அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்
அன்புள்ள ஜெ
அக்கித்தம் பற்றிய கட்டுரை அழகானது. ஒரு சுருக்கமான கட்டுரையில் அக்கித்தம் அவர்களின் ஆளுமை, வாழ்க்கை, கவிதையில் அவருடைய தனிப்பங்களிப்பு ஆகியவற்றைப்பற்றி சொல்லிவிட்டீர்கள். நான் எனக்குத்தெரிந்த மலையாளப் பேராசிரியர் ஒருவரிடம் அக்கித்தம் பற்றிப் பேசியபோது சுதந்திரப்போராட்ட வீரர், பழைய கம்யூனிஸ்டு ஆதரவாளர், பிறகு எதிர்ப்பாளர் ஆனார் என்பதுபோன்ற சில செய்திகளை மட்டுமே அவரால் சொல்லமுடிந்தது.அக்கித்தம் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை நான் அவருக்கு எடுத்துச் சொன்னேன்.
ஜெகன்னாதன்
***
அன்புள்ள ஜெ
அக்கித்தம் அவர்களைப்பற்றிச் சொல்லும்போது நீங்கள் சொல்லும் ஒரு விஷயம் முக்கியமானது. ஒரு முக்கியமான படைப்பாளி அவருடைய சூழலில் படைப்பில் இயல்பாக வரும் ஒரு காலமுடிச்சை அவிழ்க்கிறார். இதை இங்கே பல்கலைகழகங்களில் ஷேக்ஸ்பியர் பற்றிய பாடங்களில் சொல்லித்தருவார்கள். அக்கிதம் மலையாள நவீனகவிதை உருவான காலகட்டத்தைச் சேர்ந்தவர். நவீன விஷயங்களை கவிதையில் பேசுவதற்கு பழைய அணியலங்கார நடை பெரிய தடை. ஆனால் அதை உரைநடையில் சொன்னால் செறிவாகவும் இல்லை. மரபான மொழியின் இறுக்கத்துடன் அணியலங்காரம் இல்லாத நடையை அமைக்க அவர் வழிவகுத்தார் என நினைக்கிறேன். நீங்கள் அதைத்தான் சொல்கிறீர்கள். அவர் ஒரு முக்கியமான முடிச்சை அவிழ்த்து ஒரு தொடக்கமாக அமைந்தார்
ஸ்ரீனிவாஸ்
***
அன்புள்ள ஜெ
இருபதாம்நூற்றாண்டின் இதிஹாசம் என்பதை இருபதாம்நூற்றாண்டின் தொன்மம் என மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். இது சரியா?
ஜே. பிரின்ஸ்
***
அன்புள்ள பிரின்ஸ்
மலையாளத்தில் இதிஹாசம் என்றால் தொன்மம், ஐதீகம் என்றுதான் பொருள்.
ஜெ
***
கவிதைகள் பறக்கும்போது…
மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து