சுசித்ராவின் ஒளி – கடிதம்

ஒளி சுசித்ரா

 

அன்பின் ஜெ,

நலம்தானே?

சுசித்ராவின் “ஒளி”…

மின்னல் மாதிரி “பளிச் பளிச்”-சென்று மனது “ஆஹா ஆஹா”-வென்று திறந்துகொண்டேயிருந்தது வாசிக்கும் நெடுகிலும்.

அழகர் கோவிலும், மீனாட்சி அம்மன் கோவிலும், ஆனைமலை கண்மாயும் சிறுவயதிலிருந்து இப்போது வரை எத்தனையோ முறை பார்த்தவைதான். மீனாட்சி அம்மன் கோவில் எத்தனை முறை போயிருந்தாலும் ஒருமுறை கூட மனம் பரவசப்படாமல் திரும்பியதில்லை. “இங்க ஏதோ இருக்கு…ஏதோ இருக்கு…அது என்ன…அது என்ன…?” என்ற கேள்வியுடன்தான் அங்கு உட்கார்ந்திருந்திருக்கிறேன். திருமங்கலத்தில் PKN ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த போது, விடுமுறை நாட்களில் புத்தகத்தை எடுத்துக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவில் வந்துவிடுவதுண்டு. ஏதேனும் ஒரு மண்டபத்தில் உட்கார்ந்து அல்லது குளத்துப்படியில் விநாயகருக்கு எதிராக, கொஞ்ச நேரம் படிப்பது, எழுந்து உள்ளுக்குள்ளேயே எங்கேனும் கடைகளினூடே சுற்றுவது, மறுபடியும் வேறெங்கேனும் படிப்பதற்கு உட்கார்ந்து கொள்வது, இடையிடையே முகங்களை வேடிக்கை பார்ப்பது…என மாலை வரை இருந்துவிட்டு திருமங்கலம் திரும்புவதுண்டு.

திருமணம் மல்லிகாவுடன் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தல்லாகுளத்திலேயே ஒரு ஹோட்டலில் உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் தம்பியும், மாமாவும். அப்போது ஓசூரில் வேலை செய்துகொண்டிருந்தேன். உடன் வேலை செய்த கொச்சியை சேர்ந்த ஹாம்சையரும், திருச்சி உமாசங்கரும் கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள். உணவு முடித்ததும், என்னிடமும் மல்லிகாவிடமும் “நாங்க மீனாட்சி அம்மன் கோவில் போயிட்டு அப்படியே ஓசூர் கிளம்புறோம்” என்றார்கள். மீனாட்சியம்மன் கோவில் என்றதும் “நானும் வரட்டுமா?” என்றேன். ஹாம்சயர் சிரித்துக்கொண்டே “இப்பதான் முகூர்த்தம் முடிஞ்சிருக்கு. இன்னும் என்னென்ன செரிமனி பாக்கியிருக்கோ? நீ இரு. நாங்க போய்க்கறோம்” என்றார். “இல்ல. நானும் வர்றேன்” என்று சொல்லி, மல்லிகாவையும், விமலா அத்தையையும் தமுக்கம் பக்கமிருந்த ரெங்கராஜ் மாமா வீட்டில் விட்டுவிட்டு, மல்லிகாவிடம் (பச்சை நிற கல்யாணப் பட்டுப் புடவையில் மல்லிகாவும் மீனாட்சி மாதிரிதான் இருந்தார்) அனுமதி பெற்றுக்கொண்டு, உறவினர்களை சமாளிக்கச் சொல்லிவிட்டு, ஹாம்சயருடனும், உமாவுடனும் அன்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனது இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.

***

பழகிய இடங்களின் மேல் புதிய ஒளி! ஃபிலோமினா தன்னில் கண்டுகொண்ட “ஒளி”; “ஒளி”-யை என் மனம் எளிதாக இனம் கண்டுகொண்டது. முதல் பாராவில் ”தூணின் பொந்தில் ஏற்றி வைக்கப்பட்ட அகலின், காற்றில் படபடக்கும் சுடர்”-ல் ஆரம்பிக்கும் ஒளி, கதை நெடுகிலும் பரவசமான வெளிச்சத்தால் வியாபிக்கிறது.

இருளிலிருந்து துலங்கிவரும் வெள்ளிமுகங்கள், சடை அலங்காரங்களும், ரவிக்கை பார்டர்களும்…நிறங்களின் நர்த்தனம்…அழகு; நிலைத்த…நடமாடும் “ஃபேன்ஷி ஸ்டோர்கள்”…

தையல்காரரின் ஓவியத்தில் படரும் ஒளி…லௌகீகத்தில் உழலும் கால்களை பெரிதாகத்தானே வரையவேண்டும்;; கல்லோடு கரைந்து சிறிதாகிவிட்ட உச்சந்தலை…

புதிதாய்த் தோன்றிய தெய்வம் போல…” – ஆம் பார்க்கும் எல்லாக் காட்சிகளிலும் தெய்வங்கள் இருக்கத்தான் செய்கின்றன; புதிது புதிதான தெய்வங்கள்; காண்பவனின் ஒளிக்கேற்ப தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தெய்வங்கள்…

கைகூப்பி கண்மூடி கும்பிட்டவர்கள். தோள்களில் சோர்ந்து தூங்கிய குழந்தைகள். அரட்டையடித்துக்கொண்டிருந்த பட்டர்கள். கைவளை அடுக்கி நடக்கமுடியாமல் இடுப்பைப்பிடித்த நிறைமாதக்காரி. நெற்றிக்குறிகள். நகைகள். புடவை மடிப்புகள். பூக்கூடைகள். நெய்விளக்குகள். ஊதுபத்திச்சுருள்கள். சிவகாமியம்மையின் உதட்டோர புன்னகையைப் பார்த்துக்கொண்டிருந்த ஃபிலோமினா…

எத்தனை தெய்வங்கள்…

ஆரன் கண்டுகொண்ட அக்னி நாட்சத்திர வெயிலின் ஒளியால் ஆசீர்வதிக்கப்படும் ஆனைமலை கண்மாய்…மனிதர்கள் கைவிட்ட வெற்றுநிலம் ஒளியால் உயிர்பெறும், தெய்வமாகும் அழகு, ஃபிலோமினாவைப் போலவே…

ஃபோடோகிராஃபிக்கும், பெயிண்டிங்கிற்குமான வித்தியாசம் ஆரன் சொல்லும்பொழுது, அவ்வொளி என் மனதிலும் படர்ந்தது. நமக்கான ஒளி மேலிருந்து வரப்போவதில்லை; நம்மின் ஒளி நாமே உள்ளினுள் உருவாக்கிக் கொள்வதுதானே?; நமக்கு நாமே ஒளிதானே தவிர வேறென்ன…?; உலகிற்கு ஒளிதரும் விளக்கு நம்மைத் தவிர வேறு யார்?; அவரவர் பார்க்கும் உலகம் அவரவர் ஒளிக்குத் தக்கபடிபடிதானே…

இறுதியில் நீலப்புடவையில் வண்ணமாகியிருக்கும் ஃபிலோமினாவைத் தொடும் ஒளிக்கீற்று…மழையால் நிரம்பி மாலைச் சூரியனால் வண்ணக்குழம்பான தென்கரை கண்மாய்…

***

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது நாராயண மூர்த்தி என்றொரு நண்பன். நாங்கள் திருமங்கலம் புதுநகரிலிருந்தோம். மூர்த்தியின் வீடு கணபதியிலிருந்தது. மூர்த்தியின் வீட்டில் எல்லா காரியங்களுக்கும் “சாமி பாட்டி”-யிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். சாமி பாட்டியின் வீடு, பானு தியேட்டர் தெருவிலிருந்து, மார்க்கெட் போகும் குறுக்குத் தெருவிலிருந்தது. எனக்கு சாமி பாட்டியை மிகப் பிடிக்கும். சாமி பாட்டி குறி சொல்வார்கள். கைரேகையும், முகத்தையும் பார்த்து ஜோசியம் போல் சில விஷயம் சொல்வார்கள். நானும், மூர்த்தியும் பாட்டிக்கு புத்தகங்கள் வாசிக்க அங்கு அடிக்கடி செல்வோம். பகவத் கீதையையும், பாகவதத்தையும், தேவி பாகவதத்தையும், ராமாயணத்தையும், பாரதத்தையும் சத்தமாக பாட்டிக்காக வாசித்திருக்கிறேன்.

ஒருமுறை நானும், மூர்த்தியும் மதுரை அழகர் கோவில் சென்றோம். பாட்டிதான் ஒரு ஞாயிறன்று எங்களை போய்வரச் சொன்னார்கள். கீழிருந்து மேலே பஸ்ஸில் போகவேண்டாமென்றும், நடந்து போகுமாறும் சொல்லியிருந்தார்கள். எனக்கு மிகப் பிடித்துப் போன பாதை அது. இன்றும் என்னால் மறக்க முடியாத அனுபவம். மரங்களும், பசுமையும், ஊடுருவும் ஒளியும், குரங்குகளும் மனதிற்கு மிக அண்மையாகிப் போன பயணம்.

மறுநாள் மாலை பாட்டி வீட்டிற்குப் போனபோது, சாஷ்டாங்கமாய் விழுந்து அவரை நமஸ்கரித்துவிட்டு முன்னால் உட்கார்ந்தேன். அழகர் கோவில் போனது எப்படி இருந்தது என்று கேட்டார்கள். நான் கீழிருக்கும் கோயில், மேலே முருகன் கோவில், அதற்கு மேலே குளிக்கும் மண்டபம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். “ம்…ம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ நினைத்துக் கொண்டவன் போல “ஆனா மேலே நடந்துபோன பாதை எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது பாட்டி. எல்லோரையும் வேடிக்கை பார்த்ததும்…” என்றேன். பாட்டி சிரித்துவிட்டு “இரு வர்றேன்” என்று எழுந்து உள்ளே போனார்கள். அந்த அறைக்குள் பாட்டி தவிர யாரும் போவதில்லை. உள்ளிருந்து குங்குமம் எடுத்து வந்து என் நெற்றியில் இட்டார்கள். நான் மறுபடியும் விழுந்து நமஸ்கரித்தேன். “அம்மாகிட்ட கொடு” என்று குங்குமத்தை ஒரு காலண்டர் பேப்பரில் மடித்துக் கொடுத்தார்கள்.

***

இந்த ஊருல பொறந்த அத்தன பொண்ணுங்களுமே எங்களுக்கு மீனாட்சியம்மாதான் தம்பி,”  தாத்தா சொன்னார். #

என் மீனாட்சி, மல்லிகாவிற்கு “ஒளி”-யை அனுப்பியிருக்கிறேன், படிக்கச் சொல்லி…

வெங்கி

இரு சிறுகதைகள்

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

 ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார்

அகதி

 ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா

ஒளி

 

 சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

 ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

 

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

முந்தைய கட்டுரைசரியாகச் சொல்லப்பட்ட கதைகள்- காளீஸ்வரன்
அடுத்த கட்டுரைஅழகியல்களின் மோதல்