பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 1
அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை முகப்பில் காவல்மாடத்தில் நின்றபடி சம்வகை கீழே மையச்சாலையில் கரை நிரப்பிப் பெருகி வந்து, முகமுற்றத்தை செறிய நிரப்பி, அதிலிருந்து கிளைத்தெழுந்து சிறு சுழி போலாகி, கோட்டைவாயிலை அடைந்து, எட்டு புரிகளாகப் பிரிந்து உள்ளே நுழைந்து, நகர் முகப்பின் பெரிய முற்றத்தையும் அலைகொண்டு நிரப்பி அதிலிருந்து பிரியும் எட்டுச் சாலைகளையும் பற்றிக்கொண்டு வழிந்து நகருக்குள் நிறைந்துகொண்டிருந்த மக்களை பார்த்துக்கொண்டிருந்தாள். முற்றிலும் அறியாத மக்கள். முற்றிலும் அறியாத மொழி. அப்படி ஒரு பெருக்கு அங்கே நிகழக்கூடும் என அவள் எண்ணியிருக்கவே இல்லை. அவளால் அந்த முகங்களை தனித்து அடையாளம் காண முடியவில்லை.
போர் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அஸ்தினபுரியின் குடிகள் தொடர்ந்து நகரொழிந்து வெளியேறிச் சென்றுகொண்டிருந்தனர். போரின்போது படைகள் கிளம்பிச்செல்ல கூடவே மக்களில் பெரும்பகுதியினர் சென்றனர். போர் நிகழ்ந்த நாளில் வெளியேற்றம் குறைவாக இருந்தது. நகரம் கொந்தளித்து தன்னுள் தான் அலைகொண்டிருந்தது. போர்முடிவுச் செய்தி வந்தது முதல் மீண்டும் வெளியொழுக்கு தொடங்கியது. ஒவ்வொருநாளும் அது வலுத்தது. தெருக்களினூடாக மக்கள் திரள் பொக்கணங்களுடனும் குழந்தைகளுடனும் செல்லும் காட்சியே செல்க செல்க என்னும் அறைகூவலாக ஒவ்வொருவருக்கும் அமைந்தது. அதைக் கண்ட ஒவ்வொருவரும் செல்வதைப்பற்றி மட்டுமே எண்ணச்செய்தது.
ஒன்றை எண்ணத் தொடங்கினால் அதைச் சார்ந்த பார்வைகள் வலுப்பெறத் தொடங்குகின்றன. இத்தனை பேர் செல்கிறார்கள் என்றால் செல்வதே உகந்தது. செல்பவர்களுக்கு மேலும் சிறந்த வாழ்க்கை எங்கோ அமைகிறது. சென்றவர்கள் விடுபடுகிறார்கள். செல்லாதொழிதல் ஆற்றலின்மையை, உறவுகளின்மையை, உளஉறுதியின்மையை மட்டுமே காட்டுகிறது. செல்பவர்களுக்கு அவர்களை இட்டுச்செல்லும் நல்ல தலைமை அமைந்துள்ளது. அவர்களின் தெய்வங்கள் வந்து அவர்களை வழிநடத்துகின்றன. செல்பவர்கள் சிறந்தவர்கள், இருப்பவர்கள் எவ்வகையிலோ சற்று குறைவுபட்டவர்கள். செல்பவர்கள் தங்கள் நெறிகளின்படி வாழும் உறுதிகொண்டவர்கள். தங்குபவர்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள்.
செல்பவர்களின் ஓசை நகரில் நிறைந்திருந்தது. கலத்தில் நீர் ஒழிய வெற்றிடம் வந்து நிறைவதுபோல அவர்கள் சென்றபின் நகரமெங்கும் வெறுமை மண்டியது. அந்த வெறுமை தங்கியவர்களைச் சூழ்ந்து அழுத்தியது. அவர்கள் கொண்டிருந்த துயர்களை பெருக்கியது. ஐயங்களை அழுத்தமாக்கியது. இந்நகர் முற்றாகக் கைவிடப்படும். இனி இங்கே வணிகமும் தொழிலும் செழிக்க வாய்ப்பில்லை. கைவிடப்பட்ட நகர்கள் பலவற்றை பயணிகள் கண்டிருந்தனர். அவை இடிந்து சரிந்து சென்றகாலப் பெருமையை சாற்றும் நிகழ்கால அவலம் என நின்றிருக்கும். முட்செடிகள்போல சிற்றுயிர்கள்போல அங்கே மக்கள் திகழ்வார்கள். விழி செத்து உடல் வெளிறி அஞ்சும் பாவனை கொண்டவர்கள். புதியனவற்றை அஞ்சுபவர்கள். அயலாரை ஒழிபவர்கள். அறுகுளத்தில் சேறுடன் மடியும் மீன்களைப் போன்றவர்கள்.
அவ்வெறுமையில் ஒரு குரல் எழும். குலத்தலைவர்களில் ஒருவர் “எழுக, என் குடியே! நம் தெய்வத்தின் ஆணை வந்துள்ளது. நம் தொல்நிலம் தேடிச்செல்வோம்” என்று கூவுவார். காத்திருந்ததுபோல் அத்தனை பேரும் அவரை சூழ்ந்துகொள்வார்கள். இன்னொருவர் “எண்ணுக… நாம் செல்வது எங்கே? நிலைகொண்ட மண்ணை உதறிச்செல்பவர்கள் அரசனின் கோல் அளிக்கும் காப்பை தவிர்த்துச் செல்கிறார்கள் என உணர்க! நம்மை காக்க இனி படைக்கலங்கள் இல்லை. கள்வரும் அரக்கரும் அசுரரும் நிஷாதரும் நிறைந்த விரிநிலத்தில் நாம் கைவிடப்பட்டு நின்றிருப்போம்” என்று கூவுவதை எவரும் செவிகொள்ளமாட்டார்கள். அன்னையரில் எவரேனும் “நம் மகளிரையும் குழவியரையும் எண்ணுக… நாய்நரிகள் கழுகுகாகங்கள் சூழ்ந்தது வெளிநிலம்” என்று கூறினால் “நாவை அடக்கு. நீ வேண்டுமென்றால் இங்கேயே தங்கிக்கொள்” என அதட்டி அமரச்செய்வார்கள். முதியோர் அஞ்சித் தயங்கியிருக்கையில் இளையவரில் ஒருவர் “கிளம்புவோம். ஒரு புதிய நிலத்தை கண்டடைவோம். என்னை நம்புபவர்கள் வருக!” என கச்சை முறுக்கி கிளம்பினாலும் குடி உடன் எழுந்தது.
அவர்கள் செல்வதை சம்வகை கோட்டை மேலிருந்து நோக்கிக்கொண்டிருந்தாள். நீர்க்கடன் செய்வதற்காகச் சென்றவர்கள் திரும்பவரவில்லை. அதன் பின்னர்தான் உடைமைகளுடன் செல்லும் பெருக்கு தொடங்கியது. “செல்பவர்கள் அஸ்தினபுரியின் செல்வத்துடன் அல்லவா செல்கிறார்கள்? அவர்களை தடுக்கலாமா?” என்று அவள் யுயுத்ஸுவிடம் கேட்டாள். “இல்லை, அது அவர்களின் செல்வம். கருவூலச்செல்வம் மட்டுமே அரசருக்கு உரிமை உடையது” என்று அவன் சொன்னான். “அவர்களின் செல்வத்தை பிடுங்கிவிட்டு செல்லவிடுவது எளிது. ஆனால் அவர்கள் நம் மீது பழிச்சொல் உரைத்து விலகிச்செல்வார்கள். செல்லும் நிலமெங்கும் அந்தப் பழியை பெருக்குவார்கள்.” சம்வகை “ஆனால் செல்பவர்கள் பெரும்பகுதியினர் நம்மை பழித்துரைத்த பின்னரே அகல்கிறார்கள்” என்றாள். யுயுத்ஸு “விரைவிலேயே அவர்கள் நம் நிலத்தை எண்ணி கண்ணீர்விடுவார்கள்” என்றான்.
கோட்டைச்சுவர்மேல் காவல்பாதை வழியாக சுற்றிவருகையில் நகர் எந்த அளவுக்கு ஒழிகிறது என்பதையே அவள் உளம்கொண்டாள். போரில் அஸ்தினபுரியின் பெரும்படை முழுக்கவே அழிந்துவிட்டிருந்தது. ஏவலர் திரளிலும் பெரும்பகுதியினர் படைவீரர்களாகி களம்பட்டுவிட்டிருந்தனர். ஆகவே வீரர் கொட்டகைகளும் ஏவலர் இல்லநிரைகளும் முன்னரே ஒழிந்துவிட்டிருந்தன. புராணகங்கையின் உள்ளே ஒன்றிலிருந்து ஒன்றெனக் கிளைத்து காட்டின் விளிம்புவரைக்கும் பெருகியிருந்த காந்தாரக் குடியிருப்புகளில் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை. அங்கே இல்லங்கள் ஏற்கெனவே பழுதடைந்து சரியதொடங்கிவிட்டிருந்தன. காடு கொடிகளாக கைநீட்டி அருகணைந்து இல்லங்களைப் பற்றியது. பின்னர் இறுக்கி நொறுக்கியது. செடிகள் முளைத்து புதர்களாகி வீடுகள்மேல் எழுந்தன. பறவைகளும் சிற்றுயிர்களும் குடியேறின. நாகங்களும் நரிகளும் வந்தன. பின்னர் சிறுத்தை உலவத் தொடங்கியது. வடக்குவாயிலின் எல்லைவரை புராணகங்கையின் செறிகாட்டின் விளிம்பு வந்தணைந்தது.
எப்போதும் மக்கள்ஓசைகள் நிறைந்திருந்த அங்காடிகள் அமைதியடைந்தன. சூதர் தெருக்களும் ஆயர் தெருக்களும் உழவர் தெருக்களும் நெரிசல் மிகுந்தவை. கோட்டை மேலிருந்து பார்க்கையில் அங்கே தேனீக்கூட்டின் ரீங்காரம் எப்போதும் எழுந்து கொண்டிருக்கும். அவை ஒழியத்தொடங்கி மெல்ல மெல்ல முற்றிலும் வெறுமை கொண்டன. கோட்டையின் சில வளைவுகளில் எப்போதும் நகரின் முழக்கம் விந்தையான ஒரு ரீங்காரமாக குவிந்து ஒலிக்கும். அங்கு நின்று அந்நகரை நோக்கும் வழக்கம் உண்டு. அந்த மூலைகள் அமைதியாயின. நீர் மடிந்த அருவியின் வெற்றுப்பாறைத் தடம்போல அவ்விடங்கள் தோன்றின. ஒருமுறை அவள் தெற்குக்கோட்டை காவல்மாடத்திலிருந்து நோக்குகையில் சூதர் தெருவில் ஒரு மானுட அசைவுகூட தென்படாததைக் கண்டு காவல்பெண்டிடம் “அங்கு என்ன நிகழ்கிறது? சூதர்கள் அனைவரும் எங்காவது சென்றிருக்கிறார்களா?” என்றாள்.
அவள் “அவர்கள் நகரை ஒழிந்து அயல்நிலங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்” என்றாள். “ஆம் அறிவேன், ஆனால் இந்தக் காலைநேரத்தில் ஒருவர்கூட இல்லாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது” என்றாள் சம்வகை. “ஒருவரும் எஞ்சாமல் ஆலயங்களையும் கைவிட்டுச் செல்கிறார்களா?” என வியந்துகொண்டாள். “தெய்வங்களை உடன்கொண்டு செல்கிறார்கள்” என்றாள் காவல்பெண்டு. அவள் நோக்கியபடி நடந்து மேடைக்கு வந்தாள். ஏவல்பெண்டை அனுப்பி “ஒற்றர்கள் சென்று சூதர் தெருவில் என்ன நிகழ்கிறது என்று பார்த்து வருக!” என்று ஆணையிட்டாள். அவள் தலைவணங்கி அகன்றதும் இன்னொரு ஏவற்பெண்டை அழைத்து “பன்னிரு ஒற்றர்கள் உடனடியாகக் கிளம்பி எந்தெந்த தெருக்களில் குடியினர் ஒழிந்து சென்றிருக்கிறார்கள் என்பதை பார்த்து வரவேண்டும். உடனே” என்றாள்.
மூன்று நாழிகை பொழுதில் ஒற்றர்கள் திரும்பி வந்து சூதர் தெரு முற்றாக ஒழிந்துவிட்டதென்றும், ஆயர் தெருவில் பாதி அளவே மக்கள் இருக்கிறார்கள் என்றும், உழவர்களும் கைக்கோளரும் மிகச் சிலரே எஞ்சியிருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். தங்கியவர்களும் கிளம்பிச்செல்லும் உளநிலையில் இருக்கிறார்கள் என்றார்கள். ”அங்கே கிழப்பாணன் ஒருவனை கண்டேன். மக்கள் எங்கே என்றேன். கிளம்பிவிட்டார்கள். இருப்பவர்களும் கிளைநுனியில் சிறகு உலைய அமர்ந்திருக்கும் பறவைகள் என பொறுமையிழந்திருக்கிறார்கள் என்றான்” என்று கூறினான் ஒற்றன். உளவுப்பெண் ஒருத்தி “பெரும்பாலானவர்கள் முதியவர்களை என்ன செய்வதென்று தெரியாமையால்தான் நகரில் எஞ்சியிருக்கிறார்கள்” என்றாள். “பல குடியினர் முதியவர்களையும் நோயுற்றவர்களையும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அவர்களின் தெய்வங்கள் அவ்வண்ணம் ஆணையிட்டிருக்கின்றன.” இன்னொருத்தி “பல இல்லங்களுக்குள் கைவிடப்பட்ட முதியவர்களின் ஓசைகளை கேட்டேன். பல இல்லங்களுக்குள் அவர்கள் ஏற்கெனவே இறந்து கெடுமணம் எழத்தொடங்கியிருக்கிறது” என்றாள்.
அச்செய்தியை ஒட்டி என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. ஏற்கெனவே அச்செய்தி தொகுக்கப்பட்டு சுரேசருக்கும் யுயுத்ஸுவுக்கும் சென்றிருக்கும் என்று தெரிந்திருந்தது. ஆயினும் அதைப்பற்றி ஒருமுறை தானும் சுரேசரிடம் கூறிவிடவேண்டும் என்று அவள் எண்ணிக்கொண்டாள். அவர்கள் என்ன முடிவெடுக்கவிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு நகரை குடிகள் கைவிட்டால் அரசரோ அமைச்சரோ என்னதான் செய்ய முடியும்? “நகர்முழுக்க காவலர்கள் செல்லட்டும். இல்லங்களில் இறந்த உடல்கள் இருக்குமென்றால் கொண்டுசென்று தெற்குக்காட்டில் அவர்களின் குலமுறைப்படி இறுதி செய்க! கைவிடப்பட்ட முதியோரை திரட்டிக்கொண்டுசென்று ஓரிடத்தில் சேர்த்து வையுங்கள். அரண்மனையிலிருந்து அவர்களுக்குரிய உணவும் மருந்தும் வரட்டும்.”
நகரில் அத்தனை முதியவர்கள் உயிரிழந்து இருண்ட இல்லங்களுக்குள் மட்கிக்கொண்டிருப்பார்கள் என சம்வகை எண்ணியிருக்கவேயில்லை. அவர்களின் உடல்கள் மட்கிய கெடுமணம் தெருக்களில் நிறைந்திருந்தது. ஆனால் அஸ்தினபுரியெங்கும் பரவியிருந்த பொதுவான கெடுமணத்தில் அது இயல்பாக கலந்துவிட்டிருந்தது. புழுதியின், கெட்டுப்போன உணவுப்பொருட்களின், மட்கும் சருகுகளின் கெடுமணம். மானுடர் புழங்காமலாகும் எவ்விடத்திலும் அந்தக் கெடுமணம் சில நாட்களிலேயே உருவாகிவிடுகிறது. அது காற்றின் அடிச்சேற்றின் வாடை. “காலத்தின் வண்டலின் வாடை. அங்கே உயிரிழந்தவையும் அசைவற்றவையும் சென்று படிந்துவிடுகின்றன. காலமே உயிர். காலமின்மையே சாவு.” எங்கோ ஒரு சூதன் பாடிய வரி. அத்தகைய வரிகளை நினைவின் அடுக்குகள் மறப்பதே இல்லை.
தெற்குக்கோட்டை வாயில்மேல் நின்று சம்வகை உடல்கள் மூங்கில் பாடைகளில் தெற்குநோக்கி செல்வதை நோக்கிக்கொண்டிருந்தாள். கோட்டையின் பிற மூன்று வாயில்கள் வழியாகவும் மக்கள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இது உயிரற்றோர் வெளியேறுவதற்கான வழி. அவள் அருகே நின்ற காவல்பெண்டிடம் “இத்தனை உடல்கள் இங்கே கிடந்திருக்கின்றன!” என்றாள். “நகரின் பல தெருக்களில் எவருமே செல்லாமலாகிவிட்டிருக்கின்றனர். இன்று கோட்டையை ஒருமுறை சுற்றிவந்து காவல் காக்கக்கூட எவருமில்லை” என்றாள். சம்வகை வெறுமனே தலையசைத்தாள். அவள் அதை உணர்ந்துகொண்டுதான் இருந்தாள். கோட்டையின் காவல்பெண்டுகளே குறைந்துகொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் சொல்லாமல் கிளம்பிச்சென்றனர்.
அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டையை ஒட்டி படைவீரர்கள் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான கொட்டகைகள் ஒழிந்து கிடந்தன. நகர் முழுக்க சென்ற காவலர்படையினர் அங்கிருந்து முதியவர்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்து அக்கொட்டகைகளில் படுக்கவைத்தனர். அரண்மனை ஊட்டுபுரையிலிருந்து அவர்களுக்கு வண்டிகளில் உணவு வந்தது. உணவுபெறுபவர்கள் கூடிக்கூடி வரவே இன்னொரு கொட்டகையில் அவர்களுக்கான உணவைச் சமைக்க சம்வகை ஆணையிட்டாள். ஆனால் அதன்பின் அதுவரை தயங்கிக்கொண்டிருந்தவர்களும் முதியவர்களை கொண்டுவந்து அங்கே விட்டுவிட்டுச் செல்லத் தொடங்கினர். “செல்பவர்களை நாமே ஊக்குவிப்பதுபோல தோன்றுகிறது” என்றாள் காவல்பெண்டு. “செல்பவர்கள் செல்லட்டும்… அவர்கள் உள்ளத்தால் சென்றுவிட்டவர்கள்” என்றாள் சம்வகை. “அவர்கள் இந்நகரை கைவிடுவதற்கு முடிவெடுத்தபோதே இந்நகர் அவர்களை கைவிட்டுவிட்டது.”
“முன்பு சால்வனின் நகர் இவ்வாறு கைவிடப்பட்டது. அன்று கொற்றவை என அம்பையன்னை எழுந்து அவன் மேல் இட்ட தீச்சொல்லால் அவன் குடியே அழிந்தது. தெய்வப்பழியும் வேதப்பழியும் நீத்தார்பழியும் மூத்தார்பழியும் அந்தணர்பழியும் சான்றோர்பழியும் பெண்பழியும் இரவலர்பழியும் ஆபழியும் என பழிகள் ஒன்பது. பழி கொண்ட நாட்டில் மக்கள் வாழக்கூடாது என்பது நெறி” என்று முதிய காவல்பெண்டான சந்திரிகை கோட்டைக் காவல்மேடையில் பந்த ஒளியில் அமர்ந்திருக்கையில் சொன்னாள். அவளைச் சூழ்ந்து காலோய்வு கொள்ளும் காவல்பெண்டுகள் அமர்ந்திருந்தனர். சுடரில் அவர்களின் முகங்கள் அலைபாய்ந்தன. தொலைவில் நகரிலிருந்து நரியின் ஊளை கேட்டது.
“இங்கு எந்தப் பழி கொள்ளப்பட்டுள்ளது?” என்று இருளுக்குள் எவரோ கேட்க அவள் திரும்பி நோக்கி சில கணங்கள் நிலைகொண்டபின் “அதை அறியாதோர் எவர் இங்கே? இது வேதப்பழிகொண்ட நாடு. ஆகவே அந்தணர்பழி வந்தமைந்துள்ளது. நீத்தோருக்கும் மூத்தோருக்கும் சான்றோருக்கும் பெரும்பழி இழைக்கப்பட்டுள்ளது” என்றாள். எவரும் ஒன்றும் சொல்லவில்லை. சம்வகை சீற்றத்துடன் “எவர் சொன்னது பழி சூழ்ந்துள்ளது என்று? போருக்குரிய நெறிகள் வேறு. அங்கே நன்றுதீதை முடிவெடுப்பவை களத்திலெழும் தெய்வங்கள்” என்றாள். எவரும் ஒன்றும் சொல்லாமலிருக்க அவள் மேலும் சீற்றத்துடன் “ஆம், பழி கொண்டுள்ளோம். எனில் இசைவிலாதோர் கிளம்பிச்செல்லலாம். இசைவுள்ளோர் தேடிவருவார்கள்” என்று கூவினாள்.
சந்திரிகை “நான் எவர் மேலும் பழி சொல்லவில்லை. என் மைந்தர் எழுவர் களத்தில் மடிந்தனர். இருந்தும் வேல்கொண்டு இந்த நகரைக் காக்க இங்கே நின்றிருக்கிறேன்” என்றாள். “ஏனென்றால் இது மாமன்னர் ஹஸ்தியின் நகர். இங்கே ஒருகாலத்தில் பேரறம் முப்பூ விளைந்துள்ளது. என் மூத்தார் வாழ்ந்த மண் இது. இங்கே மீண்டும் அறம் எழும் என நான் நினைக்கிறேன்” என்றாள். “இன்று அறம் என்னவாயிற்று? அறத்திற்கு என்ன குறை இங்கே?” என்று அவள் கூவ முதுமகள் “நான் எவரிடமும் சொல்லாட விழையவில்லை, அறம் இங்கே விளையும் என்றால் இந்நகர் வாழும். இல்லையேல் ஒழிந்த கலம் என உடைந்து அழியும். நாம் செய்வதற்கொன்றும் இல்லை” என்று தன் வேலை எடுத்துக்கொண்டு எழுந்தாள். அங்கிருந்தோர் பெருமூச்சுடன் அகன்றனர். சம்வகை அவர்களை நோக்கியபடி வெறுமனே நின்றிருந்தாள்.
சம்வகை சுரேசரை ஒவ்வொரு நாளும் சந்தித்தாள். அவர் நூறு செயல்களில் சுழன்றுகொண்டிருந்தார். அவளிடம் “புதுச் செய்தி இருந்தால் மட்டும் கூறுக!” என்றார். “வழக்கம்போலத்தான்” என்று அவள் சொன்னாள். அவர் “நன்று” என்று திரும்பிக்கொண்டார். அவள் தயங்கி நின்றாள். “சொல்க!” என்றார். “மேற்கு வாயிலை ஒட்டி மலைக்குறக் குடிகள் சற்று குறைந்த அளவில் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே கிளம்பும் எண்ணம் இல்லாதிருக்கிறார்கள்” என்று சொன்னாள். அவள் எண்ணுவதை அறிந்துகொண்டு சுரேசர் புன்னகைத்து “நான் அறிவேன். ஒவ்வொரு நாளும் இங்கிருந்து எத்தனை பேர் வெளியே செல்கிறார்கள் என்கிற கணக்கு எனக்கு வந்துகொண்டிருக்கிறது. நகர் பெரும்பாலும் ஒழிந்துவிட்டது” என்றார்.
சம்வகை “அவர்களை தடுக்கவேண்டுமென்றால்…” என்றாள். “அதற்கு எந்த வழியும் இல்லை. குடிகளை சிறைவைத்து ஓர் அரசு நிகழ இயலுமா என்ன?” என்றார் சுரேசர். “அரசு என்பது தோட்டம் அல்ல காடு என்று நூல்கள் சொல்கின்றன. இங்கே செடிகளையும் மரங்களையும் நாம் நட்டு வளர்ப்பதில்லை. அவற்றுக்கான நெறிகள் காடெனும் ஒட்டுமொத்தத்தால் வகுக்கப்பட்டு அவற்றிலேயே உறைகின்றன.” சம்வகை சற்றே சீற்றத்துடன் “குடிகளின்றியும் ஓர் அரசு நிகழ இயலாது” என்றாள். “உண்மை. ஆனால் இவர்கள் செல்வதை தடுக்க நமக்கு உரிமை இல்லை. அஸ்தினபுரி அவர்களுக்கு துயர் மிகுந்த நினைவுகளின் நிலம். இதை விட்டு அகலுந்தோறும் அவர்கள் விடுதலை பெறுவார்கள்” என்றார் சுரேசர். “அதைவிட இங்கே பெரும்பாலான குடிகளில் ஆண்களே இல்லை. பிற குடிகளிலிருந்து குருதி பெறுவதற்கு அவர்களுக்கு விருப்பம் இருக்காது. ஏனென்றால் குலத் தூய்மையை கொடியடையாளமாகக் கொண்ட தொல்குடியினர் இவர்கள்” என்றார்.
அதை சம்வகை எண்ணியிருக்கவில்லை. “எங்கே செல்கிறார்கள் இவர்கள்?” என்றாள். “இவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு நிலங்களில் இருந்து இங்கே வந்து குடியேறியவர்கள். அன்று அவர்கள் கொண்டுவந்தது குடியடையாளத்தை மட்டுமே. அன்று அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு இங்கே இடமளிக்கப்பட்டது. தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை கதைகளாகவும் ஆசாரங்களாகவும் குடித்தெய்வங்களாகவும் அவர்கள் இன்றுவரை பேணிக்கொண்டிருந்தார்கள். இன்று இங்கிருந்து கிளம்பி தங்கள் குருதிவழியினரின் தொல்லூர்களுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் அறிந்தது அது ஒன்றே” என்றார் சுரேசர்.
சம்வகை “எஞ்சியவர்களில் முதியவர்கள் அனைவரும் பழைய படைக்கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றாள். “ஆம், அச்செய்திகளை நோக்கினேன்” என்றார் சுரேசர். “இன்னும் சில நாட்களில் அரசர் யுதிஷ்டிரன் நகர்புகக்கூடும் என்கிறார்கள்” என்றாள். சுரேசர் அப்போதுதான் அவள் எண்ணுவதை புரிந்துகொண்டு நிலைத்த விழிகளுடன் நோக்கினார். “அவர் இங்கே நகர்நுழைவுகொள்கையில் காணப்போவது என்ன? இந்த ஒழிந்த நகரா? வாழ்த்துரைக்கக்கூட இங்கே இன்று மக்கள் இல்லை. அவர் வருகையில் ஒரு காவல் அணிவகுப்பைக்கூட நம்மால் ஒருங்கமைக்க முடியாது. கோட்டைக்காவலுக்கும் அரண்மனைக்காவலுக்கும்கூட நம்மிடம் போதிய படைவீரர்கள் இல்லை.”
சுரேசர் அதுவரை அவரை அள்ளிச்சுழற்றிய அகவிசை முற்றாக அணைய அப்படியே அமர்ந்துவிட்டார். “நான் அதை எண்ணவே இல்லை” என்றார். “நான் எண்ணியிருக்கவேண்டும். நமக்கு மிகுதியான நாட்கள் இல்லை.” அவர் துணையமைச்சர் சாரிகரை கையசைத்து அழைத்தார். இருபது அகவை தோன்றிய சாரிகர் தென்னிலத்து அந்தணன் எனத் தோன்றினார். கன்னங்கரிய முகத்தில் பெரிய விழிகள் வெண்சிப்பிகளாகத் தெரிந்தன. “அரசர் நகர்புக நாள் முடிவுசெய்துவிட்டார்களா?” என்றார். “இன்னும் ஆறு நாட்கள்… ஆவணிமாதம் பன்னிரண்டாம், நிலவுநாள். ஆனால் அதை இன்று உச்சிப்பொழுதுக்குள் உறுதிசெய்வதாக சொல்லியிருக்கிறார்கள்” என்றார் சாரிகர். “ஆறு நாட்கள்… ஆறு இரவுகளும் ஐந்து பகல்களும் நம்மிடம் உள்ளன” என்றார் சுரேசர்.
சம்வகை “இனி அஸ்தினபுரியைவிட்டு எவரும் வெளியே செல்லக்கூடாது என ஆணையிடலாம்” என்றாள். “கூடாது… பிழை நிகழும். இங்கே தங்களை சிறையிட்டிருப்பதாக மக்கள் எண்ணினால் சினம்கொள்ளக்கூடும்… வாழ்த்துச்சொல் எழாமலிருந்தாலும் பழிச்சொல் எழலாகாது” என்றார். சாரிகர் “நாம் பிற நாடுகளிலிருந்து வணிகர்களையும் பிறரையும் பொன் கொடுத்து அழைத்துவரலாம்” என்றார். “வணிகர்கள் வரமாட்டார்கள். பிற குடியினரை அழைத்துவர நமக்குப் பொழுதில்லை” என்றார் சுரேசர். சம்வகை “அரசர் நகர்புகுந்த பின்னர் அனைவருக்கும் பொற்கொடை வழங்குவார் என அறிவிக்கலாம். அதை பெற்றபின் நகர்நீங்கலாம் என்று சிலர் எண்ணக்கூடும்” என்றாள்.
சுரேசர் “ஆம், அது உகந்த எண்ணம்” என்றார். “அதை செய்யலாம். இங்கே இருப்போரில் பலரிடம் வழிச்செலவுக்கு பணம் இருக்காது. அதன்பொருட்டு தயங்கிக்கொண்டிருப்பார்கள். பொன் அவர்களை நிறுத்தும். நகரில் எஞ்சிய அனைவரையும் திரட்டி கொண்டுவந்து சாலையோரங்களில் நிறுத்தலாம்…” சம்வகை தலையசைத்தாள். “யுயுத்ஸு இங்கே நாளை காலை வரக்கூடும்… இவ்வறிவிப்பை நான் இப்போதே வெளியிட்டுவிடுகிறேன்” என்றார் சுரேசர். “இன்றிருக்கும் உளநிலையில் அவர்களில் சிலர் பொன்னை அளிப்பது தங்களை இழிவுசெய்வது என்றுகூட எண்ணக்கூடும்” என்று சாரிகர் சொன்னார். சுரேசர் “அவ்வண்ணம் நிகழாது. என்றும் அஞ்சியும் தயங்கியும் எஞ்சியிருப்போர் இழிந்தோராகவே இருப்பார்கள்” என்றார்.
அவ்வண்ணமே ஆயிற்று. அன்று மாலையிலேயே அரசமுரசுகள் மாமன்னர் யுதிஷ்டிரன் நகர்நுழையவிருப்பதை அறிவித்தன. அவர் நகர்காணுலா முடித்து அரண்மனை நுழைந்து அவையமர்வு கொண்டபின் அந்தியில் நிகழும் குடிகாண் மங்கலத்தில் அனைவருக்கும் ஐந்து பொற்காசுகள் வழங்க முடிவெடுத்திருப்பதாக முரசறிவிப்போன் கூவியபோது கூடிநின்றவர்களிடம் கூச்சல்கள் எழுந்தன. “எனில் கருவூலத்தில் பொன் உள்ளது! அத்தனை பொன் அங்கே உள்ளது!” என்று ஒருவன் கூவினான். “அதை இப்போதே கொடுங்கள்… அது எங்களுக்குரியது!” என்று இன்னொருவன் கூவினான். கூடிநின்றவர்கள் கைநீட்டி ஆர்ப்பரித்தனர். பழிச்சொற்களைக் கூவினர். “அது எங்கள் அரசரின் செல்வம். பறவைமுட்டையை நாகம் உண்பதுபோல அந்த யாதவ இழிமகன் அதை கைக்கொள்ள விடமாட்டோம்” என்று ஒரு முதியவர் கூச்சலிட்டார்.
“அவர்களின் கொந்தளிப்பு ஓயட்டும். அவர்கள் இங்கே நீடிப்பார்கள்” என்றார் சுரேசர். “அவர்கள் பொன்னை வெறுக்கவில்லை. பொன்னை பொருட்படுத்தாமலும் இல்லை. அது போதும்.” பின்னர் தன் முகவாயை வருடியபடி “பொன் அவர்களை இங்கே நிலைநிறுத்தும் என்றால் கனவுகளும் அவ்வண்ணமே நிலைநிறுத்தும். அவர்களுக்கு கனவுகளை அளிப்போம்” என்றார். சம்வகை அப்போது அந்த அறைக்குள் சுவர் அருகே நின்றிருந்தாள். அவளை நோக்கி திரும்பி “இன்று இங்கே நாற்குடிகளில் நான்காம் குடியினள் நீயே. சொல்க, அவர்களை இங்கே நிலைநிறுத்தும் சொல் எதுவாக இருக்கும்?” என்றார். அவள் அந்த நேர்க்கேள்வியால் திகைத்தாள். பின்னர் “என்னால் சொல்லமுடியவில்லை” என்றாள். அவளை சில கணங்கள் கூர்ந்து நோக்கிய சுரேசர் “ஏனென்றால் நீ நாற்குடிகளில் இருந்து மேலெழுந்துவிட்டாய். இன்று பதவியும் புகழும் உனக்கு முதன்மையாகிவிட்டிருக்கும்” என்றார். சம்வகை எவ்வுணர்வையும் காட்டவில்லை.
சுரேசர் வெளியே நின்றிருந்த காவல்பெண்டை அழைத்துவர கைகாட்டினார். அவள் உள்ளே வந்ததும் “சொல்க, உனக்கு இப்போது தேவையாக இருப்பது எது?” என்றார். அவள் விழிக்க “இன்று இந்நகரில் நீ எதை இழக்கிறாய்?” என்றார். அவள் மீண்டும் விழிக்க “நீ இந்நகரில் இன்று அலைகையில் எதை எண்ணிக்கொள்வாய்?” என்றார் சுரேசர். அவள் விழிகள் விரிய “முன்பு இங்கே பெருந்திருவிழவுகள் நிகழும். இந்திரவிழவில் நாங்கள் இரவும்பகலும் மறந்து ஐந்து நாட்கள் களியாடுவோம். தெருவெங்கும் கள்ளும் ஊன்சோறும் நிறைந்திருக்கும். சூதர்களின் இசையும் கூத்தர்களின் நடனமும் அறுபடாது நிகழும்” என்றாள்.
சுரேசர் “ஆம், அதுவே. விழவு. விழவு கொண்டாடப்போகிறோம் என அறிவிப்போம். அரசர் முடிசூடியபின் பதினெட்டு நாட்கள் விழவு நிகழும். ஊனும் கள்ளும் பெருகும். இசையும் களியாட்டும் நிறைந்திருக்கும். பாரதவர்ஷமெங்குமிருந்து சூதரும் கலைஞரும் வந்து குழுமுவார்கள்…” என்றார். “அதை நாமே அறிவிப்பதென்றால்…” என்று சாரிகர் தயங்க “நாம் அறிவிக்க வேண்டியதில்லை. அதை செவிச்செய்தியாக இங்கே பரப்புவோம். அது மெய்யென நம்பச்செய்ய வேண்டியவற்றை செய்வோம். பெருவிழவு ஒன்று இங்கே நிகழப்போகிறது என்று காட்டும் ஒருக்கங்கள் தொடங்கட்டும். தெருக்களில் மேடைகள் அமையட்டும். சூதர்கள் தங்குவதற்குரிய குடில்கள் கட்டப்படட்டும். நகரில் நூறு ஊட்டுபுரைகள் ஒருங்கட்டும். அங்கே அரண்மனையிலிருந்து மாபெரும் அடுகலகங்கள் கொண்டுசென்று அனைவர் விழிகளிலும் படும்படி வைக்கப்படட்டும்” என்றார் சுரேசர்.