பெரிய வேலையும் பார்த்து சம்பாரிச்சு உன்கிட்ட அவள் குடுக்கணுமோ?” என்றார். “இல்லை, நானும் உதவி செய்வேன்”  என்றேன். “சமைப்பியா?” என்றார். நான் இல்லையென்று தலையசைத்தேன். “பின்னே?” என்றபடி மௌனமாக சிலவினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“பெண்பிள்ளைகளை படிக்கணும், பெரிய வேலைக்குப் போகணும்னு வளக்குறோம். தப்பில்லை. ஆனா, அவங்க செய்ற வேலை எதையாவது அதற்குத் தகுந்தாற்போல குறைத்திருக்கிறோமா?”

 

சரி இங்கே வா என்று பிடி திருநீறை எடுத்து நெற்றியில் பூசியவர், “எதையாவது படி, இல்லைன்னா 40 வயசுல போலி சாமியார் கால்ல விழுந்து கிடப்பாய்” என்றார்.

 

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

 

 

அன்புள்ள ராஜன்,

 

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? அபி ஆவணப்பட இசை சிறப்பாக இருந்தது. மென்மையான இசை.

 

தருமபுரம் ஆதீனம் குறித்த உங்கள் குறிப்பு சிறப்பாக அவருடைய ஒரு தோற்றத்தை காட்டியது. அவர் அறிவியலில் ஆர்வம் கொண்டவர். ஆனால் அரைகுறையாக அறிவியலைக்கொண்டு சைவசித்தாந்தத்தை ‘நிரூபிக்க’ முயலவே இல்லை. அதன் செவ்வியல்வடிவில் மட்டுமே சைவத்தை முன்வைத்தார். அறிவியல் சார்ந்த உவமைகளைக்கூட அடிக்கடிச் சொல்வதில்லை

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
அடுத்த கட்டுரைபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா