‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 3

சம்வகை கோட்டைமேல் காவல்மாடத்தில் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவளருகே நின்றிருந்த சந்திரிகை “அரசரின் தேர் அணுகுவதை தெரிவிக்க அங்கே காவல்மாடத்தில் பெருமுரசுகள் இல்லை” என்றாள். “அனைத்துப் பெருமுரசுகளும் இங்கே கொண்டுவரப்பட்டுவிட்டன” என்று அப்பால் நின்றிருந்த காவல்பெண்டு சொன்னாள். சம்வகை ஒன்றும் சொல்லாமல் இடையில் கை வைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். விழிதொடும் தொலைவுவரை காட்டின் இலைத்தழைப்பு காற்றில் கொந்தளித்துக்கொண்டிருந்தது. “அங்கே கொம்பொலி எழும். இருவர் இங்கே நின்று நோக்கிக்கொண்டிருங்கள்” என ஆணையிட்டுவிட்டு அவள் படிகள் வழியாக கீழிறங்கினாள்.

கீழே அவளைக் காத்து ஏவற்பெண்டிரும் காவலர்களும் நின்றிருந்தனர். அவள் புரவியை நோக்கி செல்ல அவளுடன் நடந்தபடி அவர்கள் நகரில் நிகழ்வனவற்றை சொன்னார்கள். திரட்டப்பட்ட மக்கள் அனைவரும் உரிய இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டனர். முரசுகள் பீடங்களில் அமைந்துவிட்டன. மாளிகைமுகப்புகளிலும் காவல்மாடங்களிலும் அரிமலரும் மஞ்சள்பொடியும் குவிக்கப்பட்டு அள்ளிவீச ஏவலர் அமர்த்தப்பட்டுள்ளனர். அவள் நின்று திரும்பி கைவிடுபடைகளின் மேடையை பார்த்தாள். அவள் பார்த்த பின்னரே மற்றவர்கள் அதை நோக்கினர். ஏவற்பெண்டு “கைவிடுபடைகளின் பீடங்கள்… அம்புகள் ஒழிந்தபின் அவற்றை எவரும் அணுகவில்லை” என்றாள்.

சம்வகை சில கணங்கள் அவற்றை நோக்கியபடி நின்றாள். பின்னர் “இங்கே சில தோரணங்களும் பட்டுப் பாவட்டாக்களும் கட்டப்படட்டும்” என்றாள். பின்னர் புரவியில் ஏறிக்கொண்டாள். மீண்டும் திரும்பி நோக்கி “வேண்டாம், அவை அவ்வாறே இருக்கட்டும்…” என்றாள். “இல்லை தலைவி, தாங்கள் சொன்ன பின்னர்தான் பார்க்கிறோம். நாண் தளர்ந்த பெருவிற்கள் கண்ணுக்கு உவப்பானவையாக இல்லை” என்றாள் காவற்பெண்டு. “அது அங்ஙனமே இருக்கட்டும்… அது நம் நகரின் அடையாளம்” என்றபின் சம்வகை புரவியை செலுத்தினாள். சாலையின் விளிம்பை அடைந்தபின் திரும்பிப் பார்த்தாள். அந்த மேடைகள் அத்தனை பெரியவை என்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவற்றின்மேல் நாண் தொய்ந்த பெருவிற்கள் கொடிமரங்கள்போல எழுந்து நின்றன. சகடங்கள் துருப்பிடித்து அசைவிழந்திருந்தன.

அஸ்தினபுரியின் அனைத்து ஒருக்கங்களும் செவ்வனே முடிந்துவிட்டிருந்தன. அவள் மையச்சாலையினூடாகச் சென்றபோது இருபுறமும் யானைகள் மத்தகம் உலைத்து நின்றன. நேர்விழிநோக்குக்கு அவை வெறும் அணிகள் என்று தோன்றினாலும்கூட சற்றே விழிவிலக்கி வேறொன்றை நோக்குகையில் அவற்றை யானைநிரை என்றே உள்ளம் உணர்ந்தது. ஒவ்வொரு கணமும் விழி திரும்பி அவற்றின் ஒட்டுமொத்தத்தை சந்திக்கையிலும் திடுக்கிட்டது. அவள் அரண்மனையைச் சென்றடைந்தபோது யானைநிரை நடுவே வந்த உணர்வையே உள்ளம் கொண்டிருப்பதை உணர்ந்தாள். “இளவரசர் யுயுத்ஸு என்ன செய்கிறார்?” என்று ஏவல்பெண்டிடம் கேட்டாள். “அவர் தன் அறைக்குச் சென்று படுத்துவிட்டார்” என்று அவள் மறுமொழி சொன்னாள். “அவர் ஏனோ நடுங்கிக்கொண்டிருக்கிறார். அறைக்குள் தாழிட்டுக் கொண்டிருக்கிறார்.”

சுரேசரிடம் அவள் அனைத்தும் முறையாக நிகழ்வதை சொன்னாள். சுரேசர் பதற்றங்கள் அனைத்தும் அடங்க அமைதியாகத் திகழ்ந்தார். “செய்வன அனைத்தையும் செய்துவிட்டோம். இனி எதையும் திருத்தவோ மாற்றவோ பொழுதில்லை. நாம் செய்யக்கூடுவன ஏதுமில்லை. இனி தெய்வங்களுக்கு அனைத்தையும் அளித்து நம் பணியை மட்டும் ஆற்றுவோம்” என்று அவர் அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். அவள் நிற்பதைப் பார்த்து திரும்பி “சொல்” என்றார். சம்வகை “கோட்டைமுகப்பில் வாளுடன் நின்று அரசரை வரவேற்க படைத்தலைவர் ஒருவர் தேவை என்று சொல்லியிருந்தேன். இங்கே முதன்மைக் காவலர்தலைவர்கள் எவருமில்லை” என்றபின் “நாம் முன்னர் முடிவுசெய்திருந்ததன்படி இளவரசர் யுயுத்ஸுவே முன்னின்று அரசரை வாள்தாழ்த்தி வரவேற்கவேண்டும். அவருடைய பொறுப்பில்தான் இந்த அரண்மனையும் நகரும் இன்று உள்ளது என்பதனால் அதுவே முறை. ஆனால் அவர் இன்றிருக்கும் நிலையில் அது இயலுமெனத் தோன்றவில்லை” என்றாள். சுரேசர் அதை புரிந்துகொண்டு “ஆம், வேறு எவர்?” என்று சூழ நோக்கியபின் “நீயே கோட்டைத்தலைவி. நீ சென்று வாள்தாழ்த்தி வரவேற்பு அளி” என்றார். சம்வகை திகைத்து “நானா?” என்றாள். “ஏன், உன் பொறுப்பில் அல்லவா கோட்டை இன்று உள்ளது?” என்றார் சுரேசர்.

“ஆம், ஆனால் இன்றுவரை பெண்கள் அச்சடங்கை செய்ததில்லை” என்றாள் சம்வகை. “மெய், ஆனால் இன்றுவரை இன்றுள்ள நிலைமை இங்கே உருவானதுமில்லை” என்றார் சுரேசர். “ஆனால்…” என்று மீண்டும் தயங்கிய சம்வகை “நான் ஷத்ரிய குலத்தவளும் அல்ல. நான் அவ்வாறு செய்வதற்கான மரபுமுறைமையே இங்கில்லை” என்றாள். “இல்லையென்றால் உருவாகட்டும்…” என்றார் சுரேசர். “நீயே அதை செய்யவேண்டும். பழைய வேதம் அகன்றது, புதிய வேதம் எழுந்துள்ளது. இது அனைவருக்கும் வழி தெளிப்பது. ஒவ்வொருவருக்கும் மெய்மையை தேடிச்சென்று ஊட்டுவது. அசுரருக்கும் அரக்கருக்கும் நிஷாதருக்கும் கிராதருக்கும் நாகருக்கும் உரியது. பிறகென்ன?” என்றார். சம்வகை மேலும் ஏதோ சொல்ல நாவெடுக்க “இதுவே அறுதி முடிவு. நீ சென்று அரசரை எதிர்கொள். ஊர் அறியட்டும், அனைத்தும் இங்கே மாறிவிட்டிருக்கின்றன என்று…” என்றார்.

சுரேசர் அச்சொற்களால் அவரே ஊக்கம் கொண்டார். “ஆம், நீ முன்னிற்பதை அனைவரும் காணட்டும். அவர்கள் எண்ணுவதைவிட பெரிய மாற்றங்கள் வரப்போகின்றன என அவர்கள் அறியட்டும். நேற்றைய முறைமைகள் இனி இல்லை. நேற்றைய தளைகளும் இல்லை. இது புதிய சொல் எழுந்த காலம். போரை மட்டுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள். போரில் அழிந்தவை பழையவை, மட்கியவை. காட்டெரியில் மண்ணில் புதைந்த விதைகள் அழிவதில்லை. அவை முளைத்தெழுந்து கிளை பரப்புவதற்குரிய வான்வெளியையே நெருப்பு உருவாக்கி அளிக்கிறது… அதை அனைவரும் அறியவேண்டுமென்றால் நீ வாளுடன் முன்னிற்கவேண்டும்.” அவர் திரும்பி அருகே நின்ற ஏவலனிடம் “காவலர்தலைவி கவச ஆடை அணியட்டும். முழுதணிக்கோலத்தில் உடைவாளுடன் அரசரை எதிர்கொண்டு வரவேற்கட்டும்” என்றார்.

ஏவலன் தலைவணங்க சம்வகை “அவ்வாறே ஆகுக!” என்றாள். “உன் உடைவாள் எளிய காவல் படைக்கலம். அரசச் சடங்குகளுக்குரியது அல்ல. எங்கே சாரிகர்?” பல குரல்கள் ஒலிக்க மற்றொரு அறையிலிருந்து சாரிகர் ஓடிவந்தார். “கருவூலத்திற்குச் செல்க! காவலர்தலைவிக்கு அஸ்தினபுரியின் படைத்தலைவர்களுக்குரிய அணிவாட்களில் ஒன்றை எடுத்து கொடு.” அவர் மேலும் எண்ணம் ஓட்டி “படைத்தலைவர் வஜ்ரதந்தருக்குரிய நீண்ட அணிவாள் ஒன்று உண்டு. கைப்பிடியில் எழுபத்திரண்டு மணிகள் பொருத்தப்பட்டது. அஸ்தினபுரியின் அமுதகல முத்திரை பொறிக்கப்பட்டது. அதை எடுத்து காவலர்தலைவியிடம் கொடு” என்றார். சாரிகர் சம்வகையை நோக்கி புன்னகைபுரிந்துவிட்டு “ஆணை” என்றார்.

சுரேசர் முகம் மலர்ந்து, உள எழுச்சியின் விளைவான மெல்லிய திக்கலுடன் “வாள் மட்டுமல்ல, அருமணிகள் பொருத்தப்பட்ட கவசங்களும் தோளிலைகளும் அங்கு உள்ளன. அவற்றையும் எடுத்து காவலர்தலைவி அணியும்பொருட்டு அளி. அனைத்து அணிகளும் தேவை… என் ஆணையை ஓலையில் பொறித்துக்கொள். அதை கருவூல அமைச்சரிடம் அளித்து அங்கே பதிவுசெய்துகொள்ளச் சொல்” என்றார். சம்வகை எண்ணங்கள் அனைத்தும் அமிழ்ந்து மறைந்து உள்ளம் ஒழிந்துகிடப்பதுபோல் உணர்ந்தாள். சுரேசர் “சொல், என்ன எண்ணுகிறாய்?” என்றார். “இல்லை, இளவரசர் யுயுத்ஸுவிடம் ஒரு சொல் உசாவுவது நன்று” என்றாள். “இது என் முடிவு, நான் அரசமுறைமைகளை வகுக்கும் நிலைகொண்ட அந்தணன், ஆகவே ஆணைகளை பெற்றுக்கொள்வதில்லை” என்றார் சுரேசர். சம்வகை தலைவணங்கினாள்.

அவள் வெளியே வந்து நிற்க உள்ளே சுரேசர் ஆணையைச் சொல்லி கற்றுச்சொல்லிகள் அதை எழுதிக்கொண்டார்கள். அவள் வெளியே பொழிந்துகொண்டிருந்த இளவெயிலை நோக்கியபடி நின்றாள். அவளுக்குள் எந்த எண்ணமும் எழவில்லை. இத்தருணத்தில் உவகை கொள்ளவேண்டுமா என்ன? இது தன் குலத்தோர் தலைமுறை தலைமுறைகளாக காத்திருந்த தருணமாக இருக்கலாம். இப்போது விண்ணுலகில் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடலாம். காற்றில் அவர்களின் வாழ்த்துக்கள் நுண்வடிவில் நிறைந்திருக்கலாம். இப்போது தந்தை இருந்திருந்தால் என்ன செய்வார்? அழுது தளர்ந்து விழுவார். மூதாதையரின் இடுகாட்டுக்குச் சென்று மண்படிய விழுந்து வணங்குவார். தன் குடியினர் தெருவெங்கும் நிறைத்து களியாடுவார்கள். ஆனால் எவருமே அஸ்தினபுரியில் எஞ்சியிருக்கவில்லை. அவள் உள்ளத்தில் அவ்வெண்ணங்கள்கூட எவருடையனவோ என்றே தோன்றின. அவை எவ்வகையான உணர்வெழுச்சியையும் உருவாக்கவில்லை.

 

சாரிகர் வெளியே வந்து “செல்வோம்” என்றார். அவள் அவருடன் நடந்தாள். “கருவூலக் காவலர் திகைக்கப்போகிறார்” என்று அவர் சொன்னார். “அவர்கள் புதைந்திருக்கும் மானுடர். அவர்களுக்கு வெளியே என்ன நிகழ்கிறதென்று தெரியாது.” அவள் ஒன்றும் சொல்லாமல் அவருடன் நடந்தாள். “ஆனால் அங்குள்ள உடைவாள்களும் கவசங்களும் குறடுகளும் எல்லாமே ஆண்களுக்குரியவை. பெரும்பாலானவர்கள் பயின்று உடல்பெருத்தவர்கள். பெண்களுக்குரிய படைக்கலன்களும் கவசங்களும் இருக்குமா என்பது ஐயத்திற்குரியது. இளமைந்தர்களுக்குரியவை இருக்கலாம். அவை ஒருவேளை பெண்களுக்கும் பொருந்துவனவாக இருக்கக்கூடும். எப்படியாயினும் ஏதோ ஒரு படைக்கலம் உனக்குரியது அங்கே இருக்கும்… தேடவேண்டும்” என்றார்.

அரண்மனைக்குள் நுழைந்து ஓலையையும் முத்திரைக் கணையாழியையும் காட்டி ஒப்புதல் பெற்று கருவூலத்திற்குச் செல்லும் படிக்கட்டில் இறங்கிச்சென்றபோது “உண்மையில் இந்த இடம் என்னை அச்சுறுத்துகிறது. திருமகள் குடிகொண்டிருக்கும் இடம். ஆனால் குருதிமணம் வீசுவதாக எனக்கு ஒரு நினைப்பு” என்றார் சாரிகர். அவள் அந்தச் சுவர்களின் தண்மை ஏறிவருவதை உணர்ந்தாள். கருவூலக்காப்பாளரான சிற்றமைச்சர் சுந்தரர் அங்கே இருந்தார். அவர் சாரிகர் அளித்த ஓலையை நோக்கிவிட்டு சம்வகையை ஏறிட்டுப் பார்த்தார். “பெண்களுக்குரிய படைக்கலங்களோ கவசங்களோ இங்கே இல்லையே” என்றார்.

“சிறுவர்களுக்குரியது இருந்தால் அளிக்கலாமே” என்றார் சாரிகர். “அமைச்சரே, படைக்கலங்களும் கவசங்களும் அந்தந்த பணிநிலைகளுக்கும் அரசுப்பொறுப்புகளுக்கும் உரியவை. இங்குள்ள சிறார்படைக்கலங்களும் கவசங்களும் அரசகுடியினருக்குரியவை. அரசகுடியினருக்குரிய படையணிகளை காவலர்தலைவர்களோ படைத்தலைவர்களோ அணிய முடியாது” என்றார் சுந்தரர். சாரிகர் எரிச்சல் அடைந்து “இது அமைச்சரின் ஆணை. அந்த ஓலையில் இருப்பவற்றை செய்வோம்” என்றார். “ஆம், எனக்கென்ன. நான் வஜ்ரதந்தரின் படைக்கலங்களையும் கவசங்களையும் அளிக்கிறேன். எவர் கண்டது, ஏதேனும் தெய்வ அருளால் இந்தப் பெண் அவற்றுக்கேற்ப வளரவும் கூடுமே” என்றார் சுந்தரர்.

சிறு கைவிளக்குடன் காவலன் உள்ளே செல்ல உடன் சுந்தரர் சென்றார். சாரிகரும் உடன்செல்ல சற்று தயங்கியபின் சம்வகையும் உள்ளே சென்றாள். “இது பெரும் கருவூலம். இங்கே வந்ததுமே ஒவ்வொன்றும் பழைமை கொள்கின்றன. அனைத்தையும் மூடியிருக்கும் புழுதியால் வாங்கிக்கொள்ளப்படுகின்றன” என்று அவர் சொன்னார். நீண்ட இடைநாழியின் இருபுறமும் உயரம் குறைந்த இரும்புக் கதவுகள் பெரிய நாழிப்பூட்டுகள் சூடி புழுதிபடிந்து இறுகி அமைதியில் நின்றிருந்தன. அவர் ஓர் அறையின் முன் நின்று “இதுதான்” என்றார். ஏவலன் அந்தக் கதவின்மேல் படிந்திருந்த புழுதியை மென்மயிர் துடைப்பத்தை வீசி அகற்றினான். சுந்தரரும் சாரிகரும் மேலாடையால் முகத்தை மூடிக்கொண்டார்கள். சாரிகர் இருமுறை இருமினார்.

சுந்தரர் நாழிப்பூட்டுக்குள் தாழ்க்கோலை விட்டு அதற்குரிய நுண்சொல்லை நினைவுகூர்ந்து ஓசையின்றி வாய் அசைய தன்னுள் சொன்னபடி திருப்பினார். எட்டுமுறை வெவ்வேறு வகையில் திருப்பியபோது உள்ளே மெல்லிய மணியோசை கேட்டது. “தெய்வம் நம் சொல்லை ஏற்றுக்கொண்டுவிட்டது” என்று அவர் சொன்னார். அவர் விலக ஏவலன் கதவை தள்ளித்திறந்தான். ஓர் அடி அளவு தடிமன் கொண்டிருந்த இரும்புக்கதவு பித்தளை கீல்களில் ஓசையின்றி சுழன்று திறந்தது. மண்டியிட்டு உள்ளே செல்லவேண்டுமா எனத் தோன்றும்படி அது சிறிதாக இருந்தது. சுந்தரர் “சில தருணங்களில் நம் சொற்களை இத்தெய்வங்கள் முற்றிலும் மறுத்துவிடும். இங்குள்ள கருவூல அறைகளில் பாதிக்குமேல் எப்போதும் எவராலும் திறக்கப்படாதவை” என்றார்.

ஏவலன் தன் கைவிளக்கை கையில் இருந்த கழியில் கட்டி அறைக்குள் நீட்டினான். சுடர் அணையவில்லை என்று கண்டு திரும்பி தலையசைத்தான். “உள்ளே தீயதெய்வங்கள் குடிகொள்ளக்கூடும். நம் வரவை அவை விரும்பவில்லை என்றால் ஓரிரு கணங்களிலேயே நம் மூச்சை அவை உறிஞ்சிவிடும். விளக்கு எரிகிறதென்றால் அங்கே திருமகள் குடியிருக்கிறாள் என்று பொருள். மானுடரை அவள் காப்பாள்” என்றார் சுந்தரர். உள்ளே செல்ல பக்கவாட்டில் நின்று வலக்காலை உள்ளே தூக்கி வைத்து உடலை நன்றாக வளைத்து நுழையவேண்டியிருந்தது. சாரிகரும் நுழைந்தபின் சம்வகை உள்ளே சென்றாள். “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தெய்வங்கள் உண்டு. படைக்கலங்களில் பல தெய்வங்கள் வாழ்கின்றன. எனில் இது தெய்வங்கள் செறிந்த இருள்” என்றார் சுந்தரர்.

காவலன் அந்த விளக்கை கொண்டுசென்று சுவரிலிருந்த ஆடித்தொகை முன் வைத்தான். அதுவரை அந்த நீள்சதுரவடிவமான அறையின் கல்லால் ஆன கூரைமேல் வளைந்து நின்றிருந்த அவர்களின் நிழல்கள் குறுகி கீழிறங்கின. அங்கிருந்த பேழைகளின் வெண்கல முனைகள் ஒளிகொண்டன. பின்னர் மரப்பரப்புகள் மின்கொண்டன. சுந்தரர் ஒவ்வொரு பெட்டியாக தொட்டுச்சென்று ஒன்றின் முன் நின்று “இதுதான்… அண்மையில் திறக்கப்பட்டதுதான்… ஆகவே பூட்டு ஊடுவதற்கு வாய்ப்பில்லை” என்றார். எளிதில் பூட்டு திறந்துகொண்டது. அவர் கைகாட்ட ஏவலன் ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்துப்போட்டு அதன்மேல் ஏறி நின்று உள்ளிருந்து பொருட்களை எடுத்து வெளியே வைத்தான். பொற்செதுக்குகள் கொண்ட இரும்பு உறைகளுக்குள் செருகப்பட்ட உடைவாட்கள் விந்தையான மீன்கள் போலிருந்தன. அவற்றின் பிடிகளிலிருந்த மணிகள் விளக்கொளியை ஏற்று கனல்கொள்ளத் தொடங்கின. கவசங்களின் வளைவுகளில் சுடர் மின்னியது.

கவசங்கள் துண்டுபட்ட உடலுறுப்புகள் என திகைப்பூட்டின. பின்னர் இருளுக்குள் எஞ்சிய உடலை விழிகள் நிரப்பிக்கொள்ள அங்கே மண்மறைந்த மானுடரின் உடல்கள் இருப்பதுபோலத் தோன்றியது. விழிதிருப்பி மீண்டபோது அவர்கள் வெட்டுண்டு குவிக்கப்பட்டிருப்பதுபோல உளம் பதறியது. சாரிகர் “போர்க்களம்போல் தோன்றுகிறது” என்றார். சுந்தரர் “மெய்யாகவே களத்தில் வெட்டுண்ட உடலுக்கும் வெற்றுக்கவசங்களுக்கும் வேறுபாடு தெரியாது என்பார்கள்” என்றார். “உடல்கள் தங்கள் வடிவை விட்டுச்சென்றிருக்கின்றன. உடல் என்பது உள்ளுறையும் உயிர் மட்டுமல்ல. அவ்வுடல் என அமைந்த வடிவும் கூடத்தான். உயிர் அகன்றபின் அவ்வடிவு மட்டும் இங்கே நுண்வடிவில் எஞ்சுகிறது என்பார்கள்.” “இவ்விருளாழத்தில் அமர்ந்து நீங்கள் இத்தகைய நூல்களை பயிலத்தான் வேண்டுமா?” என்றார் சாரிகர்.

“இதுதான்” என்று சுந்தரர் சுட்டிக்காட்டினார். ஏவலன் எடுத்து வைத்த உடைவாள் மிக நீளமாக இருந்தது. சம்வகை குனிந்து அதை எடுத்துக்கொண்டாள். அவளுடைய மார்பளவுக்கு அது உயரம் கொண்டிருந்தது. அதன் கைப்பிடி மணிகள் செறிந்து ஒளிவிட்டன. அவள் அதைப் பற்றி உறையிலிருந்து இழுத்தாள். உள்ளிருந்து நீர்வழிந்து நீள்வதுபோல நீல ஒளியுடன் வாள்நா வெளிவந்தது. “மிகக் கூரியது, உரிய வாள்பழக்கம் இல்லை என்றால் அதை வெளியே எடுக்காமலிருப்பதே நன்று” என்றார் சுந்தரர். சம்வகை அதை உருவி வெளியே எடுத்து சுடர் நோக்கி நீட்டினாள். அதில் விழுந்த செவ்வொளி அவள் முகத்திலும் உடலிலும் அசைந்தது. வாளை அவள் அசைக்க கூரைவழியாக மின்னிச் சென்றது.

“இது வழக்கமான இரும்பு அல்ல, இதை வெட்டிரும்பு என்பார்கள்” என்று சுந்தரர் சொன்னார். “கரியும் காரீயமும் வெள்ளீயமும் கலந்து உருவாக்கப்படுவது இது. உருக்கி வார்க்கப்பட்ட வாள்நா மெல்லமெல்ல குளிர்ந்து இறுகவைக்கப்படுகிறது. செம்பிழம்பு நிலையிலிருந்து கைபொறுக்கும் சூடுவரை வருவதற்கு ஒருமாத காலமாகும். அதன்பின் படிக உருளைகளால் தேய்த்து ஒளிரவைக்கிறார்கள். அப்போதே கூர்கொள்ளச் செய்வார்கள். வெம்மை அணைந்தபின் வெள்ளியொளி கொள்ளும். அதன்பின் எத்தனை வெட்டினாலும் முனை மழுங்குவதில்லை. எத்தனை காலமாயினும் வடுக்கொள்வதோ ஒளிமங்குவதோ இல்லை.” அவள் வாளை காற்றில் இருமுறை சுழற்றினாள். அது நாகச்சீறலுடன் சுழன்றது. தன் உலோக உறுதியை இழந்து பட்டுநாடாபோல ஆகிவிட்டதெனத் தோன்றியது. சுழற்சியை கூட்டியபோது வெள்ளித்திரையென ஆகியது. நீர்ப்படலம் என, ஒளிப்பரப்பு என ஆகி பின் நோக்கிலிருந்து மறைந்தது.

அவள் மீண்டும் அதை உறையிலிட்டபோது சுந்தரரின் முகம் மாறிவிட்டிருந்தது. “நீ நன்கு பயின்றிருக்கிறாய். மிக எளிதில் வாள் உனக்கு தன்னை அளித்துவிட்டது. இத்தகைய வாள்கள் எளிதில் தன்னை ஒப்புக்கொடுப்பதில்லை” என்றார். “இது வஜ்ரதந்தரின் வாள். அவர் வாள்திறன்மிக்க வீரர். இரக்கமற்றவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார் சுந்தரர். “ஷத்ரியப் பெருமிதம் கொண்டவர். போர்களில் ஷத்ரியர் அல்லாத குலத்தவர் பங்கெடுப்பதை விரும்பாதவர். போரில் கைப்பற்றப்படும் ஷத்ரியர் அல்லாதவர்களை அக்கணமே தலைவெட்டி கொன்றுவிட ஆணையிட்டிருக்கிறார். அவர்களை அடிமைகளாகக்கூட வாழவிடலாகாது என்பது அவருடைய கருத்து. படைக்கலம் எடுத்தவன் எப்போதுமே போர்வீரன்தான். படைக்கலமெடுத்த குலமிலிகள் அனைவருமே ஷத்ரியர்களுக்கு எதிரிகள் என்று முன்பு அவையிலேயே அறிவித்திருக்கிறார்.”

சாரிகர் “பெண்கள் படைக்கலம் எடுப்பதை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை” என்றார். “ஆம், அதுவே எனக்கும் விந்தையாக இருக்கிறது” என்றார் சுந்தரர். “அவர் பணியாற்றியது பேரரசி சத்யவதியின் படையில்” என்றாள் சம்வகை. “ஆம், உண்மை. அதை நான் எண்ணிப்பார்க்கவில்லை” என்றார் சுந்தரர். படைவீரன் எடுத்துவைத்த கவசங்களில் ஒன்றை கையில் எடுத்த சாரிகர் “மிகுந்த எடைகொண்டிருக்கிறது” என்றார். “இது ஒரு பகுதிதான். தோளிலைகளும் முதுகுக்காப்பும் புயக்காப்பும் மணிக்கைக் காப்பும் தொடையலகுகளும் தனித்தனியாக உள்ளன. அவர் பேருடலர்” என்றார் சுந்தரர். சாரிகர் திரும்பி சம்வகையை பார்த்துவிட்டு “இவள் எப்படி இத்தனை எடையை அணிந்துகொள்ளமுடியும்?” என்றார். சுந்தரர் “அதையே நானும் எண்ணினேன்” என்றார்.

“அணிந்துகொள்வேன்” என்றாள் சம்வகை. “உன்னால் அசையவே முடியாது” என்றார் சுந்தரர். “பார்ப்போம்” என்றாள் சம்வகை. “நீ அவற்றை அணிந்துகொண்டால் கூண்டுக்குள் இருக்கும் அணில்போல் தோன்றுவாய். நோக்குபவர் எவரும் நகையாடும்படி தெரிவாய்” என்றார் சுந்தரர். “எவரேனும் இளிவரல் உரைக்கக்கூடும். இங்கே அனைவருமே இளிவரலுரைக்கும் உளநிலையில்தான் உள்ளனர். பெண்டிர்மேல் ஒவ்வாமைகொண்ட கிழவர்களுக்கும் குறைவில்லை.” சம்வகை “நான் இவற்றை அணிவேன்…” என்றாள். “ஆம், அமைச்சரின் ஆணை அது எனில் அவ்வாறே ஆகட்டும்” என்றார் சாரிகர். அவள் ஏவலனிடம் “இக்கவசங்களைத் துடைத்து முகப்பறைக்கு கொண்டுவருக!” என ஆணையிட்டாள். உடைவாளை மட்டும் தன் கையில் எடுத்துக்கொண்டாள்.

அவர்கள் திரும்பும்போது அமைதிகொண்டிருந்தனர். சாரிகர் “நான் விடைகொள்கிறேன், சுந்தரரே” என்றார். சுந்தரர் சம்வகையிடம் தலையசைத்து விடைகொடுத்தார். சம்வகை முகப்பறைக்கு வந்து அமர்ந்தாள். சாரிகர் “அரசரின் அணி நெருங்கிக்கொண்டிருக்கிறது என எண்ணுகிறேன்” என விடைபெற்றார். சம்வகை அந்த உடைவாளை மென்துகிலால் துடைத்துக்கொண்டிருந்தாள். துடைக்கத் துடைக்க அது மென்மைகொண்டது. அதன் பொற்செதுக்குகள் ஒளிவிட்டன. குளித்துவிட்டு வந்த சிறுகுழந்தை என்று அவளுக்குத் தோன்றியது. அதை விரலால் மெல்ல வருடிக்கொண்டிருந்தாள். அந்த அருமணிகள் மீன்விழிகள்போல, செவ்வரளி மொக்குகள்போல, நீர்த்துளிகள்போல, குருதிமணிகள்போல தெரிந்தன. ஒவ்வொரு அருமணியும் ஒவ்வொரு வடிவம். ஒவ்வொன்றும் ஒரு வண்ணம். ஆனால் அவை இணைந்து ஒரு மலர்வடிவை உருவாக்கியிருந்தன. மலர்வடிவல்ல. வேறொன்று. நன்கு அறிந்த ஒன்று.

அவள் வாளை உருவி அதன் கூர் மேல் தன் விரலை ஓட்டினாள். இழுத்துக் கட்டப்பட்ட பட்டுநூல் என அதன் கூர்வளைவு. அல்லது வீணை நரம்பு. அதை திருப்பி நோக்கினாள். ஒளிக்கு மட்டுமே அத்தனை கூர் இயல்வது என்று தோன்றியது. மிகுகூர் கொண்ட நா. ஒரு தொடுகையில் வெட்டித் துண்டுபடுத்தும் தன்மைகொண்டது. ஆனால் நீர் என தண்மையும் ஒளியும் கொண்டிருக்கிறது. அவள் தன் சுட்டுவிரலை அதன்மேல் வைத்து மெல்ல அழுத்தினாள். மெல்லிய எரிச்சல் ஏற்பட்டது விரலை அகற்றிக்கொண்டபோது குருதித்துளி ஊறி முழுத்துச் சொட்டியது. அவள் அக்குருதி மரத்தரையில் விழுந்து மலர்போல் சிதறுவதை பார்த்தாள். மீண்டும் வாள்முனையை பார்த்தாள். அது அக்கணம் வார்த்ததுபோல் தூய்மையாக இருந்தது.

முந்தைய கட்டுரைஅபியின் அருவக் கவியுலகு-4
அடுத்த கட்டுரைஅக்கித்தம்- கடிதங்கள்