பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 6
அவந்தியின் எல்லை கடப்பது வரை சாரிகர் பாலை என்பது என்னவென்று அறிந்திருக்கவில்லை. நூல்களில் அந்நிலத்தைப் பற்றிய பலநூறு விவரிப்புகளை அவர் படித்திருந்தார். அவையெல்லாம் வெறும் சொற்கள் என்பதை அவ்விரிவின் முன் விழிதிகைத்து நின்றிருக்கையில்தான் உணர்ந்தார். பாலை தொடங்குவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவந்தியின் எல்லைவரை பாலை நிலம் இல்லை என்பதே அவர் அறிந்திருந்தது. ஆனால் பாலை என அறியப்படும் நிலம் நெடுந்தொலைவுக்கு முன்னரே நால்வகை நிலத்தின் திரிபென தெரியத்தொடங்கியது.
மரங்கள் குற்றிலைகளும் விறகென உலர்ந்த கரிய பட்டைகள் பொருக்கோடிய அடிமரங்களும், குறிய உடல்களும் கொண்டவையாக மாறின. புதர்கள் கரும்பச்சை வண்ணத்துடன், முட்களுடன் சிறு குவியல்கள்போல ஆங்காங்கே பரந்திருக்க நடுவே பொருக்கென பரவியிருந்த நிலத்தில் நுரையுடைந்து உருவான குழிகள் என திறந்த பல்லாயிரம் சிறுவளைகள் வழியாக எறும்புகள் வெளிவந்து உள்ளே சென்றுகொண்டிருந்தன. மென்மணல் குவைகளின்மேல் உடும்புகளின் கால்தடங்கள். முட்களில் சிலந்திவலைக்குழிகள். காற்றில் மண் எழுந்து வந்து முகத்தை அறைந்தது. வெந்த புழுதியின் மணம் அதிலிருந்தது.
ஆனால் அவர் விழிகளுக்குள் அவந்தியின் பசியவயல்களே எஞ்சியிருந்தன. மூன்று நாட்களில் உழவன் என முழு வாழ்வொன்றை வாழ்ந்து மீண்டு எழாமல் இருந்தார். கண்களுக்குள் வெயில் பொழிந்து நோக்கு அழியுமளவுக்கு பாலை கண்முன் விரிந்தபோதுதான் “அணுகிவிட்டோமா?” என்றார். “இதுதான் பாலை” என்று துணைவந்த அவந்திநாட்டு வழிகாட்டி சொன்னான். பாலையில் செல்வதற்குரிய அகன்ற மென்மரச் சகடங்கள் கொண்ட வண்டிகள். அவற்றை அத்திரிகள் இழுத்தன. அவற்றின் கால்களில் அகன்ற லாடங்கள் கட்டப்பட்டிருந்தன. வண்டிகள் மணல் நெரியும் ஒலியுடன் பாலைமேல் சென்றன.
“இன்னும் பன்னிரு நாட்கள்… ” வழிகாட்டி சொன்னான். “ஒவ்வொரு நாளும் உரிய சோலையை சென்றடையவேண்டும். ஒருமுறை பிந்தினால்கூட தப்பலாம். இருமுறை பிந்தினால் பாலை நம்மை கவ்விக்கொள்ளும்.” அவர் அந்நிலத்தை நோக்கிக்கொண்டு வண்டியில் அமர்ந்திருந்தார். இனிய நிலமெனத் தோன்றியது. மென்மையான அடிவயிறு போன்ற மணற்கதுப்புகள். உறுதியான புதர்கள். மணல்மேல் ஓர் ஓநாயின் காலடித்தடம் பக்கவாட்டில் அணிந்த பொற்சரம்போல ஓடிச்சென்றது.
அதன் அழகில் அவர் விழியிமைக்காமல் ஒன்றியிருந்தார். வெண்மையா பொன்னிறமா செம்மையா என அறியமுடியாமல் நிலத்தின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது வந்த பாறைகள் அள்ளிவைக்கப்பட்ட ஊன்கதுப்பென ஒருகணம் திகைக்கச் செய்தன. வெல்லம்போல நாவூறச் செய்தன மறுகணம். நெய்க்குவை என மென்மையாக வழிக்கப்பட்டவை. வெண்ணைப் படிவுகள் என அமைந்தவை. அரக்குப்பலகைகள், கல்லில் எழுந்த காளான்கள், குடைகள், பூதங்கள் செதுக்கிய விந்தை வடிவங்கள், கரைந்தழிந்த முகங்கள்.
“வழிமயக்கும் பலநூறு தெய்வங்களின் வெளி இது. இங்கிருந்து கிளம்பும்போது பதினெட்டு அடையாளங்களை குறித்துக்கொள்ள வேண்டும். ஒன்றுகூட பிழைபடலாகாது. ஒன்று பிழைத்தாலும் வழி விலகிவிடுவோம். அரை அடி பிழைத்தால் ஆயிரம் காதம் தவறும் வெளி இது என்பார்கள் முன்னோர். சற்று அப்பால் எங்கோ உப்புப்பாலை ஒன்று உள்ளது. வழிதவறிச் செல்பவர்களை விழுங்கி உண்ணும் வெண்பூதம் அது.” அவர் நெஞ்சு நிறைந்து பெருமூச்செறிந்தார். விழிவழியே நுழையும் காட்சி உடலை நிறைக்க முடியும் என முதல்முறையாக அறிந்தார்.
ஒருநாளுக்குள் அவர் பாலைநிலத்து நாடோடிகளில் ஒருவனாக மாறிவிட்டிருந்தார். அன்று மாலை அவர்கள் ஒரு சோலையில் தங்கினர். முன்பு அது பாலை வணிகர்களின் அந்திச்சோலையாக திகழ்ந்திருந்தது. முள்மரங்கள் செறிந்த சோலை சுழிப்பெனச் சரிந்து சென்று கலங்கிய நீர் நிறைந்த ஊற்றுச்சுனையை அடைந்தது. அதில் சருகுகள் மண்டி பச்சைநிறப் பாசி பரவிய நீர் நிறைந்திருந்தது. சூழ்ந்திருந்த மென்சேற்றுப்பரப்பில் பலநூறு காலடிகள். ஓநாய்கள், பாலைவன ஆடுகள், கீரிகள், ஒரு சிறுத்தையின் காலடிகூடத் தெரிந்தது. விலங்குகளுக்கு நீர்காட்டினார்கள். அவை செவிவிடைத்து நீள்மூச்செறிந்து உடல்விதிர்த்து மயிர்ப்படைந்தபடி நீர் அருந்தின.
“சுனையருகே தங்கலாகாது. இங்கே நீர் அருந்த விலங்குகள் வரும்” என்று வழிகாட்டி சொன்னான். “நீருடன் நாம் சென்று அந்தப் பாறைக்கு மறுபக்கம் அமரவேண்டும். அதுவே வழக்கம். அங்கே மணல்காற்றை பாறை தடுத்துவிடும்.” “இங்கே அனல் மூட்டினால் விலங்குகள் அணையாதல்லவா?” என்று சாரிகர் கேட்டார். “ஆம், ஆனால் அவை நீர் அருந்த முடியாது. பாலையில் எந்த உயிரின் குடிநீரையும் இன்னொரு உயிர் பறிக்கலாகாது. அதை கொடுங்காற்றுகளின் தெய்வங்கள் விரும்புவதில்லை.”
குடிநீரை கொப்பரைகளில் அள்ளிக்கொண்டு அவர்கள் நட்டுவைக்கப்பட்ட கற்பலகைபோல் சரிந்து எழுந்து நின்ற நிலைப்பாறைக்கு அருகே சென்றனர். அங்கே அதற்கு முன் தங்கியவர்கள் வைத்த கலங்களும் எஞ்சிய விறகும் உப்பும் இருந்தன. விலங்குகளுக்கு எட்டாத இடத்தில் பலர் உண்பதற்குரிய அரிசியும் பருப்பும் ஒரு துணியில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. நீரை மென்மணல் நிறைந்த குடுவையினூடாக விட்டு மும்முறை அரித்து தெளியவைத்து அருந்தினர். வீரர்கள் உணவு சமைக்கத் தொடங்கினர்.
சாரிகர் பாலையில் அந்தி அணைவதை நோக்கிக்கொண்டிருந்தார். கதிரவனை அத்தனை சிவப்பாக முன்பு கண்டதில்லை என்று தோன்றியது. முகில் இல்லாத வெட்டவெளியான நீலவானம். ஆனால் அது கலங்கி சிவந்து குருதிக்கடல் என ஆகியது. கதிரவன் மேல்திசை விளிம்பில் இறங்கிய பின்னரும் நெடுநேரம் ஒளி இருந்தது. தொடுவான் கோடு மாபெரும் வில் என வளைந்து சூழ்ந்திருந்தது. வானிலிருந்து அறியா ஒளியொன்று இறங்கி மண்ணை துலங்கச் செய்தது.
கண்கள் ஒளிர ஓர் ஓநாய் சுனைநீர் நோக்கி சென்றது. இருட்டு செறிவடையும்தோறும் விலங்குகளின் கண்மின்களும் உறுமலோசைகளும் செவியடிப்புகளும் கேட்டன. பாலைச்சோலையே ஓர் உயிரென மாறி ஓசையிட்டுக்கொண்டிருந்தது. அப்பால் ஓர் உயிர் அணுகிவருவதை சாரிகர் கேட்டார். அதன் பின்னரே அதை கண்டார். “அது என்ன?” என்றார். “மானுடன்” என்று வழிகாட்டி சொன்னான். “பெரும்பாலும் ஏதோ தனித்த நாடோடி. அவன் வழிதவறியிருக்க வேண்டும்.”
அவன் வந்துகொண்டே இருந்தான். பின்னணியில் ஒளிவிட்ட பாலைநிலத்தின் பகைப்புலத்தில் அவன் உடல் துலங்கியது. தாடிமயிர்களைக்கூட காணமுடிந்தது. அவன் நின்று “நாடோடி, தனியன்” என்றான். “அணுகுக!” என்றான் வழிகாட்டி. அவன் அணுகி வர மேலும் பொழுதாகியது. மிகமிக மெல்ல அவன் வந்தான். அவர்கள் முன் வந்து நின்று மூச்சிளைத்தான். “அமர்க, நீர் அருந்துக!” என்று வழிகாட்டி சொன்னான். “உணவு ஒருங்கிக்கொண்டிருக்கிறது.” அவன் “என்னால் நெடுநேரம் உணவுண்ண முடியாது. நீர் மட்டுமே எனக்குத் தேவை” என்றான். பின்னர் கால்மடித்து மணலில் அமர்ந்தான். கைகளை ஊன்றி உடலை நிமிர்த்து வானை நோக்கினான்.
விண்ணில் மீன்கள் எழுந்துகொண்டிருந்தன. மழைத்துளிகள் அப்படியே வானில் தேங்கி நிலைகொண்டதுபோல. அத்தனை விண்மீன் செறிவை சாரிகர் அதற்கு முன் கண்டதில்லை. பெரிய விண்மீன்கள் பழங்கள்போல, கங்குகள்போல, கண்கள்போல, மணிகள்போல சுடர்கொண்டு நின்றன. இடைவெளிகள் முழுக்க மணல்போல மீன்குவைகள். மீன்களின் ஒளியே ஒவ்வொரு மணற்பருவையும் நோக்குவதற்குப் போதுமானதாக இருந்தது. நாடோடி அவர்கள் அளித்த நீரை வாங்கி அதில் ஓரிரு சொட்டுக்களை உதடுமேல் விட்டுக்கொண்டான். அவன் உடல் உலுக்கியது.
பெருமூச்சுகளுடன் மெல்ல தளர்ந்தான். பின்னர் “தெய்வங்களே” என முனகியபடி மீண்டும் சற்றுநீரை வாயில் விட்டுக்கொண்டான். நாவில் நீரை நிறுத்திக்கொண்டு ஊழ்கத்தில் என தலைகுனிந்து அமர்ந்திருந்தான். நெடும்பொழுது கழித்தே இன்னொரு மிடறு நீரை நாவில் விட்டான். “நீர் இனிது” என்றார் சாரிகர். “ஆம், நீரே இனிது” என்று நாடோடி சொன்னான். “நீரின்றி அமையாது உலகு.” சாரிகர் புன்னகைத்தார். “எங்கள் குடியில் அனைத்து மங்கலங்களுக்கும் நீரையே சான்றாக்குவார்கள். அனைத்து உறுதிகளையும் நீர் தொட்டே செய்வார்கள்.”
“நீர் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது, அனைத்துமாக தான் மாறுவது” என்று சாரிகர் சொன்னார். “ஆகவேதான் எங்கள் குலங்களில் அனலைச் சான்றாக்குகிறார்கள். அனல் அனைத்தையும் தன்னை நோக்கி இழுப்பது. அனைத்தையும் அழித்து நிலைகொள்வது. நூலோர் சொல்லும் சான்றோர் நெறியும் பெண்ணின் கற்பும் அனலால் நிலைநிறுத்தப்படுவன என்பது எங்கள் வழிமரபு.” நாடோடி “ஆம், வடவர்க்கு அனலே தெய்வமென கேட்டிருக்கிறேன். அனலவனை முதல் தந்தை என்கிறார்கள் அவர்கள். ஆனால் எங்கள் தென்னிலத்தில் நீரே முழு முதல் அன்னை. முதன்மைத் தெய்வம்” என்றான்.
உணவு ஒருங்கியிருந்தது. மரக்குடுவைகளில் அரிசியும் பருப்பும் கீரையும் கிழங்கும் இட்ட கஞ்சியை கொண்டுவந்து அனைவருக்கும் அளித்தான் காவலன். சாரிகர் அதை அருந்தத் தயங்கியபடி அமர்ந்திருந்தார். நாடோடி “அருந்துக… நீங்கள் உண்பதைக் கண்டு என் நாவில் நீர் ஊறுமென்றால் நன்று” என்றான். அவர் உண்ணத்தொடங்கினார். அவர்கள் உண்ணும் ஓசைகள் அரையிருளில் ஒலித்தன. மெல்லிய காலடிகள்போல, நீர்த்துளிகள் உதிர்வதுபோல, பல்லியோசைபோல. நாடோடி மீண்டும் மீண்டும் துளித்துளியாக நீரை அருந்திக்கொண்டிருந்தான்.
சாரிகர் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார். பாலையில் இருந்து காற்று வீசத்தொடங்கியது. அதன் ஓசை கடல் அலை என ஒலித்தது. மழை அணுகிவருவது போலிருந்தது. மழையென மணல் அறைந்தது. நிலைப்பாறை அவர்களை காத்தது. மணல் அலையை அது கிழித்தது. கிழிபட்ட முனைகள் துடிதுடித்தன. சீழ்க்கைகள், எக்களிப்புகள், சீறல்கள், அறைதல்கள், ஊளைகள். அவர் அதை கேட்டபடி துயில்கொண்டார். துயிலுக்குள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய ஓசைகள் என்று அறிந்தார். நான்கு பக்கமும் திறந்த நான்கு வாய்கள் கொண்ட ஆவகன், சுழிக்கும் வாய்கொண்ட பிரபாஹன், நாவுகள் எழுந்து சுழன்று பறக்கும் பீபஹன், சிம்மப்பிடரி கொண்ட பரபாகன், செங்குத்தாக எழுந்த பெருநாகம் போன்ற உத்தஹன், அலையலையென எழுந்த சம்பகன், கழுகுவடிவம் கொண்ட பரிபகன்.
அவர் விடாய்கொண்டு நடுங்கியபடி விழித்துக்கொண்டார். நாடோடி கையில் கஞ்சிக் குடுவையுடன் அமர்ந்திருந்தான். “நீர் வேண்டுமா?” என்று குடுவையை நீட்டினான். அவர் அதை வாங்கி விழுங்கினார். “நீரை சுவைத்து உண்ணவேண்டும். இப்புவியில் தெளிநீர்போல சுவையான பிறிதொன்றில்லை. அதை உணர பாலைக்கு வந்தாகவேண்டும்” என்று அவன் சொன்னான். அவர் நீரை வாயில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். நீர் ஓர் இனிய எண்ணம்போல் இருந்தது. ஒரு மந்தணம்போல.
“என் பெயர் பிம்பிகன்” என்று நாடோடி சொன்னான். “நான் கிழக்கே கலிங்கத்தைச் சேர்ந்தவன்.” சாரிகர் “வணிகம் செய்கிறீரா?” என்றார். “இல்லை, நாடோடி” என்றான் பிம்பிகன். “நாடோடி என்றால் ஏன் இந்தப் பாலைக்கு வரவேண்டும்?” என்று சாரிகர் கேட்டார். “இதற்கெல்லாம் மறுமொழி என உண்டா என்ன? தெற்கிலிருந்து வடக்கே செல்கிறார்கள். வடக்கிலிருந்து தெற்கே செல்கிறார்கள். அதைப்போல கிழக்கிலிலிருந்து மேற்கே செல்வதும் ஒரு வழக்கம். மறுஎல்லையில் விடுதலை உள்ளது என்னும் நம்பிக்கை மானுடனை என்றும் அலைக்கழிப்பது.” அவன் சிரித்து “இங்கே மேற்குப்பாலையில் இருந்து கலிங்கத்திற்கு வந்த ஒருவனிடமிருந்தே இங்கு வரவேண்டும் என்னும் எண்ணத்தை அடைந்தேன்” என்றான்.
“நீர் தனியாக பாலையில் வந்திருக்கலாகாது” என்று சாரிகர் சொன்னார். “ஆம், ஆனால் வந்த பின்னரே அது தெரிகிறது. நல்லவேளையாக இருட்டுவதற்கு முன் உங்கள் புகையை பார்த்தேன்.” சாரிகர் “நீர் உயிர்வாழவேண்டும் என்று ஊழ்” என்றார். “எனக்கு அதில் பெரிய வேறுபாடு ஏதும் தெரியவில்லை. வாழ்க்கைக்கு அப்படி ஆழ்பொருள் என ஏதும் இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றான் நாடோடி. சாரிகர் “நாடோடியாக நீர் கிளம்பியபின் அறிந்துகொண்டது என்ன?” என்று அவனிடம் கேட்டார். பிம்பிகன் சற்று நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பின்னர் திரும்பி படுத்து துயில்கொண்டிருந்த வீரர்களை பார்த்தான். அப்பால் அத்திரிகள் பாறையுடன் உடல்சேர்த்து மூன்று கால்களில் தளர்ந்து நின்றிருந்தன.
சாரிகர் “கூற இயலாதவை எனில் தேவையில்லை” என்றார். “இல்லை, அவ்வாறல்ல” என்று அவன் சொன்னான். “நான் சொற்களாக அவற்றை சேர்த்துக்கொள்ளவில்லை. அல்லது சேர்த்துக்கொண்டிருந்த சொற்குவைகளை என் பயணத்தில் ஒவ்வொன்றாக இழந்துவிட்டேன். எஞ்சிய எண்ணத்திலிருந்து உருவான தெளிவுக்கு என்னிடம் சொற்கள் இல்லை.” சாரிகர் “இப்பயணத்தால் நீங்கள் அகம் மாற முடிந்ததா?” என்றார். “உருமாறுவேன் என்று எண்ணினேன். அகமும் மாறும் என்று மாறிய பின்னரே அறிந்தேன். இடம் மாறினால் அகம் மாறிவிடும். அகம் என்பது ஓர் ஆடிப்பாவை அசைவு மட்டுமே” என்றான் பிம்பிகன்.
“எனில் நன்று, நீர் அடைந்தது விடுதலை” என்றார் சாரிகர். “ஆம், மெய்யாகவே விடுதலை” என்று பிம்பிகன் சொன்னான். “மெய்யாகவே பெரிய விடுதலை. நீர் கண்விழிப்பதற்கு முன் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.” அவன் சிரித்து “என் வாழ்நாளில் இத்தனை பெரிய இன்பத்தை அடைந்ததில்லை. இன்பம் என்பது இந்நிலையிலேயே அடையப்பட முடியும். முழுமையான எடையின்மை இது. பொருட்சுமைகள் இல்லை. கடமைச்சுமைகள் இல்லை. எண்ணச்சுமைகள் இல்லை. நினைவுச்சுமைகளும் இல்லை. வெட்டவெளியில் விண்மீன்களுக்குக் கீழே அமர்ந்திருக்கிறேன். தெய்வங்களே இந்தத் தருணத்தை எனக்கு அளித்தீர்கள் என எண்ணிக்கொண்டேன்” என்றான்.
“மிக அப்பால் அவனை கண்டேன். பெரும்பாறைகளால் மண்ணோடு அழுத்தப்பட்டவன். திசைகள் சுவர்களென மாறிச் சூழ்ந்து நெருக்கப்பட்டவன். வெடித்துவிடும்படி உள்ளிருந்து விம்முபவன். அவனை எண்ணும்போது அத்தனை உளநெகிழ்வு ஏற்படுகிறது. எத்தனை எளியவன், எத்தனை சிறியவன்! நன்று, இறுதியிலேனும் அவனுக்கு வாசல்கள் திறந்தன. வழிகள் தெளிந்தன. அவன்மேல் ஊழ் கனிவுகொண்டிருக்கிறது” என்றான் பிம்பிகன். அவர் கூர்ந்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். “அவனைப்பற்றி என்னால் சொல்லமுடியும். அவன் இன்றில்லை” என்று பிம்பிகன் சொன்னான்.
அவன் ஓர் வணிகனின் மைந்தன். உலகமறியாமல் தந்தை சேர்த்த செல்வத்தை செலவிட்டு வாழ்ந்தான். இசை பயின்றவன். யாழ் மீட்டுவான். நாடகக்கலையை அறிந்தவன். தந்தை அவனுக்கு மணம்புரிந்து வைத்தார். இரு மைந்தர் பிறந்தனர். ஒருநாள் தந்தை மறைந்தார். தந்தையுடன் இணைவணிகர் அவ்வூரின் முதல்வர். குடித்தலைவரும்கூட. அவர் ஒரே நாளில் அவனுடைய செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்துகொண்டார். அவரிடம் அதற்கான அத்தனை சான்றுகளும் இருந்தன. அவர் மன்றுகூடி நீர்தொட்டு ஆணையிட்டார். அவருக்கு அவன் தந்தை கடன்பட்டிருப்பதாக சொன்னார்.
அது பெரும் வஞ்சம் என அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவன் இல்லாளுடன், குழந்தைகளுடன் தன்னந்தனியனாக நின்றான். அவன் அவரை அணுகி மன்றாடினான். தன் குடியை அழித்துவிடவேண்டாம் என்று கண்ணீர்விட்டான். அவர் அவனை ஏளனம் செய்து துரத்திவிட்டார். சீற்றம் கொண்டு அவரை தாக்கினான். அவருடைய காவலர்கள் அவனை அடித்து குருதி வழிய தூக்கி வீசினர். முற்றிலும் செயலின்மையை உணர்கையில் மானுடர் சென்றுசேரும் இருள் ஒன்று உண்டு.
கண்ணீருடன், அனலென எரியும் வஞ்சத்துடன் அவன் தன் இல்லத்தின் இருளில் கிடந்தான். அவன் மனைவி அவனை தேற்றினாள். தன்னிடம் எஞ்சிய நகைகளை அவனுக்கு அளித்து தாம்ரலிப்திக்குச் சென்று ஏதேனும் சிறுவணிகம் செய்யும்படி சொன்னாள். பொருளீட்டி அப்பருவத்திற்குள் திரும்பி வரும்படியும் அதுவரை எஞ்சிய நகையுடன் அவ்வில்லத்தில் தான் வாழ்வேன் என்றும் கூறினாள். அவன் அந்நகையுடன் தாம்ரலிப்திக்கு சென்றான். ஆயிரம் முறை திரும்பி விழிநீர் வழியும் அவள் முகத்தை நோக்கினான். செல்லும் வழியெல்லாம் அவன் கண்ணீர் விழுந்தது.
அவனுக்கு வணிகம் தெரியவில்லை. சென்ற சிலநாட்களிலேயே வஞ்சம்பேசி அவனிடமிருந்த நகைகளை கொண்டுசென்றனர் உலுத்தர். அவன் துறைநகரில் அலைந்தான். அடிமையென தன்னை சேர்த்துக்கொண்டு மூட்டை சுமந்தான். வேறு எதுவும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. உடலுழைக்கப் பழகாதவன் ஆகையால் நோயுற்றான். நோக்க எவருமில்லாது துறைநகரின் தெருக்களில் கிடந்தான். இரவலனானான். வஞ்சம் கொண்டான். தீமை பயின்றான். தயங்காதவனாக மாறினான். திருடத் தொடங்கினான். கற்றுத்தெளிந்து எழுந்தான். சேர்த்த பணத்தால் சிறு வணிகமொன்றை தொடங்கினான். எவரையும் எப்போதும் ஏய்க்க ஒருங்கினான். வென்று பணமீட்டினான்.
பொன்னணிகளும் பட்டாடையும் அணித்தேரும் பேழைகளும் பொதிகளுமாக அவன் தன் ஊருக்குத் திரும்பினான். அங்கே அவன் மனைவி அவனை ஏமாற்றிய தந்தையின் தோழரின் ஆசைக்கிழத்தியாக வாழ்வதை கண்டான். அவர் இல்லத்தை ஒட்டிய சிறு வீட்டில் அவள் அவனுடைய இரு மைந்தர்களுடன் வாழ்ந்தாள். அவன் தன் இல்லத்தைச் சென்றடைந்தபோது அது பிறிதொருவருக்கு உரியதாகியிருந்தது. அவளை உசாவி அறிந்து அவள் இல்லத்தின் முன் சென்று நின்றான். செல்லும் வழியிலேயே அவள் வாழும் முறையை அறிந்துகொண்டான்.
அவள் அவனைக் கண்டதும் திகைக்கவில்லை. உணர்ச்சி வறண்ட விழிகளால் நோக்கி அசையாமல் நின்றாள். அவன் மைந்தர்கள் இருவரும் அவளருகே வந்து நின்றனர். “நீதானா? நீதான் இப்படிச் செய்தாயா?” என்று அவன் கேட்டான். “என் மைந்தர் பட்டினியாக இருந்தனர்” என்று மட்டும் அவள் சொன்னாள். அந்தத் தயக்கமின்மை அவனை வெறிகொள்ளச் செய்தது. உடற்குருதி முழுக்க தலைக்கு ஏறியது. கூச்சலிட்டபடி தன் வாளை உருவிக்கொண்டு அவளை வெட்டும்பொருட்டு பாய்ந்தான். அவள் “கொல்லுங்கள், உங்கள் மைந்தர்களுக்கு அன்னையில்லாமலாகும்” என்றாள்.
அவன் வாள் தாழ்ந்தது. “உன்னை அல்ல, கொல்லப்படவேண்டியவன் அவன்” என்று கூவியபடி அவன் திரும்ப “உங்கள் மைந்தர் உண்டது அவர் அளித்த உணவை” என்று அவள் சொன்னாள். அவன் கையிலிருந்து வாள் உதிர்ந்தது. தலையில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி அவன் அங்கிருந்து ஓடினான். உடலெங்கும் மலம் பூசப்பட்டிருப்பதுபோல ஒருகணம் உணர்ந்தான். தன்னை எரியூட்டவேண்டும் என்று வெறிகொண்டான். கூவி அழுதபடி அவன் உடல் ஒடுக்கி ஆலயமுகப்பில் அமர்ந்தான். பின் அங்கிருந்து எழுந்து ஓடினான். அவ்வூரிலிருந்து அந்நிலத்திலிருந்து அகன்று செல்லவேண்டும் என்பதே அவன் இலக்காக இருந்தது.
நெடுநேரம் அமைதி நிலவியது. மீண்டும் பிம்பிகன் சொல்லத் தொடங்கினான். “அவன் நல்லூழ் கொண்டவன். கலங்குவது தெளியும் என்னும் நெறிப்படி அவன் விடுதலைகொண்டான்” என்று அவன் சொன்னான். “அவன் அலையும் வழியில் ஒருமுறை வறண்ட காட்டின் விளிம்பில் அமைந்த ஒரு சிறுகுடிலில் நுழைந்து குடிக்க நீர் கேட்டான். அங்கிருந்த முதியோள் அளித்த நீரில் ஒரு சிறு கொசுப்புழு துடித்தது. அவன் நீரை அருவருப்புடன் தாழ்த்த அம்முதியோள் ‘அருந்துக மைந்தா, கலங்காத கங்கை அமுதாவதில்லை!’ என்றாள். அவன் நீரை வீசிவிட்டு திரும்பி நடந்தான்.”
அவன் நீள்பெரும்பாலையில் அலைந்து ஆறு நாட்கள் நீரில்லாது தவித்து நாவறண்டு வெடித்து உடல் ஓய்ந்து சென்றமைந்த சிறுசுனையில் ஒரு செந்நாய் செத்து அழுகி மிதந்தது. அந்நீரை அள்ளி அள்ளி அமுதென அருந்தினான். விடாய் முடிந்து சூழ நோக்கியபோது அங்கிருந்த அத்தனை மரங்களும் வேர்நீட்டி அந்த நீரை அருந்திக்கொண்டிருப்பதை கண்டான். கலங்கி அமுதாகும் கங்கையை அவன் அப்போது உணர்ந்தான். அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அதன் பெருங்கனிவை அறிந்தான். கண்ணீர் விட்டு அழுதான். அவனுடைய விடுதலை அங்கே நிகழ்ந்தது.
மீண்டும் நெடுநேரம் சொல் எழா அமைதி சூழ்ந்திருந்தது. “நான் இதிலிருந்து எதை புரிந்துகொள்ளவேண்டும்?” என்று சாரிகர் கேட்டார். அவன் திடுக்கிட்டவன்போல திரும்பி நோக்கி “சொல்லில் இருந்து எவரேனும் எதையேனும் புரிந்துகொள்ளமுடியுமா என்ன?” என்றான். சாரிகர் எரிச்சலுடன் “எனில் ஏன் இதை சொன்னீர்?” என்றார். “இச்சொல் வந்து உன்னை இடறும் ஒரு தருணம் அமையலாம்” என்றான் பிம்பிகன். அவன் சொல்வதென்ன என்று சாரிகருக்கு புரியவில்லை. வாழ்வின்பொருட்டு நெறிகளைக் கடத்தல் முறையென்று புரிந்துகொண்டீர்களா என்று அவர் கேட்க எண்ணினார். ஆனால் பிம்பிகன் தன் வாயில்களை ஒவ்வொன்றாக சாத்திக்கொண்டு மிக மிக தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தான்.
நீண்ட பெருமூச்சுடன் சாரிகர் அசைந்து அமர்ந்தார். பிம்பிகன் கலைந்து திரும்பி நோக்கி சொன்னான் “துயில்வோம்… நாளை புலரியில் எழவேண்டும் அல்லவா?” சாரிகர் “ஆம்” என்றபடி படுத்துக்கொண்டார். சிலகணங்களிலேயே நாடோடியின் குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. அவர் விண்மீன்கள் இறங்கி இறங்கி வந்து தன்னைச் சூழ்ந்து அசையாத அகல்சுடர்கள் என நிறைந்து ஒளிவிடுவதை பார்த்தபடி படுத்திருந்தார். காற்று மீண்டும் ஊளையுடன் எழுந்து சூழ்ந்தது.