பிரமிள் – கடிதங்கள்

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5

 

அன்புள்ள ஜெ,

 

பிரமிள் குறித்த கட்டுரை என்னுடன் ஆவேசமான ஓர் உரையாடலில் ஈடுபட்டதுபோல் இருந்தது. பெரும்பாலும் கவிதைபற்றிய கட்டுரைகள் சம்பந்தமே இல்லாமல் தாங்களே பேசிக்கொண்டிருக்கும். வாழ்வின் அபத்தம், பின்னவீனத்துவப் பகடி, இருத்தலின் கொண்டாட்டம் ஆகிய மூன்று தேய்ந்துபோன வார்த்தைகளால் இங்கே கவிதைபற்றி பேசப்படும் எல்லா பேச்சுக்களையும் தொகுத்துவிடலாம். பெரும்பாலும் அன்றாடவாழ்க்கையின் சாதாரணமான தனிமை, காமம் ஆகியவற்றைப்பற்றி எழுதப்படும் நம் கவிதைகளைப்பற்றி பேசுவதற்கு இதெல்லாமே போதுமானவையும்கூட.

 

ஆனால் பிரமிள் போன்ற கவிஞர்களைப்பற்றிப் பேசுவதற்கு மெடபிஸிக்ஸ், ஸ்பிரிச்சுவாலிட்டி, பிலாசஃபி ஆகியவற்றைப்பற்றிய ஒரு தனித்துவமான பார்வையும் சிந்தனைப்பின்புலமும் தேவை. இக்கட்டுரை எழுப்பிச்செல்லும் பல கேள்விகளும் கண்டடைதல்களும் கவிதை என்பதைக் கடந்து தத்துவம் மெடபிஸிக்ஸ் சார்ந்து மேலே செல்கின்றன. பல கோணங்களில் படிக்கவேண்டிய கட்டுரை. கவிதையைப் பற்றி பேசும்போது அதிலிருந்து எழுந்து எப்படி அழுத்தமான அடிப்படைக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது என்பதற்கான சிறந்த உதாரணம் இக்கட்டுரை

 

எஸ்.ஸ்ரீனிவாஸன்

 

அன்புள்ள ஜெ

 

பிரமிள் பற்றிய கட்டுரை அவரைப்பற்றி என்னைப்போன்ற சாதாரண வாசகர்களுக்கு எழும் கேள்விகளிலிருந்து ஆரம்பிக்கிறது. உக்கிரமான கவிதைகளை எழுதிய பிரமிள் எப்படி மிகமிக சாதாரணமான வசைக்கவிதைகளை எழுதினார். அவருடைய மொழி சிலசமயம் ஆவேசமான அழகு கொண்டது. சிலசமயம் அசட்டுத்தனமாக உள்ளது. அதற்கான விடையே அவரை நெருங்க நமக்கு பாதையை அளிக்கிறது

 

பிரமிளின் மீபொருண்மையின் பல தளங்களைச் சொல்லிச் செல்கிறது இக்கட்டுரை. மீபொருண்மையினூடாக அவர் ஆன்மீகமான தரிசனங்களை அடைகிறார். இன்னும் சில இடங்களில் அவர் அதை வெறும் கருத்தாக மாற்றி கையாள்கிறார். அவருடைய உணர்ச்சிகரம் அந்த மீபொருண்மையை எங்கோ ஒரு புள்ளியில் சந்திக்கும்போதுதான் அழகான கவிதைகள் உருவாகின்றன. பிரமிள் பற்றிய ஒரு முழுமையான கட்டுரை

 

எம். மகாதேவன்

 

அன்புள்ள ஜெ

 

பிரமிள் பற்றிய கட்டுரையை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தேன். இலக்கியவிமர்சனக் கட்டுரைகளுக்குரிய சோர்வூட்டும் செயற்கை நடை இல்லாமல் அழகான படிமங்களுடன் , கவித்துவமான ஊடாட்டங்களுடன் ஒரு நல்ல புனைவனுபவத்துக்குச் சமானமாக இருந்தது கட்டுரை

 

இக்கட்டுரையில் நீங்கள் எடுத்து அளித்திருக்கும் கவிதைகளை உங்கள் வாசிப்பின் வழியாக பார்க்கும்போது ஒரே சமயம் ஒரு குழந்தையின் பார்வையையும் ஒரு தத்துவப்பார்வையையும் அடையமுடிகிறது. அந்தக்கவிதைகள் அபாரமான அழகை அடைந்துவிடுகின்றன. நானே அவற்றை வாசித்திருக்கிறேன். இத்தனை ஆழமாக அவை எனக்கு அப்போது திறந்துகொள்ளவில்லை

 

டி.லட்சுமணப்பெருமாள்

 

முந்தைய கட்டுரைஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா ஆவணப்படங்கள்