பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 5
சாரிகர் துவாரகை பயணத்தில் முற்றிலும் பிறிதொருவனாக தன்னை உணர்ந்தார். அவர் உடல் புழுதிபடிந்து, வெயிலில் வெந்து கருமைகொண்டு, மயிர் பழுப்பேறி, உதடுகள் கருகி நீர்ப்பாவையை நோக்கியபோது முற்றிலும் பிறிதொருவன் தெரிந்தான். அவருடைய குரலை அவரே திகைப்புடன் அவ்வப்போது கேட்டார். அவருடைய நிழலசைவை திரும்பி நோக்கி யார் என திகைத்தார்.
அந்தப் பயணத்தின் பதினேழு நாட்களில் அவர் வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு மானுடர்களாக பிறந்து வாழ்ந்தார். அவந்தியை அடையும்போது தன்னை ஒரு தொலைவணிகனாகவே எண்ணிக்கொண்டார். சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளும் வணிகத்திற்குரியதாக, ஒவ்வொரு சாலைத் திருப்பமும் வணிக வாய்ப்பாக தோன்றியது. வணிகன் என கற்பனை செய்து விற்று, வாங்கி, ஈட்டி, செலவழித்து, காத்திருந்து, கரவுசெய்து மீண்டார். வணிகர்குலத்துப் பெண்ணை மணந்து குழவியருக்கு தந்தையாகி வளர்த்து அவர்களிடம் வணிகத்தை அளித்துவிட்டு மறைந்தார். மீண்டும் ஓரிடத்தில் பிறிதொரு வாய்ப்பில் பிறந்தெழுந்தார்.
அந்தணன் என்னும் அடையாளத்தை அஸ்தினபுரியிலிருந்து கிளம்பிய மூன்றாம் நாளே அவர் துறந்துவிட்டார். நான்காம் நாள் ஒரு விடுதியில் ஊனுணவு உண்டார். அவருக்கு உணவு கொண்டுவந்த ஏவலன் “அந்தணருக்குரிய உணவு…” என்று தொடங்க “நான் வணிகன். ஊனுணவு கொண்டுவருக!” என்று ஆணையிட்டார். ஊனுணவு அவர் முன்பு உண்ட ஏதோ காய்போலத்தான் இருந்தது. அவர் அகத்தை மாற்றிக்கொண்டிருந்தமையால் எவ்வகையிலும் ஒவ்வாமை தோன்றவில்லை. அவர் வணிகர்களுடன் பேசிக்கொண்டே பயணம் செய்தார். விடுதிகளில் வணிகர்களுடன் கொட்டகைகளுக்குள் மரவுரிகளில் படுத்தார்.
அவர் வணிகர்களிடம் தன்னை அஸ்தினபுரியின் வணிகன் என்றே அறிமுகம் செய்துகொண்டார். அவர் அந்தணனின் முகம் கொண்டிருப்பதாகச் சொன்னவர்களிடம் தன் அன்னை அந்தணப்பெண் என்றார். வணிகர்கள் அவரை நம்பவில்லை. ஆனால் அவரிடம் வணிகம் குறித்து பேசினார்கள். அவர் உசாவும்போது தெரிந்த ஆர்வம் அவர்களை பேச வைத்தது. அத்தனை வணிகர்களும் முதலில் வணிகம் இழப்பு மட்டுமே அளிப்பது என்றார்கள். முன்பிருந்த நல்ல நிலை இப்போது இல்லை என்றார்கள். தங்களிடம் பொன்னோ பொருளோ மிச்சமில்லை என்று சொல்லி மடியை விரித்துக் காட்டினார்கள். வாய்ப்புகளை தேடிச்செல்வதாக கூறினார்கள். அந்த நடிப்பை நெடுங்காலமாகச் செய்து அதை நம்பி அதுவாகத் திகழக் கற்றிருந்தார்கள்.
அத்தனை வணிகர்களுக்கும் நன்றாகப் பேசத் தெரிந்திருந்தது. இனிதாக, அணுக்கமாக, நம்பகமாக பேசினார்கள். அனைவருமே புன்னகைமுகம் கொண்டிருந்தனர். சிறிய நகைச்சுவைக்கும் வெடித்துச் சிரித்தனர். ஆனால் சிரிப்பின்போது விழிகள் அதில் ஈடுபடவில்லை. அவை வேவுபார்த்தபடி, கவலைப்பட்டபடி, கணித்தபடி அகன்றிருந்தன. அவர்களின் பயணங்கள் பேச்சுக்களால் ஆனவை. பேச்சு அவர்களுக்கு சொல்லவும் மறைக்கவும் உதவியது. ஆகவே அவர்கள் செய்திகளையும் கருத்துக்களையும் செதுக்கி அடுக்கியிருந்தனர். சொற்களை முன்னரே கோத்துவைத்திருந்தனர். அவர் அந்த உரையாடல்கள் வழியாக முற்றிலும் அறியாத உலகில் மேலும் மேலும் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தார்.
நாடுகளின் நிலைமைகள், வழிகளின் சூழல், வணிகத்தின் ஏற்ற இறக்கங்கள் என அவர் ஒவ்வொரு நாளும் புதியனவற்றை அறிந்துகொண்டிருந்தார். பாரதவர்ஷமெங்கும் வணிகம் மீண்டும் புத்துயிர்கொள்ளத் தொடங்கியிருந்தது. போர் அணுகி வருகிறது என்னும் எண்ணத்தால் பெரும்பாலான வணிகர்கள் பயணங்களை ஆறு மாதத்திற்கும் மேலாக ஒத்திப்போட்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று சேர்ந்துகொண்டனர். செல்வங்களை பதுக்கிவிட்டு எளியோர் என புழங்கினர். அவர்கள் உறவுகொண்டாடுவது அப்போதுதான். குலதெய்வங்கள் பூசைகொள்வதும் அப்போதே. அவர்களின் குலதெய்வங்கள் எல்லாமே பெண்கள். அவர்களின் பெண்கள் ஆற்றியிருக்கக் கற்றவர்கள். எதிர்பார்ப்பை வாழ்வென எண்ணிக்கொள்ளப் பழகியவர்கள்.
“போர் எழுகிறதென்றால் அரசர்கள் கருவூலங்களின் மேல் கட்டுப்பாட்டை செலுத்துவார்கள். பொருட்கள் வாங்கப்படுவது நிலைக்கும். மக்களும் தங்கள் செல்வங்களை புதைத்துச் சேமிக்கவே முயல்வார்கள்” என்றார் கலிங்கநாட்டு வணிகரான கனகர். “அரசுதான் உண்மையில் மிகப் பெரிய பொருள் வாங்குநர். விற்பனையும் வாங்குதலும் என நிகழும் இச்சுழலில் இந்த வளையத்தில் ஒரு புள்ளியாக அரசு இருக்கும். அரசு அனைத்தையுமே வாங்குகிறது. உணவை, படைக்கலங்களை, ஆடைகளை, அணிகளை மட்டுமல்ல. அரசு வாங்காத பொருளென ஏதுமில்லை. ஒரு நாட்டில் பொருளை உருவாக்காத அனைவருமே அரசுடன் இணைந்தவர்களே. அரசு வாங்குவதை நிறுத்திவிட்டால் அந்த வட்டம் நின்றுவிடும். அதன்பின் வணிகம் இல்லை. வணிகம் ஒரு தறிபோல. அதன் அனைத்து நெசவும் இரு முனைகளை தொட்டு ஓடும் நூல்களால் ஆனது. உழவரும் அரசும்.”
முதிய வணிகரான குபேரர் “அரசுகள் போருக்கு ஒருங்குகின்றன என்றால் முதலில் எல்லைகளை இறுக்கி காவலமைப்பார்கள். வழிக்காவல் வணிகத்திற்கு நன்று. ஆனால் மிகைக்காவல் வணிகத்தை அழிக்கும். கண்காணிப்புகள் கூடும்போது காவலரிடம் கோன்மை மிகுகிறது. மிகுந்துசெல்லும் கோன்மை கரவுப்பொருள் சேர்ப்பதாகவே முடியும். இதற்கு விலக்கே எங்கும் இல்லை. காவலர்கள் பொருள் சேர்ப்பார்கள். தங்களை கண்காணிக்கும் மேல்நிலையாளர்களுக்கு அதில் பங்கைக் கொடுத்து தங்கள் வளையத்திற்குள் கொண்டுவராமல் அவர்களால் அதைச் செய்யமுடியாது. ஆகவே விழைவு காட்டி, மயக்கி, பொருளை கொடுத்து மேலிருக்கும் ஆட்சியமைப்புகளை அறமிழக்கச் செய்வார்கள்” என்றார்.
“அறுதியில் அமைச்சர்கள் வரை அந்த அறமின்மை சென்று சேரும். அரசு என்னும் அமைப்பே நெறியழியும். அரசு என்பது காவல் என்றும், அறம் என்றும், நிகர்நிலைப்படுத்தல் என்றும் சொல்லப்படுமென்றாலும் வணிகர்களின் நோக்கில் அது பொருள்கொள்ளும் அமைப்பே. பொருள்கொள்ளும் எந்த அமைப்பும் கொள்ளையிடும் உளநிலையே கொண்டிருக்கிறது. அரசு என்பது ஏற்கப்பட்ட திருட்டு. கொடுப்பவரும் ஒப்புகையில் அரசு நிலைகொள்கிறது. எந்த அரசும் கொள்ளையாக மாறும் வாய்ப்புள்ளதுதான். அரசு தன்னை தான் கட்டிவைத்திருக்கும் நெறிகளை சற்று அவிழ்க்கத்தொடங்கினாலும் நேரடிக்கொள்ளையாக ஆகிவிடும்.”
“போரிலிருக்கும் அரசு அந்த நெறியை எளிதில் கடந்துவிடுகிறது. அதனால் தன் வீரர்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அரசு என்பது படைகளுக்கும் குடிகளுக்குமான ஒரு நிகர்நிலையை உருவாக்கிக்கொண்டே இருப்பது. குடிகள் ஓங்கினால் அரசு ஆற்றலிழக்கும். படைகள் ஓங்கினால் அரசு நெறியிழக்கும். போரில் படைகளின் சொல் ஓங்குகிறது. அவ்வாறாகாமல் அமைய வழியே இல்லை.” சாரிகர் திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் கற்ற எந்நூலிலும் அந்நோக்கை அறிந்ததில்லை. எந்த அவையிலும் அவை பேசப்பட்டதில்லை. “எந்த வணிகரும் அரசவையிலோ சந்தையிலோ மெய் சொல்லமாட்டார்கள்” என்றார் கனகர்.
மாளவநாட்டு வணிகரான சுந்தரர் “போர்க்கால அரசுகள் நேரடியாகவே சுங்கத்தை கூட்டுகின்றன. மறைமுகக் கொள்ளைகளை ஊக்குவிக்கின்றன. அரசர்களே கொள்ளையர்களை அனுப்புவதும் உண்டு. போர் தொடங்கும் சூழல் அமைந்தாலே வணிகர்கள் அலை திரும்பிச்செல்வதுபோல பின்னடைந்து நுரைக்கொப்புளங்கள் மறைவதுபோல மறைந்துவிடுவார்கள். போருக்குப் பின் வெல்வது எவர் வீழ்வது எவர் வெற்றிக்குப் பின் எழுவது யார் என்பதைக் கணித்த பின்னரே மீண்டும் வணிகத்திற்கு எழுவார்கள்” என்றார். “வணிகர்களுக்கு நாடு என ஏதுமில்லை. அவர்களைக் காக்கும் கோல் நிலைகொண்டது அவர்களின் நாடு. கோல் நிலை தாழுமென்றால் அக்கணமே உதறிவிட்டுக் கிளம்பவும், செல்லும் நிலத்தில் மொழியையும் வாழ்வையும் கற்றுக்கொண்டு நிலைகொள்ளவும் அவர்களால் இயலும்.”
“போரில் வென்றவர்களுடன் சேர்ந்துகொள்வதுதான் வணிகர்கள் செய்யவேண்டியதா?” என்றார் சாரிகர். “போரில் வென்றவர்கள்தான் ஆற்றல்கொண்டு எழவேண்டும் என்பதில்லை. போரில் பொருதும் இரு தரப்புகளும் அழிய மூன்றாம் தரப்பு எழுந்து வரக்கூடும். போரினால் ஒரு வணிகப்புலம் முற்றழிய பிறிதொன்று உருவாகக்கூடும். பிருஹத்ஷத்ரனின் காலத்தில் மகதம் சர்மாவதியை ஆண்ட மச்சர்களுடன் போரிட்டது. மகதம் வென்றது. ஆனால் மச்சர்களின் அழிவால் அப்பாலுள்ள நிஷாதர்கள் ஆற்றல்கொண்டார்கள். அவர்களின் தோல்வணிகம் பெருகியது. மகதம் அவர்களிடம் கப்பம் பெற்றது, ஆனால் அவர்களை முற்றாள மகதத்தால் இயலவில்லை. ஏனென்றால் அவர்கள் மிக அப்பால், சர்மாவதியின் கரையோரக் காட்டுக்குள் இருந்தனர். அவர்கள் வணிகச்செல்வத்தால் அரசியலாற்றல் கொண்டனர். அவர்களின் நாடுகள் உருவாகி வந்தன” என்றார் சுந்தரர்.
“அரசியலை வணிகர்கள் எவ்வண்ணம் கணிக்கிறார்கள்?” என்றார் சாரிகர். “அரசியலில் என்ன நிகழுமென முன்னரே கணிக்க எவராலும் இயலாது. வணிகர்கள் அத்தகைய கணிப்புகளை நம்புவதுமில்லை. அது அந்தணர்களும் ஷத்ரியர்களும் தங்கள் உகிர்களையும் பற்களையும் கூர்தீட்டிக்கொள்ளும் பொருட்டு செய்யும் பயிற்சி. அந்தணர் பூனைகளைப்போல. ஒவ்வொரு நாளும் தங்களைத்தாங்களே நக்கிக்கொள்பவர்கள் அவர்கள். நாங்கள் கண்முன் பொருண்மையானவற்றை மட்டுமே கணிக்கிறோம். பொருளும் அவற்றை வாங்கும் பணமும் பொருண்மையானவை. எங்கள் தெய்வங்கள் கண்ணெதிரே வாழ்பவை. அவை மாற்றில்லாதவை அல்ல. நாங்கள் போருக்குப் பின் மெல்ல வெளியே இறங்கிப் பார்க்கிறோம். மழை நின்றுவிட்டதா என்று கைநீட்டி அறிகிறோம். மெல்ல காலடி வைக்கிறோம். சிறிய அளவில் தொடங்குகிறோம். செய்துநோக்கி விளைவுகளை உய்த்தறிந்து விரிவாக்கிக் கொள்கிறோம்.”
“இந்தப் போருக்குப் பின் அஸ்தினபுரி வல்லமை பெறும் என்பது உறுதியாகியிருக்கிறது” என்றார் கனகர். “அது உள்ளுணர்வால் தோன்றுவதுண்டா?” என்றார் சாரிகர். அவர் நகைத்து “அது ஒருவருக்குத் தோன்றும் எண்ணம் அல்ல. எண்ணி எண்ணிக் கணித்து, செய்திகளை திரட்டிப் பொருத்தி, ஒன்று நூறென்று நோக்கி பின் தெளிவது. சொல்லிச் சொல்லி நிறுவிக்கொள்வது” என்றார். சுந்தரர் “போரில் உள்ளுணர்வுக்கே முதலிடம் என்பார்கள். வணிகத்தில் உள்ளுணர்வை தவிர்ப்பதே பயிலவேண்டியது” என்றார். “எங்கள் மைந்தர்களிடம் உள்ளுணர்வு என வணிகனிடம் பேசுவது அவனை அழிக்கும் கொடுந்தெய்வம் என்று சொல்லுவோம். புறவுலகை நோக்கு, பருவடிவ உண்மைகளை திரட்டு, நீ அறிந்த அனைத்தும் பிறராலும் அறிந்து நூறுமுறை நிறுவப்பட்டாகவேண்டும் என்று கற்பிப்போம்.”
சாரிகர் திகைத்து “ஏன்?” என்றார். “ஏனென்றால் வணிகனை ஆள்வது பொருள்விழைவு. குபேரன் மானுடரிடம் விளையாடும் அசுரன் என்பதை மறக்கவேண்டியதில்லை. உள்ளுணர்வு என்றும் தெய்வத்தின் ஆணை என்றும் அகத்திலிருந்து எழுவது மாறுதோற்றம் கொண்ட பெருவிழைவின் குரலே. அதை நம்பும் வணிகன் தனக்கு உகந்தவற்றை காண்பான். தனக்கு ஒவ்வாதனவற்றை விலக்குவான்” என்று சுந்தரர் சொன்னார். “வணிகனின் கனவுகள் என்ன என்று நோக்குக! அத்தனை பேருக்கும் புதையல்கள் சிக்குவதுபோல, கருவூலங்களுக்குள் வழிதவறிச் செல்வதுபோல, அள்ள அள்ளக் குறையாத பொற்குவைகள் அமைவது போன்ற கனவுகளே பாதி. அவையே உள்ளுணர்வு என்றும் வெளிப்படுகின்றன.”
சாரிகர் “ஆனால் இழப்பையும் தீங்கையும் உள்ளுணர்வுகள் சுட்டக்கூடுமே?” என்றார். “கவரப்படுவதுபோல, இழந்துவிடுவதுபோல, அனைத்தும் அகன்று வறுமைகொள்வதுபோல எழுவனவே வணிகர்களின் கனவுகளில் மீதி. ஒரு வணிகன் எக்கனவைக் காண்கிறான் என்பதுதான் அவனை வகுப்பதற்கான அடையாளம். வணிகத்தின் தொடக்கத்தில், வெற்றியின் உச்சத்தில் இழப்பைக் கனவுகாண்பவர்கள் உண்டு. இழப்புகளின் போதெல்லாம் புதையல் எடுத்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு. இழப்புக்கனவுகளும் வணிகனின் பெருவிழைவையே காட்டுகின்றன. விழைவு மிகுந்து செயலாற்றும் வணிகனும் அச்சம் கொண்டு செயலாற்றாமல் ஒழியும் வணிகனும் தோல்வியடைவான்.”
அவர்கள் உணவுண்டபடி அனலைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அந்த விடுதியில் உணவு மிக எளியதாக இருந்தது. வேகவைக்கப்பட்ட கிழங்குகளும் கீரையும் கொண்ட கஞ்சி. ஆனால் வணிகர்கள் அதை ஒரு சொட்டும் எஞ்சாமல் உறிஞ்சிக் குடித்து கைகளை நக்கிக்கொண்டனர். “அஸ்தினபுரியின் வெற்றியை நீங்கள் எப்படி மதிப்பிட்டீர்கள்?” என்று சாரிகர் கேட்டார். “அஸ்தினபுரி வெற்றிபெறுவது அதன் படைவல்லமையால் அல்ல. அதன் செல்வத்திறனாலும் அல்ல. அதன் படைகள் அழிந்துவிட்டன. அதன் குடிகள் இடம்பெயர்ந்தார்கள். ஆகவே அவர்களின் செல்வம் ஊறிநிறைவது அல்ல. அவர்கள் வென்றெழுவது இதோ அங்கே சென்றுகொண்டிருக்கும் இந்த மக்கள்பெருக்கால்.”
“இது மாபெரும் செல்வம். இவர்கள் படைப்பவர்கள், வளர்ப்பவர்கள், சேர்ப்பவர்கள். அஸ்தினபுரி இவர்களால் மீண்டும் உருவாகி எழும். இன்னும் சில ஆண்டுகளிலேயே அந்நகரில் பொன் கொழிக்கும். ஆகவேதான் மீண்டும் வணிகத்தை தொடங்கியிருக்கிறோம்” என்றார் சுந்தரர். “இவர்களின் நம்பிக்கையை உருவாக்கியது எது?” என்று சாரிகர் கேட்டார். “அஸ்தினபுரியின் அரசர் யுதிஷ்டிரன் என்று சிலர் சொல்வார்கள். அரசி திரௌபதி என்று சொல்பவர்களும் உண்டு. மெய்யாகவே இந்நம்பிக்கையை உருவாக்கியது அங்கே எழுந்துள்ளது என்று சொல்லப்படும் புதிய வேதம்.”
“அது என்னவென்று எவருக்கும் தெரியாது. ஆனால் அது ஓர் அறைகூவல் என, ஆறுதல் என, அழைப்பு என ஒலிக்கிறது. அதுவே அங்கே இப்பெருந்திரள் ஒழுகிச்சென்றுசேர வழிவகுக்கிறது. அது அஸ்தினபுரியை எழச் செய்யும். அங்கே செல்லும் அனைவருக்கும் செல்வத்தை அளிக்கும்” என்றார் சுந்தரர். “இன்று பாரதவர்ஷம் முழுக்கவே அஸ்தினபுரியை மையமாக்கி வணிகம் மேலெழுந்துகொண்டிருக்கிறது. ஒருவகையில் சொல்லப்போனால் வணிகம் முன்னைவிட பெரிதாக மாற வாய்ப்புள்ளது. நேற்றுவரை இல்லாத நெறிகள் உருவாகலாம். புதிய சந்தைகள் உருவாகி எழலாம். புதிய வணிகங்களேகூட தோன்றலாம். எழுவது என்ன என்று தெரியவில்லை. ஆனால் இருந்தவை அனைத்தும் உருமாற, எழுந்தவை அனைத்தும் நிலமடைய, பேருருக்கொண்டு புதியது ஒன்று களம்புகுவதை உணர முடிகிறது. அதன் காலடியோசைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.”
சாரிகர் அவந்தியில் மூன்று நாட்கள் தங்க நேர்ந்தது. உஜ்ஜயினி நகருக்குள் நுழைந்து ஒருமுறை சுற்றிவந்தபோது அவர் அங்கே தன்னால் தங்கமுடியாது என்று உணர்ந்தார். அவர் உள்ளம் நாற்புறமும் திறந்துவிட்டிருந்தமையால் அந்நகரம் மிகச் சிறியதாகத் தோன்றியது. அவர் நகருக்கு வெளியே ஷிப்ரை ஆற்றின் கரையோரமாக விரிந்திருந்த மாபெரும் வயல்வெளியின் நடுவே அமைந்த உழவர்ச்சிற்றூர்களில் ஒன்றான கோபகுப்தத்தில் தங்கினார்.
கோபகுப்தம் நூறு இல்லங்களும் எட்டு தெருக்களும் மட்டும் கொண்ட சிற்றூர். மையத்தெருவின் கிழக்கே கொற்றவையின் ஆலயம் அமைந்திருந்தது. மேற்கு எல்லையில் ஊர்த்தலைவரின் சற்று பெரிய இல்லம். அனைத்து இல்லங்களுமே புல்வேய்ந்த தாழ்வான கூரையும் செம்மண் பூசப்பட்ட உப்பிய சுவர்களும் கொண்டவை. இல்லங்கள் அனைத்துக்கும் இணைப்புபோல தனியாக அடுமனையாக ஒரு குடில் இருந்தது. ஊருக்கு உரிய பசுக்களை ஒற்றை வளைப்புக்குள் கட்டி அதைச் சுற்றி மூங்கில் வளைவாக வேலியமைத்திருந்தனர். பசுக்கொட்டிலுக்குள் நுழையும் வழியில் மூங்கிலால் ஆன வாயிலும் மேலே காவல்கோபுரமும் இருந்தன.
வயல் நடுவே சென்ற சாலை ஆற்றின் படித்துறையில் இருந்து உஜ்ஜயினி நோக்கி சென்றது. ஆற்றின் ஓரமாகவே வளைந்து சென்று அது பாலைக்குச் செல்லும் பாதையுடன் இணைந்தது. அந்த ஊரை அறிவிக்கும் பலகையை சாரிகர் கண்டார். அக்கணம் அங்கே தங்குவதைப் பற்றிய எண்ணம் வந்தது. “உழவர் ஊர்களில் எவரும் தங்குவதில்லை” என்று அவருடன் வந்த வீரர்கள் கூறினார்கள். “நான் அந்தணன் அல்ல, உழவர்குடித்தலைவன் என அறிவியுங்கள்” என்று சாரிகர் சொன்னார்.
வீரன் சென்று அறிவித்ததுமே அவ்வூரின் தலைவராகிய வியதர் தன் மைந்தனுடன் சாலைமுகப்புக்கு வந்து அவரை வரவேற்றார். அவர் ஊருக்குள் நுழைந்து அதன் நிரைதவறி அமைந்த, வைக்கோல்போர் போன்ற கருகிய கூரைகொண்ட இல்லங்களைக் கண்டதுமே அவற்றில் ஒன்றில் பிறந்து நெடுநாட்கள் வாழ்ந்ததைப்போல் உணர்ந்தார். “இங்கே முன்பு வந்திருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டார். அவருடன் வந்த வீரர்கள் ஊருக்கு வெளியே பசுக்கொட்டிலின் அருகே அமைந்த காவலர்கொட்டகையிலேயே தங்கிக்கொள்வதாகச் சொன்னார்கள். அவருக்கு ஊர்த்தலைவரின் இல்லத்திலேயே இடமளிக்கப்பட்டது.
அங்கே எவருக்குமே துயில்வதற்கு அறை என ஏதும் இருக்கவில்லை. மரப்பலகைகளை எடுத்துப்போட்டு திண்ணையிலோ தெருவிலோதான் படுத்துக்கொண்டார்கள். அப்பலகைகளில் அமர்ந்தே உணவுண்டார்கள். அந்தியில் உணவுண்ணவும் துயிலவும் மட்டுமே அவர்கள் இல்லங்களுக்கு வந்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் வயல்களில் ஒளியிருக்கும் பொழுது முழுக்க வேலை செய்தனர். வயலோரங்களில் வைக்கோல் தட்டிகளால் அமைக்கப்பட்ட இடம்பெயரும் சிறுகுடில்களில் ஓய்வெடுத்தனர். அவர்களின் வயல்களில் ஷிப்ரையின் நீர் நிறைந்திருந்தது. விழிதொடும் தொலைவுவரை நெற்பசுமை அலையடித்தது.
சாரிகர் அவர்களுடன் காலையிலேயே வயலுக்குச் சென்றார். அப்போது மூன்றாம் களையெடுப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. களைகளைப் பிடுங்கி சேற்றிலேயே அழுத்தி மூழ்கடிக்கவேண்டும் என்பது அவருக்கு விந்தையாக இருந்தது. “அவை மட்கி உரமாக ஆகும்” என்று அவருடன் களைபிடுங்கிய இளைஞனாகிய பத்ரன் சொன்னான். “இது நீருள் இருந்து முளைக்காதா?” என்று சாரிகர் கேட்டார். “முளைக்கும், முளைப்பது நன்று. அது அடுத்த களையெடுப்பில் உரமாக ஆகும்” என்று பத்ரன் சொன்னான். “ஆகவே நாம் களை மிகவேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டுமா?” என்றார் சாரிகர். “மெய்யாகவே அப்படித்தான். பசுங்களை எழுவதென்பது நெல்வயல் செழிப்புற்றிருப்பதற்கான அடையாளம்.”
பத்ரன் நகைத்து “களை நெல்லைவிட விரைவாக வளரும். களையெடுக்காவிட்டால் நெல்லைக் கடந்து எழுந்து அதை முற்றாக மறைத்து தான் நின்றிருக்கும். பிடுங்கப்படும் களை நெல்லை வளரச்செய்யும்” என்றான். சாரிகர் களைச்செடியை அள்ளி கையில் வைத்துப் பார்த்தார். அது நீர் நிறைந்த தடித்த தாள்களுடனும் பசுமையான தண்டுகளுடனும் இருந்தது. “அறுவடை செய்து நெல்லை களம் சேர்க்கையில் களையையும் எண்ணிக்கொள்வோம். நிர்யாதை என்னும் அன்னை எங்கள் ஊர்களுக்கு வெளியே கோயில்கொண்டிருக்கிறாள். அவள் களைகளை வளர்ப்பவள். அவளுக்கு புதுநெல்லால் பொங்கலிட்டு வணங்குவோம்.” சாரிகர் அந்தக் களையையே நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரன் சொன்னான் “அறுவடைக்குப் பின் இவ்வயல்களில் களை பெருக விட்டுவிடுவோம். களை எழுந்து இடைவரை செழித்து நிற்கும். எருமைகளை விட்டு மேய வைப்போம். உண்ண உண்ண அவை எழுந்து எருமைகளுக்கு அன்னமாகும். அடுத்த உழவின்போது எருமை தசைவல்லமையுடன் இருக்கவேண்டுமென்றால் வயலில் களை பெருகியாகவேண்டும்.”
அவர்களின் வயல்களுக்கு மேல் வெயில் அசைவற்றதுபோல் நின்றிருந்தது. கரையில் அமர்ந்து நோக்கியபோது வெயில் ஒரு வெண்சுவர் என்றே தெரிந்தது. அதில் பறவைகள் நீந்திச் சென்றன. பல்லாயிரம் பறவைகள் வந்தமர்ந்து சேற்றைக் கிளறியும் குத்தியும் உணவு தேடின. அந்தியில் ஒவ்வொரு கூட்டமாக எழுந்து வானில் பறந்தகன்றன. அவர் இருட்டில் அவர்களுடன் ஊருக்குத் திரும்பியபோது உடல் களைத்து ஒவ்வொரு காலடியும் எடைமிகுந்திருந்தது. நீரோடையில் குளித்துவிட்டு குடிலுக்குச் சென்று பலகையில் படுத்து வானை நோக்கிக்கொண்டிருந்தார்.
அவர்கள் அனைவருமே முற்றங்களில் படுத்தபடி உணவை எதிர்நோக்கினர். அவர்கள் உரையாடிக்கொள்வதே அப்போதுதான். அவர் துவாரகைக்குச் செல்வதை அவர்கள் வியப்புடன் நோக்கினர். “துவாரகைக்கா? அங்கே இன்று எவரும் செல்வதில்லை. உழவர் செல்வது விந்தைதான்” என்றார் அவர்களில் முதியவரன விசாலர். அவர் பலமுறை துவாரகைக்கு சென்றுவந்திருந்தார். “நான் நாடோடியாக அலைந்தேன். ஏன் என்று எனக்கே தெரியாது. இங்கே இச்சிற்றூரில் இவ்வண்ணம் முழுதமையவேண்டும் என்றால் என்னுள் இருந்த விசையனைத்தையும் செலவிட்டுவிடவேண்டும் போலும். நன்று” என்றார்.
“அது எங்களூருக்கு நன்று. வணிகர்களிடமும் சூதர்களிடமும் நாடோடிகளிடமும் பேசும் மொழியறிந்தவர் முதியவர். எங்களூரில் இருந்துகொண்டே எட்டுத் திசையையும் உணரும் ஆற்றல்கொண்டவர்” என்றான் இளையவனாகிய சதன். ”ஏன் எவரும் துவாரகைக்குச் செல்வதில்லை?” என்று சாரிகர் கேட்டார். விசாலர் நகைத்து “ஏனென்றால் முற்றிலும் உழவே இல்லாத நகர் அது. வணிகமே அதன் மையத்தொழில். உழவரில்லாத நாடு மணலில் அடித்தளமிட்ட மாளிகை என்பார்கள் எங்கள் முன்னோர். அதை உண்மை என்று இப்போது உணர்கிறோம்” என்றார்.
“நெடுங்காலமாக வணிகர்களே அங்கே சென்றுகொண்டிருந்தார்கள். மாளவத்திலிருந்தும் அவந்தியிலிருந்தும். ஒருகாலத்தில் நிரைநிரையாக வணிகவண்டிகள் துவாரகைக்கு சென்றுகொண்டிருக்கும். இப்போது வணிகர்கள் அந்நகரை கைவிட்டுவிட்டார்கள். அரிதாக நாடோடிகளே அங்கே செல்கிறார்கள்” என்று அவர் தொடர்ந்தார். “ஏன்?” என்று சாரிகர் கேட்டார். “அங்கே வணிகக்கப்பல்கள் வருவது குறைந்துவிட்டிருக்கிறது. வணிகமே துவாரகையின் உயிர். இங்கிருந்து செல்பவர்கள் பொருளுக்கு எட்டு மடங்கு விலை கிடைக்கும், அவ்விலையும் யவனப் பொன்னாகக் கிடைக்கும் என்பதனால்தான் சென்றார்கள். பீதர்நாட்டுப் பொருட்களும் யவனநாட்டு மதுவும் அங்கிருந்து இங்கு வந்தால் பன்னிருமடங்கு விலை. அதன் பொருட்டே பாலையில் நெடும்பயணத்தை மேற்கொண்டனர்.”
“இன்று துவாரகை வீழ்ந்துவிட்டது” என்றான் சதன். “வணிகம் என்பது நில்லா அலைபோல. கடல்மேல் நாவாய் செலுத்துவது போன்றது அங்கே ஓர் அரசை நடத்துவது. தேர்ந்த மாலுமியாகிய இளைய யாதவர் அதை ஆட்சிசெய்யும்வரை அங்கே செல்வம் கொழித்தது. உஜ்ஜயினி உழவில் ஊன்றிய நகர். இது தொன்மையானது. நிலையான நெறிகளால் ஆனது. இதை எவரும் ஆள வேண்டியதில்லை. வயல்களில் பயிர் விளையும். வரியென நெல் களஞ்சியத்தை வந்தடையும். பருவங்கள் மாறி வரும், ஆண்டுகள் சென்று மறையும், அரசகுடிகள் தோன்றி மறைவார்கள். எதுவும் மாறாது. வணிகநகரில் ஓராண்டிலேயே அனைத்தும் தலைகீழாக மாறிவிடும்.”
சாரிகர் அதை முன்னரே கேள்விப்பட்டிருந்தார். “துவாரகை இன்று இளைய யாதவரின் மைந்தர் சாம்பனின் ஆட்சியில் இருக்கிறது. அவருடனிருப்பவர்கள் ஆயர்குலத்துப் படையினர். அவர்கள் நின்று நிலத்திலூன்றி வாழ்ந்து பழகாதவர்கள். கொய்து கடந்துசெல்லும் இயல்பு கொண்டவர்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் வந்தணையும் கப்பல்களிலிருந்து சுங்கம் கொள்வது மட்டுமே. முன்பு இளைய யாதவரின் ஆட்சிக்காலத்தில் துவாரகையில் சுங்கம் கொள்ளப்படவில்லை. உலகமெங்கணுமிருந்து வணிகக்கப்பல்கள் அங்கே வந்தது அதன்பொருட்டே. சாம்பன் சுங்கம் கொள்ளத் தொடங்கினார். சுங்கம் வந்து கருவூலம் பெருகியபோது சுங்கத்தை மேலும் கூட்டினார். மேலும் செல்வம் வந்து குவிந்தது. இளைய யாதவருக்கு அறிவில்லை, தனக்கு அறிவிருக்கிறது என அவர் மார்தட்டிக்கொண்டதாக சொல்கிறார்கள்.”
“சுங்கம் பெருகியபடியே சென்றது. ஆகவே சுங்கம் கொள்பவர்களிடமே அனைத்துப் பொறுப்பும் விடப்பட்டன. அவர்கள் நாளொன்றுக்கு இத்தனை பொன் கருவூலத்திற்கு அளித்தால் போதும் என வகுக்கப்பட்டது. அவர்கள் பால் கறக்கும் பசுவைக் கொன்று புசிக்கலாயினர். நாளுக்குநாள் வரும் கப்பல்கள் குறையத் தொடங்கின. கப்பல்கள் குறையும்தோறும் வரி மிகுந்தது. வரிமிகுந்தோறும் கப்பல்கள் குறைந்தன. ஏழு மாதங்களில் முற்றாகவே துறைமுகத்தில் கப்பல்கள் வராமலாயின.”
“ஆனால் நகரின் எச்செலவையும் குறைக்கமுடியவில்லை. காவலர்கள், ஏவலர்கள், அணியர்கள். அந்நகருக்குரிய அத்தனை பொருட்களும் தொலைவிலிருந்து படகுகள் வழியாகவும் பாலைநிலம் வழியாகவும் வந்துசேர வேண்டியவை. அவை விலையேறத் தொடங்கின. அவை வரும் வழிகளில் கொள்ளையர் எழுந்தனர். சிந்துநாட்டிலும் கூர்ஜரத்திலும் கொள்ளையர்களே சிறுசிறு ஆட்சியாளர்களாக ஆயினர். அவர்களை அடக்க சாம்பன் படைகொண்டு சென்றார். யானை வண்டுகளுடன் பூசலிடுவதுபோல. வண்டுபோல யானை பறக்க முனைந்தால் விரைவிலேயே களைத்துவிடும்.”
“இன்று துவாரகை மணலில் சகடம் புதைந்த வண்டிபோல நின்றுவிட்டிருக்கிறது. அங்கே எதுவுமே குறையவில்லை என்று சொல்கிறார்கள். கள்ளும் களியாட்டுமாகவே நகர் நுரைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களால் தாங்கள் அறிந்த வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியாது. வீழ்ந்துபடும் குடிகளைப் போலத்தான் நகர்களும். வீழ்வதையே அறியாமலிருப்பார்கள். அது சிலகாலம்தான், விரைவிலேயே சரியாகிவிடும் என நம்புவார்கள். வீழ்வதை காட்டிக்கொண்டால் எதிரிகள் முன் குறைவுபட நேரிடும் என நாணுவார்கள். ஆற்றல் குறையவில்லை என நடிப்பார்கள். அதை தவிர்க்கவும் முடியாது. துவாரகை சற்று படைவல்லமையை குறைத்துக்கொண்டால்கூட எதிரிகளால் சூறையாடப்பட்டுவிடும்.”
சாரிகர் பெருமூச்சுவிட்டார். “எண்ணி ஏங்குவதில் பொருளில்லை. பெருநகர்கள் எழுந்து எழுந்து அமைவதை உஜ்ஜயினி பார்த்துக்கொண்டிருக்கிறது” என்றார் விசாலர். “ஏதோ அறியா தெய்வங்களின் ஆடல் என நகரங்கள் எழும். நாடுகளாகிப் பெருகும். வணிகம் சிறக்கும். மெய்மையும் அறிவும் வளரும். கலையும் களியாட்டும் பெருகும். தருக்கி நிமிர்ந்து உலகை வெல்ல அவை ஒருங்கும். ஒன்றோடொன்று போரிட்டு அழியும். வெற்றுச்சொற்களாக எஞ்சும். பாணர் பாடல்களில் ஏறி நிலமெங்கும் அலையும். உஜ்ஜயினி இங்கிருக்கும். இது இங்கே குன்றாது குறையாது என்றுமிருக்கும். இது உழவர்களின் நகர்.”
உணவின் மணம் எழுந்தது. அவர்கள் அனைவருமே சொல்லற்றவர்கள் ஆனார்கள். சற்று நேரத்திலேயே சூடான உணவு வந்தது. அவர்கள் வெறிகொண்டு உண்பது வழக்கம். சில கணங்களிலேயே உண்டு முடித்து அப்படியே படுத்து இன்னொரு சொல் இன்றி துயில்கொண்டுவிடுவார்கள். தன்னைச் சூழ்ந்து ஒலித்த குறட்டையோசைகளை கேட்டபடி விண்மீன்களை நோக்கி சாரிகர் படுத்திருந்தார்.