சொற்சிக்கனம் பற்றி…

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

வணக்கம்.

 

கவிதைகளில் ‘சொற்சிக்கனம்’ என்ற சொல்லை சமீப காலங்களில் அதிகமாக கேட்க வேண்டி வருகிறது. பிரக்ஞை பூர்வமான, பிரக்ஞை பூர்வமற்ற இரு தரப்பு கவிஞர்களின் பார்வையிலும் இது வேறுபடுகிறது. தேவதச்சன் ஒரு முறை பிரக்ஞையின்மை என்பது கவிதை உருவாகும் (மனம்,அக/புற சூழல்) இடத்திலும், பிரக்ஞைப்பூர்வம் என்பது கவிதையை உருவாக்கும் (கவிஞன்) இடத்திலும் இருக்க வேண்டும் என்றார். தேவதேவனின் கவிதைகள் முழுக்க பிரக்ஞை பூர்வமற்றவை. அதில் சொற்சிக்கனம் குறைவே. ஆனால், உணர்வு நிலை அதிகம்.

 

 

தற்போதைய பெரும்பான்மை சொற்சிக்கன கவிதைகள் கச்சிதமாக பேக் செய்யப்பட்ட ஒரு பண்டம் போலவே உள்ளன. இதில் இந்த உணர்வு நிலையைக் குறைவாகவே காண முடிகிறது. சொற்சிக்கனமற்ற ஒரு கவிதையில் வரும் அதிகப்படியான வரிகள் கூட அந்தக் கவிதையை ஏதோ ஒரு விதத்தில் நகர்த்துகிறது என்றே தோன்றுகிறது.கவிதையில் ஒரு சிறு பாதிப்புக்கு அது வித்திடுவதாகவும் அமையக்கூடும். அப்படி சொற்கள் சுருக்கப்பட்ட சொற்சிக்கன கவிதைகள் அதைவிட சிறந்ததாக அமையக் கூடுமா? ஒரு கவிஞன் இதில் எவ்வழியை தேர்வு செய்யலாம்? அது எந்த அளவுக்கு அவனது தனித்தன்மைக்கு உதவும்?

 

– திவ்யா, திருநெல்வேலி

 

 

அன்புள்ள திவ்யா

 

சொற்சிக்கனம், சொல்லொழுக்கு போன்றவையும் சரி மொழியின் பிற தனித்தன்மைகளும் சரி அப்படைப்பாளியின் இயல்பு, அவன் வெளிப்படுத்தும் அழகியல் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டவையே ஒழிய இலக்கியத்தின் விதிகள் அல்ல. இலக்கிய வாசகன் தன் வாசிப்பின் தொடக்கத்திலேயே கொள்ளவேண்டிய ஒரு அடிப்படைப்புரிதல் இது

 

ஆனால் இந்தப்புரிதலைச் சிதைக்கும் கருத்துக்கள் அவனிடம் வந்துசேர்ந்துகொண்டே இருக்கும். இருசாரார் இவற்றைச் சொல்வார்கள். தன் படைப்புமொழியில் அபாரமான நம்பிக்கைகொண்ட படைப்பாளிகள் அதுவே இலக்கியத்தின் பொதுவான நெறி என நிறுவ முற்படுவார்கள். இன்னொரு சாரார் இலக்கியத்தின் இயக்கம் பற்றிய எந்த அறிதலும் இல்லாத மேலோட்டமாக இலக்கியம் பற்றிப் பேசுபவர்கள். இவர்களின் எல்லைகளை தன் வாசிப்பின், சிந்தனையின் வழியாக கண்டடையாத வாசகன் தானும் சிமிழில் சிக்கிக்கொள்ளநேரிடும்

 

இலக்கியப்படைப்பின் மொழி என்பது அந்த ஆசிரியனின் வெளிப்பாட்டு ஊடகம். அவனுடைய தனித்தன்மை வெளிப்படும் களம். மிகையான வெளிப்பாடுள்ள மொழி சிலருக்கு தேவைப்படும். எண்ணிஎண்ணிச் சொல்லப்படும் மொழி வேறுசிலருக்கு உரியதாக இருக்கும். கனவுச்சாயல் கொண்ட மொழி சிலருக்கு உகந்தது. சிலருக்கு யதார்த்தமான புறவயமான மொழி. எது சிறந்தது என்னும் பேச்சுக்கே இடமில்லை. எல்லாவற்றிலும் உலக இலக்கியத்தில் பெரும்படைப்புகள் நிகழ்ந்துள்ளன. இலக்கியம் இத்தகைய முடிவில்லா வண்ணவேறுபாடுகளால்தான் வாழ்க்கையை அளக்கிறது. ஒருவகை படைப்பு சென்று தொடும் இடத்தை இன்னொருவகை படைப்பு சென்றுதொட முடியாது.

 

ஆகவே இலக்கிய அளவுகோல் என்பது இன்னின்ன இயல்புகள் இருக்கின்றனவா இல்லையா என்பது அல்ல. தன் தனியியல்புகள் வழியாக அந்தப்படைப்பு எதை சாதித்தது, எங்கே சென்றடைந்தது என்பது மட்டும்தான். இந்த அணுகுமுறையால்தான் இலக்கியவிமர்சனம் இலக்கியப்படைப்புக்களை வெவ்வேறு அழகியல்கொள்கைகள் கொண்டவையாக பகுக்கிறது. எல்லா அழகியல்கொள்கைகளும் முக்கியமானவையே, அவை ஒரு குறிப்பிட்ட காலச்சூழலில், குறிப்பிட்ட வாழ்க்கைக்கூறுகளைக் கூறுவதற்கு உகந்தவை. குறிப்பிட்ட வகையான மெய்மையைச் சென்றடைபவை

 

உதாரணமாக, கற்பனாவாத அழகியல் [romanticism]  கொண்ட படைப்புக்களில் படைப்புமொழி மொழி பெரும்பாலும் அகவயமானது. ஆகவே அது கட்டற்றதாக இருக்கும். ஓசைநயம் கொண்டதாக இருக்கும். படிமங்கள் செறிந்ததாக, உருவகங்களால் ஆனதாக இருக்கும். உணர்ச்சிகள் நேரடியாக வெளிப்படுவதாக, எழுச்சியும் கொந்தளிப்பும் நிகழ்வதாக அமையும். இத்தகைய படைப்பாளிகளின் மொழியில் பொதுவாக சொற்சிக்கனம் என்னும் அம்சம் இருக்காது.

 

யதார்த்தவாதம், [realism] இயல்புவாதம் [naturalism] போன்ற அழகியல் கொண்ட படைப்புக்களில் படைப்புமொழி புறவயத்தன்மை மிக்கது. உணர்வுகள் மிகையில்லாமல் வெளிப்படும். குறைத்துச்சொல்லலை ஓரு வழிமுறையாகவே இவை கடைப்பிடிக்கும். இத்தகைய படைப்புக்களில் சொற்சிக்கனம் மிக அவசியம்.

 

யதார்த்தவாதப் படைப்புக்களில் ஆசிரியனின் பிரக்ஞை படைப்பில் வலுவாக இருந்துகொண்டே இருக்கும். அவன் படைப்பைச் செதுக்கி உருவாக்குகிறான். கற்பனாவாதப் படைப்பாளி படைப்பைச் செதுக்கமுடியாது, ஏனென்றால் அவன் சென்றடைந்த உணர்ச்சிகரநிலை முடிந்ததுமே அவன் இயல்பான நிலைக்கு வந்துவிடுகிறான். அந்த இயல்புநிலையில் அவனால் அந்தப்படைப்பை செப்பனிட முடியாது. செப்பனிட்டால் அது செயற்கையாகவே அமையும். சிறிய மாறுதல்களை மட்டுமே செய்யமுடியும்.

 

கற்பனாவாதப் படைப்பாளி தன் கற்பனையின்விசையால், உணர்வெழுச்சியின் போக்கால், கனவுத்தன்மையால் தன் அறிவின் எல்லையை தானே கடந்து தனக்கே தெரியாத உச்சங்களைச் சென்றடைய முயல்பவன். அவனுடைய நோக்கம் ஒட்டுமொத்தப்பார்வை, தரிசனம். யதார்த்தவாதப் படைப்பாளி தனக்கு நன்றாகத்தெரிந்தவற்றை, தன்னால் சிந்தித்து அடையப்பெற்றவற்றை தொகுத்து வகுத்து முன்வைப்பவன். அவனுடைய நோக்கம் விமர்சனமும் தொகுப்புப்பார்வையும்.

 

கற்பனாவாதப்படைப்பு வாழ்க்கையின் உண்மைநிலையைச் சொல்வது அல்ல. அதற்குச் சமநிலை இருக்காது. வாழ்க்கையின் ஒருபட்டையை மட்டுமே சொல்லி, அதன் உச்சம்நோக்கிச் செல்வது அது. யதார்த்தவாதப்படைப்பு வாழ்க்கையின் உண்மைநிலையை கூடுமானவரை சமநிலையுடன் சொல்வது. ஆனால் அதனால் உளஎழுச்சிகளை கனவுகளை பித்துகளை கொந்தளிப்புகளைச் சொல்லமுடியாது. அது அன்றாடவாழ்க்கையை மையமாகக் கொண்டது. ஆகவே கூடுமானவரை சுருங்கச்சொல்லி உணர்த்திவிட்டு மேலே செல்லும், அவ்வளவுதான்.

 

இரு அழகியல்முறைகளின் பாணியும் இலக்கும் வேறுவேறு. இது புனைவில் மட்டுமல்ல கவிதையிலும் இப்படியே. பிரமிள், தேவதேவன் ஆகியோரிடம் கற்பனாவாதப் பண்பு மிகுதி. பசுவய்யா தேவதச்சன் போன்றவர்களிடம் யதார்த்தவாதப் பண்பு மிகுதி. பிந்தையவர்களை நாம் நவீனத்துவர்கள் என்று வரையறை செய்கிறோம். நவீனத்துவம் கட்டுப்பாடான எழுத்து, ஆசிரியரின் பிரக்ஞைநிலை, அறிவார்ந்த ஒத்திசைவு, உணர்ச்சிச் சமநிலை ஆகியவற்றை வலியுறுத்திய இலக்கிய இயக்கம்.

 

ஒரு யதார்த்தவாதப் படைப்பு சொற்சிக்கனமில்லாமல் இருந்தால் அது வளவளவென்று இருக்கும். ஒரு கற்பனாவாதப் படைப்பு சுருக்கமாக கூறமுற்பட்டால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு எந்த உச்சம்வரைச் செல்லமுடியுமோ அதுவரை செல்லாமல் நின்றுவிடும். ஆகவே சொற்சிக்கனம் யதார்த்தவாதப்படைப்புக்கு இன்றியமையாதது, கற்பனாவாதப் படைப்புக்கு தடையாக அமைவது.

 

ஓர் ஒட்டுமொத்தப் பார்வையுடன் முழுமையை சித்தரிக்கவும் சாராம்சம் நோக்கிச் செல்லவும் முயலும் அழகியலைச் செவ்வியல் [classicism]  என்கிறோம்.செவ்வியல் என்பது யதார்த்தவாத அழகியல், கற்பனாவாத அழகியல் அனைத்தையும் தன் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவது. மிகச்சிறந்த உதாரணம் கம்பராமாயணம். அதில் இயற்கைவர்ணனைகளில் உணர்ச்சிவெளிப்பாடுகளில் கட்டற்ற கற்பனாவாதத்தின் மிகையை காணலாம். ஆனால் நிகழ்வுகளை சித்தரிக்கையில் மிகச்சரியான யதார்த்த அழகியல் விளங்குகிறது. அது சில இடங்களில் சொற்கட்டுப்பாட்டுடன் சில இடங்களில் சொற்பெருக்குடன் வெளிப்படுகிறது.

 

கற்பனாவாதக் கவிதை அதன் தன்னிச்சையான பெருக்கு வழியாக மிக அரிதான சொற்கோவைகளைச் சென்றடையும். அவை கவிதையின் கருத்தை கடந்தவையாக, வெறும் சொற்கோவைகளாகவேகூட நிலைகொள்பவையாக அமையும். ‘வழிதொறும் நிழல்வலைக் கண்ணிகள் திசைதடுமாற்றும் ஓராயிரம் வடுக்கள்’ [பிரமிள்] அசையும்போதே தோணி அசையாதபோதே தீவு, தோணிக்கும் தீவுக்கும் இடையே மின்னற்பொழுதே தூரம்’ [தேவதேவன்] போல. அவற்றின் பொருளை சொற்களைக்கொண்டு நாம் வாசித்து பெருக்குகிறோம். அவை கவிஞனால் உருவாக்கப்பட்டவை அல்ல.

 

யதார்த்தஅழகியல் கொண்ட கவிஞன் கவிதைகளை சிந்தனை வழியாக கருத்தாகவே அடைகிறான். அவன் அவற்றை மிகக்கச்சிதமாக வெளிப்படுத்துகிறான். ஆனால் அரிய சொல்லாட்சிகள் அவனில் நிகழ்வதில்லை. கற்பனாவாதக் கவிஞனின் கட்டில்லாத தன்மையை, அவன் கவிதைகளில் இருக்கும் மிகையையும் சமநிலையின்மையையும் தன்னைக்கடந்து செல்லும் அவனுடைய தாவலின் பொருட்டு நாம் ஏற்றுக்கொள்கிறோம்

 

ஆகவே சொற்கள் மீதான கட்டுப்பாடு கவிஞனுக்கு தேவையா இல்லையா என்பதை அவனுடைய அகம் செயல்படும் விதமே தீர்மானிக்கவேண்டும். அவனுடைய அகம்நோக்கி நாம் செல்ல, அவன் காட்டும் கவிதையனுபவத்தை நாம் அடைய அவனுடைய கவிமொழி உதவுகிறதா இல்லையா என்பதே சொற்சிக்கனம்தேவையா இல்லையா என்பதற்கான அளவுகோல்

 

ஜெ

முந்தைய கட்டுரைஅறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : தருமபுரம் ஆதீனம்